
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் உதவி ஆய்வாளர் இடம், அராஜக முறையில் திமுக பிரமுகர் இரண்டு பேர் வாக்குவாதம் செய்ததால், அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர், வாணியம்பாடி, ஜோலார்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களை, வாணியம்பாடியில் உள்ள கல்லூரி வளாகத்தில் சீல் வைத்து பாதுகாப்பு படையினர், மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், கல்லூரி வளாகத்தில் அரசியல் கட்சியை சேர்ந்தவர்களும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவதற்காக அவர்களுக்கு என்று தனி அறை ஒதுக்கப்பட்டு, அவர்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று திமுகவின் ஒன்றியச் செயலாளர் அசோகன் மற்றும் திமுக நிர்வாகி தண்டபாணி ஆகியோர், பாதுகாப்பு பணியில் இருந்த உதவி ஆய்வாளர் ராணி அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
உள்ளே வருவதற்கு உண்டான வருகைப் பதிவேட்டில் கையொப்பம் இடுமாறு உதவி ஆய்வாளர் ராணி தெரிவித்துள்ளார். ஆனால், திமுக பிரமுகர்கள் அராஜக முறையில் வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது.
மேலும், பெண் காவல் உதவி ஆய்வாளரை ஆபாசமாக பேசி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதனையடுத்து போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். அரசு பணி செய்ய விடாமல் தடுத்தல், அவதூறாக பேசுதல் உட்பட மூன்று பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.