
83. பூமாதா அருள்வாய்!
தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் சண்முக சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்
“ஸா நோ பூமிர்விஸ்ருஜதாம் மாதா புத்ராய மே பய:” – அதர்வணவேதம்.
“பூமி என் தாய். புத்திரனான எனக்கு போஷிப்பதற்காக பால் பெருகட்டும்!”
“இயற்கையை/ப்ரக்ருதியை கடவுளாக வணங்கினர் பண்டைய இந்தியர்கள்” என்று நம்மைப் பற்றி வரலாறு எழுதியவர்கள் குறிப்பிடுகின்றனர். இயற்கையைப் பார்த்து பயந்துபோய் அவற்றை தெய்வமாக வர்ணித்தார்கள் என்று விளக்கம் எழுதிய மேதாவிகளும் உள்ளார்கள்.
உண்மையில் அவர்களுக்கு நம் வேத கலாச்சாரத்தின் விசாலமும் பரமார்த்தமும் புரியவில்லை. ப்ரகிருதியை ஜடப் பொருளாகவும் மனிதனின் கட்டளைக்கேற்ப எப்படி வேண்டுமானாலும் மாற்றிக் கொண்டு சேவை செய்யும் ஒரு தேவை என்றும் நினைக்கும் சுயநலவாதிகளுக்கு வேத சிந்தனையின் ஆழம் புரிவதென்பது அசாத்தியம்.
இயற்கையில் இருக்கும் சைதன்யம் பரஸ்பர பந்தத்தால் சகல உலகையும் இணைத்து இயக்குகிறது என்பது வேதப் பார்வைக்கு மட்டுமே தென்பட்ட உண்மை.
இயற்கையோடு மனிதனுக்கு உள்ள உறவு தாய்- பிள்ளை பந்தம் என்று நிலைநாட்டினர் வேத ரிஷிகள். அதனால்தான் ப்ருதிவீ சூக்தம், வ்ருக்ஷ சூக்தம் போன்ற வேதப் பகுதிகள் தோன்றின.

வேதவாக்கியங்கள் உணர்ச்சிவசப்பட்டு எழுதிய கவிதைகள் அல்ல. கற்பனையின் வெளிப்பாடுகள் அல்ல. சத்தியத்தை தரிசித்த தவத்தால் பெற்ற தெய்வீகமான சொற்கள்.
அம்மா தன் குழந்தையை போஷிப்பது போன்று ப்ரக்ருதி உயிர்களை போஷிக்கிறது. பூமியை தாய் என்றனர். அதனால்தான் பூமாதா என்று அழைக்கிறோம்.”மாதா பூமி: புத்ரோ அஹம் ப்ருதிவ்யா” – “அம்மா பூமி. இந்த பூமியின் புதல்வன் நான்!”
காலையில் தூங்கி எழுந்ததுமே படுக்கையில் இருந்து இறங்கும் முன் பூமியை வணங்குகிறோம்.”பாத ஸ்பர்சம் க்ஷமஸ்வமே”
“அம்மா! கால் வைக்கிறேன் மன்னித்துவிடு!” என்று பிரார்த்தனை செய்து பூமியை மிதிக்கிறோம். நாட்டியம் கற்பவர்கள் கூட “சமுத்ரவசனே தேவி பர்வத ஸ்தன மண்டலே நாட்யம் கரோமி பூதேவி பாதகாதம் க்ஷமஸ்வமே”என்று பிரார்த்தனை செய்து நாட்டியம் ஆடுவார்கள்.
அதாவது நாம் இயற்கையை ஒரு மகா சைதன்ய மூர்த்தியாக, நம்மை ஆதரித்து அரவணைக்கும் தெய்வீக ஆற்றலாக எண்ணி வணங்குகிறோம். இத்தனை உயர்ந்த, நுட்பமான கருத்தை எத்தனை மோசமாக வியாக்கியானம் செய்கிறார்கள் போலி மேதாவிகள்!
இவற்றை வெறும் விசுவாசத்தின் கீழ் கணக்கிடக் கூடாது. ஒரு உயர்ந்த ஜாதி சாதித்த ஆத்ம சிறப்பிற்கு குறியீடுகள் இந்த தெய்வீக கருத்துகள்.
ஒரு பொருளும் அதன் எதிர்விளைவும் பௌதிகமாக தென்படுவதுதான் முழுமையான வடிவம் என்றல்ல. மிகவும் சூட்சுமமான தாக்கம் அதைச் சுற்றிலும் இருக்கும். இயற்கையின் சக்தியை தெய்வீகமாக தரிசித்து அதனுடன் வளர்த்துக்கொண்ட ஆத்மார்த்தமான எண்ணங்களால் அந்த சைதன்யம் நிச்சயம் தாக்கம் அடைந்து நம்மைக் காத்தருளும்.
பிரகிருதியை மனிதன் எவ்விதம் காண வேண்டும்? எவ்வாறு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்? என்பதற்கு பாரதிய சனாதன கலாச்சாரம் கூறிய பதில் மிகவும் சிறப்பானது.

பாரத தேசத்தில் இயற்கையிடமிருந்து எதைப் பெற்றாலும் வெறும் ஒரு ஜடப் பொருளிலிருந்து நம் தேவையை நிறைவேற்றிக் கொண்டாற் போல் நினைக்கவில்லை. பகவானின் பிரசாதமாக ஸ்வீகரித்தார்கள். ஸ்நானம் செய்யும் முன்பு நதியையும், பயிர் விளைவிக்கும் முன்பு நிலத்தையும், வீடு கட்டும் முன்னால் பூமியையும், கட்டியபின் வீட்டையும்… இவ்வாறு ஒவ்வொருபதார்த்தத்தையும் இறைவனின் பிரசாதமாகவே எண்ணி வணங்கி பூஜித்தார்கள்.
தாயின் பால் குழந்தைக்காகவே. அது ஒரு பௌதிகத் தேவையாக அன்றி தாயின் வாத்சல்ய பாவனையின் உயிரோட்டமாகப் பார்ப்பது உயர்ந்த பண்பாடு.இயற்கை கூட நமக்காக செல்வங்களை அள்ளி வழங்குகிறது. பயிர்கள் காடுகள் நதிகள் அனைத்தும் நாம் வாழ்வதற்காக தரணி தரும் தாய்ப்பால். மகனுக்கு தாயின் பாசத்தை அனுபவிக்கும் உரிமை மட்டுமின்றி மகனுக்கான கடமையும் உள்ளது.
ஆனால் இயற்கையை ஜடப் பொருளாக பார்த்து, வளர்ச்சி என்ற பெயராலும் அறிவியல் முன்னேற்றம் என்ற பெயராலும் பசுமை நிறைந்த வயல்களையும் காடுகளையும் தாட்சண்யமின்றி அழித்துள்ளோம். தாயின் இதயத்தைத் துளைத்து, நதிகளை விவேகம் இன்றி மாசுபடுத்தி, சாஸாவத பிரயோஜனங்களை தரிசிக்கும் முன்நோக்குப் பார்வை இன்றி இயற்கைச் செல்வங்களை எத்தனை துவம்சம் செய்கிறோமோ! கண்மூடித்தனமான பிராஜெக்டுகளுக்காக எத்தனை நிலங்களை இழந்திருக்கிறோமோ!,
இதெல்லாம் ஒருபுறம். மறுபுறம் நம் வேதம் எச்சரிக்கும் வாக்கியங்களை காதில் போட்டுக் கொண்டோமா? அக்கிரமமும் அதர்மமும் அதிகமானால் பஞ்ச பூதங்கள் எவ்வாறு கோபத்தால் தூண்டப்படும் என்பதை நம் சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன. அவற்றை எடுத்துச் சொன்னால் உடனடியாக மறுக்கிறோம். அதெல்லாம் மூடநம்பிக்கை என்கிறோம். ஆனால் நம் தார்மீக நடத்தைக்கும் இயற்கையின் எதிர்விளைவுக்கும் உள்ள சூட்சுமமான தொடர்பு என்ன என்பது குறித்து குறைந்தபட்சம் யோசித்து கூட பார்க்க மாட்டோம்.
ஆனாலும் பூமாதா கருணை நிறைந்தவள். இயற்கையை பகவானின் மனைவியாக போற்றுவது நம் சம்பிரதாயம். பூதேவனாக சர்வேஸ்வரன் நாராயணனை போற்றுகிறோம். ‘தரணீதர:’ என்பது விஷ்ணு நாமம்.
ப்ரக்ருதியை நடத்துவிப்பது தர்மம். தர்மமே வேதம். வேதம் என்னும் குதிரைகளால் நடக்கும் ப்ருதிவி ரதம் பரமேஸ்வரனின் வாஹனம். இந்த விஷயமே சிவன் பூ ரதத்தில் ஏறி திரிபுர அசுரர்களை சம்ஹாரம் செய்தார் என்ற கதையில் விவரிக்கப்படுகிறது.
“யஸ்யா ஹ்ருதயம் பரமேவ்யோமன் த்ஸத்யேனாவ்ருத மம்ருதம் ப்ருதிவ்யா:” பூதேவியின் உள்ளம் அமிர்தம் என்றும், சத்தியத்தால் அமிர்தமாக ஆனது என்றும் வர்ணிக்கிறது வேதம்.
‘காமதுகா’ என்றால் வாஞ்ஞைகளைப் பிழிந்து அளிப்பது. ‘பயஸ்வதீ’ என்றால் பால் நிறைவாக இருப்பது. சுரபி: போன்ற சொற்களால் பசுவை வர்ணிக்கிறார்கள்.
பூமிக்கும் பசுவுக்கும் உள்ள தொடர்பை வேத ரிஷிகள் தரிசித்தர்கள். பூமியின் அதிஷ்டான சக்தியாக கோமாதாவை குறிப்பிடுகிறார்கள் மகரிஷிகள்.
வசுந்தரா என்பது ப்ருதிவிக்கு மற்றொரு பெயர். வசு என்றால் சம்பத்து. செல்வங்களை தன்னுள் தாங்கி கொண்டுள்ள தாய். அதனால் பூதேவியை லக்ஷ்மி தேவியின் சொரூபமாக வேத புராணங்கள் வழிபடுகின்றன.
“யஸ்யாம் சமுத்ர உதசிந்து ராபோ யஸ்யாமன்னம் க்ருஷ்டயம் சம்பபூவு: யஸ்யாமிதம் ஜின்வதி ப்ராணதேஜத்…” என்று அதர்வண வேதம் போதிக்கிறது.
கடல், நதி, ஓடும் நீர் நிலைகள் போன்றவற்றுக்கு இருப்பிடமாகவும் உணவுக்கு ஆதாரமாகவும் முயற்சிக்கு மேடையாகவும் உயிரோட்டமுள்ள ஜகத்திற்கு ஸ்தானமாகவும் உள்ள பூமியை அம்மா என்ற அல்லாமல் வேறு எவ்வாறு வழிபட முடியும்!
“க்ஷமயா ப்ருதிவீ” என்றார்கள். பொறுமைக்கு பூமாதேவி என்பது உண்மைதான். எதற்காக அசுரர்களையும் அவர்களின் அசுர குணத்தையும் சகித்துக் கொண்டாள்? இன்றும் சகித்து வருகிறாரள்? ஆனாலும் எப்போதாவது ஒருமுறை அந்தத் தாய் தன் சக்தியை தெரிவிப்பதற்கும் தன் இதயத்தின் சோகத்தை வெளிப்படுத்தும் விதமாகவும் சில கணங்கள் அசைந்தால்… அந்தோ! எத்தனை விபரீதங்கள்…! பூகம்பங்கள்…! அம்மா! அமைதி அடைவாய்! உன் பொறுமையின்மை கடுகளவு ஆனாலும் எங்களின் நூற்றாண்டு நாகரீக மாளிகையின் அடித்தளத்தையே புரட்டிப் போடுகிறது. உன் பிள்ளைகளுக்கு துயரத்தை அளிக்கிறது. அம்மா! எங்களை மன்னித்துவிடு! அமைதியாகு! உன் தாய்மை குணத்தை மறக்காதே! எங்களிடம் கருணை காட்டு! பிரசன்னா பவ! சுப்ரசன்னா பவ!! ஓம் சாந்தி