கட்டுரை: ஜனனி ரமேஷ்
சிவஞான முனிவர்: திருவாவடுதுறை ஆதினத் தம்பிரானாகவும், வித்வானாகவும் விளங்கியவர் சிவஞான முனிவர். இலக்கியம், இலக்கணம், தருக்கம், சமயம் எனப் பல்வேறு தலைப்புகளில் நூல்கள் எழுதியுள்ளார்.
இவற்றுள் சிறந்தது ‘சிவஞானமாபாடியம்’ ஆகும். மெய்கண்டாரின் சிவஞான போதத்துக்கு முனிவர் எழுதிய உரையாகும்.
சிவஞான முனிவர் பிறந்த ஊர் திருநெல்வேலி மாவட்டம், பாபநாசம் அருகே உள்ள விக்ரமசிங்கபுரம் ஆகும். திருநெல்வேலி மண்ணில் பிறந்து, தாமிரவருணி தண்ணீரைக் குடித்துப், பொதிய மலைத் தென்றலைச் சுவாசித்து வளர்ந்தவர் சிவஞான முனிவர். ஆனந்தக் கூத்தர் – மயிலம்மை தம்பதிகளுக்கு மகனாகச் சைவ வேளாளர் குலத்தில் 1753இல் பிறந்தார். இவரது இயற்பெயர் முக்களாலிங்கர். 1785இல் மறைந்த போது இவரது வயது 32 ஆண்டுகள் மட்டுமே. நடப்பு 2020 ஆண்டு அவர் முக்தி அடைந்த 235ஆவது ஆண்டாகும்.
ஒரு நாள் வீதி வழியே பாத யாத்திரையாகச் சென்று கொண்டிருந்த திருவாவடுதுறை ஆதீனத்துத் தம்பிரான்கள் மற்றும் அடியார்களைப் பார்த்தவுடன் ஏதோவொரு இறையருள் ஈர்ப்பில் அவர்களைப்போல் ஆக வேண்டுமென முக்களாலிங்கர் தந்தையிடம் தெரிவித்தார். மகனைப் பிரிய மனமின்றி முதலில் பெற்றோர் தயங்கினாலும் இறைச்சித்தம் அவ்வாறிருப்பின் தடை சொல்வது முறையன்று என்று மனத்தைத் தேற்றிக் கொண்டனர். திருவாவடுதுறைத் தம்பிரான்களிடம் விவரத்தைக் கூறி அவர்களிடம் முக்களாலிங்கரை ஒப்படைத்து விட்டு விழிகளில் கண்ணீர் வழிய கனத்த இதயத்துடன் இல்லம் திரும்பினர்.
கன்னியாகுமரிக்கு அருகில் சுசீந்திரத்திலுள்ள திருவாவடுதுறை கிளை மடமான ஈசான மடத்துக்கு முக்களாலிங்கரை அழைத்துச் சென்று அங்கே எழுந்தருளியிருந்த ஆதீனச் சின்னப் பட்டம் வேலப்ப தேசிகரிடம் தம்பிரான்கள் விஷயத்தைச் சொன்னார்கள். முக்களாலிங்கரின் ஞானத்தைக் கண்டு வியந்து அவருக்கு தீக்ஷையும், உபதேசமும் செய்து சிவஞான ஸ்வாமிகள் என்று பெயருமிட்டுத் திருவாவடுதுறை ஆதினத்தில் தம்பிரானாக நியமித்தார்.
தமிழகத்திலுள்ள பல கோயில்களுக்குப் பாத யாத்திரை மேற்கொண்டு காஞ்சிபுரம் வந்தடைந்தார். அங்குள்ள பிள்ளையார்பாளையம் திருவாவடுதுறை ஆதீனக் கிளை மடத்தில் பல காலம் தங்கியிருந்து பாடம் சொன்னதுடன் ஏராளமான நூல்கலையும் இயற்றினார். இலக்கணம் (தொல்காப்பியச் சூத்திர விருத்தி, சங்கர நமச்சிவாயப் புலவர் நன்னூல் விருத்தியுரைத் திருத்தம், இலக்கண விளக்கச் சூறாவளி); இலக்கியம் (காஞ்சிப் புராணம் முதற்காண்டம், சோமேசர் முதுமொழி வெண்பா,குளத்தூர்ப் பதிற்றுப்பத்து அந்தாதி, கலசைப் பதிற்றுப்பத்து அந்தாதி, இளசைப் பதிற்றுப்பத்து அந்தாதி, கச்சி ஆனந்த ருத்திரேசர் பதிகம், திருவேகம்பர் ஆனந்தக் களிப்பு, கலைசைச் செங்கழுநீர் விநாயகர் பிள்ளைத்தமிழ், குளத்தூர் அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ், திருத்தொண்டர் திருநாமக் கோவை, இராஜவல்லிபுரம் அகிலாண்டேஸ்வரி பதிகம், திருவேகம்பர் அந்தாதி, திருமுல்லைவாயில் அந்தாதி, பஞ்சாக்கர தேசிகர் மாலை, கம்ப ராமாயண முதற் செய்யுட் சங்கோத்தர விருத்தி); தருக்கம் (தருக்க சங்கிரகமும் அன்னம் பட்டீயமும்), சமயம் (சிவஞானபாடியம், சிவஞானப் போதச் சிற்றுரை, சித்தாந்தப் பிரகாசிகை, சிவஞானசித்திப் பொழிப்புரை, அரதத்தாசாரியர் சுலோக பஞ்சக மொழிபெயர்ப்பு, என்னையிப்பவத்தில் என்னும் செய்யுள் சிவசமயவாத உரை மறுப்பு, எடுத்து என்னுஞ் சொல்லுக்கிட்ட வைரக்குப்பாயம், சிவ சமயவாத உரை மறுப்பு, சிவதத்துவ விவேகம், சித்தாந்த மரபு கண்டனக் கண்டனம்) என 4 தலைப்புகளில் 29 நூல்கள் எழுதியுள்ளார்.
சிவஞான முனிவர் எழுதிய அனைத்து நூல்களிலும் சிறந்து விளங்குவது மெய்கண்டார் இயற்றிய சிவஞான போதத்துக்கு இவர் எழுதிய ‘சிவஞான மாபாடியம்’ என்னும் உரைநூலாகும். உரை என்பதன் வடமொழிப் பெயர் பாஷ்யம் ஆகும். அதுவே தமிழில் பாடியம் எனத் திரிந்தது. வேதாந்தத்துக்கு பிரம்ம சூத்திரங்கள் முக்கியமாதல் போன்று சைவ சித்தாந்தத்துக்கு சைவ சித்தாந்த சூத்திரமாகிய சிவஞானபோதம் மிக முக்கியமாகும். சைவ சித்தாந்தத்திலுள்ள ஒரே பாடியம் சிவஞான மாபாடியம் மட்டுமே.
தமிழ்ச் சிவஞான போதத்துக்குப் பிந்தியதே வடமொழி சிவஞானபோதம். இருப்பினும் வடமொழியின் மொழிபெயர்ப்பே தமிழ்ச் சிவஞானபோதம் என்ற கருத்தே நீண்ட காலம் நிலவியது. எனவே தமிழ் சிவஞான போதமே காலத்தால் மூத்தது என்பதை நிறுவத் தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. நிறைவாகத் தமிழ்ச் சிவஞானபோதம் முதல் நூலே அன்றி வடமொழியின் மொழிபெயர்ப்பு அல்ல என்று ஆய்வாளர்கள் பல்வேறு ஆதாரங்களைத் திரட்டி நிரூபித்தனர்.
வைணவ சித்தாந்தத்துக்கு ஸ்ரீ இராமானுஜர் பாஷ்யக்காரர் என்றால் சைவ சித்தாந்தத்துக்கு சிவஞான முனிவர் பாஷ்யக்காரர். ‘சிவஞான மாபாடியம் ஒரு பெருங் களஞ்சியம், தத்துவக் களஞ்சியம், தத்துவச் சுரங்கம், பெருஞ் சுரங்கம், தத்துவக் கடல், தத்துவ ஆராய்ச்சிக்கொரு கருவூலம், தமிழ்ச்செல்வம், கற்பகம், காமதேனு’ என்று போற்றுகிறார் தமிழ்த் தென்றல் திரு.வி.கல்யாணசுந்தரனார்.
காஞ்சியில் வசித்த போது ஒரு முறை மடைப்பள்ளி சமையல்காரரான தவசிப் பிள்ளை என்பவர் இன்றைக்கு என்ன சமைப்பது என்று கேட்கச் சிவஞான முனிவர் அதற்கான பதிலை வெண்பாகவே கூறினாராம்.
சற்றே துவையல் அரைதம்பி பச்சடிவை
வற்றலே தேனும் வறுத்துவை – குற்றமில்லை
காயமிட்டுக் கீரைகடை கம்மென வேமிளகுக்
காயரைத்து வைப்பாய் கறி
‘ஒரு துவையல், ஒரு பச்சடி, ஒரு வற்றல், கீரைக் கடைசல் ஆகியவற்றுடன் பெருங்காயம் சேர்த்தும், மிளகாய் அரைத்தும், கம் என்னும் வாசனையுடன் கறி செய்து வை’ என்பதே இதன் பொருளாகும்.
சிவஞான முனிவருக்கு மொத்தம் பன்னிரு சீடர்கள். அவர்களுள் முதல் மாணவர் கவிராட்சஷர் என்று போற்றப்படும் கச்சியப்ப முனிவர் (கந்தபுராணம் இயற்றிய கச்சியப்ப சிவாச்சாரியார் வேறு இவர் வேறு). நா வன்மை மிக்கவர். இவரது வாதத் திறமைக்கு உதாரணமாக ஒரு நிகழ்ச்சியைக் கூறலாம். சிவஞான முனிவர் காஞ்சிபுரத்தில் ‘காஞ்சி (ஏகாம்பரேஸ்வரர்) புராணத்தை’ அரங்கேற்றிய போது தில்லை நடராஜர் துதியாகக் கடவுள் வாழ்த்துடன் தொடங்கினார். அப்போது அவர் மீது பொறாமை கொண்ட புலவர் அருகிலிருந்த ஓதுவாரைத் தூண்டிவிட்டு ‘காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் புராணத்தில் கடவுள் வாழ்த்தாக ஏகாம்பரேஸ்வரரைப் பாடாமல் நடராஜரை ஏன் பாடுகிறீர்’ என்று கேட்க சிவஞான முனிவர் சற்றே அதிர்ந்து போனார். என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் திகைத்தார்.
அப்போது அருகில் இருந்த கச்சியப்பர் அந்த ஓதுவாரைப் பார்த்து காஞ்சி தலத் தேவாரத்தை ஓதக் கேட்க அவரும் உடனே ‘திருச்சிற்றம்பலம்’ என்று சொல்லி தேவாரப் பதிகத்தைப் பாட ஆரம்பித்தாராம். ‘திருச்சிற்றம்பலம்’ என்ற சொல் காதில் விழுந்ததுதான் தாமதம் ‘நிறுத்தும்.. நிறுத்தும்… காஞ்சித் தலத்தின் தேவாரத்தில் ‘திருஏகாம்பரம்’ என்றல்லவா கூறித் தொடங்க வேண்டும். ‘திருச்சிற்றம்பலம்’ எங்கிருந்து வந்தது என்று எதிர்க்கேள்வி கேட்க ‘எந்தத் தலத்துப் பதிகத்தை ஒதத் தொடங்கினாலும் முதலாகவும், நிறைவாகவும் ‘திருச்சிற்றம்பலம்’ என்று சொல்வதுதானே முறை’ என்று பதிலளித்தார். இதைக் கேட்ட கச்சியப்பர் புன்னகைத்தவாறே ‘இது உமக்கும் தெரியும், எமக்கும் தெரியும், சபையில் கூடியுள்ளவர்களுக்கும் தெரியும். ஆனால் உம்மைத் தூண்டிவிட்டுக் கேள்வி கேட்க வைத்த புலவருக்குத் தான் தெரியவில்லை’ என்று சொல்ல அவையோர் ஆர்பரித்தனர். தூண்டி விட்ட புலவர் வெட்கித் தலைகுனிந்தார்.
திருவாவடுதுறை ஆதீனத்தில் இரண்டாவது குரவராக அமர வேண்டும் என்றும் அடுத்த பட்டம் குருமகா சந்நிதானமாக வர வேண்டும் என்றும் அப்போதைய குருமகா சந்நிதானமும், தம்பிரான்களும், அடியார்களும், பொது மக்களும் விரும்பினர். ‘யாம் வணங்கப் பிறந்தோமே தவிர மற்றவர்கள் எம்மை வணங்கப் பிறக்கவில்லை’ என்று அடக்கத்தின் மறுவுருவாக மொழிந்து குருமகா சந்நிதானமாகப் பொறுப்பேற்கும் மகத்தான வாய்ப்பை மறுத்தார். வாழ்நாள் முழுவதும் மற்றவர்களுக்குப் பாடம் சொல்லியும், அருளாசி வழங்கியும், திருவாவடுதுறையிலேயே முக்தி அடைந்தார். திருவாவடுதுறை ஆதீனக் குல தெய்வமாகப் போற்றப்படும் அவரது சமாதித் திருக்கோயில் ஆதீனத் தோட்டத்தில் உள்ளது. குரு பூஜைகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.