
ஸ்ரீராமனிடம் விண்ணப்பம்! ” …ராம ராமேதி கர்ஜனம்!”
தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் சண்முக சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்
ஸ்ரீ ராமச்சந்திர பிரபு! எங்களை மன்னித்துவிடு! எங்களின் உதவியற்ற நிலையை மன்னித்துவிடு! நீயே உன் தர்மத்தையும் உன்னை நம்பியவர்களையும் காத்துக்கொள்!
“ரக்ஷிதா ஸ்வஸ்ய தர்மஸ்ய ஸ்ஜனஸ்ய ச ரக்ஷிதா” என்று ராமாயணம் கூறுகிறதல்லவா?
விடுதலைக்கு முன்பு நடந்த தாக்குதல்களின் சிதிலங்கள் இன்னமும் அப்படியே உள்ளன. சுதந்திர இந்தியாவில் நடக்கும் தாக்குதல்கள் மனக் கொந்தளிப்பை ஏற்படுத்துகின்றன.
பிற மத சகிப்புத்தன்மையையும் சமரசத்தையும் இயல்பாகக் கொண்ட உன் சனாதன தர்மத்தின் மீதும் கோயில்கள் மீதும் பகிரங்கமாக நடக்கும் அழிவுக்கும் சிதைவுக்கும் நீயே முடிவு கட்ட வேண்டும்.
இவை ஆவேசத்தோடு நடந்த தாக்குதல்கள் அல்ல. திட்டமிட்டு நடக்கும் அட்டூழியம்… அழிவுச்செயல். மதம் மாற்றும் மதங்கள் பல நிலைகளில் திட்டமிட்டு முன்னெடுத்து பரப்பும் விஷ வளையங்கள்.
கொரோனாவைப் போலவே இந்த மதமாற்றம் மதக் கூட்டத்தாரின் வியூகங்களுக்குப் பல நிலைகள் உள்ளன.
முதலாவது – ஆசைகாட்டி பலவீனங்களைப் பயன்படுத்தி தம் மதத்திற்குள் இழுப்பது.
இரண்டாவது – ஹிந்து மத நூல்களையும் சம்பிரதாயங்களையும் பழித்துக் கூறி, திரித்து விளக்கமளித்து ஹிந்து மதத்தின் மீது வெறுப்பை ஏற்படுத்துவது.
மூன்றாவது – எங்கெங்கிலும் தம் பிரார்த்தனை மையங்களை அமைத்து இந்துக்களின் நம்பிக்கைகளை அவமதித்து பிரச்சாரம் செய்வது.
நான்காவது – ஹிந்து கோவில்களைத் தாக்கி விக்ரகங்களை உடைத்தாலும் உங்களால் எதுவும் செய்ய இயலாது என்ற எண்ணத்தை ஏற்படுத்துவது. (ஆனால் சில நாடுகளில் அவர்களின் மத நிலையங்களை உடைத்து தாக்கியவர்கள் நலமாக உள்ளார்கள் என்பதை மறக்கவேண்டாம்)
தற்போது இந்த நான்காவது நிலை உச்சகட்டத்தை அடைந்துள்ளது. செக்யூலர் நாட்டில் அரசியல் சட்டத்திற்கு எதிராக தம் மதமே அரசாள வேண்டும் என்று அறிவித்ததோடு அல்லாமல் தற்போது தம் மதமே ஆளுகிறது என்று ஆணவம் பேசும் அட்டூழியம் அதிகமாகி வருகிறது.
ஆனாலும் ஊடக மேதாவிகள் வாய் திறப்பதில்லை. சமூக வலைதளங்களின் புண்ணியத்தால் உண்மைக் குரலில் ஹிந்துக்களின் எண்ணங்கள் வெளி வருகின்றன. அவர்களின் வேதனைக் குரல் கொஞ்சம் வெளியில் கேட்கிறது.
எங்கள் வழிபாட்டுக்குரிய உன் விக்ரகத்தின் தலை உடைந்த நிலையில் உள்ள காட்சியைப் பார்த்து எந்த இதயம்தான் துடிக்காது? எந்த கண்கள்தான் பனிக்காது? எந்த ஹிந்து ரத்தம் தான் கொதிக்காது?
இந்த மத மாற்றம் செய்யும் மதக் கூட்டத்தினருக்கு அரசாங்கத்தின் தரப்பில் சம்பளம் அறிவித்து அந்த ரவுடிகளை உற்சாகப்படுத்தி அவர்களின் செயல்பாடுகளுக்கு வாய்ப்புக் கதவுகளைத் திறந்துவிடும் அதிகாரமும் மதமும் இவற்றின் பின்னால் உள்ள உண்மையான கைகள் என்பது எத்தனை மூடி மறைத்தாலும் மறையாத சத்தியம்.
வேதனையோடு முறையிடும் பாதிக்கப்பட்ட பல ஹிந்துக்களை அலட்சியம் செய்வதும் வதைப்பதும் செய்து வரும் அதிகார எந்திரத்தின் வழிமுறை வருத்தம் அளிக்கிறது.
அதிகாரத்தின் முக்கியமான பதவிகள் அனைத்தும் மதம் மாற்றும் பிரமுகர்களால் நிறைக்கப்பட்டுவிட்டன.
மதமாற்றம் செய்யும் கூட்டத்தார் வெறிபிடித்த தீவிரவாத சக்திகளாக மற்றொரு தாலிபன்களாக தலைவிரித்தாடி அழிச்சாட்டியம் செய்வது அளவு கடந்து போய்விட்டது.
நம் பாரத தேசத்தில் எந்த மதத்தைச் சேர்ந்தவர் ஆனாலும் தகுந்த அருகதை இருந்தால் அதிகாரத்தை பிடிக்கலாம். ஆனால் சுய மத அபிமானம், இந்து மத வெறுப்பு என்பவற்றையே பாடமாகக் கற்றவர்களில் குடி கொண்டுள்ள வெறுப்புக்கு அரசியல் பாதுகாப்பு இருக்கிறது. இந்த தைரியம் இத்தகைய கோரங்கள் குறித்து உதாசீனர்களாக ஆக்குகிறது. கண்டுகொள்ளாமல் நடந்து கொள்வதற்கு உதவுகிறது.
சுயமத அபிமானத்தை விட இந்து வெறுப்பையே முக்கியமாக போதித்து வந்தால் அவர்களிடம் துவேஷமும் அழிக்கும் எண்ணங்களும் வளராமல் இருக்குமா?
இந்த மதமாற்றும் கூட்டத்தினரிடம் ஒரு நேரடியான கேள்வி: உங்கள் குறி எல்லாம் வெறும் ஹிந்து மதத்தின் மீது மட்டும்தானா? வேறொரு மதத்தினரிடம் போய் இது போல் நடந்து மீள முடியுமா?
குறைகளைச் சுட்டிக் காட்டி நிந்திக்க நினைத்தால் எந்த மதமும் அதிலிருந்து தப்பிக்க முடியாது. அனைத்து மத நூல்களையும் அவர்களின் வரலாறுகளையும் குறித்து அவதூறாக எழுதிய நூல்கள் உலகில் பலப்பல உள்ளன. ஒருவரை அவமதிப்பவர், தான் அவமதிக்கப்படுவதில் இருந்து தப்பமுடியாது.
பேச்சுரிமை என்ற பெயரில் கடவுள்களையும் ஆசாரங்களையும் திட்டினாலும் மன்னித்து வருகிறது ஹிந்து ஜாதி. இப்போது நடக்கும் தாக்குதல்களையும் சகித்துக் கொள்ளுங்கள் என்று போதித்தால் என்ன செய்ய இருக்கிறது?
இப்போதுதான் சிறிது சிறிதாக வெளிப்படுகின்ற ஹிந்து போராட்டங்களை அரசியல் லாபத்துக்கு பயன்படுத்தலாம் என்று எதிர்க்கட்சிகள் முயலுகின்றன. உடனே தம் லாபத்திற்காக அவர்களை உசுப்பி விட்டு இந்த பக்கம் உள்ளவர்கள் வெளிக் கிளம்புகிறார்கள். இருவரும் சேர்ந்து உண்மையான பிரச்சனையையும் அதன் தீர்வையும் அலட்சியம் செய்கிறார்கள். ஒருவருடையது முதலைக்கண்ணீர். இன்னொருவருடையது கண்துடைப்புக் கண்ணீர். பிரச்சனையோடு சம்பந்தமில்லாத கமிட்டியை அமைத்து கைகழுவிவிட்டு வெறுப்பு அரசியலை விசிறி விட்டால் தீர்வு கிடைக்காது.
இந்துக்களின் வேதனைக்கு எந்த அரசியல் கட்சிகளுடனும் தலைவர்களுடன் தொடர்பு இல்லை. அவர்களுக்கு தேவை நம்பிக்கை. அபயம், பாதுகாப்பு உணர்வு. இவற்றையே கோருகிறார்கள்.
பிற மதத்தவரின் பிரார்த்தனை நிலையங்களில் சிறு கீறல் ஏற்பட்டால் கூட வருத்தம் தெரிவித்தும் அனுதாபம் காட்டியும் அறிக்கை விடும் ஹிந்து தலைவர்கள் இப்போது எங்கே போனார்கள்? இத்தனை தூரம் வேதனையோடு துடிதுடிக்கும் ஹிந்து சமூகத்திடம் பிற மதத்தவர் யாராவது அனுதாபம் வெளிப்படுத்தினார்களா? (நெல்லூர் முஸ்லிம் மைனாரிட்டி தலைவர் சலீம் பாய் மட்டும் இந்து அமைப்புகளுக்கு துணையாக அனுதாபம் தெரிவித்தார் என்னும் செய்தி மகிழ்ச்சி அளிக்கிறது)
மதம் மாற்றும் மதக் கூட்டத்தார் அவர்களின் பிரார்த்தனை நிலையங்களில் ஒவ்வொரு கணமும் ஹிந்து தர்மத்தின் மீது குற்றச்சாட்டுகளும் வெறுப்பும் போதிக்கிறார்கள் என்ற உண்மையை மறக்கக்கூடாது. அவற்றின் பலனாகவே இப்போது இத்தகைய கொடூரங்கள் நடக்கின்றன. இந்த குண்டர் கூட்டத்தார் நன்றாக குடித்துவிட்டு ஹிந்து கோவில்களின் வழியில் காத்திருந்து கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் தகராறு செய்த அச்சமூட்டி வரும் நிலைமை பல இடங்களில் இருக்கிறது. அவற்றிலிருந்து பாதுகாக்கும்படி முறையிட்டாலும் காதில் போட்டுக்கொள்ளாத அமைப்புகளின் கையில் கோவில்கள் எவ்வாறு பாதுகாப்பாக விளங்கும்?
பலமான ஓட்டு வங்கிகளாக எண்ணி அவர்களைப் பாதுகாக்கும் அரசியலின் துணையே இவர்களின் பேய்ச் செயல்களுக்கு பாதுகாப்பு கவசங்கள்.
கோவில்கள் அரசாங்கத்தின் கைகளில் பலவிதங்களில் கொள்ளையடிக்கப்படுகிறது என்பது அனைவரும் அறிந்ததே! இந்து மதம் அல்லாத பிற மதத்தவரை இந்து கோயில்களில் பணியில் அமர்த்துவது திருடனிடம் சாவியைக் கொடுப்பது போலத்தான்.
இந்த நான்காம் நிலையைத் தாண்டியபின் ஐந்தாம் நிலையாக இந்துக்களின் வீடுகளில் தாக்குதல்களும் கொள்ளை அடித்தலும் தொடங்கப்படலாம். இந்த ஐந்தாவது நிலை குறித்து சாமானிய இந்துக்கள் பலர் பீதி அடைந்துள்ளார்கள்.
ஸ்வாமீ! சரணாகத பரிரட்சகா! காருண்யமும் வீரமும் ஒன்று சேர்ந்த உன் சத்திய பராக்கிரமம், உன் தூதனின் மகாபலம், உற்சாகம், மஹா ஜ்வாலையாக வெளிப்படட்டும்!
உன் தர்மம் திடப்படட்டும்! உன் பாரத தேசம் ரக்ஷிக்கப்படட்டும்!
பிற மதங்களோடு சேர்ந்து வாழ இயலாத, சகிப்புத்தன்மையற்ற வெறுப்பாளர்களிடமிருந்து உன் பக்தர்கள் காக்கப்படட்டும்!
பாரத தேசத்தில் மத வேறுபாடு இன்றி குடிமக்கள் அனைவரின் நலன் மற்றும் முன்னேற்றத்தின் மீது பார்வையை செலுத்தும் நல்லாட்சி விளங்கட்டும்!
தர்ம துரோகிகளின் பரப்புதலுக்காகவும், தம் பகையை சாதித்துக் கொள்வதற்காகவும் சொந்த மத அழிவுக்குக் கூட தயங்காத ஹிந்து பெரியவர்களிடமிருந்தும் பாரத தேசத்தின் உயிரான சனாதன தர்மத்தை காப்பாற்று ஸ்வாமி!
அரசியலமைப்பே அரசாள்வோரின் உண்மையான மத நூல் என்று நம்பி, நாட்டு முன்னேற்றம், பாதுகாப்பு இவற்றின் மீது மட்டுமே பார்வையை செலுத்தி ஆட்சி நடத்தும் ‘பிரதான’ ஸ்பூர்த்தி ஆ’மோதி’க்கப்படட்டும்!
ஆர்தானாம் ஆர்தி ஹந்தாரம்
பீதானாம் பயநாசனம்
த்விஷதாம் காலதண்டஞ்ச
ராமசந்த்ரம் நமாம்யஹம் !!
கோடி ஜெய மந்திர ஜப யக்ஞம்:
பாரத தேசத்தில் இந்துக்கள் மீதும் கோவில்கள் மீதும் நடக்கும் தாக்குதல்களை எதிர் கொள்வதற்காகச் செய்யும் இந்த கூட்டுக் கோடி ராம நாம ஜபத்தில் பங்கு கொள்ள அழைக்கிறோம்.
உலகெங்கும் உள்ள அனைத்து இந்துக்களும் இதில் பங்கு கொள்ளும்படி வேண்டுகிறோம்.
தினமும் 108 முறை “ஸ்ரீராம ஜயராம ஜய ஜய ராம” என்ற ராம நாம மந்திரத்தை ஜபம் செய்து அதன் பலனை ‘ப்லவ’ நாம சம்வத்சரம் சைத்ர மாதம் சுக்லபட்ச நவமி – ஸ்ரீராம நவமியன்று ஏப்ரல் 21, 2021 சனாதன தர்ம ரக்ஷணைக்காக ஸ்ரீராமச்சந்திரனின் பாதங்களில் சமர்ப்பிப்போம்!
ஓம் சாந்தி!
மூலம்: ருஷிபீடம் மாத இதழ் பிப்ரவரி 2021 தலையங்கம்