spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeகட்டுரைகள்மனு ஸ்மிருதியா, மார்க்ஸ் ஸ்மிருதியா? (பகுதி - 1)

மனு ஸ்மிருதியா, மார்க்ஸ் ஸ்மிருதியா? (பகுதி – 1)

- Advertisement -
manu-marx
manu-marx

மனு ஸ்மிருதியா, மார்க்ஸ் ஸ்மிருதியா? (பகுதி – 1)
வேதா டி. ஶ்ரீதரன்

மனு ஸ்மிருதி குறித்த இந்தப் பதிவு ஆஸ்திகர்களுக்கானது. வெளுத்ததெல்லாம் பால் என்று நம்பும் அப்பாவிகளுக்கான எச்சரிக்கை இது. எனவே, கொஞ்சம் ஆழ்ந்து படிக்குமாறு வேண்டுகிறேன். கூடுமானவரை ஆஸ்திக அன்பர்கள் அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளுமாறும் பணிவுடன் வேண்டுகிறேன்.

இந்தப் பதிவு, நான் நினைத்ததை விடப் பல மடங்கு அதிகமாக நீண்டு விட்டது. இதைச் சுருக்கமாக எழுதி இருந்தால் எனக்கு நேரமும் உழைப்பும் மிச்சமாயிருக்கும். உங்களுக்கும் படிப்பதற்கு எளிதாக இருக்கும். ஆனால், எனது நோக்கம் நிறைவேறாது என்று நான் நம்புகிறேன். எனவே, ஐந்து பகுதிகளாக எழுதுகிறேன்.

இந்தப் பதிவுகள் அனைத்துக்கும் காரணமாக அமைவது ஒரே ஒரு பதிப்பகம் வெளியிட்டுள்ள ஒரே ஒரு புத்தகம் மட்டுமே. அந்தப் புத்தகத்தைப் பற்றி 3-வது, 4-வது ஆகிய இரண்டு பகுதிகளில் முழு விவரங்கள் தருகிறேன். முதல் இரண்டு பகுதிகள் முன்னோட்டம். 5-வது பகுதி சுபமங்களம்.

முன்னோட்டம் – 1 :
பிரத்தியட்சமாகத் தெரியும் பேராபத்து

1. இந்தியாவின் பாரம்பரியத்துக்கு வேளாண்மை, கல்வி ஆகிய இரண்டு விஷயங்களும் ஜீவநாடியாகத் திகழ்பவை. எனவே, இந்த இரண்டு விஷயங்களையும் உருமாற்றாமல் இங்கே ஏசுவையோ அல்லாவையோ மார்க்ஸையோ விதைக்க முடியாது.

இந்தியாவின் பாரம்பரிய வேளாண்மை அடியோடு உருமாறி விட்டாலும், நமது பாரம்பரிய அன்னதானத்தை யாராலும் அழிக்க முடியவில்லை. அதன்பின்னே உள்ள ‘தார்மிகக் கடமை’ என்ற எண்ணத்தையும் யாராலும் சிதைக்க முடியவில்லை.

கல்விப் பாரம்பரியம் தலைகீழாக மாற்றப்பட்டு விட்டது. இருந்தாலும், இன்னும் பாரம்பரிய கல்வியும் சாஸ்திரக் கல்வியும் பல இடங்களில் (பாடசாலைகள், ஆசிரமங்கள், குடும்பங்கள்) கிடைக்கத்தான் செய்கின்றன.

ஆனால், இந்த இடத்தில் ஒரு பெரிய ஆபத்து காத்திருக்கிறது. இவற்றில் வேத உச்சாடனம் உட்பட அனைத்து அம்சங்களும் அச்சிடப்பட்ட புஸ்தகங்களை மட்டுமே நம்பி நடைபெற்று வருகின்றன. எனவே, இந்த நூல்களை உருமாற்றி விட்டால் இந்தியாவின் பாரம்பரியம் மறைந்து விடும்.

வேதகோஷம், தத்துவங்கள் முதலான அதிக அளவில் போதிக்கப்படும் விஷயங்களில் நம் பெரியவர்கள் நிறையப் பேர் நூல்கள் உருவாக்கி அளித்துள்ளனர். ஆனால், பல்வேறு இதர விஷயங்களில் பல மேற்கத்திய ஆராய்ச்சியாளர்களின் நூல்களை மட்டுமே சார்ந்து இருக்கிறோம்.

இந்த ஆராய்ச்சியாளர்கள் நமக்குப் பேருபகாரம் செய்துள்ளனர் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனாலும், அவர்களது பார்வைக்கோளாறு அத்தனை நூல்களிலும் உண்டு. ஸம்ஸ்கிருத வார்த்தைகளை மொழிமாற்றம் செய்து – அதுவும் மேற்கத்திய மொழியான ஆங்கிலத்தில் – பயன்படுத்துவது பற்பல கோளாறுகளுக்கு வழிவகுக்கும். ஆங்கிலத்தில் இருந்து இதர மொழிகளுக்குப் போகும்போது இன்னும் மோசமாகும். இதனால் இத்தகைய நூல்களைப் பயன்படுத்துபவர்கள் நமது பாரம்பரியத்தை விட்டு விலகும் வாய்ப்புகள் அதிகம். நிறைய இடங்களில் நம்மால் இதைக் கண்கூடாகவே பார்க்க முடிகிறது.

காபிரைட் இல்லாத ஏராளமான நூல்கள் அன்னியர்களால் டிஜிடல் நூல்களாக்கப்பட்டு வருகின்றன. இதனால் நன்மைகள் உண்டு என்பதை நாம் பிரத்யட்சமாகப் பார்க்கிறோம். ஆனால், இது நமது வருங்காலத்தை எவ்வாறு பாதிக்க இருக்கிறது என்பதை நாம் இன்னும் உணரவில்லை.

நல்ல நோக்கத்துடன் நம்மவர்கள் செய்து வரும் பல்வேறு டிஜிடல் பணிகளும் இதே பாணியில்தான் இருக்கின்றன. இவற்றில் ஒரு கூடுதல் கொடுமையும் உண்டு. இவற்றில் காணப்படும் எழுத்துப் பிழைகளும், வாக்கியப் பிழைகளும் அருவருப்பைத் தருகின்றன. இதையெல்லாமா வெளியிடுவார்கள் என்ற வேதனையே மிஞ்சுகிறது. விதிவிலக்குகள் ஏராளம் என்பதும் உண்மை. ஆனாலும், ஆன்லைனில் கிடைக்கும் விஷயங்களில் எதைக் கொள்வது, எதைத் தள்ளுவது என்பது கேள்விக்குறியே.

manusmiriti
manusmiriti

2. உணவும் கல்வியும் வெறும் அம்சங்கள்தான். உண்மையில், இந்த இரண்டுக்கும் பின்னால் இருப்பது தெய்வ நம்பிக்கை. ராமன் என்ற  ஒருவன் உண்மையில் இருந்தானா, பத்துத் தலை ராவணனை அவன் கொன்றானா என்று உங்களுக்கும் எனக்கும் நிச்சயமாகவே கேள்வி கேட்கத் தெரியும். ஆனால், கேட்க நா எழாது. காரணம், நம்பிக்கை.

இதைக் கொஞ்சம் ஆழமாகப் புரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது. ராமன் இருந்தான் என்று உங்களுக்கும் எனக்கும் எப்படித் தெரியும்? இந்தப் படைப்புக்கு ஆதாரமான ஒரு பர வஸ்து இருக்க வேண்டும், அது இந்தப் பிரபஞ்சத்தை நிர்வகித்தே ஆக வேண்டும் என்றெல்லாம் அறிவியல் போதனை மூலம் நமக்கு ராமன் அறிமுகப்படுத்தப்படவில்லை.

நமது அப்பா-அம்மா, தாத்தா-பாட்டிகள் நமக்குச் சொல்லிக் கொடுத்தார்கள். நமது அக்கம்பக்க வீட்டுப் பெரியவர்கள் நமக்குச் சொல்லிக் கொடுத்தார்கள். இவர்கள் மூலம்தான் ராமன் நமக்குப் பரிச்சயமானான்.

வால்மீகி காலத்தில் இருந்து எத்தனையோ ஆயிரமாயிரம் ஆண்டுகளாகத் தொடர்ந்து வந்த வாய்மொழிப் பாரம்பரியம் இது. ஆனால், நமது வாரிசுகளுக்குப் புத்தகங்களும், அவற்றின் டிஜிடல் வெர்ஷன்களும்தான் ராமனை அறிமுகப்படுத்தப் போகின்றன.

இவற்றால் நம் பிள்ளைகளின் மனதில் நம்பிக்கையை ஏற்படுத்த முடியாது என்பது இருக்கட்டும், இவற்றில் உள்ள குறைகள் நமது வருங்கால சந்ததியைப் பாதிக்குமா, பாதிக்காதா?

பிழைகள் மட்டுமல்ல, வேண்டுமென்றே பொய்யான தகவல் களுடன் (உண்மை போன்ற தோற்றத்துடன்) வெளியிடப்படும் நூல்கள் உள்ளன என்பதை உங்களில் எத்தனை பேர் கவனித்திருக்கிறீர்கள்?

இது ரொம்பவே சீரியசான விஷயம் அல்லவா?

3.ஏதோ ஒரு சிறிய விஷயத்தை நான் மிகவும் பெரிதுபடுத்தி அலட்டிக் கொள்கிறேன் என்று உங்களில் பலர் நினைக்கலாம். ஆனால், நான் கண்கூடாகப் பார்த்த ஒரு விஷயத்தை இங்கே குறிப்பிட விரும்புகிறேன். இது மனு ஸ்மிருதியின் தமிழ்ப் பதிப்பு குறித்தது.

மனுதர்ம சாஸ்திரம் (மொழிபெயர்ப்பு: திருலோக சீதாராம்) என்ற பெயரில் அலைகள் வெளியீட்டகம் (கோடம்பாக்கம், சென்னை) வெளியிட்டுள்ள புத்தகம் இது.

இந்த நூலை ஒரு புகழ்பெற்ற ஆன்மிகப் பெரியவரின் சீடர்கள் பயன்படுத்துவதை நான் பார்த்திருக்கிறேன். அந்தப் பெரியவர் ஆன்மிக விஷயங்கள் தெரிந்தவர் என்று சொன்னால் போதாது, ஆன்மிகத்துக்கு அதாரிடி என்று சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும். இப்படிப்பட்ட அவரே இந்த நூலை அவ்வப்போது பயன்படுத்துவதுண்டு என்பதையும் கவனித்திருக்கிறேன்.

இதேபோல இன்னொருவர். இவர் மிகுந்த நூலறிவும் சாஸ்திர அறிவும் இலக்கியப் புலமையும் பெற்றவர். சாஸ்திர விஷயங்களைத் தெரிந்துகொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டால் நான் இவரிடம்தான் முதலில் கேட்பது வழக்கம். இவரும் இதே நூலைத்தான் மனு ஸ்மிருதி என்று நம்பிப் பயன்படுத்தி வருகிறார். இந்த நூலின் லட்சணத்தைத்தான் இந்தப் பதிவில் உங்களிடம் நான் பகிர்ந்து கொள்ள இருக்கிறேன்.

இவ்வளவு விவரம் தெரிந்த இந்த இரண்டு பெரியவர்களே இந்த நூலை நம்பிப் பயன்படுத்தி வருகிறார்கள் என்ற உண்மையை நீங்கள் புரிந்து கொண்டால், நம்மைப் போன்ற சாமானியர்கள் எவ்வளவு சுலபமாக ஏமாந்து போவோம் என்பது புரியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe