25-03-2023 10:24 PM
More
    Homeஆன்மிகம்ஆன்மிகக் கட்டுரைகள்இன்று ஸ்ரீராம நவமி! ஆனந்த நவமி! (21-4 -2021)

    To Read in other Indian Languages…

    இன்று ஸ்ரீராம நவமி! ஆனந்த நவமி! (21-4 -2021)

    ramanavami
    ramanavami

    இன்று ஸ்ரீராம நவமி!
    ஆனந்த நவமி!

    தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் சண்முக சர்மா
    தமிழில்: ராஜி ரகுநாதன்

    ‘ராமா’ என்ற சொல்லுக்கு ஆனந்தம் என்ற பொருள். சித்திரை மாதம் சுக்லபட்ச நவமியை ஸ்ரீராம நவமியாக கொண்டாடுகிறோம்.

    அயோத்தியின் அதிபதி, உலகநாயகன் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் அருள் சகல பிரபஞ்சத்திற்கும் கிடைக்கட்டும்!

    சித்திரை மாதம் சுக்லபட்சம் நவமி திதி அன்று செய்ய வேண்டிய கடமைகள் என்ன என்று தர்ம சாஸ்திரங்கள் விவரிக்கின்றன.

    ராமாயணம் என்பது ஒரு ஆதர்ச மனிதனின் கதை மட்டுமல்ல. ஒரு அற்புதமான யக்ஞ தத்துவமும், தேவதா ரகசியமும் அதில் பொதிந்துள்ளன. புனர்வசு நட்சத்திரத்தோடு கூடிய சைத்ர, சுத்த நவமியன்று ஆதித்ய மண்டலத்தில் பிரம்மா விஷ்ணு சிவன் ஒன்றிணைந்த நாராயண பரப்பிரம்மமாக விளங்கும் ஶ்ரீராமச்சந்திர மூர்த்தியை வழிபட வேண்டும்.

    இந்த வழிபாட்டின் சிறப்பு என்ன? இது ஆனந்தத்தை அளிக்கிறது. ராமம் என்றாலே ஆனந்தம்.

    srirama
    srirama

    அகஸ்திய ஸம்ஹிதை என்ற தர்ம சாஸ்திர நூலில் ஸ்ரீராமன் பிறந்த புண்ணிய முகூர்த்தத்தை வர்ணிக்கிறார். இதே வர்ணனை வால்மீகி ராமாயணத்திலும் காணப்படுகிறது. ஐந்து கிரகங்கள் உச்சநிலையில் இருந்தபோது, பகலில், புனர்வசு நட்சத்திரத்தில் கர்காடக லக்னத்தில் கௌசல்யா தேவியிடம் பரப்பிரம்மம் ஸ்ரீராமனாக அவதரித்தார்.

    நவமி என்பது பூரண திதி. தர்ம ரட்சணைக்கு உகந்த நவமியன்று புனர்வசு நட்சத்திரத்தில் ஸ்ரீராமன் பிறந்தான். அதிதி தேவதைக்கான நட்சத்திரம் புனர்வசு என்று விவரிக்கிறார் வால்மீகி. புனர்வசு நட்சத்திரத்திற்கான தேவதை அதிதி தேவி. தேவர்கள் அனைவரும் அதிதி தேவியின் புதல்வர்கள்.

    தேவர்களின் நலனுக்காகவும் உலக நன்மைக்காகவும் அவதரித்தான் ஸ்ரீராமன். லோக க்ஷேமத்தை விரும்புபவர்கள் தேவர்கள். அவர்களுக்குத் தடை ஏற்படுத்தியது அசுர சக்திகள். அத்தகைய அசுர சக்திகளை அடக்கி தேவர்களுக்கு பலம் அளிப்பதற்காக அவதரித்தான் ஸ்ரீராமன். அப்போது சூரியன் மேஷ ராசியில் விளங்கினான். இந்த மத்தியான காலத்திற்கு அற்புதமான மகிமை உள்ளது. இந்த திதியில் தெய்வ வழிபாடு செய்தால் அனைத்து விருப்பங்களும் நிறைவேறும்.

    ராமன் என்றாலே இரட்சகன், ஆனந்த ப்ரதாதா. இன்றைய நாளை வீணடிக்காமல் விரதத்தால் பயனடைய வேண்டும். இன்றைய தினத்தில் உபவாசம் இருக்கும்படி தர்ம சாஸ்திரங்கள் போதிக்கின்றன. எப்படி சங்கல்பம் செய்து கொள்ள வேண்டும்? ஸ்ரீராமனை வழிபடுவதற்கான மண்டபத்தை எவ்வாறு அமைத்துக்கொள்ள வேண்டும்? என்றெல்லாம் கூட வழிமுறைகளை விவரித்துள்ளனர்.

    மண்டபத்தின் எந்த திக்கில் யாரை வழிபட வேண்டும் என்று தர்ம சாஸ்திரங்கள் விவரிக்கின்றன. அவரவர் சக்திக்கு ஏற்ப மண்டபத்தின் நடுவில் ஸ்ரீ ராம விக்ரகத்தை அமைத்து பூஜை செய்ய வேண்டும். சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீ ராமன் ஒரு கரத்தில் ஞான முத்திரையும் ஒரு கரத்தில் சீதையையும் தாங்கியுள்ளான். ஞான முத்திரை மோட்சத்தைக் குறிக்கிறது. ஆபத்துகளை நீக்குகிறது.

    srirama2
    srirama2

    “ஆபதாமபஹர்த்தாரம் தாதாரம் சர்வ சம்பதாம்
    லோகாபிராமம் ஶ்ரீராமம் பூயோ பூயோ நமாம்யஹம்
    ” என்ற புகழ்பெற்ற மந்திர ரூபமான ஸ்லோகம் உள்ளது. ஆபத்துகளை விலக்கி செல்வத்தை அருளக்கூடிய மகிமை பொருந்தியது ஸ்ரீராமர் வழிபாடு.

    இருபுறங்களிலும் பரதனும் சத்ருக்னனும் லட்சுமணனோடும் அனுமனோடும் விளங்கும் ஶ்ரீசீதா ராம ரூபத்தை இன்று வழிபட வேண்டும். இன்று தசரதரையும் கௌசல்யா தேவியையும் கூட வணங்க வேண்டும். ஜகமே ராம மயம். அதனால் கௌசல்யா தேவியை ஜகத் ஜனனியாக வழிபடவேண்டும் என்கிறது தர்ம சாஸ்திரம்.

    அந்த்தா ராமமயம்… ஜகமந்த்தா ராமமயம்” என்றார் ராமதாசர். ராமன் ஆனந்த சொரூபம் ஆதலால் ஸ்ரீராமனின் வழிபாட்டின் மூலம் ஜகத்தில் ஒவ்வொன்றையும் ஆனந்தமயமாக தரிசிக்க முடியும்.

    srirama
    srirama

    ர-அ-ம… ரகாரம் அக்னி பீஜம். அகாரம் சூரிய பீஜம். மகாரம் சந்திர புஜம். இம்மூன்றிலும் உள்ள சக்தியே ராம நாமத்திலும் உள்ளது. நாம் பார்க்கும் ஜகம் எங்கும் இம்மூன்றால் ஆனதே!
    நம் வாக்கில் அக்னி, உடலிலும் பார்வையிலும் சூரியன், மனதில் சந்திரன் உள்ளான். நம் முக்கரணங்களும் இம்மூன்றால் ஆனவையே. இவற்றுக்கான தேஜஸ் ஸ்ரீராமன்.

    சீதாராம கல்யாணம்:
    இன்று பல இடங்களில் சீதாராம கல்யாணம் செய்து வழிபடும் வழக்கம் உள்ளது. தெலுங்கு மாநிலங்களில் இது அதிகம் காணப்படுகிறது. சாஸ்திர விதிகளில் இன்று சீதாராம கல்யாணம் நடத்த வேண்டும் என்று எங்கும் கூறப்படவில்லை. செய்தால் தவறொன்றும் இல்லை. கல்யாணம் நடந்தது பால்குன மாதத்தில். ஆனால் பத்ராசலத்தில் சீதாராம கல்யாணம் செய்வது வழக்கம். பொதுவாக யக்ஞங்கள், உற்சவங்கள் நடத்தும் போது அவற்றின் அங்கமாக சாந்தி கல்யாணம் செய்வது உண்டு. அதே போல் பத்ராசலத்தில் நடத்தப்படுகிறது. அதைக் கொண்டு ஒவ்வொரு க்ஷேத்திரத்திலும் ஒவ்வொரு வீதியிலும் பந்தல் அமைத்து சீதாராம கல்யாணம் ஆனந்தமாக நிகழ்த்தப்படுகிறது.

    ராம நாம ஜபம்:
    இன்று ஶ்ரீராமனை பூஜை செய்து உபவாசம் இருந்து வழிபட வேண்டும் என்பதே முக்கியமானது. இன்றைய தினம் ஸ்ரீராம ஜபம் செய்வது சிறப்பானது. எத்தனை அதிக அளவில் ஜபம் செய்ய முடிந்தால் அத்தனை சிறப்பு. ராமநாம ஜபம், செய்பவருக்கும் உலகிற்கும் நன்மை பயக்கக்கூடியது. ஷோடசோபசார பூஜை செய்து அஷ்டோத்திர, சகஸ்ரநாமத்தால் ஶ்ரீராமனை அர்ச்சனை செய்து வழிபட வேண்டும்.

    sriramaseetha
    sriramaseetha

    ராமாயண பாராயணம்:
    முக்கியமாக இன்று ராமாயண பாராயணம் செய்வது விசேஷ பலனை அளிக்கக்கூடியது. வால்மீகி ராமாயணம் முழுவதும் பாராயணம் செய்ய இயலாவிட்டாலும் அதில் சில பகுதிகளையாவது படிக்க வேண்டும். ராம ஜனன கட்டம் பாலகாண்டத்தில் வால்மீகி மகரிஷி வர்ணித்துள்ளதை இன்று பாராயணம் செய்வது சிறப்பு. சீதாராம கல்யாணம், ஶ்ரீராம பட்டாபிஷேகம் கட்டங்களையும் இன்று பாராயணம் செய்வது உகந்தது.

    ராமாயண பாராயணம் என்ற உடனே… வால்மீகி ராமாயணத்தின் பால காண்டத்தில் சம்க்ஷேப ராமாயணம் என்ற பகுதி நினைவுக்கு வரும். அது நாரதர் வால்மீகி முனிவருக்கு போதித்த இராமாயணம். முழு ராமாயணத்தின் சாரமும் அதில் உள்ளது. இதனை பாராயணம் செய்வது இன்ற முக்கிய கடமை.
    இராமனுக்கு எத்தனை சக்தி உள்ளதோ ராமாயண பாராயணத்திலும் அத்தனை சக்தி உள்ளது.

    யக்ஞ ஸ்வரூபம்:
    ராமாயணம் முழுவதும் யங்ஞ ஸ்வரூபம் என்பது அதில் உள்ள ரகசியம். யக்ஞமே ஸ்ரீ ராமனாக அவதரித்தது. யங்ஞத்தில் வழிபடப்படும் தேவர்களே சுக்ரீவன் முதலான வானரர்களாக அவதரித்தனர். வேதமே சீதாதேவி. லோக க்ஷேமமே யக்ஞத்தின் பிரயோஜனம். அதனால் ராமாயண பாராயணம் அநேக யக்ஞங்கள் செய்த பலனை அளிக்கிறது. அதே பலனை ராம நாம ஸ்மரணையும் அளிக்கிறது. வேதமில்லாமல் யக்ஞமில்லை. சீதா தேவியில்லாமல் ஸ்ரீராமன் இல்லை. இதெல்லாம் அதில் உள்ள ரகசியங்கள்.

    மேலாக பார்க்கும்போது தார்மீகமான கதையாக தென்பட்டாலும் ராமாயணத்தில் அநேக இரகசியங்கள் நிறைந்துள்ளன. அந்தக் காரணத்தால்தான் ராமாயணம் இன்றும் நிலைபெற்றுள்ளது. அதன் பாராயணம் இன்றைக்கும் நற்பலன்களை அருளி வருகிறது. சுந்தர காண்டத்தின் சில சர்க்கங்களையாவது இன்று பாராயணம் செய்ய வேண்டும்.

    பல சிறப்புகள் நிறைந்த நாள் ஸ்ரீராமநவமி தினம். இன்று செய்யப்படும் பாராயணமும் ஜபமும் வழிபாடும் அதிக அளவு நற்பலன்களை அளிக்கவல்லது.

    ராம நாம ஜபம்:
    ராம நாமத்திற்கான சிறப்பான பொருளை அறிந்து ஜபம் செய்வது இன்னும் உயர்ந்தது. “தெலிசி ராம சிந்தனதோ தியானமு சேயுமு ஓ மனஸா!” என்கிறார் தியாகராஜர்.

    “ரமயதீ இதி ராம:” – ஆனந்தத்தை ஏற்படுத்துபவன் ஸ்ரீ ராமன். ராமன் என்றாலே ஆனந்த சொரூபன். ராவணன் என்றால் துக்க ஸ்வரூபன். அழுபவனும் அழ வைப்பவனும் ராவணன். அழுததால் ராவணன் என்று பெயர் பெற்றான். உண்மையான பெயர் தசகண்டன். ஆனால் கைலாசம் கை மேல் விழுந்ததால் அழுதான். அப்பொழுது “ராவணா!” என்று அழைத்தார் பரமசிவன். துக்க சொரூபமான ராவணனை ஆனந்த சொரூபமான ராமன் வதைத்தான். துக்கம் தொலைந்தது. ஆனந்தத்திற்கு பட்டாபிஷேகம் நடந்தது. அதனால் ராமாயண பாராயணத்தால் ஆனந்தம் கிடைக்கிறது.

    ஆனந்தமே பரப்பிரம்மம். பரஞ்சோதி அக்னி, சூரிய, சந்திர மண்டலங்கம் மூலம் நமக்கு கிடைக்கிறது. இம்மூன்றிலும் பரஞ்சோதியை வழிபட வேண்டும்.

    “யதாதித்ய கதம் தேஜோ ஜகத் பாஸயதே கிலம்!
    யச்சந்த்ரமஸி யச்சாக்னௌ தத்தேஜோ வித்தி மாமகம்!
    !” என்று பகவத்கீதையில் கூறுகிறான். சூரியன் சந்திரன் அக்னியில் எந்த தேஜஸ் உள்ளதோ அதுவே நான் என்கிறான்.

    அசகாயசூரன் ஸ்ரீராமன். தன் மகிமையால் பிரகாசிப்பவன். மகாமந்திரம் ராம நாமம். இதனை யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் ஜபம் செய்ய கூடிய சிறந்த மந்திரம். பரமாத்மா ராமா என்ற நாமத்தோடு அவதரித்தார்.

    ராம நாமத்தில் இருக்கும் ரகசியங்கள் ராமாவதாரத்திலும் உள்ளன. வெறும் கதையாக நாம் அதனைப் படிக்கும் போது இவற்றை அறிய முடிவதில்லை. பக்தியோடு ராமாயணத்தை பாராயணம் செய்யும்போது ராமனே அவற்றை நமக்கு புரிய வைக்கிறான். பரிபூரணமான மனிதன் எப்படி இருக்க வேண்டும் என்று காட்டுவதற்காக இறங்கி வந்த நாராயணனே ஸ்ரீ ராமன்.

    srirama boy
    srirama boy

    ராமன் மானுடனா? மாதவனா? என்றால்… உத்தமமான மானுடன் எவ்வாறு விளங்க வேண்டும் என்று காட்டிய பரிபூரண தத்துவம் ராமச்சந்திர மூர்த்தி.

    ராம நாம ஜபம் செய்வோம்! ராம மூர்த்தியை தியானித்து வழிபடுவோம்! ராமாயணத்தை பாராயணம் செய்வோம்! இந்த மூன்று உபாயங்கள் நமக்குக் கிடைத்துள்ளன. ஜபம் செய்வதற்கு ராம மந்திரம், தியானிப்பதற்கு ராமனின் திவ்ய மங்கள விக்கிரகம், படித்து அறிந்து வாழ்க்கையை நல்வழிப்படுத்திக் கொள்வதற்கு ராமாயணம். ராம நாமம், ராம ரூபம், ராமாயணம் என்ற இந்த மூன்று ஆயுதங்களால் நாம்
    உய்வடைவோமாக!

    அயோத்யா ராமச்சந்திர மூர்த்தி சம்பூர்ண தேஜஸ்ஸோடு ஒளிர்ந்து உலகிற்கு ஆனந்தத்தை அருளட்டும்!

    ஜாம்பவத், சுக்ரீவ, ஹனுமத், சீதா லக்ஷ்மண, பரத, சத்ருக்ன சமேதனான ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் திவ்ய பாதாரவிந்தங்களை வணங்குவோம்! ஸ்ரீராம ஜெயராம ஜெய ஜெய ராமா!சர்வம் ஸ்ரீ ராமச்சந்திர பரப்பிரம்ம சரணார விந்தார்ப்பணமஸ்து!

    உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
    தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

    https://t.me/s/dhinasari

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    9 − 7 =

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

    Most Popular

    மக்கள் பேசிக்கிறாங்க

    ஆன்மிகம்..!

    Follow Dhinasari on Social Media

    19,035FansLike
    388FollowersFollow
    83FollowersFollow
    74FollowersFollow
    4,634FollowersFollow
    17,300SubscribersSubscribe

    சமையல் புதிது..!

    COMPLAINT BOX | புகார் பெட்டி :

    Cinema / Entertainment

    நடிகர் அஜித்குமாரின் தந்தை பி.சுப்ரமணியம் மறைவு..

    நடிகர் அஜித்குமாரின் தந்தை பி.சுப்ரமணியம் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். நடிகர் அஜித்குமாரின்...

    லால் சலாம் பட சூட்டிங் பிரச்சனை..

    திருவண்ணாமலையில் நேற்று படமாக்கப்பட்ட லால் சலாம் பட சூட்டிங் பிரச்சனை எதிரொலி ஐஸ்வர்யா ரஜினிகாந்தின்...

    கண்ணை நம்பாதே-படம் எப்படி?..

    அவரவர் குற்றத்திற்கு தண்டனை உண்டு என்கிற கருவை அடிப்படையாக் கொண்டு உருவான படம் கண்ணை நம்பாதே. தான்...

    7 ஆஸ்கர் விருதை வென்ற Everything Everywhere All At Once..

    7 ஆஸ்கர் விருதை வென்ற Everything Everywhere All At Once திரைப்படம் .சிறந்த...

    Latest News : Read Now...