
மனு ஸ்மிருதியா, மார்க்ஸ் ஸ்மிருதியா? (பகுதி – 3)
– வேதா டி.ஸ்ரீதரன் –
சாஸ்திரங்களைத் திரித்தால் சமுதாயத்தைத் தடம் புரளச் செய்யலாம்
முதலில் இந்த நூலை வெளியிட்டுள்ள பதிப்பகத்தைப் பற்றி அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.
அலைகள் வெளியீட்டகம் – ஓர் அறிமுகம்
தன்னால் தாய்நாடாகக் கருதி நேசிக்கப்பட்ட சோவியத்தாலும், அங்கே காதல் மனைவியாக வாய்த்தவளாலும் ஒருங்கே துரத்தியடிக்கப்பட்ட பின்னர், இந்தியாவில் வந்து சிவப்பு வேடம் போட்டு ‘புத்திஜீவி’யாகிவிட்ட ராகுல சாங்கிருத்தியானைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஆகா, எப்பேர்ப்பட எழுத்தாளன், எப்பேர்ப்பட்ட எழுத்து! ஐயா அவர்கள் எழுதியுள்ள நூல்களின் பக்கங்களை விட அந்த நூல்களை எழுதுவதற்காக அவர் படித்த புத்தகங்களின் பெயர்ப்பட்டியல் (பிப்ளியோக்ராஃபி) அதிகப் பக்கங்கள் வருமாம். அவ்வளவு படித்தவர்.
தனிமனித ஒழுக்கக் கேடுகளுக்கு சமுதாய அந்தஸ்து தருவது, இந்திய மரபுகளையும் வரலாற்றையும் முழுக்க முழுக்கப் பொய்யான தகவல்களுடன் திரித்தும் கொச்சைப்படுத்தியும் சித்தரிப்பது, இந்திய விடுதலைப் போராட்டத்தைக் கோமாளிக் கூத்து என்று வர்ணிப்பது முதலியவை அன்னாரது லைஃப் மிஷன்.
அவருடைய எழுத்துகளை வெளியிட்டு சமுதாயத்தைச் ‘சீர்திருத்தம்’ செய்யும் முயற்சியில் இந்தியாவில் பல்வேறு சிவப்புப் பதிப்பகங்கள் முனைந்து இறங்கின. தமிழில் அந்தப் புண்ணியத்தை அதிகம் சம்பாதித்தது அலைகள் வெளியீட்டகம்.
இனி, இந்த அலைகள் வெளியீட்டகம் வெளியிட்டுள்ள மனு ஸ்மிருதியில் இருந்து சில சுலோகங்களை இங்கே பார்க்கலாம்.
சுலோகம்: 2.189
ஸம்ஸ்கிருத மூலம்:
வ்ரதவத் தேவ தைவத்யே பித்ர்யே கர்மண்யத ரிஷிவத்
காமம் அப்யர்த்திதோ அச்ர்நீயாத் வ்ரதம் அஸ்ய ந லுப்யதே.
பொருள்:
(பிரம்மசாரி ஒருவன்) தேவ அல்லது பித்ரு கார்யங்களில் உணவருந்த அழைக்கப்பட்டிருந்தால், அவன் அங்கே தன் விருப்பப்படி உணவருந்தலாம். ஒரு துறவியைப் போல அவன் தனது நியமத்துக்குட்பட்டவனாக (இந்த இடங்களில் உணவருந்தலாம்). இதனால் அவனது (பிரம்மசர்ய) விரதம் பங்கமடைவதில்லை.
அலைகள் வெளியீட்டக ஸ்மிருதியில்:
வேள்வி, தென்புலத்தார் கடன் போன்ற நிகழ்ச்சிகளின் போது ஒருவனால் விருந்துக்கு அழைக்கப்பட்டால், புலால், கள் இவற்றைத் தவிர்த்து முனிவர்களைப் போன்று தனது நியமப்படி சென்றுண்ணலாம். இதனால் விரத பங்கம் நேரிடுவதில்லை.
எனது விளக்கம்:
வேதங்களில் சொல்லப்படும் சோமக்கொடி என்ன என்பதே தெரியாமல், ”வேதகால மகரிஷிகளும் பிராமணர்களும் சோமபானம் என்கிற மதுவை அருந்தினார்கள்” என்று நமது பள்ளிக்கூட வரலாற்றுப் பாடங்களில் எழுதி வைத்த கம்யூனிச கபோதிகளிடம், ”ஒரிஜினல் சுலோகத்தில் புலாலும் கள்ளும் எங்கே காணப்படுகின்றன?” என்று நாம் கேட்டால், நாம்தான் பைத்தியக்காரர்கள்.
இந்த நூலில் வர்ணக் கலப்பு குறித்த அத்தியாயத்தில் நிறையவே ‘பகீர்’ சமாசாரங்கள் காணக் கிடைக்கின்றன. ஆனால், நான் அவற்றைத் தவிர்க்க விரும்புகிறேன். பிராமண, சூத்திர, ஆரிய ஆகிய பதங்களை அதிகம் பயன்படுத்த வேண்டி வரும் என்பதே காரணம்.
எனினும், தவிர்க்க முடியாமல் ஒன்றை மட்டும் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்:

சுலோகம் 10.66
ஸம்ஸ்கிருத மூலம்:
அநார்யாயாம் ஸமுத்பன்னோ ப்ராஹ்மணாத் து….
ப்ராஹ்மண்யாம் அபி அநார்யாத் து…
பொருள்:
பிராமணர் அல்லாத (இந்த இடத்தில் ஆர்ய என்ற பதத்துக்கு பிராமணர் என்று பொருள் கொள்வதுதான் சரி.) பெண்ணுக்குப் பிறந்த (குழந்தை)…. பிராமணப் பெண்ணுக்கு பிராமணர் அல்லாதவர் மூலம் பிறந்த (குழந்தை)…..
அலைகள் வெளியீட்டகம் தரும் பொருள்:
மணமாகாத அத்தகைய பெண்ணிடம் அந்தணனுக்குப் பிறந்த பிள்ளை…. மணமாகாத அந்தணப் பெண்ணிடம் நாலாம் வருணத்தாருக்குப் பிறந்த பிள்ளை……
எனது விளக்கம்:
நமது ஸ்மிருதிகள் நான்கு வர்ணத்துடன் கூடிய சமுதாய ஒழுங்குக்கு மிகுந்த முக்கியத்துவம் தருபவை. இது வெறும் சமுதாய அமைப்பு என்று பலரும் பேசி வருகிறார்கள். ஆனால், மனு ஸ்மிருதியில் நால்வருண அமைப்பு பிரபஞ்ச நியதியாகத்தான் சொல்லப்பட்டுள்ளது. தனிமனித ஒழுங்கீனம் காரணமாக இத்தகைய நியதியில் எந்தெந்த வகையான கோளாறுகள் ஏற்பட முடியும், அவற்றின் விளைவுகள் என்ன, அவற்றில் இருந்து மீண்டும் பழைய நிலையை மீட்டெடப்பது எப்படி முதலானவை இந்தப் பகுதியில் விளக்கப்பட்டுள்ளன.
மேற்படி சுலோகம் வர்ணக் கலப்பினால் பிறக்கும் இரண்டு விதக் குழந்தைகளை ஒப்பீடு செய்து காட்டுவதற்காக ஓர் உதாரணத்தை எடுத்துக் கொள்கிறது.
இந்த சுலோகம் வர்ணக் கலப்பை மட்டுமே காட்டுகிறது. திருமண உறவைப் பற்றிய எந்தத் தகவலும் இதில் தரப்படவில்லை. இதன் தமிழ் மொழிபெயர்ப்பில் ‘மணமாகாத’ என்ற வார்த்தை எங்கிருந்து முளைத்தது? இந்த சுலோகத்தைப் படிக்கும்போது, ”மணமாகாத பிராமணப் பெண்கள் இதர ஜாதி ஆணுடன் கூடினார்கள், மணமாகாத பிற ஜாதிப் பெண்டிருடன் பிராமண ஆண்கள் கூடினார்கள்” என்ற கருத்து நமது ஆழ்மனதில் பதிய வைக்கப்படுகிறதா, இல்லையா?

சுலோகம் 9.46
ஸம்ஸ்கிருத மூலம்:
ந நிஷ்க்ரய விஸர்காப்யாம் பர்துர் பார்யா விமுச்யதே
ஏவம் தர்மம் விஜாநீம: ப்ராக் ப்ரஜாபதிர்நிர்மிதம்.
பொருள்:
கிரயம் மூலமாகவோ அல்லது விலக்கி வைக்கப்படுவதாலோ ஒரு மனைவியைக் கணவனிடமிருந்து பிரிக்க முடியாது. பண்டைய நாட்களில் பிரஜாபதி (பிரம்மா) ஏற்படுத்திய தர்மத்தில் (தர்ம விதிகளில்) இருந்து இவ்வாறு அறிகிறோம்.
அலைகள் வெளியீட்டகம் தரும் பொருள்:
ஒருவன் தன் தாரத்தை நீக்கிடினும், வேற்றவர்க்கு விலை வைத்துக் கொடுத்துவிட்டாலும், அவருடைய மனைவித் தன்மை மட்டும் விலகாது. அனாதியாக இப்படி ஏற்பாடு அமைக்கப்பட்டிருப்பதால் பிறன் மனைவியிடமாகப் பிறந்த பிள்ளையும் பயன்பட மாட்டான்.
எனது விளக்கம்:
அலைகள் வெளியீட்டின் திரிசமனுக்கு விளக்கம் தேவையே இல்லை. ஆனால், மேலே நான் கொடுத்துள்ள பொருளுக்கு மிக நீண்ட விளக்கம் தேவை. காரணம், நான் வெறுமனே வார்த்தைகளை மொழிபெயர்த்திருக்கிறேன்; சுலோகத்தின் உயிரோட்டத்தை அல்ல. இதுபோன்ற மொழிபெயர்ப்புகளின் மூலம் சுலோகத்தின் பொருளை அறிய முடியாது. மாறாக, இத்தகைய மொழிபெயர்ப்புகள் நமக்குத் தவறான உட்பொருளைத் தரும். இது மாபெரும் குற்றம், பாவச்செயல்.
ஏனெனில் –
இங்கே ஸம்ஸ்கிருதத்தில் உள்ள ‘விமுச்யதே’ என்ற சொல்லுக்கு, (நாம் தற்காலத்தில் விவாகரத்து முதலான விஷயங்களில் பயன்படுத்துவது போன்ற) ‘விடுதலை தருவது, விடுபடுவது’ என்றுதான் பொருள். இதைப் படித்ததும் ”விவாகரத்து, ஜீவனாம்சம் முதலியவற்றின் பின்னரும் கணவன்-மனைவி உறவு மாறாதா?” என்று சிலருக்கு நிஜமாகவே ஐயம் ஏற்படலாம்: ”ஓர் ஆடவன் தன் மனைவியைக் கொடுமைப்படுத்தினாலும், அவனிடமிருந்து அந்தப் பெண்ணை மீட்க அவளது பிறந்த வீட்டு மனிதர்கள் பணம் தரத் தயாராக இருந்தாலும், அவளது அடிமைத்தன்மை மாறாது. இதுதான் தர்மம்” என்று மனு சொல்கிறார் என்றுதானே நினைக்கத் தோன்றும்!
ஆனால், இந்த ஒரே ஒரு சுலோகத்துக்கு உரிய பாஷ்ய பாடத்தை எடுத்துப் படித்தால் போதும், நமது சாஸ்திரங்கள் பெண்களை எவ்வளவு தூரம் போற்றிப் பாதுகாப்பாக வைத்துள்ளன என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
பாஷ்ய விளக்கம் 1:
இந்த சுலோகம் ஏன் அவசியமாகிறது?
ஏனெனில், கணவன் மலடாக இருந்தால், (கற்புடைப் பெண்டிர் உட்பட எந்தப் பெண்ணாக இருந்தாலும்) மனைவி, தனது சுய விருப்பத்தின் பேரில், இன்னொரு புருஷனுடன் (பெரும்பாலும் கணவனின் சகோதரருடன்) உடலுறவில் ஈடுபட உரிமை உண்டு. காம இச்சைக்காக அல்ல, குழந்தைப் பேற்றுக்காக.
குழந்தை இல்லாத காரணத்தால் சந்ததியே அழிந்து விடும் என்ற சூழ்நிலை ஏற்பட்டால் மட்டுமே இது தர்ம வழியாக ஒப்புக் கொள்ளப்படுகிறது. மேலும், இத்தகைய உறவுக்குக் குடும்பப் பெரியோர்களும் சம்மதிக்க வேண்டும். ஒரே ஒரு குழந்தை மட்டும் இவ்வாறு பெற்றுக் கொள்ளலாம். அதேநேரத்தில், கர்ப்பாதானம் செய்தவர் அந்தக் குழந்தைக்குத் தந்தையாக மாட்டார். மாறாக, அந்தப் பெண்ணின் கணவனே தந்தை. (இத்தனை விஷயங்களும் மனுஸ்மிருதியின் இதே பகுதியில் விளக்கப்பட்டுள்ளன.)
அதுசரி, கர்ப்பாதானம் செய்தவர் அந்தப் பெண்ணை அடைய முயற்சித்தால் என்ன ஆவது? கணவனுக்குப் பணம் கொடுத்து விலைக்கு வாங்க நினைக்கலாமே! இல்லாவிட்டாலும், இந்த கர்ப்பாதானத்தால் கணவனுக்கு அதிருப்தி ஏற்பட்டு அதன் காரணமாக அவன் தனது மனைவியை விலக்கி வைக்கலாமே! இப்படியெல்லாம் செய்வதன் மூலம் மனைவித்தன்மையை மாற்ற முடியாது என்பதை விளக்கவே இந்த சுலோகம். ஏனெனில், மனைவி என்பவள் விலைபொருளும் அல்ல. அவளை விலக்கவும் முடியாது என்பது பிரபஞ்ச நியதி. பிரபஞ்ச நியதியை யாராலும் மாற்ற முடியாது. பிரபஞ்ச நியதியைத்தான் தர்மம் என்று சொல்கிறோம். இதனால்தான் சாக்ஷாத் பிரம்மாவே இதைக் கூறியதாக மனு குறிப்பிடுகிறார்.
பாஷ்ய விளக்கம் 2:
விலைக்கு விற்கப்படுவதற்கு அவள் விலைபொருள் அல்ல என்பது புரிகிறது. கணவன்-மனைவி பந்தம் விலக்க முடியாதது என்பது ஏன்?
இதற்கான விளக்கம் மூன்றாவது அத்தியாயத்தில் உள்ளது. ஓர் ஆடவன் தனது மனைவியை மந்திர பூர்வமாக ‘எடுத்துக் கொள்கிறான்’. எனவே, அவள் அவனுக்கு மட்டுமே உரிய (பிறரால் ஏற்றிவைக்கப்படவோ, பயன்படுத்தப்படவோ கூடாத) ஆஹவநீய அக்னியைப் போன்றவள். எனவே, இந்த பந்தம் விலகாது.
(இந்த அக்னிக்குத்தான் நம் ஊர் நைஷ்டிக பிரம்மசாரிகள் ஏதேதோ விளக்கம் தருகிறார்கள்.)

பாஷ்ய விளக்கம் 3:
பாஷ்யம் என்பது ஒட்டுமொத்த நூலின் பொருளை முழுமையாக உள்வாங்கி, அதை அனுபவத்தில் உணர்ந்தவர்களால் மட்டுமே எழுதப்படுவது. பாஷ்யங்களில், சம்பந்தப்பட்ட நூலின் முழுமையான பொருளின் அடிப்படையிலேயே ஒவ்வொரு சுலோகத்து வரிகளுக்கும், வார்த்தைகளுக்கும் பொருள் தரப்பட்டிருக்கும். இவ்வாறு தரப்பட்டிருக்கும் பொருளுக்கு அதே நூலின் வேறு பகுதிகளில் இருந்தும், பல்வேறு இதர நூல்களில் இருந்தும் உரிய மேற்கோள்கள் தரப்பட்டிருக்கும். ஒரு வார்த்தைக்கு எத்தனையோ பொருள் இருந்தாலும் இந்த இடத்தில் இந்தப் பொருள் தருவதற்கான காரணம் என்ன என்றும் விளக்கப்பட்டிருக்கும்.
இத்தனை விளக்கங்களையும் தவறாகத் திரித்துப் பொருள் கொள்வதற்கு வாய்ப்பே இல்லாதவாறு பின்னிப் பிணைக்கப்பட்ட வார்த்தைகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட மொழிநடையில் இருக்கும். (இதனாலேயே சாஸ்திர நூல்களையும் விட பாஷ்யங்கள் கடுமையான மொழிநடையில் அமைகின்றன.)
இதெல்லாம் போதாது என்று பாஷ்யகாரர் தனது பாஷ்யத்தைத் தனது சிஷ்யர்களுக்கு நேரடியாக, வாய்மொழி மூலம் உபதேசிப்பார். அவர்கள் மூலம் உபதேச பரம்பரை உருவாகும். காலப்போக்கில், இந்த பாஷ்ய பாடத்தில் மாணவர்களுக்குப் பல்வேறு சந்தேகங்கள் ஏற்படும். இவற்றையெல்லாம் கவனிக்கும் ஆசிரியர்கள் அத்தகைய சந்தேகங்களுக்கான விளக்கங்கள் தரும் விதத்தில் பதவுரை, தெளிவுரை அடங்கிய எளிமையான நூல்களை எழுதுவார்கள்.
இந்த எளிமையான நூல்களைப் புரிந்து கொள்வதேகூட நம்மைப் போன்றவர்களுக்கு மிகவும் கடினமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. காரணம், அடிப்படை அறிவு இல்லாதவர்கள் சாஸ்திரங்களைப் புரிந்து கொள்ள முயற்சியே செய்ய விடாமல் ஆக்கி, குரு மூலம் பெறும் உபதேசத்தை இன்றியமையாததாக ஆக்குவதற்கான ஏற்பாடு இது. இல்லாவிட்டால், சாஸ்திரங்களை நாம் விபரீதமாகப் பொருள் கொள்ள வாய்ப்பு உண்டு.
இவையனைத்தையும் உள்ளடக்கியதே உபதேச பரம்பரை. இந்த உபதேச பரம்பரைதான் நமது கல்வியின் ஆணிவேர். ”சாஸ்திரங்களை பாஷ்யம் இல்லாமல் படிக்கக்கூடாது, அந்த பாஷ்யங்களையும்கூட, குருவின் வாய்மொழி உபதேசத்தின் மூலமே அறிய வேண்டும்” என்பது நமது கல்விமுறையின் அடிப்படை.
(கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். இத்தகைய விஷயங்கள் வெறுமனே ஆன்லைன் வெர்ஷன்களாக மாறினால் நமது சந்ததிகள் சாஸ்திரங்களை எப்படி எப்படியெல்லாமோ அசட்டுத்தனமாகப் புரிந்து கொள்ள மாட்டார்களா?)