விநாயகர் நான்மணி மாலை விளக்கம் (பகுதி 26)

Published:

manakkula vinayakar and bharathi 4 - 2026

விநாயகர் நான்மணிமாலை – பகுதி 26
விளக்கம்: முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்

பாடல் 33 – வெண்பா

உனக்கே யென்னாவியு முள்ளமுந் தந்தேன்
மனக்கேதம் யாவினையும் மாற்றி – எனக்கே
நீண்ட புகழ் வாணாள் நிறை செல்வம் பேரழகு
வேண்டுமட்டும் ஈவாய் விரைந்து.

பொருள் – விநாயகப் பெருமானே என்னுடைய உயிரும் உள்ளமும் உனக்கெனவே தந்தேன். எனவே என்னுடைய மனக்கவலைகள் அனைத்தையும் மாற்றி, எனக்கு நீண்ட புகழ், நீண்ட ஆயுட் காலம், நிறைந்த செல்வம், பேரழகு விரைவாக தேவையான அளவிற்குத் தருவாயாக.

பாடல் ‘உனக்கே’ எனத் தொடங்கி, ‘விரைந்து’ என முடிகிறது.

பாடல் 34 – கலித்துறை

விரைந்துன் திருவுள மென்மீ திரங்கிட வேண்டுமையா
குரங்கை விடுத்துப் பகைவரின் தீவைக்கொளுத்தியவன்
அரங்கத்திலே திருமாதுடன் பள்ளிகொண்டான் மருகா
வரங்கள் பொழியும் முகிலே! என்னுள்ளத்து வாழ்பவனே!

பொருள் – அனுமார் மூலமாக இராவணனின் இலங்கையை எரியூட்டிய, திருவரங்கத்தில் இலக்குமியுடன் பள்ளி கொண்டிருக்கும் அரங்கநாதப் பெருமானின் மருமகனான விநாயகா, நீ வரங்களை மழையாய் பொழியும் மேகம்; என்னுள்ளத்தில் வாழ்பவன்; எனவே விநாயகப் பெருமானே, விரைவாக உன்னுடைய திருவுளம் என் மீது இரங்கிட வேண்டும்.

ALSO READ:  கட்டுப்பாடற்ற நடத்தை பண்பாடு ஆகாது!

பாடல் ‘விரைந்து’ எனத் தொடங்கி, ‘வாழ்பவனே’ என முடிகிறது.

பாரதியார் அவர்கள் இந்தப் பாடலில் குரங்கை விடுத்துப் பகைவரின் தீவைக்கொளுத்தியவன் அரங்கத்திலே திருமாதுடன் பள்ளிகொண்டான் என்ற கம்பராமாயணக் கதை ஒன்றினைக் குறிப்பிட்டுள்ளார். சீதையைத் தேட, தென்திசை சென்ற அனுமன், இலங்கை சென்று பிராட்டியாரைக் காண்கிறான். பின்னர் நான் வேறு என்ன இங்கே செய்யவேண்டும் என எண்ணுகிறான்.

‘மீட்டும் இனி, எண்ணும் வினை வேறும் உளதுஅன்றால்;
ஓட்டி இவ் அரக்கரை உலைத்து, என் வலி எல்லாம்
காட்டும் இதுவே கருமம்; அன்னவர் கடும் போர்
மூட்டும் வகை யாவதுகொல்?’ என்று முயல்கின்றான். 5

‘இப் பொழிலினைக் கடிது இறுக்குவென்; இறுத்தால்,
அப் பெரிய பூசல் செவி சார்தலும், அரக்கர்
வெப்புறு சினத்தர் எதிர் மேல்வருவர்; வந்தால்,
துப்பு உற முருக்கி, உயிர் உண்பல், இது சூதால். 6

‘வந்தவர்கள் வந்தவர்கள் மீள்கிலர் மடிந்தால்,
வெந் திறல் அரக்கனும், விலக்க அரு வலத்தால்
முந்தும்; எனின், அன்னவன் முடித் தலை முசித்து, என்
சிந்தை உறு வெந் துயர் தவிர்த்து, இனிது செல்வேன்.’ 7

ALSO READ:  கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

(கம்பராமாயணம், சுந்தர காண்டம், பொழில் இறுத்த படலம், பாடல்கள் 5,6,7)

இதன் பின்னர் அனுமன் இந்திரசித்தனால் சிறைபிடிக்கப்பட்டு இராவணன் முன் கொண்டு செல்லப்படுகிறான். பின்னர் அனுமனின் வாலில் தீவைக்க ஆணையிடப்படுகிறது. இந்த நெருப்பினைக் கொண்டு அனுமன் இலங்கையை எரியூட்டுகின்றார். இதனை கம்பர் ஒரு பாடலில் மிக அழகாகச் சொல்கிறார்.

நீல் நிறநிருதர், யாண்டும் நெய் பொழி வேள்வி நீக்க,
பால் வரு பசியன், அன்பான் மாருதி வாலைப் பற்றி,
ஆலம் உண்டவன்நன்று ஊட்ட, உலகு எலாம் அழிவின் உண்ணும்
காலமே என்னமன்னோ, கனலியும் கடிதின் உண்டான்.

(கம்பராமாயணம், சுந்தர காண்டம், பிணி வீட்டு படலம், 133)

பாடலின் பொருளாவது – கருநிறத்தவர்களான அரக்கர்கள் எங்கும், நெய் சொரிந்து செய்யும் யாகங்களைப் புரிய வொட்டாமல் நீக்கி விட்டதனால் தன்னிடத்தே மிக்க பசி உடையவனான அக்கினி தேவனும் அனுமனது வாலை அன்புடன் தனக்கு ஆதாரமாகப் பற்றிக் கொண்டு விஷத்தை உண்ட சிவபெருமானே ஏவி உண்பிக்க உலகம் முழுவதையும் ஊழி முடிவில் எரிக்கின்ற காலத்தைப் போல இலங்கை நகரை விரைவாக எரித்து அழித்தான்.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : மேகாலயா

Related articles

Recent articles

spot_img