
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் நோய் பரவலால், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, அதன் காரணமாக பலர் வேலை எதுவும் இன்றி, வீட்டில் இருந்து கொண்டே செல்போன்கள் மூலம் ஆன்லைனில் சீட்டு விளையாடுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.
பொழுது போக்கிற்காக ஆன்லைனில் சீட்டு விளையாடியது போக, தற்போது பணத்திற்காக விளையாடவும் தொடங்கியுள்ளனர். இதனால் இப்போத் பலர் தங்கள் பணத்தை இழந்து நிற்கின்றனர்.
ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணையதள சூதாட்டம் மூலம் ஒரே மாதத்தில் 10 பேர் தற்கொலை செய்து கொண்ட கொடூர சம்பவம் இங்கு நடைபெற்றுள்ளது. ஏராளமான அப்பாவி மக்கள் பல்லாயிரக் கணக்கில் பணத்தை இழந்து வருகின்றனர். பொழுது போக்கு என்ற பெயரில் சுண்டி இழுத்து, முதலில் கொஞ்சம் பணத்தை அளிப்பது போல் அளித்து, ஆசையைத் தூண்டி, பின்னர் ஒட்டுமொத்தமாக இருக்கும் அனைத்து பணத்தையும் பிடுங்கிக் கொண்டு விடுவதுதான் ஆன்லைன் சூதாட்டங்கள்.
மீன் பிடிக்க புழுவைத் தூண்டிலில் இடுவது போல், விளம்பரங்கள் மூலம் ஆன்லைன் ரம்மி விளையாடி பணம் சம்பாதித்தார் என்று பொய்யான தகவல்களைப் பரப்பி, பலவீனமான மனநிலையில் இருப்பவர்களை சுண்டியிழுத்து அவர்களின் ஒட்டுமொத்த வருமானத்தையும், சொத்துகளையும் பறித்துக் கொண்டு… ஏன் உயிரையும் பறித்துக் கொண்டு தன் கோர முகத்தை மறைத்துக் கொண்டிருக்கின்றன ஆன்லைன் ரம்மி போன்ற சூதாட்டக் களங்கள்.

தெருவில் மரத்தடியில் அமர்ந்து கொண்டு பணம் வைத்து சீட்டு விளையாடுவதே குற்றம் என போலீஸார் துரத்தும் போது, அவரவர் கைகளில் உள்ள மொபைல் போன்கள் மூலம் ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளை எப்படித்தான் அரசு அனுமதிக்கிறதோ என்று கேள்வி எழுப்பாதவர்கள் இல்லை…!
ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணையதள சூதாட்டம் போன்றவற்றால் இளைஞர்கள் பலர் தற்கொலை மற்றும் பணம் இழப்பது தொடர் கதையாகி வருகிறது. எனவே இவற்றை முழுமையாக தடை செய்ய வேண்டும், விளம்பரத் தூதர்களாக நடிகர்கள் கிரிக்கெட் வீரர்கள் இடம்பெறுவதையும் தடுக்க வேண்டும் என அண்மையில் நீதிமன்றத்திலும் வழக்குதொடரப் பட்டுள்ளது.
ஆன்லைன் சூதாட்டங்களால் ஏற்படும் விபரீதங்கள் ஒரு புறம் இருக்க, இதன் தொடர்புடைய ஆன்லைன் கடன் வழங்கும் செயலிகளின் விபரீதமும் இன்னொரு புறம் மக்களின் கழுத்தை நெரித்துக் கொண்டிருக்கிறது. இது குறித்த விழிப்பு உணர்வை ஊட்டும் வகையில் சமூகத் தளத்தில் சிலர் கருத்துகளைப் பகிர்ந்தும் வருகிறார்கள். தங்கள் அனுபவங்களாக அவற்றை மக்களுக்குப் புரிய வைத்தும் வருகிறார்கள்.
ALSO READ : ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தை மத்திய மாநில அரசுகள் தடை செய்ய வேண்டும்!
இப்படி ஒரு அனுபவத் தகவல் வாட்ஸ்அப் செயலி மூலம் அனுப்பப் பட்டிருந்தது எனக்கு. காலை நேரம் இதனை வாசித்துக் கொண்டிருக்கும் போதே, இதன் விபரீதமும், பின்னணியும் பகீர் என்றிருந்தன. அந்த செய்தி இதுதான்….
Online Rummy பயங்கரம்: இன்று காலை தெரியாத ஒரு எண்ணில் இருந்து அழைப்பு வந்தது. கல்லுரியில் படிக்கும் உறவுக்கார பையன் பேரைச் சொல்லி, அவன் எங்களிடம் கடன் வாங்கியுள்ளான். இப்போது போன் சுவிட்ச் ஆப்பில் இருக்கிறது. பணம் கட்டாவிட்டால் விளைவுகளை சந்திக்க நேரிடும் என மிரட்டினார்கள்.
மாலை அந்தப்பையனைச் சந்தித்து என்ன விசயம் எனக் கேட்டேன். தலை சுற்ற ஆரம்பித்தது. முதலில் டிவி & யூ ட்யூப் விளம்பரங்களால் கவரப்பட்டு ஆன்லைனில் ரம்மி சர்க்கிள் ஆடியுள்ளான். முதலில் கொஞ்சம் ஜெயிக்கவும் அடிக்ட் ஆகி விட்டான். வந்த காசில் நண்பர்களுடன் சேர்ந்து
செலவழித்துப் பழகிவிட்டான். பின் கையிருப்பு தீர்ந்த உடன் கடன் கொடுக்கும் ஆப்களில் பணம் வாங்கத் துவங்கியுள்ளான்.
I Rupee, Cash bull, money more, Kissht போன்ற ஆப்கள் அதிபயங்கர நாள் வட்டிக்கு கடன் கொடுக்கின்றன. இவற்றில் நம் ஆதார் கார்டையும், பேன் கார்டையும், அக்கவுண்ட் டீடெயில்ஸையும் கொடுத்து விட்டால் போதும். உடனே நம் அக்கவுண்டுக்கு பணம் அனுப்பி விடுகிறார்கள்.
5000 ரூபாய் கடன் கேட்டால் ₹1500 பிராசசிங் காஸ்ட் என எடுத்து விட்டு ₹3500 ரூபாய் கொடுக்கிறார்கள். ஒரு வாரத்தில் வட்டியோடு (5000க்கு) கட்டாவிட்டால் தினமும் ₹500 அபராத வட்டி வேறு கூடும்.
அது போக மொபைலில் மிரட்ட ஆரம்பிக்கிறார்கள். போன் சுவிட்ச் ஆப் செய்தால், நம் காண்டாக்டில் உள்ள எண்களுக்கு போன் செய்து மிரட்டல் மற்றும் ஆபாசமாகப் பேச ஆரம்பிக்கிறார்கள். இதனால் மன உளைச்சலுக்கு உள்ளாகி அடுத்த ஆப்பில் கடன்வாங்கி, இதை அடைத்தோ அடைக்காமலோ மீண்டும் ஜெயித்து விடலாம், கடனை அடைத்து விடலாம் என ஒரு மாயச் சூழலுக்குள் விழுகிறார்கள்.

ஒரு மாதத்தில் ஒரு லட்சம் வரை எளிதில் கடன் ஆகி விடுகிறது. இதனால் பலர் சொத்துக்களை இழக்கிறார்கள். பல தற்கொலைகள். பிளாக் மெயில் செய்யவே நூற்றுக் கணக்கானோரை ஒவ்வொரு ஆப்பும் மாத சம்பளத்திற்கு வேலைக்கு எடுத்து வைத்திருக்கிறார்கள்.
வீட்டிலிருந்தே வருமானம் , மார்க்கெட்டிங் இல்லை மாதம் ₹15,000 வரை சம்பளம் என புறநகர் ரயில், பேருந்துகளில் ஓட்டியிருக்கும் போஸ்டர்களில் சில இம்மாதிரி டெலி காலிங் வேலைகளுக்கு தான். கடன் கொடுக்கும் போதே நம் காண்டாக்ட் லிஸ்டை அக்ஸெஸ் செய்யும் அனுமதியையும் அந்த ஆப் பெற்றுக்
கொள்கிறது.
தினமும் ஒரு சிம்மையும் காண்டாக்ட் லிஸ்டையும் கொடுத்து விடுவார்கள். ட்யூ டேட் வரை பெண்கள் பேசுகிறார்கள். மிரட்ட ஆண்கள். கந்து வட்டிக்காரர்கள் எல்லாம் இவர்களிடம் பிச்சை எடுக்க வேண்டும். இந்த ஆப்களின் டெர்ம்ஸ் அண்ட் கண்டிஷன்ஸ் எல்லாம் பயங்கரமாய் இருக்கும். சட்டம் மும்பை மாநகர jurisdiction எல்லைக்கு உட்பட்டது போன்றவை.
இந்த லாக்டவுனில் நிறைய கல்லூரி மாணவர்கள்,வேலைக்குப் போகாத குடும்பத்தலைவர்கள் இதில் சிக்கியுள்ளனர். கேமிங் ஆப்களை தடை செய்வதோடு மட்டுமில்லாமல் இது போல சட்டவிரோத money lending ஆப்களையும் தடை செய்ய வேண்டும். ரம்மி மட்டுமே ஆடினால் கூட ஒரு கட்டத்தில் மீளலாம். ஆனால் கேட்க கேட்க பணத்தை அக்கவுண்டுக்கு அனுப்பும் ஆப்கள் மீளவே முடியாமல் செய்து விடுகின்றன.
உஷார்.. உஷார்.. உஷார்… என்று அந்த அனுபவப் பகிரல் இருந்தது.
இன்னொரு புறம் நண்பர் மாயவரத்தான், இந்த மாய வலைப்பின்னலை வெளிப்படுத்தி, ஒருவரது பரிதாபத்தையும் நமக்குப் பகிர்ந்திருந்தார்.
கடன்கள் வழங்குவதற்கென்று நிதி பரிவர்த்தனைகளில் பல்வேறு கட்டுப்பாடுகளை நிறுவனங்களுக்கு விதித்திருக்கும் அரசுகள், கந்துவட்டி குறித்த விபரீதம் எழும்போது நடவடிக்கையில் இறங்கும் காவல் துறையினர், இது போன்ற ஆன்லைன் கடன் வழங்கும் நபர்களையும் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வந்து, கட்டுப்படுத்தியாக வேண்டிய நிலை இப்போது ஏற்பட்டுள்ளது. அரசுகள் இந்த விபரீதத்தை சிந்திக்கட்டும்! கைமீறிப் போன பின் கதறி அழுது அரற்றுவதில் எந்தப் பலனுமில்லை! பாதிக்கப் படுபவர்கள், நம் நாளைய நம்பிக்கைகள்!