50. உள்ளது உள்ளபடி பேசுவதுதான் சத்தியமா?
தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாம வேதம் சண்முக சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்
“பூத ஹித யதார்த பாஷணமேவ சத்யம்” – சாண்டில்ய உபநிஷத்.
“உயிரினங்களின் நலன் கோரும் உள்ளது உள்ளபடியான பேச்சே சத்தியம்”
பாரதிய தர்மம் கடைபிடிக்கக் கூடிய நீதியைப் பேசுகிறது. அதாவது ஒரு நீதியை அனைத்து கோணங்களிலும் அலசுகிறது.
ஒரு தர்மத்தை நிலைநிறுத்தற்கான சந்தர்ப்பம், சமயோஜிதம் போன்றவற்றை கவனித்து கூறும் சித்தாந்தத்திற்கு கடைபிடிப்பதற்கான சாமர்த்தியம் இருக்கும்.
வேத மதம் ‘சத்திய பாஷணம்’ என்பது பற்றி எத்தனை தெளிவாக விளக்கியுள்ளது என்பதை மேற்சொன்ன உபநிஷத் வாக்கியத்தை ஆராய்ந்தால் புரிந்து போகும்.
“யதார்த பாஷணமேவ சத்யம்“என்பது நிரூபிக்கப்பட்ட விஷயம். உள்ளது உள்ளபடி பேசுவதே சத்தியம் – இந்த விளக்கம் சர்வ சாமானியமாக நடந்தது நடந்தபடியே, பார்த்தது பார்த்தபடியே பேசுவது. பார்க்காததையோ இல்லாததையோ பொய்யோ பேசக்கூடாது. பேச்சுக்கு இது மிகவும் முக்கியம்.
ஆனால் ஓரொருமுறை இதனால் சில ஆபத்துகள் நேரலாம். நாம் உள்ளது உள்ளபடி பேசுவதால் ஒரு உயிருக்கு தீங்கு நேரும் அவகாசம் ஏற்படலாம். அப்போது என்ன செய்வது? அதற்காகத் தான் ‘பூத ஹித’ என்ற சொல்லைப் போட்டுள்ளார்கள். முதலில் ஜீவ கோடிகளின் நலனுக்கு முக்கியத்துவம். அதற்கு பங்கம் விளைவிக்கும் எதார்த்தமான பேச்சு சத்தியம் அல்ல.
‘பூத ஹிதம்’என்ற விஷயத்தில் மட்டுமே ‘எதார்த்தம்’ என்பதை ஒதுக்க முடியும். இந்த தளர்வு ‘உயிரினங்களின் நலன்’ என்ற அம்சத்தில் மட்டுமே என்ற விஷயத்தை மறந்து, சுயநலத்துக்காக உள்ளது உள்ளபடி பேசுவதை விட்டு விட கூடாது. அது பொய்யாகும்.
உள்ளது உள்ளபடி பேசுவதைவிட ஜீவனின் நலனே பேச்சுக்கு முக்கியம். உதாரணமாக – ஒரு மனிதனை ஒரு கொலைகாரன் துரத்துகிறான். அந்த மனிதன் பாதுகாப்புக்காக நம் வீட்டில் நுழைந்து ஒளிந்து கொள்கிறான் என்று வைத்துக்கொள்வோம். சற்று நேரத்தில் கொலைகாரன் வந்து இங்கு யாராவது வந்தார்களா என்று கேட்டால் உண்மையே பேசுவேன் என்று கூறி ஒளிந்திருப்பவனை காட்டிக் கொடுத்தால் அது உண்மை அல்ல. அங்கு சத்தியத்தால் வரும் பலன் கிடைக்காததோடு ஜீவனுக்கும் நலன் விளையாது.
அதனால்தான் ஹிம்சை இல்லாத யதார்த்தப் பேச்சுக்கு முக்கியத்துவம். உள்ளது உள்ளபடி பேசுவது முக்கியம் தான். அதைவிட முக்கியம் பிறர் நலன். உண்மை பேசுவது என்பதன் முழுமையை எடுத்துக்காட்டும் இந்த வாக்கியத்தின் மூலம் பாரதிய தத்துவ சிந்தனையில் அனைத்து உயிர்களிடமும் எத்தனை அன்பும் அகிம்சையும் வெளிப்படுத்தியுள்ளார்கள் என்பது தெளிவாகிறது.
தர்மத்தில் உண்மைக்கே முதல் தாம்பூலம். அதிலும் உயிரினங்களின் நலனுக்கு முக்கியத்துவம். இன்னும் ஆராய்ந்தால், ‘பூத’ என்றால் மனிதன் மட்டுமே அல்ல. பிராணி கோடிகள்.ஸ்தாவர ஜங்கமங்களான அசையும், அசையாத ஜீவ கோடிகள் அனைத்தும் இதில் அடங்கும்.
பயிர், பச்சைகள், பறவை, விலங்கு அனைத்தும் பிராணிகளே. அவற்றின் நலன் கூட நமக்கு முக்கியமே. நம்மைச் சுற்றிலும் நம்மோடு கூட வாழும் இயற்கையின் நலனை மறந்தால் அதைவிட பாவம் வேறொன்றில்லை.
நம் வாழ்க்கை முறை முழுவதும் இயற்கையின் நலனுக்காக பாடுபடுவதிலேயே உள்ளது. இவ்விதம் சத்தியம் பேசுவதில் உள்ள முக்கியத்துவத்தை எடுத்துரைப்பதைப் பார்க்கையில் ருஷிகளின் பார்வையில் உள்ள கூர்மை வெளிப்படுகிறது. எத்தனை சூட்சுமமாக ஆலோசித்து சனாதன மதத்தில் உள்ள தர்மங்களை அமைத்துள்ளார்கள் என்பதை அறிய முடிகிறது.
இதே கருத்தை ஸ்ரீகிருஷ்ண தேவராயர் ‘ஆமுக்த மால்யதா’வில் கூறும் போது “பொங்கி சத்யசாலி சம்பி தார்மீகுண்டு” என்று விவரிக்கிறார். “ஜீவன்களின் நலனுக்காக பொய்யுரைத்தாலும் அவன் உண்மை பேசுபவனே. அருகதை உள்ளவன் சாஸ்வதமான நன்மைக்காக, தர்மத்திற்காக அதர்மியைக் கொன்றாலும் அவன் தார்மீகனே” என்கிறார்.
அதனால் தர்மத்தைக் கடைப்பிடிக்கும் விஷயத்தில் வெளிப்படையாக ஒரு விளக்கத்தை மட்டுமே எடுத்துக்கொள்ள முடியாது.ப்ரக்ருதியின் நலன், அமைதி என்ற அம்சங்களை கணக்கில் கொண்டால் தர்மத்தில் உள்ள சூட்சுமம் புரியும்.
சூட்சுமமாக தர்மத்தைக் கடைப்பிடித்து, நிலைநிறுத்திய ஸ்ரீராமரும் ஸ்ரீ கிருஷ்ணரும் நமக்கு ஆதரிசங்கள். ருஷிகள் காட்டியருளிய இந்த நல்ல வாக்கியங்கள் கடைப்பிடிப்பதற்கு ஏற்றவை.