சூட்டெரிக்கும் சூரியன் இனி !
இயன்ற வரை நம் வாழ்வை இயல்பானதாகவும் இனிமையானதாகவும் ஆக்கிக் கொள்ளவே நாம் முயற்சிக்கிறோம் !
நம் உள்ளுணர்வு நமக்குச் சொல்லும்! சோதனைக் காலம் வரலாம் என்று !
சமூக ஆர்வலர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த முயற்சிப்பார்கள் ; நம் பொறுப்புணர்வைத் தூண்டுவார்கள். ஆனாலும், இயற்கையின் போக்கை நம்மால் மாற்ற முடியுமா ?
வரும் நாட்கள் அனைவரும் கவனமாக இருக்க வேண்டிய காலம் !
ஆமாம் ! சூரியன் உச்சத்தில் இருக்கும் காலம் அல்லவா ?
நாம் அச்சத்தில் இருக்க வேண்டிய நிலை வராமல், பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
பாதரசமானியே பதற்றப்படும் “கத்திரி வெயில்” காலம் வந்தே விட்டது.
அக்னி நட்சத்திரம் தொடங்கிவிட்டது.
அஸ்வினி முதல் ரேவதி வரை உள்ள 27 நட்சத்திரங்களில் எந்த நட்சத்திரம் இது !
சித்திரை மாதம் 21-ஆம் தேதி முதல் வைகாசி மாதம் 14-ஆம் தேதி வரை வெய்யிலின் தாக்கம் கடுமையாக இருக்கும். இதனை *”அக்னி நட்சத்திரம்’* என்று சொல்வர்.
இந்நாட்களில் முதல் ஏழு நாட்கள் சுமாராகவும், இடையில் ஏழு நாட்கள் மிக அதிகமாகவும் கடைசி ஏழு நாட்கள் சுமாராகவும் வெப்பத்தை தரும்.
சூரியபகவான் சித்திரை மாதத்தில் மேஷ ராசியில் சஞ்சரிக்கிறார். மேஷ ராசியின் அதிபதி செவ்வாய். நவகிரகங்களில் செவ்வாய் பஞ்ச பூதங்களில் ஒன்றான அக்னியின் தன்மையைப் பெற்றது. சூரிய பகவானும் நெருப்பு வடிவானவர் என்பதால் அவர் மேஷ ராசியில் சஞ்சரிக்கும்போது உச்சம் பெறுகிறார். உச்சம் என்றால் பலம் கூடி இருத்தல் என்று பொருள்.
சூரியனின் பலம் கூடி வெப்பம் அதிகமாக வெளிப்படும் காலமாக இந்த மாதம் அமைகிறது. பரணி நட்சத்திரத்திம், கிருத்திகை நட்சத்திரத்திம் மற்றும் ரோகிணி நட்சத்திரத்தின் இரண்டாம் பாதம் வரையிலும் சூரிய பகவான் சஞ்சரிக்கும் காலமே அக்னி நட்சத்திர காலமாகும்.
இதில் பரணி நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் காலத்தை முன் கத்தரி என்றும் ரோகிணி நட்சத்திரத்தின் இரண்டாம் பாதம் வரை சஞ்சரிக்கும் காலத்தைப் பின்கத்தரி என்றும் சொல்லுவர். நடுவில் இருக்கும் கிருத்திகை நட்சத்திர காலமே கத்தரி வெயிலின் மிக அதிகமான தாக்கத்தை ஏற்படுத்தும் நாட்களாகும்.
அக்னிநட்சத்திரம் பற்றிய புராணக்கதை ஒன்று உண்டு. அதிக ஹோம நெய்யை விழுங்கிய அக்னிதேவன், உபாதையினால் அவதியுறுகிறான்.காண்டவ வனத்தில் உள்ள மூலிகைகளை அவன் உண்ண முற்படும் போது, இந்திரன் அங்கே மழை பொழிய வைத்து, அக்னிதேவன், காண்டவ வனத்தை அழித்திடாமல் செய்கிறான்.அக்னிதேவனுக்கு இருபத்தொரு நாட்கள் காண்டவ வனத்தில் உள்ள மூலிகைச் செடிகளை உண்ணுவதற்கு உதவி செய்து, அவன் உபாதையைத் தீர்க்க அர்சுனன் காண்டவ வனத்தின் மீது அம்பினால் ஆன கூரையினை அமைக்கிகிறான். அக்னிதேவன் இருபத்தொரு நாட்கள் காண்டவ வனத்தை அழித்து, மூலிகைகளை உட்கொள்ளும் காலம் அக்னியின் வீர்யத்தால், உலகமே மிக வெப்பமாக ஆகும் காலம் . அதுவே, அக்னி நட்சத்திர காலம் என அக்கதை சொல்லுகிறது.
சூரியன் சுட்டெரித்தாலும் மீண்டெழுவோம் !
நம் வாழ்வில் சில கடுமையான சூழல்கள் வரத்தானே செய்யும் ! அதைக் கண்டு அஞ்ச முடியுமா ?
ஓடவும் வேண்டாம் ! ஒளியவும் வேண்டாம் !
நமக்கு சாதகமாக நிலையை மாற்றிட வேண்டும்.
பகல் நேரத்தில், உச்சி வெயிலில் ,தேவையற்ற அலைச்சல்களை தவிர்க்க வேண்டும்.
உதயசூரியன் உதிக்கும் முன்பே, நாம் எழுந்து, நம் கடமைகளை சற்று முன்னதாகச் செய்து, சூரியனின் தாக்கம் அதிகமாக இருக்கும் சமயங்களில், சற்று பொறுமையாக வீட்டிலியே இருந்து, நம் சக்தியை இழக்காமல் கவனமாக இருக்க வேண்டும்.
நீர்மோர், இளநீர், எலுமிச்சை சாறு போன்ற குளிர்ச்சி தரும் பானங்களை அவ்வபோது பருக வேண்டும்.
நல்ல பருத்தி ஆடைகளை அணிந்து கொள்ள வேண்டும்.
கோவில்களில் விசேஷ அபிஷேக ஆராதனைகள் அக்னிநட்சத்திரக் காலத்தில் நடக்கும்.
அதில் கலந்து கொள்ளமுடியாவிட்டாலும், வீட்டில் இருந்தே நம் இஷ்ட தெய்வங்களை வணங்கி அருள் பெறலாம்.
அன்னதானம், பானகம் நீர்மோர் தானம் செய்தல் மிக விசேஷம் .
பாதரசமானியும் இறங்கி வரும்.
நாமும் சூரிய பகவானின் சஞ்சார மாற்றத்தில், அவர் அருளுக்கு பாத்திரமாவோம் !
- கமலா முரளி