
நாட்டில் முதல்முறையாக எம்.எல்.ஏ. ஒருவர் கொரோனாவுக்கு உயிரிழந்திருக்கிறார். திமுக., எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் மறைவு குறித்த விவரம் உள்துறை, மத்திய சுகாதாரத்துறை கவனத்திற்கு சென்றுள்ளது.
தமிழகத்தில் முதன் முறையாக எம்.எல்.ஏ ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். ஜெ.அன்பழகன் இன்று காலை 8 மணி அளவில் உயிரிழந்ததாக மருத்துவமனை தரப்பு தெரிவித்துள்ளது.
முன்னதாக, கொரோனா பாதிப்பு உட்பட உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்தார் ஜெ. அன்பழகன். இன்று காலை தொற்றின் தீவிரம் காரணமாக உயிரிழந்த ஜெ.அன்பழகன் உடல், தொற்றுநோய் விதிகளின் படி சுகாதாரத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட உள்ளது
2001, 2011, 2016, சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று 3 முறை எம்.எல்.ஏ.வாக இருந்தவர் ஜெ.அன்பழகன். மறைந்த ஜெ.அன்பழகனுக்கு ஒரு மகன்; ஒரு மகள் என இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்!
திமுக சட்டமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் முன்னோடி நிர்வாகிகளில் ஒருவருமான திரு.ஜெ.அன்பழகன் அவர்கள் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. அன்னாரது குடும்பத்தினருக்கும் அவர் சார்ந்த இயக்கத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்… என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது இரங்கல் செய்தியை வெளியிட்டார்.
திமுக., தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
ஜெ.அன்பழகன் மறைந்துவிட்டார் என்பதை மனம் ஏற்க மறுக்கிறது. அன்பழகனின் மறைவுச் செய்தி இதயத்தில் இடியும், மின்னலும் ஒருசேர இறங்கியது போல் இருந்தது. ஜெ.அன்பழகன் மறைவையொட்டி திமுக சார்பில் 3 நாள் துக்கம் கடைப்பிடிக்கப்படுகிறது. 3 நாட்களுக்கு திமுக கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும்; திட்டமிடப்பட்டிருந்த நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்படுகின்றன… என்று திமுக., தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.



