தினசரி ஒரு வேத வாக்கியம்: 31. வாய்மை!

Published:

daily one veda vakyam 2 - 2026

31. வாய்மை.

தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் சண்முக சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்.

“வாஜ்மே மனசி ப்ரதிஷ்டிதா… மனோமே வாசி ப்ரதிஷ்டிதம்!!” – ருக்வேதம்

“என் வாக்கு மனதிலும், மனம் வாக்கிலும் நிலைபெற்றிருக்கட்டும்!” 

பேச்சு விஷயத்தில் நம் கலாச்சாரம் மிகவும் எச்சரிக்கையாக இருக்குமாறு கூறுகிறது. பேச்சு என்றால்  நம்மிடம் இருந்து வெளிப்படும் நாமே! அதனால் பேச்சில் மனதும், மனதில் பேச்சும் நிலைபெற்றிருக்க வேண்டும் என்று வேதக் கலாச்சாரம் போதிக்கிறது. 

பேசும் சொல் என்பது மிகவும் மதிப்பு வாய்ந்தது. ஏனென்றால் ‘வாக்கு’ தேவதையின் சொரூபமாக வழிபடப்படுகிறது. கொடுத்த வாக்கை காப்பாற்றுவது என்பது முக்கியமான தர்மமாக கூறப்பட்டுள்ளது.

சுயநலத்திற்காக எதையாவது எளிதாக கூறிவிட்டு, அதைக் காப்பாற்றாமல் போனால் அனைத்து அனர்த்தங்களுக்கும் அதுவே மூல காரணமாகும். இத்தகைய நிலைமை தற்போது சர்வ சாதாரணமாகிவிட்டது.

ஒரு பொறுப்பு வாய்ந்த பணியை ஏற்றுக் கொள்ளும் முன்பு பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் சத்தியப்பிரமாணம் செய்வார்கள். அரசியல் தலைவர்களும் அப்படித்தான். நீதிமன்றத்தில் புனித நூல்கள் மீது சத்தியம் செய்வார்கள். செய்விப்பார் கூட.

ALSO READ:  ஹரிஜன ஆலயப் பிரவேசம் செய்த வைத்யநாத ஐயரின் பிறந்த தினத்தில் மரியாதை!

முற்கால அரசர்கள்  கொடுத்த வார்த்தையை கௌரவித்து அதற்கு கட்டுப்பட்டு இருந்தார்கள். தசரதர் கைகேயிக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றுவதற்காக எத்தகைய தியாகத்திற்கு முன்வந்தார் என்பதை ராமாயணம் விவரிக்கிறது. அரசன் அல்லவா? யார் கேட்கப் போகிறார்கள்? மேலும் மற்ற அரசர்களும் பொதுமக்களும் ஸ்ரீராம பட்டாபிஷேகத்தை விரும்பினார்கள். அப்படிப்பட்ட நிலையில் என்றைக்கோ கொடுத்த வாக்கை இப்போது காப்பாற்றாவிட்டால் என்ன? பெரிதாக என்ன ஆகிவிடப்போகிறது? என்று அவர் நினைக்கவில்லை. 

தர்மத்திற்கு மதிப்பு கொடுத்துதசரதர் தியாகத்திற்கு முன் வந்தார். வாக்கு தவறிய பாவம்  தந்தைக்கு வரக்கூடாது என்று பித்ரு வாக்ய பரிபாலனத்திற்காக தந்தை கொடுத்த வாக்கை காப்பாற்றினான் ராமன்.

அரசாளும் அரசன் சொந்த நலனைத் தியாகம் செய்து தன்  வாக்கிற்கு அளித்த மதிப்பு  பண்டைய அரசியலமைப்பில் இருந்ததை நம் புராண நூல்கள் மூலம் அறிய முடிகிறது. 

மனதில் இல்லாதவற்றையும் கடைபிடிக்க இயலாதவற்றையும் பேசக்கூடாது. கூறிய கூற்றை மனதார கடைப்பிடிக்க  முடியாமல் போவது தவறே. அதனால் வார்த்தையை உதிர்க்கும் முன் கவனமாக இருப்பது மிக அவசியம்.

இவ்விதமாக மனதும் சொல்லும் ஒன்றாகும் போது அது தவம் ஆகிறது. அவ்வாறு இருப்பவரின் சொல்லுக்கு தெய்வீக சக்தி பிறக்கிறது. அந்தச் சொல் இயற்கையையும் கடவுளையும் கூட கட்டுப்படுத்தக்கூடியது.

ALSO READ:  மேற்கு வங்க முதல்வராக பதவி ஏற்றார் சுவேந்து அதிகாரி! விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு!

ஒவ்வொருவரும் அரிச்சந்திரனை போல் வாய்மையை கடை பிடிக்க இயலாமல் போகலாம். உள்ளது உள்ளபடி பேசுவது வேறு. சொன்ன சொல்லைக் காப்பது வேறு. அர்ப்பணிப்பு என்பது  இன்றியமையாதது என்பதை இந்த வேத முழக்கம் எடுத்துரைக்கிறது.

எந்த நல்ல சொல்லைக் கேட்டாலும் எளிதாக எடுத்தெறிந்துவிட்டு, “இந்தக் காலத்தில் இதெல்லாம் கடைபிடிப்பது கஷ்டம்” என்று சுயநலத்திற்காக அக்கிரமங்களில் ஈடுபடும் அசுர குணம் கொண்ட பிரபாவம் தலைவிரித்தாடும் காலமிது. வாக்குக்கு உள்ள தார்மீக மதிப்புகள் தெரிந்தால் இத்தனை கொடூரங்கள் நடந்திருக்காது.

வாக்குறுதிகளை அள்ளி வீசி இன்று ஒரு கொள்கைக்கு கீழ்படிபவர், நாளை வேறொரு கொள்கைக்குத் தாவுகிறார். இப்படிப்பட்ட அதர்ம முறைகள் அரசாளும் அமைப்பிலும் பொறுப்புமிக்க அனைத்து துறைகளிலும் அதிகமாகி வருகிறது.

மீண்டும் நம் வேத வாழ்வியல் முறையின் சிறப்பை அடையாளம் காண முடிந்தால், வாக்கு என்பதை தெய்வசக்தி என்பதை  அறிந்து கொள்ள முடிந்தால்,  அமைதி நிரம்பிய சமுதாயத்தை  சாதிக்க முடியும்.

அன்றைய அரசர்கள் சுபிட்சமான சமுதாயத்தை நிலைநாட்ட முடிந்ததற்கு, வேதவாக்கை அனுசரித்து அரசமைப்பை உள்ளத் தூய்மையோடு கடைப்பிடித்ததே காரணம்.

ALSO READ:  ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!
ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img