அண்ணா என் உடைமைப் பொருள் – 13
ஸ்வாமியிடம் சர்வீஸ், யோகியிடம் பாத நமஸ்கார்
– வேதா டி.ஸ்ரீதரன் –
நிறைய பேர் ஸ்வாமிக்கு சர்வீஸ் பண்ணுகிறார்களே, நாமும் பண்ணினால் என்ன என்ற ஆவல் எழுந்தது. சமிதி உறுப்பினர்கள் தான் சர்வீசுக்குப் போக முடியும் என்று சொன்னார்கள். ஒரு சாயி அன்பர் மூலம் சமிதி உறுப்பினர் அட்டை வாங்கிக் கொண்டு வொயிட்ஃபீல்ட் கிளம்பினேன்.
ஆகா, மே மாதம் சென்னையில் வெயில் சுட்டெரிக்கும்! வொயிட்ஃபீல்டில் சுகமான சீதோஷ்ண நிலை. போதாக்குறைக்கு ஆசிரமத்து வெஸ்டர்ன் கேண்டீன் உணவு வகைகள். ஆம், சர்வீஸ் உண்மையில் ரொம்ப சுவையாகவும்(!), சுகமாகவும்(!!) இருந்தது.
சேவைக்கு வந்திருந்த அனைவரிடமும் ஒரு பொதுவான ஏக்கம் இருப்பதைக் கவனித்தேன். இப்போது மட்டுமல்ல, ஒவ்வொரு தடவை தரிசனத்தின் போதும் இதை நான் கவனித்திருக்கிறேன். ஸ்வாமியின் பாத நமஸ்கார் வேண்டும் என்ற ஏக்கமே அது. சாயி அன்பர்களுக்கு எத்தனை தடவை ஸ்வாமியின் பாத நமஸ்கார் கிடைத்தாலும் ஏக்கம் தீராது போலும்!
வொயிட்ஃபீல்டில் இருந்த போது திடீரென்று அண்ணா என்னைச் சென்னை திரும்புமாறு சொல்லி விட்டார். சர்வீஸ் முடிவடைவதற்கு முந்தைய நாளில் நான் அங்கிருந்து கிளம்பி விட்டேன். சர்வீசுக்கு வந்திருந்த சாயி அன்பர்கள் அனைவருக்கும் ரொம்பவே வருத்தம். நாளை ஒரே ஒரு நாள் தான் சர்வீஸ் பாக்கி இருக்கிறது. சர்வீஸ் வந்த அனைவருக்கும் ஸ்வாமி விசேஷ தரிசனம் தருவார். அத்தனை பேருக்கும் பாத நமஸ்கார் கிடைக்கும். இந்த வாயப்பை இழந்து விடாதீர்கள் என்று அனைவருமே சொன்னார்கள்.
நான் என்ன செய்வது? அந்த தினத்தில் தான் அண்ணா என்னைச் சென்னயில் இருக்கச் சொல்லி இருந்தார். சென்னை திரும்பிய என்னை அண்ணா அன்றே திருவண்ணாமலை போகச் சொல்லி இருந்தார் – யோகியார் தரிசனத்துக்காக.
திவ்ய வித்யா ட்ரஸ்டிகளான கண்ணன், யஷோத் ஆகியோருடன் காரில் திருவண்ணாமலை பயணம். அப்போது அச்சாகியிருந்த ஏதோ புத்தகத்தை யோகியாருக்குக் கொடுப்பதற்காகத்தான் அண்ணா எங்களை அனுப்பினார். புத்தகம் பெயர் நினைவில்லை.
யஷோத் வாங்கிக் கொண்டு வந்திருந்த பிஸ்கெட்டைக் கையில் எடுத்த யோகியார் அதில் மிகச் சிறிய பகுதியை உடைத்து அதை மட்டும் சாப்பிட்டார். குழந்தையைப் போல மழலையில் யஷோத் பெயரைத் திரும்பத் திரும்பச் சொன்னார். அந்தப் பெயருக்கு என்ன பொருள் என்பதை விசாரித்தார். சுமார் பத்து நிமிடங்கள் அவருக்கு மிக மிக அருகாமையில் அமர்ந்திருந்தது என்னை மிகவும் பரவசப்படுத்தியது. திரும்பும் போது அனைவரும் அவருக்கு நமஸ்காரம் பண்ணினோம்.
யோகி அன்பரான முகிலன், நமஸ்காரம் பண்ணும் போது ஏன் யோகியாரின் பாதங்களைத் தொடவில்லை என்று கேட்டார். பயம் தான் காரணம் என்று பதில் சொன்னேன். ஐயோ, சாமி பாதத்தை அப்படியே சிக்குனு பிடிச்சுக்கணும் என்று உரிமையுடன் கூறினார். (அதன்பின்னர் யோகியைத் தரிசித்த நாட்களில் அவர் பாதங்களைத் தொட்டு நமஸ்காரம் பண்ணினேன்.)
நாங்கள் தரிசனத்துக்கு வரும்போது அண்ணா யோகியாருக்கு ஒரு கடிதம் கொடுத்து விட்டிருந்தார். அதில் அண்ணா கண்ணனைப் பற்றி எழுதி இருந்தார். ‘‘அவருக்குக் குழந்தை இல்லை. இதனால் அவரும் அவர் மனைவியும் மிகுந்த மன வேதனையில் இருக்கிறார்கள்’’ என்று அந்தக் கடிதத்தில் அண்ணா எழுதி இருந்தார். மேலும் அதில், ‘‘கண்ணன் தனக்காக பிரார்த்தனை செய்து கொள்ள மாட்டார், எனவே நான் அவருக்காகத் தங்களிடம் (யோகியாரிடம்) பிரார்த்திக்கிறேன்’’ என்று எழுதி இருந்தார். இதன் தொடர்ச்சியாக, யோகியார் அனுக்கிரகத்தில், அடுத்த மாதமே அவரது மனைவி கருவுற்றார். அவர்களுக்கு ஆண் குழந்தைப் பேறு அமைந்தது.
ஆனால், இந்தக் கடித விஷயம் கண்ணன் உட்பட எங்களில் யாருக்குமே அப்போது தெரியாது.
இந்த விவரங்களை அண்ணா பின்னர் தான் எல்லோரிடமும் தெரிவித்தார். ஏதோ தீபாவளி மலரிலும் (கல்கி என்று ஞாபகம்.) எழுதி இருந்தார்.
இந்தக் காலகட்டத்தில் சில நண்பர்கள் சேர்ந்து ஒரு சிறு பத்திரிகை ஆரம்பித்தோம். அதன் இரண்டாவது இதழை அண்ணா யோகியாருக்குக் கொடுத்தனுப்பினார். அந்தப் பிரதியை யோகியார் தனது தலை மீது வைத்துக் கொண்டார். கைகளால் தடவி ஆசீர்வதித்தார். மூன்றாவது இதழில் அவரது இந்த அனுக்கிரகத்தைப் பற்றி எழுதினேன். டைப்செட்டிங் முடிந்தது. ஆனால், இதழ் அச்சேறவே இல்லை. மூடுவிழா நடத்தி விட்டோம்.
கண்ணன் விஷயத்தில் ப்ராப்திக்குக் (குழந்தைப் பேறு கிடைப்பற்குக்) காரணமான அதே அனுக்கிரகம், எங்கள் பத்திரிகை விஷயத்தில் சமாப்திக்குக் காரணமாக இருந்தது.
பல வருடங்களுக்கு முந்தைய ஒரு சம்பவம் பற்றி அண்ணா என்னிடம் சொல்லியதுண்டு. காங்கிரஸ்காரர் ஒருவரது பத்திரிகை அலுவலகத்துக்குப் பெரியவா போயிருந்தாராம். அங்கே பெரியவாளுக்குப் பாத பூஜை நடந்தது. அதற்கு அடுத்த நாள் பத்திரிகை மூடப்பட்டு விட்டது.
(கல்கியில் சேர்வதற்கு முன்பு அண்ணா கொஞ்ச நாள் பணி புரிந்த பத்திரிகை இது. இங்கே அண்ணாவுக்கு விசேஷமான அனுபவம் ஒன்று கிடைத்தது. அதைப் பற்றிப் பின்னர் விரிவாகப் பார்க்கலாம்.)
பெரியவா கால் வைத்த நேரம், பத்திரிகை குடிமுழுகிப் போய் விட்டதே என்று பலரும் நினைத்தார்களாம். ஆனால், அந்தப் பத்திரிகை முதலாளி சொன்னாராம்: ‘‘சபரி ராமனுக்குப் பழம் கொடுத்தாள், ராமன் அவளுக்கு மோக்ஷம் கொடுத்தான். எனது பத்திரிகைக்கும் அப்படித்தான் ஆச்சு. நான் பெரியவாளுக்குப் பாத பூஜை பண்ணினேன். பெரியவா என் பத்திரிகைக்கு மோக்ஷம் கொடுத்தார்’’ என்று சொன்னாராம்.
அதேபோல யோகியார் எங்கள் பத்திரிகைக்கு மோக்ஷம் அளித்தார்.
இந்தப் பத்திரிகையில் திவ்ய வித்யா ட்ரஸ்ட் விளம்பரம் போட்டிருந்தோம். அதைப் பார்த்து ஓர் அன்பர் எங்களைத் தொடர்பு கொண்டார். அண்ணாவின் அதி தீவிர வாசகரான அவர் பெயர் ரமேஷ் என்றும், அவர் அயனாவரத்தைச் சேர்ந்தவர் என்றும் ஞாபகம்.
அவரைப் பற்றிப் பின்னர் பார்க்கலாம்.
யோகியாருக்கு ‘‘பிச்சைக்கார’’ நாமா ஏற்பட்டது எப்படி என்பது பலர் மனதில் இருக்கும் கேள்வி.
ஆனந்தாசிரம பப்பா ராமதாசர் தான் யோகியாரின் குரு. அவர் அடிக்கடி சொல்லும் ‘’My Father‘’ பப்பா ராமதாசரையே குறிப்பது. குருவிடம் மந்திரோபதேசம் பெற்றதும் ராம்சுரத் குன்வர் பைத்தியம் பிடித்தவர் போல ஆகி விட்டார். அவரது செயல்பாடுகளைப் பார்த்த அனைவரும் அவரைப் பைத்தியம் என்றே முடிவு கட்டினர். அவரால் பொருளீட்டவும் முடியாமல் போனது. ஒரு கட்டத்தில் மனைவி மக்களுடன் ஆசிரமத்திலேயே தங்க வேண்டும் என்று அவர்களை அழைத்துக் கொண்டு ஆனந்தாசிரமம் வந்தார். ஆனால் ராமதாசர் அவரை ஆசிரமத்தில் தங்க அனுமதிக்கவில்லை. என்னால் பணம் சம்பாதிக்க முடியவில்லை, குடும்பத்தைக் காப்பாற்ற நான் என்ன செய்வேன் என்று ராம்சுரத் குன்வர் முறையிட்ட போது பப்பா ராமதாசர், ‘‘Go and beg’’ என்று சொல்லி விட்டார். நான் பிச்சைக்காரனா பப்பா, பிச்சை தான் எடுக்க வேண்டுமா பப்பா என்று பப்பா ராமதாசரிடம் யோகியார் உருக்கமாகக் கேட்டதும், அவர் யோகியைக் கண்டு கொள்ளாமல் கதவைச் சாத்திக் கொண்டதும் வர்ணனைக்கு அப்பாற்பட்ட சோக நிகழ்வுகள். அதன் பின்னர், யோகியார் பிச்சை எடுப்பதற்கு இடையூறாக இருந்த அன்பர்களை பப்பா ரொம்பவும் கவனமாகக் கண்டறிந்து அவர்களுக்குத் தடை போட்டார், பப்பா இதைத்தொடர்ந்து சுமார் இரண்டு வருடங்கள் யோகியார் பரிவ்ராஜகராக நாடு முழுவதும் சுற்றித் திரிந்தார்.
தான் என்ற எண்ணத்தைத் தன்னிடம் இருந்து அறவே நீக்கிய சம்பவம் இது என இதைப் பற்றிப் பிற்காலத்தில் யோகியார் குறிப்பிடுவார். “Nobody can love this beggar like my Father Swami Ramdas and nobody can torture this beggar like my Father Swami Ramdas. My Father killed this beggar because He loved this beggar” என்று அவர் சொல்லுவார்
‘‘Go and beg’’ என்று பப்பா ராமதாசர் சொன்னதில் இருந்து அவர் தன்னைப் பிச்சைக்காரனாகவே கருத ஆரம்பித்தார். இவ்வாறு வந்ததே ‘‘பிச்சைக்கார’’த் திருநாமம்
பெரியவா யோகியாரை டாக்சியில் கோவிந்தபுரத்துக்கு அழைத்துச் செல்லுமாறு ஒரு பக்தர் மூலம் தகவல் கூறினார். ஆனால் யோகியாரோ பெரியவாளைப் பார்ப்பதற்காகக் காஞ்சிபுரம் வந்து விட்டார். (இந்தச் சந்திப்பு குறித்து அனேகமாக அனைவருமே கேள்விப்பட்டிருப்பீர்கள் என்பதால் விரிவாக எழுதவில்லை.) அப்போது பெரியவா யோகியாரின் கோத்திரத்தைத் தெரிந்து கொள்ள விரும்பினார் என்பது முக்கியச் செய்தி. யோகியார் ராம கோத்திரம் என்று பதில் சொன்னார். இதைக் கேட்ட காஞ்சி அன்பர்கள் கேலியாகச் சிரித்தனர். (அப்படி ஒரு கோத்திரம் கிடையாது என்பதால்.)
இதன்பின்னர் பெரியவா யோகியார் சூரிய வம்சத்தைச் (ஶ்ரீராமனின் வம்சம்) சேர்ந்தவர் என்று சொல்லி இருக்கிறார். (இதைத்தான் யோகியார் ராம கோத்திரம் என்று சொன்னாரோ?)
யோகியாரின் பெயர் ராம் சுரத் குமாரா, ராம் சூரத் குமாரா என்ற ஐயமும் நிறையப் பேரிடம் எழுவதுண்டு. யோகியார் ராம்சுரத் குமார் என்றே தன் பெயரை எழுதி வந்தார். ராமன் மீது ஆராத அன்பு கொண்ட குழந்தை என்பது அதன் பொருள். அவரைத் திருவண்ணாமலையின் தெய்வக் குழந்தை என்றே அவரது அன்பர்கள் கருதுகிறார்கள்.
சூரத் குமார் என்று சொன்னாலும் பொருளுண்டு என்று பெரியவா அண்ணாவிடம் சொல்லி இருக்கிறார். சூரத் என்பது சூரஜ் (சூரியன்) என்ற சொல்லின் மருவு. சூரத் குமார் என்றால் சூரியனின் குமாரர் அதாவது சூரிய வமிசத்தைச் சேர்ந்தவர் என்று பொருள். ராமனும் சூரத் குமார் (சூரிய வம்சத்தைச் சேர்ந்தவன்) தான்.
தெய்வத்தின் குரலைப் பற்றி யோகியார் தனது அன்பர்களிடம் உயர்வாகப் பேசுவதுண்டு. அண்ணாவுக்கு அவ்வப்போது பாராட்டுச் செய்திகளும் அனுப்புவதும் உண்டு. யோகியார் அழைப்பின் பேரில் அண்ணா திருவண்ணாமலை சென்று சில தடவை அவரைத் தரிசித்திருக்கிறார்.
யோகி ஆசிரமத்துடன் எனக்கு நேரடி சம்பந்தம் எதுவும் இல்லை. இருந்தாலும், யோகியாருடன் நெருக்கமாக இருந்த அன்பர்களில் ஒருசிலருக்கு என் மீது மிகவும் பிரியம் உண்டு. இதற்கு ஒரே காரணம் அண்ணாவுக்கு நான் நெருக்கமாக இருந்ததே.
அண்ணாவுக்குப் பணிவிடை செய்ய அன்பர்கள் வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டதற்கும், அவ்வப்போது யாராவது அவருடன் தங்கி அவருக்குப் பணிவிடை செய்ய ஆரம்பித்ததற்கும் யோகியாரே காரணம். ஆரம்ப நாட்களில் அண்ணாவுக்குப் பணிவிடை செய்தவர்கள் யோகி அன்பர்களே. அவர்களில் முக்கியமானவர் சக்திவேல். அண்ணாவின் இறுதி வினாடிகளில் இவர் மட்டுமே அண்ணாவுடன் இருந்தார்.