கட்டுரை: டி.எஸ்.வெங்கடேசன்
தீபாவளி என்றவுடன் புத்தாடை., பலகாரம், பட்டாசுதான் நினைவுக்கு வரும். தீபாவளிக்கு சில நாட்களுக்கு முன்பே பட்டாசுகளை வெயிலில் காய வைத்து பள்ளி நண்பர்களிடம் மிகைப்படுத்தி பீத்திக் கொள்வோம். தீபாவளி அன்று ஆசை தீர வெடித்தாலும், அடுத்தவர் வீட்டினரின், நண்பர்களிடம் ஓசி வெடி, மத்தாப்பு வாங்கி வெடிப்பதில்தான் பெரும் சுகம். குப்பைகளை சேர்த்து அதிகமாக சேர்த்து “ எங்கள் வீட்டில்தான் அதிகமாக வெடித்தோம் “ என தற்பெருமை கொண்ட நாட்கள் இன்னும் பசுமையாக உள்ளது.
ஆனால் கடந்த ஐந்து அல்லது ஆறு ஆண்டுகளாக, காற்று மாசு என்ற பெயரில் தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க ஏகப்பட்ட கெடு பிடிகள். தடை.கள் வேறு. இவர்கள் திடீரென தோன்றிய காளான்கள். சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் என்ற பெயரில் உலா வரும் சுள்ளான்கள். பட்டாசு வெடிப்பது நமது கலாசாரத்தில் கிடையாது. தடை சரிதான் என ஜால்தார தட்டும் கோடரி காம்புகள்.
வேத காலத்தில் பட்டாசுகள்:
வேத காலத்தில் பட்டாசு வெடிப்பது குறித்து கூறப்பட்டுள்ளது. கிமு 300 முதல் 2,300 ஆண்டுகளுக்கு முன்பு சாணக்கியர் (கெளடில்யர் ) எழுதிய அர்த்தசாஸ்திரத்தில் அக்னி செளரணா ( நெருப்பை உருவாக்கும் பொடி) குறித்து கூறியுள்ளார். இதை கொண்டு புகை உண்டாக்கி எதிரியுடன் போர் புரிந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
கிபி 600 நிலமதா புராணம் ( கி மு 8-கிமு 6க்கு இடையில்) எழுதப்பட்ட நூலில் சரித்திர, மதம், பண்பாடு குறித்தவை இடம் பெற்றுள்ளது. அதில் கார்த்திகையின் ( தீபாவளி) 14-15 நாளில் பட்டாசு வெடித்து இறந்த , மகாளயத்துக்கு பூமிக்கு வந்த முன்னோர்கள் திரும்ப சொர்க்கத்துக்கு செல்ல வழிகாட்டுவதாக கூறப்பட்டுள்ளது. கிமு 700-ல் வடமேற்கு இந்தியாவில் வெடி மருந்துகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் சீனா புத்தகம் ஒன்று தெரிவிக்கிறது.
அழகியல் காரணத்துக்காக பயன்படுத்தப்பட்ட இதுவே இன்றைய பட்டாசுகளின் முன்னோடியாக கருதப்படுகிறது. கிபி 1400ல் பாரதம் வந்த இத்தாலியப் பயணி லுடோவிகோ டி வார்தமா தனது பயணக் குறிப்பில் விஜய நகரம் பற்றி கூறுகிறார். அதில் யானைகளை அடக்க பட்டாசு வெடிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். சீனா மருந்துகளை பயன்படுத்துவதில் பாரதிய நாட்டினர் கைத்தேர்ந்தவர்கள் என்கிறார்.
ஒடிஸா அரசவை எழுத்தாளர் கஜபதி பிரதாப ருதார தேவா ( 1497-1539) கெளதுகசிந்தாமணியில் பட்டாசுக்கு மூலப் பொருட்கள், கலக்கும் அளவு, செயல்முறை இடம்பெற்றுள்ளது. சில முகாலயர் காலத்து சித்திரங்களில் பட்டாசு வெடித்தது குறித்து இடம் பெற்றுள்ளது. ருக்மணி சுயம்வராவில் ராக்கெட் பூ ஜாடி( புஸ்வாணம்) வானில் செலுத்தப்பட்டதாக 16 –ம் நூற்றாண்டைச் சேர்ந்த மராத்தி கவி ஏகநாதர் தெரிவித்துள்ளார்.
தடை விதித்த ஓளரங்கசீப்
கிபி 1667ல் முகாலாய அரசன் ஓளரங்கசீப் பட்டாசு வெடிக்க தடை விதித்துள்ளான். இவனது மறைவுக்குப் பிறகு பட்டாசு வெடிப்பது மீண்டும் தொடங்கியது. பெஷாவாயாஞ்சி பக்கார் ( மாராத்திய குறிப்பேடு) ராஜஸ்தானில் 4 நாட்கள் தீபாவளி கொண்டாடப்பட்டதாக கூறுகிறது. லட்சக்கணக்கில் தீபங்கள் ஏற்றப்பட்டன. இன்றும் வடமாநிலங்களில் அகல் விளக்குகளுக்குப் பதிலாக சீரியல் மின் விளக்கு அலங்காரத்தை காணலாம். கோட்டா அரசரின் ஆட்சிக்காலத்தில் 4 நாட்களிலும் வாண வேடிக்கை நிகழ்த்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இன்றளவும் தீபாவளி, கல்யாணம், அரசியல், விளையாட்டு வெற்றியை கொண்டாட பட்டாசுகளை வெடித்து வருகிறோம். ஆனால் டெல்லி போன்ற வட மாநிலங்களில் காற்று மாசு அதிகரிக்க பட்டாசுகள்தான் எனக் கூறி சிலர், சமுக மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் என்ற போர்வையில் தடை கோரினர். டெல்லி காற்று மாசுவை காரணம் காட்டி தொடரப்பட்டவழக்கில் நீதிபதிகள் ஒட்டுமொத்த பாரதத்துக்கே தடை விதித்தனர்.
2015ல் பொது நலன் டெல்லி காற்று மாசுவுக்காக தொடரப்பட்டது. பட்டாசு வெடிப்பதன் தீய விளைவுகள் குறித்து விழிப்புணர்வை மேற்கொள்ள நீதிபதிகள் உத்தரவிட்டனர். 2016 நவம்பரில் டெல்லியில் பட்டாசு விற்க, தடை விதிக்கப்பட்டது. விற்பனை உரிமம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
2017 செப்டம்பரில் 50 சதவீத கடைகளுக்கு உரிமம் மீண்டும் தரப்பட்டது. உச்ச நீதிமன்றம் பட்டாசு விற்பனைக்கு தடை விதித்தது. 2017ல் தீபாவளிக்கு சில நாட்கள் முன்பாக, தடை விலக்கி கொள்ளப்பட்டது. ஆனால், தீபாவளிக்கு பிறகு தடை தொடர்ந்தது.
2018 அக்டோபரில் , பட்டாசு தயாரிக்க, ( பசுமை பட்டாசுகளை நீங்கலாக) விற்க நாடு முழுவதும் தடை விதிக்கப்பட்டது. இரண்டு மணி நேரம் பசுமை பட்டாசுகளை வெடிக்க அனுமதி தரப்பட்டது. அதுவும் இரவு 8 மற்றும் 10 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் மட்டுமே வெடிக்கலாம்.
இந்தாண்டு , தயாரிப்பாளர்கள் பசுமை தயாரிப்பு விதிகளை மீறி வருவதாக கூறி நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. சிபிஐ விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. பட்டாசுக்கு தடை கோரும் அமைப்புகளின் சார்பில் அபிஷேக் சிங்வி, கபில் சிபல், கே கே வேணுகோபால் ( இப்போதைய அட்டார்னி ஜெனரல்) போன்ற பிரபல வழக்கறிஞர்கள் ஆஜரானார்கள். மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறையும் பட்டாசு தடைக்கு ஆதரவாக அறிக்கை அளித்தது. இதுவே பட்டாசு தொடர்பான வழக்கு விவரமாகும்.
தேசிய பசுமை தீர்ப்பாயமும் 2016ல் தடை விதித்துள்ளது. கான்பூர் ஐஐடி அறிக்கை, மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் (சிபிசிபி) பிரமாண பத்திரம், உச்ச நீதிமன்றம் அமைத்த குழு, 2018ல் அரவிந்த் குமார் தாக்கல் செய்த அறிக்கை, விலங்குகள் நல ஆர்வலர் கவுரி மவுலேகி, ஊடக செய்திகள், டெல்லி காற்று மாசு குறித்த நீதிபதிகளின் அனுபவங்கள் போன்றவை பட்டாசு துறைக்கு எதிராக அமைந்தன.
காற்று மாசுவுக்கு கட்டுமானப்பணிகள், இடிப்பு, திடக்கழிவுகள் எரிப்பு, பயிர்க்கழிவுகள் எரிப்பு, வாகன புகை, சாலை புழுதிகள், தொழிற்சாலைகள், அனல் மின்னுற்பத்தி நிலைய புகை, கல் உடைக்கும் ஆலைகள் போன்றவை முக்கியமானவை. இதில் பட்டாசுக்கு எதிராக மட்டுமே போர் கொடி? ஏன்.
சிவகாசியைச் சேர்ந்த பட்டாசு தொழிலில் ஈடுபட்டு வரும் ஒருவர் நம்மிடம் கூறியதாவது:
பட்டாசு ஆலை தொடங்க உரிமம், கட்டிட வரைப்பட அனுமதி, தீய ணைத்து, வருவாய், காவல் துறை, மத்திய வெடிமருந்து கட்டுப்பாடு என பல அனுமதி பெற்றுதான் நடத்தி வருகிறோம். கட்டடத்தின் உயரம், நீளம், சுவரின் தடிமன், 6 க்கும் மேற்பட்ட வாசல்கள் என பல கெடுபிடிகள்.
பசுமை பட்டாசு என்று ஒன்றுமில்லை. பாரம்பரியமாக நாங்கள் தயாரித்து வருவதை ஆண்டு தோறும் மத்திய வெடி பொருள் கட்டுப்பாட்டுத்துறைக்கு அனுப்பி வைக்கிறோம். அவர்களுக்கு எந்த பொருளை நாங்கள் எந்த விகிதத்தில் கலக்கிறோம் என்பதுகூட தெரியாது. டெல்லி மாசுவுக்கு பட்டாசு காரணமில்லை.
ராஜஸ்தான், பஞ்சாப், அரியானா, உத்தரப்பிரதேசம் போன்ற வடமாநிலங்களில் எரிக்கப்படும் பயிர்க்கழிவுகள், வாகனப்புகை, கட்டுமான தூசி, சாலை பழுதிகள்தான். காற்று மாசுவுக்கு பட்டாசு புகை என்பதை உறுதிப்படுத்த அறிவியல் பூர்வ சான்றுகள் கிடையாது.
ஆனால், சர்வ தேச லாபி இதில் முனைப்பு காட்டி வருகிறது. எங்கள் தரப்பு வழக்கறிஞர்களும் விலை போகிறார்கள். ஆண்டாக ஆண்டாக தயாரித்து விற்பனை செய்து வருகிறோம். ஏராளமான விதிகள், கெடுபிடிகளை கடைபிடித்து தயாரித்து வருகிறோம். பின் ஏன் தடை என்பதுதான் புரியவில்லை. அதிகாரிகளுக்கு கோடி கணக்கில் கையூட்டு கொடுத்து வருகிறோம்.
அத்துடன் டெல்லி அதிகாரிகள் அனுப்பும் ஆய்வு என்ற பெயரில் வரும் உறவினர்களை மதுரை விமான நிலையத்தில் இருந்து அழைத்து வந்து, சுற்றிக்காட்டி, தங்க வைத்து, உணவு இதர வசதிகளை ராஜ உபசாரமாக செய்து கொடுப்போம். டெல்லி சென்றவுடன் எங்களுக்கு எதிராக பத்திரிகைகளில் எழுதுவார்கள்.
பட்டாசு தயாரிக்கும் நுணுக்கம் எங்களுக்குதான் தெரியும். ஒரு காலத்தில் குழந்தை தொழிலாளர்கள் என கூறினர். இத்தொழிலில் நாங்கள் கோடி கணக்கில் முதலீடு செய்து, புதிய புதிய பட்டாசு வகைகளை காலத்துக்கேற்ப தயாரித்து வருகிறோம். லட்சக்கணக்கானோர் இதை நம்பியுள்ளனர். இவர்களின் வாழ்வாதாரத்துக்கு யார் பொறுப்போர்கள். வாகனங்கள், விமானங்கள், குளிர்சாதனங்கங், பிரிட்ஜ்கள், மெழுகுவர்த்தி பல மாசுப்படுத்தும் தயாரிப்புகளுக்கு ஒரு நீதி. எங்களுக்கு ஒரு நீதியா.? பாதுகாப்பு மற்றும் காவல் துறைக்குதேவையான கண்ணீர்புகைகுண்டுகள், கையெறி மற்றும் கண்ணி வெடிகளை நாங்கள்தான் தயாரித்து வருகிறோம்.
அதிக மாசு ஏற்படுத்தும் சீன பட்டாசுகளுக்கு தடை விதிக்கட்டும். சிவகாசி தயாரிப்புகள் குறைந்த அளவு மாசை உண்டாக்குப்பவை. அரசின் விதிகளுக்குட்பட்டு தயாரித்து வருகிறோம். ஆனால், எங்கள் தயாரிப்பு நியாயம் நீதிமன்றத்தை எட்டவில்லை என்பது வருத்தப் பட வேண்டிய ஒன்று. இவ்வாறு அவர் கூறினார்.
இவரது கருத்தில் நியாயம் இருப்பதை உணர்கிறோம். ஆனால் ஆட்சியாளர்களும், நீதிமன்றங்களும் பட்டாசு துறைக்கு உதவவில்லை. ஹிந்துகளின் பண்டிகைகளை குறிவைத்து மேலை நாட்டினர் மேற்கொண்டு வரும் முயற்சியாகவே இதை கருதுகிறோம். மாற்று மதத்தினரின் பண்டிகைகைகளின் போது துடிக்க துடிக்க கொல்லப்படும் மிருக கழிவுகளால் சுற்றுச் சூழல் சீர்கெடுவது குறித்து இவர்கள் கவலைப்படுவதில்லை.
பட்டாசுகளால் மாசு ஏற்படுகிறது என்ற வாதத்தை ஏற்று கொண்டாலும்., அது எந்தளவு என்பதை உறுதியாக கூறமுடியாது. பாரம்பரிய பண்டிகைகளை நாம் ஒன்றபின் ஒன்றாக இழந்து வருகிறோம். தடையை மீறி வெடித்தால் அரசால் எத்தனைப் பேரை கைது செய்ய முடியும். மக்கள் சக்தி வலுவானது. சாது மிரண்டால் தடைகள் சாமான்யமே. அரசு இதை உணருமா? வாக்கு வங்கி அரசியல் நீண்ட நாளுக்கு பலன் தராது.
கிராப் : நன்றி ஆர்கனைசர் பத்திரிகை