
சுபாஷிதம்…ஸ்பூர்த்தி பதம்! 108 ஞான முத்துக்கள்!
தெலுங்கில்: பிஎஸ். சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்
100. எதில் திருப்தி? எதில் அதிருப்தி?
ஸ்லோகம்:
சந்தோஷஸ்த்ரிசு கர்தவ்ய: கலத்ரே போஜன தனே |
த்ரிஷு சைவ ந கர்தவ்யோ௨த்யயனே ஜபதானயோ: ||
– பஞ்சதந்திரம்
பொருள்:
மனைவி விஷயத்தில், உணவு விஷயத்தில், செல்வம் விஷயத்தில் திருப்தியாக மகிழ்ச்சியாக வாழ வேண்டும். திருப்தியடையாமல் தொடர வேண்டிய விஷயங்கள் கல்வி, ஜபம், தானம் என்னும் மூன்று.
விளக்கம்:
மனிதன் திருப்தியோடு விளங்க வேண்டும் என்று போதிக்கும் சுபாஷிதங்கள் ஏராளம் உள்ளன. எதில் திருப்தி அடைய வேண்டும்? எங்கு திருப்தி அடையக்கூடாது? என்று கூறும் சுலோகம் இது.
மனைவியிடம் திருப்தி அடையாதவன் கீசகன் போன்றவன். மற்றுமொரு ராவணன் போன்றவன். உணவில் திருப்தி அடையாதவன் ஓநாய் போன்றவன். பகாசுரன் போன்றவன். இருக்கும் செல்வத்தைக் கொண்டு திருப்தியாக வாழ முடியாதவன் பொன் முட்டையிடும் வாத்தைக் கொன்ற பேராசைக்காரன் போன்றவன்.
இருப்பதைக் கொண்டு திருப்தி அடையாமல் துயரப்படுவதால் பிறர் பொருள் மேல் மோகம் ஏற்படக் காரணமாகி விடும் என்ற எச்சரிக்கை இந்த ஸ்லோகத்தில் ஒலிக்கிறது.
கல்வி, ஜபம், தானம் இம்மூன்றிலும் திருப்தி அடையாமல் தினமும் ஆசை அதிகரிக்க வேண்டும். வேதங்களை பிரதி தினமும் அத்யயனம் செய்ய வேண்டும். ‘வேதோ நித்யமதீயதாம்’ என்கிறார் ஆதிசங்கரர். ஜபம் செய்வதில் திருப்தி அடையாமல் அனுதினமும் தொடர்ந்து செய்ய வேண்டும்.
இதில் திருப்தி அடைந்து நிறுத்திவிட்டால் மந்திரத்தை மறந்து போகும் அபாயம் உள்ளது. தானமும் நிரந்தரம் செய்து வரவேண்டும். ஒரு லட்சம் செலவுகள் இருந்தாலும் தானம் செய்ய வேண்டும் என்பர் சான்றோர்.
தனக்காக தான் செலவு செய்து கொள்வது வீண். புண்ணியக் கணக்கில் சேராது. பிறருக்காக செலவு செய்வதே சித்திரகுப்தன் எழுதும் புண்ணியக் கணக்கில் சேரும்.