To Read it in other Indian languages…

Home கட்டுரைகள் விநாயகர் நான்மணி மாலை விளக்கம் (பகுதி 32)

விநாயகர் நான்மணி மாலை விளக்கம் (பகுதி 32)

manakkulavinayakar

விளக்கம்: முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்

பாடல் 37 – வெண்பா

செய்க தவம்! செய்க தவம்! நெஞ்சே! தவம் செய்தால்
எய்த விரும்பியதை யெய்தலாம் – வையகத்தில்
அன்பிற் சிறந்த தவமில்லை; அன்புடையார்
இன்புற்று வாழ்த லியல்பு.

பொருள் – என்னுடைய நெஞ்சமே நீ தவம் செய்வாயாக. அவ்வாறு செய்தால் அடைய விரும்பியதை எல்லாம் அடையலாம். இந்த வையகத்தில் பிற உயிரிடத்து அன்பு செலுத்துவது போன்று சிறந்த தவம் எதுவும் இல்லை. அவ்வாறு அன்பு செய்து வாழ்பவர் இன்பமாக வாழ்தல் இயல்பாகும்.

பாடல் ‘செய்க’ எனத் தொடங்கி, ‘இயல்பு’ என முடிகிறது.

பாடல் 38 – கலித்துறை

இயல்பு தவறி விருப்பம் விளைத லியல்வதன்றாம்
செயலிங்கு சித்த விருப்பினைப் பின்பற்றும்; சீர்மிகவே
பயிலு நல்லன்பை யியல்பெனக் கொள்ளுதிர் பாரிலுள்ளீர்
முயலு வினகள் செழிக்கும் விநாயகன் மொய்ம்பினிலே.

பொருள் – முறையான வழிகலில் இன்றி நாம் விரும்புகின்ற செயல்கள் விளைவதில்லை. நாம் செய்கின்ற செயல்கள் அனைத்தும் நமது விருப்பத்தின் அடிப்படையில் நிகழ்கின்றன. நன்மைகள்மிகவே, எல்லா இடத்திலும் பயிலக் கூடிய நல்ல அன்பை நமது இயல்பாகக் கொள்ளல் வேண்டும். உலகோரே, நீங்கள் அவ்வாறு அன்பினை உங்களது இயல்பாகக் கொண்டீர்களானால், உங்கள் செயல்கள் அனைத்தும் விநாயகனின் பேராற்றலாலே செழிப்பாகச் செய்ய இயலும். (மொய்ம்பு என்றால் ஆற்றல் என்று பொருள்)

பாடல் ‘இயல்பு’ எனத்தொடங்கி, ‘மொய்ம்பினிலே’ எனமுடிகிறது.

பாடல் 39 – விருத்தம்

மொய்க்கும் கவலைப் பகை போக்கி, முன்னோன் அருளைத் துணையாக்கி
எய்க்கு நெஞ்சை வலியுறுத்தி யுடலை யிருப்புக் கிணையாக்கிப்
பொய்க்கும் கலியை நான் கொன்று, பூலோகத்தார் கண்முன்னே,
மெய்க்குங் கிருத யுகத்தினையே கொணர்வேன், தெய்வ விதியிதே.

பொருள்–நம்மைச் சூழ்ந்து வருகின்ற கவலை எனும் பகையைப் போக்கி விட்டு, சிவன் மைந்தர்களில் முன்னவனாகிய விநாயகனின் அருளைத் துணையாக்கிக் கொண்டு, கவலைப்படும் நெஞ்சை கட்டுக்குள் கொண்டுவந்து, உடலை இரும்புபோல ஆக்கி, எல்லாவித குற்றங்களுக்கும் காரணமான இந்தக் கலிகாலத்தை நான் (பாரதியார்) கொன்று, இந்த உலகத்தார் கண்முன்னே, உண்மையைப் போற்றும் கிருத யுகத்தினைக் கொண்டு வருவேன். தெய்வத்தின் கட்டளை இதுவே. (மொய்க்கும் – சூழ்ந்துநெருங்கும்; முன்னோன் – விநாயகன்; எய்க்கும் – கலங்குகின்ற)

பாடல் ‘மொய்க்கும்’ எனத்தொடங்கி, ‘விதியிதே’ எனமுடிகிறது.

பாடல் 40 – அகவல்

விதியே வாழி, விநாயகா வாழி,
பதியே வாழி, பரமா வாழி,
சிதைவினை நீக்கும் தெய்வமே, போற்றி!
புதுவினை காட்டும் புண்ணியா, போற்றி!
மதியினை வளர்க்கு மன்னே, போற்றி! 5

இச்சையுங் கிரியயு ஞானமு மென்றாக்கு
மூல சக்தியின் முதல்வா, போற்றி!
பிறைமதி சூடிய பெருமாள் வாழி,
நிறைவினைச் சேர்க்கு நிர்மலன் வாழி,
கால மூன்றையுங் கடந்தான் வாழி! 10

சக்தி தேவி சரணம் வாழி!
வெற்றி வாழி, வீரம் வாழி!
பக்தி வாழி, பலபல காலமும்
உண்மை வாழி, ஊக்கம் வாழி!
நல்ல குணங்களே நம்மிடை யமரர் 15

பதங்களாம் கண்டீர், பாரிடைமக்களே!
கிருத யுகத்தினைக் கேடின்றி நிறுத்த
விரத நான் கொண்டனன்; வெற்றி
தருஞ்சுடர் விநாயகன் தாளிணை வாழியே!

பொருள் – இறைவன் அளித்த கட்டளையான விதியே நீ வாழ்வாயாக. விநாயகனே நீ வாழ்வாயாக. பதியே வாழி, பரமா வாழி; சிதைவினை நீக்கும் தெய்வமே, போற்றி; புதுவினை காட்டும் புண்ணியா, போற்றி; மதியினை வளர்க்கு மன்னே, போற்றி.

இச்சை, கிரியை, ஞானம் என்று ஆக்குகின்ற மூல சக்தியின் முதல்வா, போற்றி; பிறைமதி சூடிய சிவபெருமானே வாழி; மன நிறைவினை அனைவருக்கும் தரும் நிர்மலன் வாழி; இறந்த காலம், நிகழ்காலம், வருங்காலம் என்ற மூன்று காலத்தையும் கடந்த இறைவனே நீ வாழ்வாயாக.

சக்தி தேவி சரணம் வாழி; வெற்றி வாழி, வீரம் வாழி; பக்தி வாழி, பல பல காலமும் உண்மை வாழி, ஊக்கம் வாழி; நல்ல குணங்களே நம்மிடையே அமரர்களின் குணங்களாம் என்பதை உணருங்கள். இவ்வுலக மக்களே! கிருத யுகத்தினைக் கேடின்றி நிறுத்த விரதம் நான் (பாரதியார்) கொண்டுள்ளேன். வெற்றி தரும் சுடர் விநாயகன் திருவடிகள் வாழியவே.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 × four =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.