
சொன்னார்கள்… கேட்கிறார்களா?
– பேராசிரியர் சாமி தியாகராசன்
மதம் இந்த சொல்லுக்குக் கொள்கை என்ற பொருளும், அகங்காரம், ஆணவம், திமிர் என்ற பொருள்களும் உண்டு,
கொள்கை என்ற பொருளில் நமது பண்டைச் சான்றோர் முதல் இற்றைக் காலப் பாரதியர் வரை சொல்லிச் சென்றுள்ள சில செய்திகளைப் பார்ப்போம். அச்செய்திகளை உள்ளத்துள் கொண்டோர் பேறு பெற்றவர். கொள்ளாதவர் அவப்பேறு பெற்றவரேயாவர். அவரே அகங்காரிகள் என அடையாளப்படுவர்.
“நல்ல சக்கரத்தையும் அச்சையும் கோத்த வண்டியை செலுத்துவோன் சிறந்தவனாயின் தொல்லைதராமல் நல்லவழியில் செல்லும்; வண்டி செலுத்துவதை தெளிய அறியமாட்டாதவனாயின் அது நாள்தோறும் பகையாகிய செறிந்த சேற்றிலே அழுந்தி மிகப்பல தீய துன்பத்தை மேன்மேலும் உண்டாக்கும். ((புறநானூறு – 185)
இந்தக் கருத்து அரசனை நோக்கிச் செல்லப்பட்டதாயினும் சமூகத் தலைவர்கட்கும், மதபோதகர்கட்கும் பொருந்தி வருவதேயாம்.
“தீதும் நன்றும் பிறர்தர வாரா” (புறம் : 197)
“பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தங்
கருமமே கட்டளைக் கல் (குறள் 505)
கருமம் – செயல்; கட்டளைக்கல் – உரைகல்; பொன்வணிகர் – கடைகளில் காணலாம்.
“தானே தனக்குப் பகைவனும் நட்டானும்
தானே தனக்கு மறுமையும் இம்மையும்
தானே தான்செய்த வினைப்பயன் துய்த்தலால்
தானே தனக்குக் கரி” ( அறநெறிச்சாரம் 71)
வினைப்பயன் துய்த்தல் – சிறையிருத்தல்; கரி – சாட்சி;
“நல்லது செய்தல் ஆற்றீராயினும்
அல்லது செய்தல் ஓம்புமின் அதுதான்
எல்லாரும் உவப்ப தன்றியும்
நல்லாற்றுப் படூஉ நெறியுமா ரதுவே” (புறம்: 195)
இவை எல்லாருக்கும் உரியதும் எல்லாரும் உவப்பதுமாகிய பொதுக்கருத்துக்களாயினும், அரசுக்கும், சமூகத்துக்கும், மதத்திற்கும் தலைமை தாங்குபவற்குச் சிறப்பானவையாம் என்பது குறிக்கத்தக்கது.
கண்ணகிக் கதையை சொல்லிமுடித்த இளங்கோவடிகள் தெளிவுறக் கேட்ட திருத்தகுநல்லீர்! என விளித்துப் பல அறிவுரைகளைக் கூறுகிறார்.

அவற்றுள் ஒன்று “தானம் செய்மின்” என்பதாகும். அன்னதானம், வஸ்திரதானம், வித்தியாதானம், சொர்ணதானம், கோதானம், ஞானதானம் என தானங்கள் பலவகைப்படும். இந்த வகைப்பட்ட தானங்கள் ஆரவாரமின்றி, வலது கை கொடுப்பது இடது கை அறியாமல் தருவதாக இருக்க வேண்டும் என்பது முன்னோர் கொள்கை.
இங்கே கூறப்பட்ட தானங்களைத் தமிழில் பிச்சை என்பர். ஈதல் என்பது தானத்திற்கான நல்ல தமிழ். வழக்கில் பிச்சை என்றே ஆளப்படுகிறது.
அண்மைக் காலங்களில் பதவிப் பிச்சை, ஓட்டுப்பிச்சை என்ற பேச்சுக்கள் அடிக்கடி கேட்கப்படுகின்றன.
இந்தப் பிச்சைகள் பற்றி இயேசு சொன்னார்.
“போலிப் புகழ்தனை நாடி – பிச்சை
போடும் மனிதர்கள் கோடி
நாலு பணம்கொடுப்பார்கள் – வரும்
நாற்பது லாபத்தைத் தேடி !
“பிச்சை இடுகின்ற போது – அதைப்
பேணும் கடமைஎன் றெண்ணு
பச்சை விளம்பரம் காண – பொருள்
பற்றிக் கொடுப்பது வீணே!”
“ஆடம்பர நம்பிக்கை இட்டால் – லாபம்
அப்பொழு தேவரும் உண்மை
வேடமின்றிப் பிச்சை இட்டால் – வேதன்
வீட்டுக்குச் செய்குவன் நன்மை!”
(பக்கம்: 102,103 இயேசுகாவியம், கவிஞர் கண்ணதாசன்)
பதவிப் பிச்சை இடுவோரைப் பார்த்து, ஐயன்மீர்!
நீங்கள் போடும் பதவிப்பிச்சை நாங்கள் உங்களுக்கிடும் ஓட்டுப் பிச்சையால் என்பதை மறந்து விடாதீர் என்கிறார் ஒருவர்.
இந்த இருதிறத்தாரும் இடும்பிச்சையால் சிலர் சுகமாக வாழ்கிறார்கள் என்பது என்னவோ உண்மை தான். எனினும் பிச்சை ஏற்று வாழ்வோர் அச்சத்துடனேயே வாழ்கிறார்கள் என்பதும் உண்மை தான்.
இவர்களைத் தான் நமது பாரதியார்
“பிச்சைவாழ் வுகந்து பிறருடை ஆட்சியில்
அச்சமுற் றிருப்போன் ஆரியன் அல்லன்” – என்கிறார்.
ஆரியன் என்ற சொல்லுக்குச் சிறந்தவன், உயர்ந்தவன் என்பது பொருள்.
“வாயாற் கிணறுகெட்ட வாறேபோல்” வாய்பேசிப்
பேயனார்க் கின்பமுண்டோ? பேசாய்! பராபரமே! என்பது தாயுமானசுவாமிகளின் வாக்கு
வாயிருத்தலினால்
(அதன் மூலமாக மண் விழுந்து) [வாய்: கிணற்றுவாய்] கிணறு தூர்ந்துவிடுவதைப் போல வாயொன்றினாலேயே பலபடப் பிதற்றிப் பேசும் பேய்க்குச் சமானவானவர்கட்கு இன்பம் உண்டோ? அருள்வாய்! என்கிறார் சுவாமிகள். இன்பமில்லை. மாறாகத்துன்பமே என்பது சுவாமிகள் கருத்து. அதுவே அனைவரின் கருத்துமாகும்.
வாயால் பிறரைப் பற்றிப் பிதற்றுபவர்களைப் “பேயனார்” என்ற சொல்லால் தாயுமானவர் குறிப்பிடுவது நம் கவனத்திற்குரியது. அவர்களை மனிதரில் வைத்து எண்ணக் கூடாது என்பது அவரது உள்ளக்கிடக்கை என்பதை உணரவேண்டும்.
இத்தகையோரை நோக்கியே நமது வள்ளுவர்,
“யாகாவாராயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பார்
சொல்லிழுக்குப் பட்டு” என்று சொன்னார்.
சோகாப்பர் – துன்பத்தையே தமக்குரிய பொருளாகக் காப்பர். வழக்கு, தண்டனை, சிறையில் இருத்தல் முதலாய துன்பங்கள்.
தாயுமானவர் சொல்லும் பேயனார் பற்றி இயேசு சொன்னார் எப்படி?
“வாய்க்குள் செல்வது வயிற்றில் விழுந்து
காலையில் மீண்டும் கழிவாய்ப் போய்விடும்
வாயில் இருந்து வருபவை மட்டும்
இதயக் கூடையில் எடுத்தவை ஆதலால்
என்றும் நிற்கும் என்றும் நிலைக்கும்!
தீய வார்த்தைகள் தீயசிந் தனைகள்
நாத்திகம் வசவு நன்மொழி இன்மை
அவதூ றென்னும் ஆகிய இவைதாம்
அசுத்த மாக்கும் யாரையும்” என்று சொன்னார்
(பக்கம்: 169 இயேசுகாவியம், கவிஞர் கண்ணதாசன்)
ஒருவன் பேய்த்தன்மை யுடையவனா, தெய்வத்தன்மை உடையவனா என்பதை ஓர் உதாரண வழிக் காட்டுகிறார் நமது வள்ளுவர்.
“நிலத்தில் கிடந்தமை கால்காட்டும் காட்டும்
குலத்தில் பிறந்தார் வாய்ச் சொல்” என்பது அது.
ஒரு விதையின் முளையைப் பார்த்து அது முளைத்த நிலத்தின் இயல்பை அறிவது போல ஒருவரது சொல்லைக் கேட்டு அவர் பிறந்த குலத்தின் இயல்பை அறியலாம் என்பது இந்தக் குறளின் பொருள்.
நல்ல குடும்பத்தில் பிறந்தவரா, இல்லையா என்பதை அறிவதற்குச் செயல் முதலியன வேண்டா அவர் வாயில் வரும் சொல்லே போதும் என்பது ஆசான் கருத்து.
ஆசான் என்றாலும், குரு என்றாலும், மதபோதகர் என்றாலும் ஞானி என்றாலும் ஒன்றே.
“ஆசான் சார்ந்து அமைவரக் கேட்டல்” என்பது நன்னூல் சூத்திரம்
“ஞானமிலார் வேடம் பூண்டும் நரகத்தர்”
”புன்ஞானத் தோர்வேடம் பூண்டும் பயனில்லை” என்கிறார் திருமூலர்
திருமூலர் சொன்னதையே இயேசு சொன்னார். எப்படிச் சொன்னார்?
“போலி ஞானிகாள் பொய்வேதக் காரரே”
“ஒருவன்தன்னை மதத்தில் சேர்க்க
ஓடி ஓடி அலைகிறீர்!
ஓடி வந்த மனிதனுக்கு
உண்மை என்ன சொல்கிறீர்?
இருமடங்கு நரகந் தன்னில்
இட்டுக்கொண்டு சேர்க்கிறீர்!
இந்தவேலை செய்து கொண்டு
என்ன வேதம் படிக்கிறீர்?
“விரியன் பாம்புக் குட்டிபோன்ற
அறிவில்லாத போதரே
விளையுமந்த நரகவாழ்வை
விரைவில் நீரும் அடைவீரே!
மறைவிளங்கு நூலவர்கள்
இறையுணர்ந்த ஞானிகள்
மனது வைத்து நானனுப்பினால்
உமக்கு வேதரே!”
“சிறையிலிட்டுச் சிலுவை தந்து
சீறு வீர்கள் தெரியுமே
செபம் நடத்தும் கூடம் வைத்துத்
தீமை சொல்லித் தாக்குவீர்!
கறைபடிந்த கைகளோடு
பழிசு மக்கும் கள்வரே!
காலம் இன்று உங்களுக்குக்
கணக்குத் தீர்க்க வந்ததே!
(பக்கம்: 283, 285 இயேசுகாவியம், கவிஞர் கண்ணதாசன்)

இயேசு அன்று சொன்னது நூற்றுக்கு நூறு இன்றும் கிறிஸ்தவ போதகர்கட்குப் பொருந்தி நிற்பதால் அவர் வாக்கு சத்திய வாக்கு என்பதில் ஐயமுண்டோ?
இந்து ஞானமரபில் [இந்த சொல்லாட்சியை எழுத்தாளர் திரு.ஜெயமோகனிடமிருந்து எடுத்துக்கொண்டேன்] எல்லாச் சமயங்களுக்கும் இடமுண்டு. நான் இந்து, ஆனால் நாத்திகன் என ஒருவரால் சொல்லமுடியும். மற்ற மதங்களில் இது நடக்காது.
“அறுவகைச் சமயத்தோர்க்கும் அவ்வவர் பொருளாய் நிற்பான்” (சிவஞான சித்தியார்) என இந்து சமயத்தால் மட்டுமே சொல்லமுடியும்.
பலதிறப்பட்ட சமயக் கடவுளர்களின் பெயர்களைப் பட்டியலிட்ட வள்ளலார் “பித்தன் என்று பேர்படைத்தார்க் கெப்பேர்தான் பொருந்தாதோ” என்கிறார். இது தான் இந்து ஞானமரபின் உச்சம்.
இத்தகைய ஞானமே பிறமதங்கள் இந்தியாவில் கால் ஊன்றக் காரணமாய் அமைந்தது. பிற காரணங்களைப் புறக் காரணங்கள் எனலாம்.
இந்து மரபில் பேசும் மொழியையும், பிறந்த நாட்டையும், தெய்வமாகப் போற்றிக் கொண்டாடுவது நெடும் சேய்மைப் பண்பு.
நமது காப்பியங்களில் கடவுள் வாழ்த்துக்குப் பிறகு நாட்டுப் படலம் சொல்லப்படுகிறது. அதனால் நாட்டைப் பற்றிய செய்தியின் தலைமை விளங்கும்,
“பூம்புகார் போற்றுதும் பூம்புகார் போற்றுதும்” எனப் பூம்புகார் நகருக்குப் போற்றிக் கூறுகிறார் இளங்கோவடிகள். இது நாட்டிற்கான வணக்கம். நாட்டைத் தெய்வமாகப் போற்றும் வழக்கம் இதிலிருந்து தெரிகிறது.
“தழல்புரைக் கடவுள் தந்ததமிழ் தந்தான்” எனக் கம்பர், சிவபெருமான் அகத்தியனுக்குத் தமிழைத் தந்தான் எனவும், அவன் தந்த தமிழை இவன் தேசத்திற்குத் தந்தான் எனவும் கூறுகிறார்.
அகத்தியனுக்குத் தமிழைத் தந்த சிவபெருமான் நிற்க, அந்தத் தமிழையே தெய்வமாகக் கொண்டு வழிபடும் புலவர்கள் தமிழ்ச் சங்கத்தில் உட்கார்ந்திருக்கிறார்களாம். இப்படியாகப் புலவர்கள் அமர்ந்திருக்க சிவபெருமான் நிற்கும் தமிழ்ச் சங்கம் இருக்கும் பாண்டி நாட்டிற்கு வணக்கம் என ஒரு புலவர் நாட்டு வணக்கம் சொல்கிறார்.
”மூவர்கட் கரியான் நிற்ப
முத்தமிழ்த் தெய்வச் சங்கப்
பாவலர் வீற்றிருக்கும்
பாண்டிநன் னாடு போற்றி”
பெரும்பற்றப் புலியூர் நம்பி தாம் செய்த திருவிளையாடல் புராணத்தில் இந்த நாட்டு வணக்கப் பாடலை அமைத்துள்ளார்.
இந்தப் பாண்டி நாட்டின் தென்கோடியில் இருக்கும் நாஞ்சில் நாட்டில் தான் [கன்னியாகுமரி மாவட்டம்] அதங்கோட்டாசானும், தொல்காப்பியரும், திருவள்ளுவரும் தோன்றினார்கள் என்பது ஒருசாரார் கொள்கை.
‘திருவள்ளுவர்’ என்னும் தலைப்பிலான சிறிய நூலில் எனது நண்பர் தொல்லியல் ஆய்வாளர் திரு இராமச்சந்திரன் அவர்கள் திருவள்ளுவர் பாரதத்தின் தென்கோடியில் பிறந்தவர் என்பதற்கான தக்க சான்றுகள் தந்துள்ளார். “திருவள்ளுவர் முன்பு மதுரையிலும் பின்பு மயிலையிலும் வாழ்ந்ததாகத் தெரிகிறது” என்பார் தேவநேயப் பாவாணர்.
ஞாலம் போற்றும் சான்றோர்கள் பிறந்த புண்ணிய பூமியில் நின்றுகொண்டு; நான் செருப்பணியாமல் நின்றால் இந்தப்பூமியின் மண்பட்டுச் சொறி, சிரங்கு,குஷ்டம் முதலான நோய்கள் என்னைப் பற்றிக்கொள்ளும் என ஒரு கிறிஸ்தவப் போதகரால் சொல்ல முடிகிறது என்றால் அது இந்து ஞான மரபின் பொறுமைக்கு அடையாளம் எனக் கூறலாம்.
எனினும் எதற்கும் எல்லையுண்டு என்ற அடிப்படையில்,
“தாயினும் சிறந்த தயைபூண்டிருந்த நம்
தேயமாம் தேவிக்குத் தீவினை இழைக்கத்
துணிந்தைஇவ் வஞ்சரை எனுந்தொறும் எனுந்தொறும்
நெஞ்சகக் குருதியை நிலத்திடை வடித்து
வஞ்சகம் அழிக்கும் மாமகம் புரிவம்யாம்” எனத் தென்பாண்டி நாட்டில் பிறந்து பேசிய இருபெரு ஆளுமைகளின் கருத்துக்களை நெஞ்சில் நிறுத்துவோம்.
ஒவ்வொரு சமயத்திற்கும் சமயத்தகுதி என்ற பெயரில் கொள்கைகள் உண்டு. அந்தச் சொற்களின் வரம்பிற்கு உட்பட்டு சமயத் தலைவர்களும், சமயத்தைக் கடைப்பிடிப்போரும் செயல்படவேண்டும்.

அந்தத் தகுதியில் நில்லாமல் வரம்பு மீறுவோரைப் பற்றித் திருமூலர்
“தத்தம் சமயத் தகுதிநில் லாதவரை
அத்தன் சிவன்சொன்ன ஆகமநூல்நெறி
எத்தண்டமும்செயும் அம்மையில் இம்மைக்கே
மெய்த்தண்டம் செய்வதுஅவ் வேந்தன் கடனே” என்கிறார்.
(திருமந்திரம் – அரசாட்சிமுறை – பா:10)
“தாம் சார்ந்திருக்கும் சமய வரம்பை மீறி ஒருவர் நடந்து கொண்டால் மறுமையில் அவருக்குரிய தண்டனையை சிவன் தருவான். மறுமையில் பெருமான் அவனுக்குத் தண்டனை கொடுப்பான் என்று எண்ணி நாட்டை ஆளும் அரசன் சும்மா இருந்துவிடக் கூடாது. இம்மைக்குரிய தண்டனையை அரசன் தரவேண்டும். அது அவனுடையை கடமை” என்கிறார் திருமூலர்.
சமய வரம்பை மீறுவோர்க்குத் தண்டனை தரவேண்டும் என்பது திருமூலர் கொள்கை.
மேலும் திருமூலர் பஞ்சமா பாதக்கத்தோடு ஒத்து வாயொன்று சொல்ல, மனம் ஒன்று சிந்திக்க, மெய்யொன்று செய்தலாகிய பாதகத்தைச் செய்வோரையும் [போலி போதகரையும் போலிச்சீடர்களையும்] அரசன் அந்த நேரம் பார்த்து யாவரும் அஞ்சும்படி தண்டனையை மிகச் செய்து திருத்த வேண்டும். அவ்வாறு அரசன் அவர்களைத் திருந்தாவிடின், அரசனது நாடு பஞ்சத்துட்பட்டு வருந்திப் பின் இல்லாமல் போய்விடும் என்கிறார். அதாவது முற்றிலும் அழிந்துவிடும் என்றவாறு பாடலைப் பார்ப்போம்.
“பஞ்சத் துரோகத்தில் பாதகர் தன்மையும்
அஞ்சத் சமையத்தோர் வேந்தன் அருந்தண்டம்
விஞ்சச்செய் திப்புவி வேறுசெய்யாவிடின்
பஞ்சத்து ளாய்ப்புவி முற்றும்பாழாகுமே”
(திருமந்திரம். அபக்குவன் பா:5)
தத்தம் சமயத்தகுதி நில்லோர்க்குரிய தண்டனையை அரசன் அளிக்க வேண்டும், அவ்வாறு அவன் அளிக்காமல் இருந்தால் அவன் நாடு அழியும் என்கிறார் திருமூலர்.
அவர் வாக்கினை உள்ளத்தில் கொண்டு அரசு பொறுப்பில் இருந்து இன்று நமது தமிழ்நாட்டினை ஆளும் அரசு செயல்பட வேண்டும். இல்லையேல் அழியும். இது நான் சொல்வதன்று திருமூலர் சொல்வது,
“இங்குள்ள முற்போக்கினர் இந்துத்துவம் மீது கொண்ட காழ்ப்பால் பல்லாயிர வருட மரபும் மாபெரும் தத்துவ, இலக்கிய கலைச் செல்வமும் கொண்ட இந்து ஞானமரபை முழுமையாகவே நிராகரிக்கவும் அதை அழிக்கவும் தொடை தட்டுகிறார்கள். ஒற்றைப் படையான வாதங்களால் அதை இழிவு செய்கிறார்கள். ஒற்றை எதிர்ப்பதற்கு அதை வசைபாடினால் போதும் என்பது ஒரு பெரியாரிய நம்பிக்கை”
இந்துத்துவ எதிர்ப்பை இந்து எதிர்ப்பாக்குவது வழியாக வெல்ல முடியாத ஒரு போராக அதை மாற்றிவிட்டிருக்கிறார்கள். இந்து மரபை வசைபாடி, எள்ளி நகையாடி அநீதியான குற்றச் சாட்டுகளைச் சுமத்திப் பிரச்சாரம் செய்து, அதில் ஈடுபாடு கொண்ட கோடானு கோடி மக்களை நமது அரைகுறை அறிவுஜீவிகள் இந்து அடிப்படைவாதம் நோக்கித் தள்ளிக்கொண்டிருக்கிறார்கள். “
சிலுவையின் பெயரால் – பக்:171 ஜெயமோகன்
நண்பர் ஜெயமோகனின் “சிலுவையின் பெயரால்” என்னும் தலைப்பிலான நூலை அனைவரும் படிக்கவேண்டும் என்பது எனது அவா.
“இந்து மதத்தின் ஆழ்ந்த அற்புதமான கருத்துக்களும், ஆன்ம ஞானமும், தயையும் வேறு எந்த மதத்திலும் இல்லை”
(மகாத்மா காந்தியடிகள். சத்தியசோதனை. தமிழ். பக்.165)



