December 8, 2024, 9:49 AM
26.9 C
Chennai

நேபாளத்தில் தீபாவளி! வித விதமாய்… வகை வகையாய்!

nepal-deepavali-1
nepal deepavali 1

கட்டுரை: ராஜி ரகுநாதன்

வெளிநாடுகளில் தீபாவளிப் பண்டிகை:-

உலகின் நாற்புறங்களிலும் உள்ள இந்தியர்கள் ஒரே குடும்பமாகச் சேர்ந்து கொண்டாடும் பண்டிகை தீபாவளி. இது தீமையின் மீது நன்மைக்கு விளைந்த வெற்றியைக் குறிப்பதால் சூழ்நிலையில் ஒரு குதூகலத்தையும் பிரகாசத்தையும் ஏற்படுத்துகிறது.

வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் தம் சந்ததியினர் நம் கலாச்சாரத்தையும் சம்பிரதாயங்களையும் விடாமலிருப்பதற்கு தீபாவளிப் பண்டிகையின் வரவை ஆவலோடு எதிர்பார்த்து அதற்கான முயற்சிகளில்  முழுமூச்சாக இறங்கி விடுகிறார்கள். குழந்தைகளும் தீபாவளி விருந்துக்காக ஆவலோடு காத்திருக்கிறார்கள்.

இந்திய சம்பிரதாய உணர்வையும்,  மேன்மையையும் வெளிப்படுத்தும் இப்பண்டிகை வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களுக்கு மட்டுமேயன்றி அந்தந்த நாட்டு மக்களுக்கும் கூட உற்சாகத்தை அளிக்கும் மகிழ்ச்சியான பண்டிகையாக வரவேற்கப் படுகிறது.

Diwali-in-nepal
Diwali in nepal

பிரிட்டன், நெதர்லாந்து, நியூஜிலாந்து, ஆஸ்திரேலியா, சூரீனாம்,  கனடா,கயானா, கென்யா, மொரீஷியஸ், பீஜி, ஜப்பான், இந்தோனேஷியா, மலேஷியா, மியான்மார், நேபாளம், சிங்கப்பூர், தக்ஷிண ஆப்பிரிக்கா, தான்சானியா, டிரினிடாட், ஜமைக்கா, தாய்லாந்து, அரபு நாடுகள், ஆப்பிரிக்காவின் பல பாகங்கள், அமெரிக்கா போன்ற பல நாடுகளில் தீபாவளிப் பண்டிகை அந்நாட்டு மக்களால் வைபவத்தோடு கொண்டாடப் படுகிறது.

இந்தியர்கள் பிரபஞ்சத்தின் நலுமூலைகளுக்கும் சென்று வசிப்பது அதிகரித்து வருவதால் உலக நாடுகளின் தேசிய பண்டிகைகளின் வரிசையில் தீபாவளி கூட முதன்மை இடத்தைப் பிடித்துள்ளது. சாதாரணமாக வெளிநாடு வாழ் இந்தியர்களே  கோலாகலமாக இப்பண்டிகையை ஏற்பாடு செய்து கொண்டாடினாலும் பல நாடுகளில் அந்நாட்டு மக்களின் கலாசாரத்தில் கூட தீபாவளி ஒரு பகுதியாக மாறிவிட்டதைக் காண  முடிகிறது.

நேபாளத்தில் தீபாவளி :-

நம் அண்டை நாடான நேபாளத்தில் தீபாவளி பண்டிகையை சிறப்பாக எவ்வாறு கொண்டாடுகிறார்கள் என்பதை இப்போது பார்ப்போம்.

nepal-deepavali2
nepal deepavali2

நேபாளத்தில் தீபாவளியை ‘திஹார்’ என்று அழைக்கின்றனர். இது அவர்களுக்கு ஐந்து நாள் பண்டிகை. ஆனால் இந்தியாவில்  நாம் கொண்டாடும் விதத்தை விட கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறது. நேபாள் மக்களில் ‘நேவார்’ இனத்தைச் சேந்தவர்கள் தீபாவளியை ”ஸ்வான்டி” என்றழைக்கின்றனர். கார்த்திகை மாதம் கிருஷ்ண பக்ஷ திரயோதசி முதல் கார்த்திகை சுக்லபக்ஷ த்விதீயை வரை ஐந்து நாட்கள் தீபாவளிப் பண்டிகையைக்  கொண்டாடுகிறார்கள்.

‘திஹார்’ என்றால் ‘தியா’ – ‘தீபம்’ என்று பொருள். வீட்டின் உள்ளும், வெளியேயும்  தீபங்களை ஏற்றி இரவு முழுவதும் ஜகத்ஜோதியாக ஒளி விடச் செய்கிறார்கள். இந்த ஐந்து நாள் பண்டிகையில் நேபாள் மக்கள் சுற்றத்தாரை மட்டுமின்றி, தம்மோடு வாழும் விலங்குககளைக் கூட கௌரவிக்கும் விதத்தில் கொண்டாடுவதனால் இதற்கு மிகவும் முக்கியத்துவம்  உள்ளது. ஒரு புறம் உறவினர்களுடன் சேர்ந்து  தெய்வ பூஜைகள். மறு புறம் நாய்கள், காக்கைகள், பசுமாடு இவற்றைக் கூட வழிபடுகிறார்கள். நேபாளில் திஹார் பண்டிகை மனிதனுக்கும் பிராணிகளுக்கும் இடையே உள்ள பவித்திரமான நட்பினை வெளிப்படுத்துகிறது. 

dog-deepavali-1
dog deepavali 1

வீட்டைச் சுத்தப்படுத்தி, வீட்டிற்குள்ளும், வெளியிலும் வண்ணக் கோலங்களால் அலங்கரிக்கிறார்கள். நிறங்கள் கலந்த அரிசி,  பூக்களின் இதழ்கள், வண்ணம் கலந்த மணல் இவற்றால் அழகான கோலங்கள் இட்டு வீடுகளை அழகுபடுத்துகின்றனர். இவ்விதம் அலங்கரித்து தீபங்களை ஏற்றி தேவதைகளை வரவேற்கின்றனர்.

ALSO READ:  ரயில்களில் பொதுப் பெட்டிகள் அதிகரிப்பு! எந்தெந்த ரயில்களில் தெரியுமா?

காக் திஹார் – காக்கை தீபாவளி :-

இது காக்கைகளுக்குச் செய்யும் பூஜை. தீபாவளியின் முதல் நாள் காக்கை பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது. காகங்களும் அண்டங்காக்கைகளும்  நமக்கு தினமும் கண்ணில் படும் பறவைகள். இவற்றை தெய்வ தூதர்களாக பாவித்து தீபாவளியன்று இவற்றுக்கு ஆகாரம் இட்டு  பூஜிக்கிறார்கள்.காகம் கரைந்தால் வீட்டிற்கு விருந்தினர் வர போகிறார்கள் என்று நம்பும் வழக்கம் நம்மில் உள்ளது. காக்காய்களின் கத்தல் துக்கத்திற்கும் கவலைக்கும் கூட சங்கேதமாகக் கொள்ளப்படுகிறது. அதனால் காக்கைகளுக்கு உணவளித்து அவற்றின் வயிறை நிரப்புவதன் மூலம் வீட்டில் துக்கமோ மரணமோ சம்பவிக்காது என்பது  நேபாளிகளின் நம்பிக்கை.

dog-deepavali-2
dog deepavali 2

காகுர் திஹார் – நாய்கள் தீபாவளி :-

இரண்டாம் நாள் நாய்களுக்கு பூஜை செய்கிறார்கள். எமதர்மராஜனின் தூதனாக கருதப்படும் நாய்களை ஆண்டுக்கொருமுறை இந்த நாளில் பூஜித்து கௌரவிக்கிறார்கள். நாய்களுக்கு கழுத்தில் மாலையிட்டு நெற்றியில் குங்குமத் திலகமிட்டு  வயிறார உணவளித்து ஆந்தமடைகிறார்கள்.

dog-deepavali-3
dog deepavali 3

அவற்றின் விசுவாசத்திற்கும் நன்றியறிதலுக்கும் பிரதி உபகாரமாக அன்பை வெளிப்படுத்துகிறார்கள்.

இவ்விதம் செய்வதன் மூலம் நாய்களுக்கும் மனிதனுக்கும் இடையே உள்ள நட்பினை கௌரவித்து மகிழ்கிறார்கள். இதே நாளில் நரக சதுர்த்தசி கூட கொண்டாடுகிறார்கள்.

காய் திஹார்- பசுக்களின் தீபாவளி:-

மூன்றாம் நாள் விடியற்காலை பசுமாடுகளுக்கு பூஜை செய்கிறார்கள். பசுக்கள் சௌபாக்கியத்திற்கும், ஐஸ்வர்யத்திற்கும் சின்னங்கள். இன்று பசுக்களையும் காளை மாடுகளையும் குளிப்பாட்டி அலங்காரம் செய்கிறார்கள். அவற்றுக்கு மாலை அணிவித்து குங்குமப் பொட்டு வைத்து உணவளிக்கிறார்கள்.

nepal-cow-deepavali
nepal cow deepavali

நல்ல பசும்புல்லும் வைக்கோலும் சமர்ப்பித்து பூஜிக்கிறார்கள். பசுக்களின் மூலம் மனிதன்  பழங்காலம் முதல் எத்தனையோ சௌகர்யங்களை அனுபவித்து வருகிறான். தேவதைகளுக்கு ஆஹுதி அளிப்பது கூட பசு நெய்யினால்தான். இவற்றுக்கு நன்றியாக லட்சுமி பூஜை நடத்தும் மூன்றாவது நாள் பசுமாடுகளை பூஜித்து மகிழ்கிறார்கள். வீட்டு வாசல், ஜன்னல் இவற்றை ஜாமந்தி பூக்களால் தோரணங்கள் கட்டி அலங்கரிக்கிறார்கள். மூன்றாம் நாள் மாலை ஐஸ்வர்ய லக்ஷ்மிக்கு நன்றி கூறும் விதமாக தீபங்களை ஏற்றி தேவியை வரவேற்கிறார்கள்.

Cow-deepavali
Cow deepavali

‘நேபாள் சம்பத்’ எனப்படும் நேபாள் காலண்டர்படி இன்று அவர்களின் ஆண்டுக்கு கடைசி நாள். அதனால் வியாபாரிகள் தம் வியாபாரத்தின் கணக்கினை இன்று பூர்த்தி செய்து செல்வத்திற்கு தேவதையான லட்சுமி தேவியை ஆராதிக்கிறார்கள்.லட்சுமி பூஜை செய்த பின் இளைஞர்களும் யுவதிகளும் பாட்டு பாடி நாட்டியம் ஆடுகிறார்கள். உறவினர்களின் வீடுகளுக்குச் சென்று வாத்தியங்கள் வாசித்து பாட்டு பாடி ஆசீர்வாதம் பெறுவதோடு பரிசுகளும் பெற்று  வருகிறார்கள். விடிய விடிய ‘பைலோ’ எனப்படும் இவ்வித ஆடல் பாடல்கள் நடக்கின்றன. வீட்டு எஜமானி இவர்களுக்கு பழங்கள், ‘சேல்ரொட்டி’, மற்றும் பணம் கொடுத்து அனுப்பிவைக்கிறார்கள். (சேல்ரொட்டி என்பது அரிசிமாவோடு சர்க்கரை  சேர்த்து தயாரிக்கும் சிறப்பான நேபாளி ரொட்டி).

ALSO READ:  செங்கோட்டை ரயில் நிலையத்தில் பயணிகள் வசதிக்காக மொபைல் ஏடிஎம்.,!

இந்த மூன்றாம் நாள் தொடக்கம் முதல் திஹார் பண்டிகை ‘டெயுசி’, ‘பைலோ’ (Deusi and Bhailo) எனப்படும் ஆடலும் பாடலுமாக பண்டிகைச் சூழல் மும்முரமாக களைகட்டிக் காணப்படும். ‘டெயுசி’ பாடல்களை இளைஞர்கள் பாடுவார்கள். ‘பைலோ’ என்பது பெண்களால் பாடப்படுவது. தீபங்கள், ஆடல்,  பாடல். நாட்டியம், வெடிகள், பட்டாசுகள் இவற்றோடு குதூகலாமாக இன்றைய தினம் கழிகிறது.

NEPAL_
NEPAL

இன்றைய கொண்டாட்டத்தின் பின் தாங்கள் பெற்ற காணிக்கைகளில் ஒரு பகுதியை தர்ம காரியங்களுக்கு தானமாக அளித்து, மீதியை இளைஞர்களும் யுவதிகளும் தங்களுக்குள் சமமாக பிரித்துக் கொள்கிறார்கள். சுற்றுலா தலங்களுக்குச் சென்று ஆனந்தமாக கொண்டாடுகிறார்கள்.

கயிற்றால் மரங்களுக்கு கட்டிய ஊஞ்சல்களில் ஆடுகிறார்கள். அவற்றுக்கு  ‘டோரேபிங்’ என்று பெயர். மரக்கட்டைகளால் தயாரித்த ஊஞ்சல்களுக்கு ‘பிர்கேபிங்’ அல்லது ‘ரங்காடேபிங்’ என்று பெயர். இவ்விதம்  உல்லாசமான சூழ்நிலையை தீபாவளியின் மூன்றாம் நாள் காணமுடிகிறது.

கோவர்த்தன பூஜை மற்றும் ஆத்ம பூஜை:-

நான்காம் நாள் நேப்பாள்  மக்கள் தம் தம்  இனத்தின் கலாச்சாரத்தின்படி ஊர்வலம் செல்கிறார்கள். ‘நேவார்’ இன மக்கள் இன்று  ‘மா பூஜை’ செய்கிறார்கள். தமக்குத் தாமே பூஜை செய்து கொள்வது. (Worship of the Self). இன்று மனித உடலுக்கு பூஜை நடக்கிறது. வரப்போகும் நாட்களில் ஆரோக்கியமாகவும் உற்சாகமாகவும் இருக்கவேண்டுமென்று  திலகம் இட்டுக் கொண்டு தெய்வத்தை வேண்டிக் கொள்வார்கள். வைஷ்ணவ சம்பிரதாயத்தைச் சேர்ந்தவர்கள் கோவர்த்தன பூஜை செய்கிறார்கள். பசும் சாணியை கோவர்தனகிரியாக பாவித்து  பூஜிக்கிறார்கள்.

இன்று நேபாள் காலெண்டர் படி ‘நேபாள் சம்பத்’. அதாவது நேபாளி புத்தாண்டு துவக்கம். அதனால் இன்றைய  தினத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

nepal-bai-tikka-2
nepal bai tikka 2

பாய் டிக்கா – சகோதர பூஜை :-

ஐந்தாம் நாளான இறுதி நாள் ‘பாய் டிக்கா’ என்று அழைக்கப்படுகிறது. அக்கா தங்கைகள் தம் அண்ணன் தம்பிகளின் நலம் கோரி அவர்களின் நெற்றியில் திலகம் இட்டு அவர்களின் ஆயுள் ஆரோக்யத்திற்காக பிரார்த்தனை செய்கிறார்கள்.

இன்று எமதர்மராஜன்  தன் சகோதரி யமுனா தேவி வீட்டிற்குச் சென்றான் என்றும் யமுனா அவனுக்கு சுபமாக பொட்டு வைத்து மங்களகரமாக மாலை அணிவித்து விருந்து படைத்தாள்  என்றும் புராணக் கதைகள்  கூறுகின்றன. இருவரும் சேர்ந்து இனிப்புப் பதார்த்தங்களை உண்டு ஆனந்தமடைந்தார்கள் என்று கூறுவர். திரும்பிச் செல்லும்  முன் எமதர்ம ராஜன் தன் அன்புக்கு அறிகுறியாக  தங்கைக்கு காணிக்கைகள்  அளித்தான். அதற்கு பதிலாக தன்  கையால் தயார் செய்த ஒரு அழகிய பொருளை யமுனா தன்  அண்ணனுக்கு காணிக்கையாக  அளித்தாள். அதனால் மனமகிழ்ந்த யமன் இவ்விதம் யாரொருவர் சகோதரியின் கையால் திலகம் வைத்துக் கொள்வானோ அவனுக்கு மரணம் சம்பவிக்காது என்று வரமளித்தான்.

nepal-bai-tikka
nepal bai tikka

இன்று  சகோதரிகள் சில மாதங்கள் வரை வாடிப் போகாத பிரத்தியேகமான புஷ்பங்களால் மாலைகள் தயாரித்து தம் சகோதரர்களுக்கு அணிவித்து அலங்கரிப்பார்கள். அது அவர்களுக்கு தீர்காயுளைத் தரும் என்று நம்பி பிரார்த்தனை செய்வார்கள். அண்ணன் தம்பிகளை  பலகையில் அமர்த்தி அக்கா தங்கைகள் தரையில் அவர்களை சுற்றி எண்ணெய்த் துளிகளைத் தெளிப்பார்கள். சகோதரனின் தலை மீதும் எண்ணெய் தேய்த்து ஏழு வண்ணங்களால் நெற்றியில் பொட்டு வைப்பார்கள். அதன் பின் சகோதரன் கூட சகோதரியை உட்கார வைத்து அதே போல் பொட்டு வைத்து காணிக்கை தருவான்.

ALSO READ:  மதுரையில் களைகட்டிய ஆயுத பூஜை கொண்டாட்டம்!
bhai-tika
bhai tika

சகோதரன் சின்னவனாக இருப்பினும் பெரியவனாகி இருப்பினும் வயதை பொருட்படுத்தாமல் இந்த சம்பிரதாயத்தை நிகழ்த்துகிறார்கள். சகோதரர் இல்லாதவர் மற்ற உறவினருடன் சேர்ந்து இந்த பண்டிகையை ‘டிகா’ பொட்டு வைத்து கொண்டாடுகிறார்கள். இவ்விதம் பாய் டிக்கா பண்டிகை அண்ணன் தம்பிகள் அக்கா தங்கைகள் அனுபந்தத்தை பலப்படுத்துகிறது.

மீதி நாடுகளில் வீட்டிற்கு வீடு பட்டாசுகள் வெடிப்பதற்கு அரசாங்கம் அனுமதி அளிக்காவிடினும் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து ஓரிடத்தில் வெடிகள் வெடிப்பதற்கு அனுமதித்து ஆனந்திப்பதற்கு அந்தந்த நாடுகள் ஏற்பாடுகள் செய்கின்றன.

author avatar
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari