
கிருஷ்ணம் தர்மம் சனாதனம்
(மோதிஜிக்கு ஒரு மடல்)
பாரதப் போர் –
பதினேழாம் நாள் –
அந்தி சாயும் நேரம் –
அர்ஜுனனுக்கும் கர்ணனுக்கும் இடையே துவந்த யுத்தம் நடக்கிறது.
விண்ணும் மண்ணும் மறைக்க பாணங்கள் சீறிப் பாய்கின்றன.
‘அடேய் அர்ஜுனா! இத்தனை ஆண்டுப் பகை இத்துடன் முடிந்தது பார்.’ திவ்யாஸ்திரங்களை வேண்டுகிறான் கர்ணன்.
ஏன், ஏன், என்ன ஆயிற்று எனக்கு! ஏன் பிரம்மாஸ்திரப் பிரயோகம் மறந்து விட்டது!
கடந்த காலம் அவனுக்கு நினைவு வந்தது. ஓஹோ, பிராமண குரு பரசுராமரின் சாபம் பலிக்கிறது போலும்!
வேதனையுடன் நிகழ்காலத்துக்கு மீண்டான். ஆனால், ஆனால், எனது தேருக்கு என்ன ஆயிற்று.
‘ஐயகோ என்ன இது. மகாராஜா சல்லியரே, என் ரதம் ஏன் இப்படிச் சாய்ந்திருக்கிறது?’
பரிதாபம், சாரதியான சல்லியனுக்குக் குதிரைகளும் தெரியவில்லை. அவற்றின் கடிவாளமும் பிடிபடவில்லை. ரதத்தின் நிலைமையும் புரியவில்லை. தேர்த்தட்டில் அமர்ந்திருக்கும் மகாரதி கர்ணனின் குரலும் கேட்கவில்லை. சல்லியனின் முகமும் உடலும் காண்டீபத்தின் கூர் பாணங்களுக்கு அவ்வளவு தூரம் இலக்காகி விட்டிருந்தன.
அம்பு மழைக்கு நடுவே பார்வையை ஓட்டிப் பார்த்தான், சூதபுத்திரன். தேரின் சக்கரம் ஒன்று ரத்தச் சகதியில் சிக்கி இருந்தது. ரதத்தைச் செலுத்த வேண்டிய சாரதி சல்லியனுக்குப் பிரக்ஞை இருக்கிறதா என்றே தெரியவில்லை.
பார்த்தனின் பாணங்களை எதிர்கொள்ள வேண்டிய சூழலில் இப்படி ஒரு சோதனையா!!
போர் என்பதே ஒரு சோதனைதானே என்று தனக்குத் தானே தத்துவம் பேசிக்கொண்ட அந்த மாவீரன் அத்தனை காயங்களையும் உடல் வலியையும் புறம் தள்ளி அநாயாசமாய்க் கீழே குதித்தான்.
நடப்பது துவந்தம். எதிரியானாலும் பார்த்தன் மகாவீரனல்லவா? புன்சிரிப்புடன் அவனைப் பார்த்தான்.
எதிராளி கர்ணன் வில்லைத் தேர்த்தட்டில் வைத்து விட்டுக் கீழே இறங்கி இருக்கிறான். அவன் மீண்டும் தேரில் ஏறி வில்லை எடுக்கும் வரை பார்த்தனின் காண்டீபத்துக்குக் கட்டாய ஓய்வு தருவதுதானே தர்மம்.
பார்த்தனின் கரங்கள் அனிச்சையாகக் கீழிறங்கின.
‘ஏன் காண்டீபத்தின் சத்தத்தைக் காணோம்?’ இடியென முழங்கியது சாரத்தியத்தில் இருந்த நிராயுத ஶ்ரீகிருஷ்ணனின் குரல்.
‘கிருஷ்ணா என்ன கேள்வி இது! கர்ணனின் தேர்ச் சக்கரம் சகதியில் சிக்கி விட்டது. அதைத் தூக்குவதற்காக அவன் நிராயுதபாணியாகக் கீழே இறங்கி இருப்பதை நீ பார்க்கவில்லையா? அவன் மீது இப்போது நான் எப்படி அம்பு விடுவது? அதனால்தான் காண்டீபத்துக்குக் கட்டாய ஓய்வு தந்து விட்டேன்.’
‘என்ன முட்டாள்தனம் இது? நிற்பது போர்க்களம். செய்வது போர்த்தொழில். கிடைத்திருப்பது நல்வாய்ப்பு. இந்நேரம் ஓய்வு உனக்கெதற்கு பார்த்தா? வில்லுக்கு வேலை கொடு. இப்போதே.’
‘என்ன கிருஷ்ணா பேசுகிறாய்! நடப்பது துவந்தம். எதிரியோ இப்போது நிராயுதபாணி. நான் எப்படி அவன்மீது அம்பு செலுத்துவது? இது அதர்மம் அல்லவா?’
‘தேவரீர் எங்களுக்கே தர்மோபதேசம் செய்கிறீர்களோ?’ எகத்தாளமாய்க் கேட்டான் கிருஷ்ணன்.
‘கையினில் வில்லை எடு. அதோ நிற்கிறானே பாபி. அவன் நெஞ்சைப் பிள. இப்போது கிடைத்திருப்பது மிக நல்ல சந்தர்ப்பம். இனி ஒரு முறை இப்படிப்பட்ட சூழல் அமையுமா என்பது தெரியாது. எனவே, இப்போதே அவனைக் கொன்றுவிடு.’
பரமனைப் பார்த்தான் பார்த்தன். அவனது அதிர்ச்சி மறைந்தது. பாண்டவர் வாழ்வின் இலக்கு ஶ்ரீகிருஷ்ணன். அந்த இலக்கை நோக்கிய பாதையும் ஶ்ரீகிருஷ்ணனே. அவன் வார்த்தையே சத்தியம். அவன் மொழிவதே தர்மம்.
கிருஷ்ணம் தர்மம் சனாதனம். கிருஷ்ணம் தர்மம் சனாதனம். கிருஷ்ணம் தர்மம் சனாதனம்.
காண்டீபத்தை நிமிர்த்தினான் இந்திரபுத்திரன்.
‘பார்த்தா!’ தொலைவில் இருந்தே விஷயத்தை யூகித்து விட்ட சூரியபுத்திரன் உரக்கப் பேசினான். ‘கண்ணன் பேச்சைக் கேட்டு என்மீது அம்பு விடாதே. அது அதர்மம். உன்னைப் போன்ற மாவீரனுக்கு அது அழகில்லை. நான் சக்கரத்தை நேர் செய்து விட்டு தேர்த்தட்டில் ஏறிய பின்னர் என்னுடன் போரிடலாம். நீயோ நானோ – இருவரில் ஒருவர் இன்று இறக்கப்போவது நிச்சயம். சிறிது பொழுது காத்திரு. போதும்.’
‘என் செய்வேன் நான். கிருஷ்ணனே கதியென்றாலும் இவன் பேச்சில் இருக்கும் நியாயமும் என்னைத் தொடுகிறதே’ தயங்கினான் பார்த்தன்.
‘ஆஹாஹாஹா!!!!’ ஆழி வெண்சங்கத்துக்குச் சொந்தமான வதனங்களில் இருந்து கிளம்பிய சிரிப்பொலி .யுத்தகளம் முழுதையும் அதிர வைத்தது.
‘யமதர்மனின் அழைப்பு காதில் விழும்போது உனக்குக்கூட தர்மத்தின் நினைவு வருகிறது பார்த்தாயா, ராதேயா!
‘அரக்கு மாளிகையில் அன்னை குந்தியுடன் பாண்டவர் ஐவரையும் உயிரோடு எரிக்க புரோசனனை அனுப்பியபோது உன் தர்ம சிந்தனை எங்கே போயிருந்தது அப்பனே?
‘வஞ்சனையாக யுதிஷ்டிரனை சூதுக்கு அழைத்து சகுனி மூலம் சதிசெய்து அவனைத் தோற்கடித்தது, தர்மம் தழைப்பதற்காகச் செய்யப்பட்டதோ?
‘வீட்டு விலக்கான நிலையில் ஒற்றை ஆடையுடன் இருந்த பாஞ்சாலியை சபைக்கு இழுத்து வந்தபோது, அடடா, தர்மம் என்றால் அதுவல்லவோ தர்மம்!
‘மாதரசி திரௌபதியை அத்தனை பேர் முன்னிலையிலும் துகிலுரிந்தானே, துச்சாதனன்! அதற்கிணையான அறச்செயல் முக்காலத்திலும் இல்லை. இல்லவே இல்லை.
‘கணவன்களுக்கும் தெய்வத்துக்கும் மட்டுமே தலைவணங்கும் மகாராணி, மாதர்க்கரசி, கற்பின் சின்னம், பாண்டவர் குலவிளக்கு திரௌபதியைப் பார்த்து, என் அடிமையே, இங்கே வா, வந்து என் துடைமீது உட்கார் என்று துடைகளைத் தட்டினானே துரியோதனன்! அப்போது தர்மதேவன் ரொம்பவே அகமகிழ்ந்திருப்பான்.
‘உன் அஞ்சு புருஷன்மாரும் உன்னைக் கைவிட்டு விட்டார்கள். ஆறாவது மணாளனாக துரியோதனனை ஏற்றுக்கொள் என்று அந்தப் பதிவிரதையைப் பார்த்துச் சொன்னாயே! அதுதானடா உச்சபட்ச தர்மம்!
‘அதிலும், போர்க்களத்திலே பாலகன் அபிமன்யுவை நிராயுதபாணியாக்கி அறுவர் சேர்ந்து கசாப்புக் கடைக்காரர்களைப் போலக் கொன்றீர்களே. அது தர்மத்துக்கு இலக்கணம்தான். அதிலும், பேடியைப் போல் பின்னாலிருந்து அம்பு தொடுத்து அவன் வில்லை ஒடித்தாயே. இதுவல்லவோ தர்ம ரக்ஷணம்.’
சீரிய சிங்கம் சீற்றத்துடன் தலைதிருப்பி சவ்யசாசியைப் பார்த்தது. ‘என்னடா தயக்கம் இன்னும்?’
பார்த்தசாரதியின் வாக்கியம் முடிவதற்குள் காண்டீபத்தின் கைவண்ணம் பாணமிட்டது. கர்ணனின் உடல் குருக்ஷேத்திர புண்ணிய பூமியில் அங்க பிரதக்ஷிணம் செய்தது.
ஆம், கிருஷ்ணம் தர்மம் சனாதனம் என்பதே பாண்டவர்கள் அறிந்திருந்த வாழ்வியல் நெறி. கண்ணன் என்ன சொல்கிறானோ, அதுவே தர்மம். முற்காலத்துக்கும் சரி, இக்காலத்துக்கும் சரி, எக்காலத்துக்கும் சரி. வாழ்வில் நாம் போய்ச்சேர வேண்டிய இலக்கு அவனே. அதற்கான பாதையும் அவனே. பாதையில் வழிகாட்டியும் அவனே.
கிருஷ்ணம் தர்மம் சனாதனம். கிருஷ்ணம் தர்மம் சனாதனம். கிருஷ்ணம் தர்மம் சனாதனம்.
***
வணக்கத்துக்குரிய மோதி அவர்களே,
வாழ்வில் பல குருக்ஷேத்திரங்களைக் கண்டுவிட்ட தங்களுக்கு பாரதக் கதை சொல்வதும், தர்மோபதேசம் செய்வதும் எனது நோக்கமல்ல.
இந்த மடல் வெறும் நினைவூட்டல் மட்டுமே.
காரணம், பதினேழாம் நாள் போரில் ஒரே ஒரு கர்ணனின் குரல் மட்டுமே ஒலித்தது. தற்போதைய நவீன கர்ணன்களோ மிமிக்ரி மன்னர்கள். இவர்கள் பல குரலில் பேசுவார்கள். ஜனவரி இருபத்தாறாம் நாள் புதுடில்லியில் முதல் டிராக்டர் தடம் விலகியதுமே இவர்களது குரல்கள் பாரெங்கும் ஒலிக்கத் தொடங்கி விட்டன.
இவர்கள் பல குரலில் பேசுவது மட்டுமல்ல, பல வேஷங்களைத் தரிப்பதிலும் வல்லவர்கள். நல்லவர்களைப் போன்ற தோற்றத்திலும் இவர்களால் நடிக்க முடியும்.
அதுமட்டுமல்ல, இதுகாறும் அன்னியர் வீசிய மாமிசத் துண்டுகளுக்காக வாலாட்டியவர்கள், இனி அக்கிரகாரத்துக் குப்பைத் தொட்டிகளை நோக்கியும் படையெடுப்பார்கள்.
எதற்காக?
அறவழி நிற்போரின் சீற்றத்தைத் தணித்து, அவர்களை மீண்டும் மண்டூகங்களாக்குவதற்காக.
இதற்கு நல்லவர்கள் பலியாகக் கூடாது.
திரௌபதிக்கு மட்டுமல்ல, அகலிகைக்கும் அனசூயைக்கும் நளாயினிக்கும் சாவித்திரிக்கும் சீதைக்கும் கண்ணகிக்கும் தாயான நம் பாரத அன்னை இழிவுபடுத்தப்பட்டிருக்கிறாள்.
வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட இந்த விபரீதத்தை விளக்கவும் முடியாது. விளக்க வேண்டிய தேவையும் கிடையாது.
இது அரசனின் அறக்கருணைக்கான தருணம் அல்ல.
மறக்கருணை செயல்பட வேண்டிய தருணம் இது.
அஹிம்ஸா பரமோ தர்ம: என்ற வாழ்வியல் நெறி நடைமுறைக்கு வருவது அரசனின் ஆயுதத்தின் மூலமே என்பதைத் தங்களுக்கு நினைவூட்டவே இக்கடிதம்.
தாங்கி நிற்பது தர்மம்தான் என்றாலும், ‘தர்மத்தைத் தன் சென்னியில் தாங்கி நிற்பவன் அரசனே’ என்பதைத் தங்களுக்கு நினைவூட்டவே இக்கடிதம்.
சக்ரதாரியையும் வழிபடுவோம் என்று எல்லையில் நின்றுசொன்னீர்களே, அதை இப்போது செயல்வடிவில் எதிர்பார்க்கிறோம்.
ஆம், தங்களது ருத்ர தாண்டவத்தை எதிர்பார்க்கிறோம்.
பாரதத் தாயை இழிவு செய்யக் காரணமான துச்சாதன துரியோதனாதிகளின் கரங்கள் முறிக்கப்பட வேண்டும். மார்புகள் பிளக்கப்பட வேண்டும். குருதி குடிக்கப்பட வேண்டும்.
இது பாரறிய நடக்க வேண்டும். இந்தக் கோர தாண்டவத்தை அக்கினி தேவன் மட்டுமல்ல, வானுலகும் கீழுலகும் தென்புலமும் மொத்தமாய்த் திரண்டு பார்க்க வேண்டியது அவசியம்.
ரொம்பக் குறிப்பாக, தென்புலத்தார்.
ஏனெனில் –
நம் தேசத்து விடுதலைக்காக உயிர் நீத்தவர்களும்,
தாயின் மணிக்கொடி காக்க எல்லையில் கடுங்குளிரிலும் கொட்டும் பனியிலும் கோடை வெயிலிலும் நின்று பயங்கரவாதிகளின் கோழைத்தனமான தாக்குதல்களால் உயிர்நீத்த போர் வீரர்களும் அங்கேதான் இருக்கிறார்கள். தங்களது ருத்ர தாண்டவத்தின் காரணமாக விழப்போகும் சவங்களே அவர்களுக்கான பிண்டதானமாகட்டும். குருதிக் கொடையே உதஹதானமாகட்டும்.
அவர்களது தியாகம் வீண்போகவில்லை என்ற செய்தியைத் தங்களது செயல்பாடு அவர்களுக்குக் காட்ட வேண்டியது மிகமிக அவசியம்.
இனியொரு தடவை பாரதத்தைச் சீண்டலாம் என்ற எண்ணம் எவருக்கும் கற்பனையில் கூட வரக்கூடாது என்பது அதைவிட அவசியம்.
மீண்டும் மீண்டும் சொல்கிறேன். இதுதான் தர்மம்.
ஆனால், தற்போது நிறைய கர்ணன்கள் முளைப்பார்கள். தங்கள்மீது தர்மோபதேசக் கணைகளை வீசுவார்கள். அவர்கள் கர்ணன்கள் என்பது தங்களுக்குப் புரிந்திருக்கட்டும். கூடவே, தாங்கள் பார்த்தனின் இடத்தில் இருக்கிறீர்கள் என்பது தங்களுக்கு நன்றாகவே புரிந்திருக்க வேண்டும்.
இவர்களது குரல்களைக் கேட்கும்போதெல்லாம் தங்கள் உள்ளத்தில் கிருஷ்ணம் தர்மம் சனாதனம் என்ற கோஷம் மட்டுமே ஓங்கி ஒலிக்கட்டும்.
கர்ணனது இறுதிக்காலம் நெருங்கியபோது அவனது பிரம்மாஸ்திரம் தானாகவே செயலிழந்தது. அதுவரை சுழன்றோடிய அவர்களது தேர்ச்சக்கரங்கள் தாமாகவே ரத்தச் சகதியில் புதைந்தன. இது பாரதப் போரில் விதி தேவதை செய்த அருள். தற்போதைய பாரதத்தில் நடக்க இருக்கும் போரிலும் அவளது அருள் நமக்குத் துணை நிற்கும்.
எனவே, தர்மத்தைக் காக்கும் செயல் என்பது அதர்மத்தை அழிப்பதுதான் என்பது தங்கள் சிந்தனையில் நீக்கமற நிறைந்திருக்கட்டும். பார்த்தன் எடுத்த முடிவே தங்களது முடிவுக்கும் ஆதரிசமாய் இருக்கட்டும்.
ஆம்,
கிருஷ்ணம் தர்மம் சனாதனம். கிருஷ்ணம் தர்மம் சனாதனம். கிருஷ்ணம் தர்மம் சனாதனம்.
- கட்டுரை: சுபர்ண