
தினசரி ஒரு வேத வாக்கியம்.
3. வேதத்தின் பயன்.
தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் சண்முக சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்
“யஸ்தன்ன வேத கிம்ருசா கரிஷ்யதி”
— ருக் வேதம்.
“யார் பிரம்மத்தை அறிய முடியாதோ அவர் வேதவாக்கியங்களைக் கொண்டு என்ன செய்ய இயலும்?”
பரப்பிரம்ம ஞானமே வாழ்க்கையின் உயர்ந்த பயன். அதுவே வாழ்வின் லட்சியம்.
வேத மந்திரங்களை மனப்பாடம் செய்து அவற்றை ஆராய்ச்சி செய்து அவை கூறும் கர்மாக்களை செயல்படுத்தி அவற்றின் அறிவாற்றலில் பயணிப்பதால் பயனில்லை. அதற்காக வேத அத்யயனத்தையும் வேதம் கூறும் கர்மாக்களையும் விட்டு விடக்கூடாது. மறுக்கவும் கூடாது. ஆனால் அவற்றின் முக்கிய பிரயோஜனம் பரமேஸ்வரனின் பிரக்ஞையை ஏற்படுத்துவதே என்பதை மறக்கக் கூடாது.
‘தத்’ என்ற சொல்லுக்கு பிரம்மம் என்றும் பகவான் என்றும் அர்த்தங்கள் கூறலாம். ஞானிகள் ப்ரம்மம் என்பார்கள். பக்தர்கள் பகவான், ஈஸ்வரன் என்பார்கள். சிலர் நிர்குணமாக பிரம்மம், சகுணமாக ஈஸ்வரன் என்று விளக்குவார்கள்.
எது எப்படியானாலும் வேதம் மற்றும் சாஸ்திரங்களின் ஞானம் நமக்கு கடவுள் பக்தியையும் ஞானத்தையும் ஏற்படுத்த வேண்டும்.
ஆயின், வேதங்களுக்கு பலப்பல அர்த்தங்கள் இல்லாமலில்லை.
வேத மந்திரங்களில் இகம், பரம், பரமார்த்தம் தொடர்பான பலப்பல பலன்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
நவீனவாதிகள் சிலர் வேதத்தில் பௌதிக விஞ்ஞான அறிவு கொட்டிக் கிடக்கிறது என்றும் நம் புராதன ஞானிகளின் அறிவியல் அறிவு வெளிப்படுகிறது என்றும் எடுத்துக்காட்டி சான்று கூறுவார்கள். இதுவும் மகிழ்ச்சியளிக்கும் விஷயமே!,
சிலரின் கணக்குப்படி பல யுகங்களுக்கு முன்பு தோன்றியதாக கருதப்படும் வேதங்கள் உண்மையில் தோற்றம் அறிய இயலாத காலத்தைச் சேர்ந்தவை. அது ஈஸ்வரனின் தூய்மையான வடிவமே என்பது சம்பிரதாயவாதிகளின் விளக்கம். கணக்கிட முடியாத காலத்திலிருந்தே பாரத தேசம் விஞ்ஞான தேசம் என்பது இந்த ஆய்வாளர்களின் விளக்கத்தால் தெளிவாகிறது.
இயற்கையையும் வானவியலையும் பன்னெடுங் காலத்திற்கு முன்பே ஆழமாகப் புரிந்து கொண்டது வேத விஞ்ஞானம். வேதங்களை ஆதாரமாகக் கொண்டு, வேதத்தின் அங்கங்களின் பிரமாணமாக, புராதன பாரதிய விஞ்ஞானத்தின் மதிப்பை அறியலாம்.
உலககெங்கும் இன்று வேத கலாச்சாரத்தின் சிறப்பு அறியப்பட்டு போற்றப்படுகிறது. இது பாராட்டப்பட வேண்டிய அம்சம்.
பௌதீக விஞ்ஞானத்தை வேதத்தின் மூலம் விளக்குவது நன்றாகத்தான் உள்ளது. ஆனால் அது மட்டுமே வேதத்தின் பயன் என்று கூறுவது சரியல்ல.
யக்ஞத்தில் பயன்படுத்தும் வேத மந்திரங்களும் செயல்களும் விருப்பம் நிறைவேறுவதற்கும் தீமைகள் நீங்குவதற்கும் பயன்படுகின்றன என்பது பூர்வ மீமாம்சர்களின் கருத்து. வேதம் மற்றும் உபநிஷத்தின் சாரம் ஞானத்தை அடையும் பிரம்ம ஞானத்தை எடுத்துரைக்கிறது என்பது உத்தர மீமாம்சர்களின் கருத்து. சாஸ்திர பண்டிதர்கள் சிலர் வேதம் முழுமையிலும் பிரம்மஞானம் விளக்கப்படுகிறது என்பர். கர்ம யோகிகள் வேதத்தை யக்ஞ வடிவாகவும், ஞான மார்க்கத்தை கடைபிடிப்பவர் வேதத்தை பரப்பிரம்மமாகவும் காண்பர். இவை அனைத்தும் சரியானவையே.
வேதத்தின் மூலம் பரமாத்மாவின் தத்துவத்தை அறிய வேண்டும். வேத மந்திரங்களுக்கு மேலோட்டமாக எத்தனை அர்த்தங்கள் கூறினாலும் அவற்றின் உட்பொருள் பரமாத்மாவே என்பது பக்தர்களும் ஞானிகளும் அங்கீகரிக்கும் கருத்தே. அதனால்தான் பகவானை ‘வேத வேத்யன்’ என்கிறோம்.