May 13, 2021, 5:43 am Thursday
More

  தினசரி ஒரு வேத வாக்கியம்: 40. ஆதித்யனே பிரம்மம்!

  சனாதன தர்மம் சூரிய உபாசனையை பிரதானமாக போதிக்கிறது. சகல தேவதைகளின் சக்தியும் சூரியனிலேயே உள்ளது.

  veda vaakyam

  40. ஆதித்யனே பிரம்மம்.

  தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் சண்முக சர்மா
  தமிழில்: ராஜி ரகுநாதன்.

  “அஸாவாதித்யோ ப்ரஹ்ம” -அதர்வண வேதம்.

  “இந்த ஆதித்யனே பிரம்மம்”.

  சனாதன தர்மம் சூரிய உபாசனையை பிரதானமாக போதிக்கிறது. சகல தேவதைகளின் சக்தியும் சூரியனிலேயே உள்ளது. சௌர  சக்தி பல்வேறு விதங்களில் பூமி மீது பரவி பணிபுரிகிறது.  பூமியில் ஒவ்வொரு பொருளும் தன் இருப்பையும், வடிவத்தையும்  சூரிய சக்தியிலிருந்தே பெறுகிறது. மரம், நீர், பயிர்கள் மட்டுமின்றி விலங்குகள், பறவைகள், மனிதன் அனைவரும் பிராணசக்தியை சூரியனிடம் இருந்தே பெறுகின்றனர். 

  நிறத்தை அளிப்பவனும், அன்னத்தை அளிப்பவனும் சூரிய பகவானே. சூரியன் ஒருவனே ஆனாலும் அவனிடமிருந்து வெளிப்படும் கிரணங்களில் பலப்பல சக்திகள் அடங்கி உள்ளன அவற்றிலிருந்தே பல்வேறு வித பதார்த்தங்களும் அவற்றின் பிரயோஜனங்களும் ஏற்படுகின்றன.

  பிரம்மா, விஷ்ணு, ருத்ரன், அருணா (லலிதா), சுப்பிரமணியன், கணேசன், கோவிந்தன், ரவி இவையனைத்தும் சூரியனை விளக்கும் நாமங்களே. ஈஸ்வர சைதன்யம் நமக்கு சூரிய வடிவில் கிடைக்கிறது. அதனால்தான் பரமாத்மாவை தம் இஷ்ட தெய்வத்தின் வடிவத்தில் வழிபடும் யாராயினும் அந்த ரூபத்தை சூரிய மண்டலத்தில் தியானம் செய்து உபாசிப்பது மிக உயர்ந்தது என்று அனைத்து சாஸ்திரங்களும் எடுத்துரைக்கின்றன.

  சகல தேவதைகளும் ஒன்றான பரப்பிரம்மமே ஆதித்தியன் என்று வேதம் தெளிவாகக் கூறுகிறது. அக்னியிடம் சகல தேவதைகளையும் ஆவாஹனம் செய்து வழிபடும் சனாதன கலாச்சாரம், சூரியனை சகஜ அக்னியாக, பிரம்மாக்னியாகக் கருதுகிறது. சூரியனில் சகல தேவதைகளையும் கண்டு வணங்கினால் போதும், சகல தேவதைகளும் மகிழ்வர். கர்ம சாட்சி, பிரத்யக்ஷ உறவு, ஜகத் சக்ஷு (உலகின் கண்) என்று நாம் மிகவும் பிரியத்தோடு வழிபடும் கடவுள் சூரிய பகவான்.

  சூரிய மண்டலம் வேத மண்டலம், தெய்வ மண்டலம். சூரிய நாராயணன் என்ற மகா விஷ்ணுவாக வழிபட்டாலும், “பானு மண்டல மத்யஸ்தா” என்று அருணாவை லலிதாம்பாளாகக்  கும்பிட்டாலும், சௌர மண்டல மத்தியில் இருப்பவரான் சாம்பசிவனாக உபாசனை செய்தாலும், காயத்ரியாக அர்ச்சித்தாலும் அது சூரியனில் உள்ள ஈஸ்வர சைதன்யத்தில் நம் தனிமனித சைதன்யத்தை அனுசந்தானம் செய்வதே. அதன் மூலம் நம் பிராண சக்தி,  திவ்ய சக்தியாக ஒளி விடுகிறது.  

  மூன்று சந்தியா காலங்களிலும் அனைவரும் தம் இஷ்ட தெய்வத்தை சூரியனில் தியானித்து வழிபட வேண்டும் என்று வேத சாஸ்திரங்கள் விவரிக்கின்றன.

  “சூரியனில் என்னை நினைத்து வணங்குபவன், சொந்த வீட்டிற்குள் எஜமானன் நுழைவதைப் போல – என்னிடம் சாயூஜ்யம் பெறுவான்” என்பது பத்ம புராணத்தில் சிவ வசனம்.

  சூரிய மண்டலத்தின் அதிஷ்டான தெய்வமே ‘சப்த அஸ்வாரூடன்’. “ஏகோ அஸ்வோ சப்த நாம” – என்று “ஒரே அஸ்வம் ஏழாகஅழைக்கப்படுகிறது” என்று வேதம் தெளிவாக போதிக்கிறது. 

  ‘அஸ்வம்’ என்றால் வியாபித்து வேகமாகப் பயணிக்கக் கூடியது என்று பொருள். இது சூரிய ஒளிக் கதிர்களை குறிப்பிடுகிறது. ஒரே ஒளி ஏழாகப் பிரிகிறது என்பதும் அவையே குதிரைகளாக வர்ணிக்கப்பட்டன என்பதும் வேதம் கூறும் விளக்கம்.

  ஒலிச் சக்திக்கும் சூரியனே ஆதாரம். அதனால்தான் அந்த ஏழு குதிரைகளை, காயத்ரி, த்ருஷ்டுப், ப்ருஹதி, ஜகதி, அனுஷ்டுப், ஊஷ்னிக், பங்கதி என்ற ஏழு சந்தஸ்ஸுகளாக வேதம் வர்ணிக்கிறது.

  12 மாதங்களில் 12 விதமாகப் பாயும் சூரியனின் சைதன்யமே துவாதச ஆதித்ய ரூபங்கள். சகல கிரகங்களையும் ஆணையிட்டு இயக்கும் சூரியன், பரப்பிரம்மமே அல்லவா!

  ஆயின்,  இது போன்ற சூரிய மண்டலங்கள் பல உள்ளன. ஊரில் அனைவர் வீடுகளிலும் தீபம் இருந்தாலும் நம் வீட்டு தீபமே நமக்கு முக்கியம். அதேபோல் நம் பூமிக்குத் தென்படும் சூரியனே நமக்குக் கடவுள். நம் வீட்டு விளக்குகளால்  நாம் வெளிச்சத்தைப் பெறுவது போல, நாம் பார்க்கும் சூரியனில் உள்ள பரமாத்மா நமக்காக பிரதிஷ்டை கொண்டுள்ளார்.

  பரமாத்மாவின் குணங்கள் அனைத்தும் சூரியனில் காணப்படுகின்றன. ஒரே சூரியன் அனைத்து ஜீவன்களுக்கும் தனித்தனியாக தென்படுகிறான். எதற்கும் ஒட்டாத சாட்சியாக நிற்கிறான். சர்வசக்தி கொண்டுள்ளான். அனைவருக்கும் சமமானவன். இவை அனைத்தும் பரமாத்மாவின் குணங்கள். இவை ஆதித்யனில்  காணப்படுகின்றன.

  ஆதித்யன் என்ற சொல்லுக்கு முக்கியமாக ‘அகண்ட தேஜஸ்’ என்று பொருள். “அச்தேத்யோய மதாஹ்யோய அக்ஷேத்யோயம்” -‘ஆத்மா அகண்ட ஜோதி’ என்று கீதையில் வர்ணிக்கப்படுகிறது.

  “சூர்ய ஆத்மாம் ஜகத:” – ஜகத்திற்கு ஆத்மா சூரியன். உடலுக்கு ஆத்மா இருப்பதைப் போல பிரபஞ்சத்திற்கு ஆத்மா சூரியன். சூரிய உபாசனை நம்மில் உள்ள ஆத்மாவை வெளிப்படுத்திக் கொள்ளும் வித்யை. புத்தியாகவும், பத்து புலன்களில் விளங்கும் சைதன்யமாகவும் உள்ள ஆத்மா – துவாதச ஆதித்ய சொரூபமே அல்லவா! உபநிஷத்துகள் கூட “அந்தராதித்யோபாசனை” என்று நம்மில் உள்ள ஆதித்திய தேஜஸை உணரும்படி போதிக்கின்றன.

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,242FansLike
  0FollowersFollow
  19FollowersFollow
  74FollowersFollow
  1,183FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »