October 19, 2021, 8:30 am
More

  ARTICLE - SECTIONS

  அண்ணா என் உடைமைப் பொருள் (37): ப்ராப்தமும் ப்ராரப்தமும்!

  இதனால் ஒவ்வொரு திங்கட்கிழமையும் இரண்டு அல்லது மூன்று பேர் அண்ணாவிடம் சென்று அறையைக் கழுவிச் சுத்தம் செய்வது முதலான பணிகளை

  anna en udaimaiporul 2 - 1

  அண்ணா என் உடைமைப் பொருள் – 37
  ப்ராப்தமும் ப்ராரப்தமும்
  – வேதா டி.ஸ்ரீதரன் –

  அண்ணாவுக்குப் பணிவிடைகள் செய்வதற்கான பிள்ளையார் சுழியைப் போட்டவர் யோகியாரே. எனினும், அதில் அவ்வப்போது நிறைய நடைமுறைச் சிக்கல்கள் ஏற்பட்டன. இதனால் ஒவ்வொரு திங்கட்கிழமையும் இரண்டு அல்லது மூன்று பேர் அண்ணாவிடம் சென்று அறையைக் கழுவிச் சுத்தம் செய்வது முதலான பணிகளை மேற்கொள்ள ஆரம்பித்தோம்.

  அதன் பின்னர் அண்ணா உடல்நலக் குறைபாட்டால் தி. நகரில் உள்ள அவரது அக்கா வீட்டுக்கு வந்து விட்டார். அண்ணாவின் கடைசி பத்து வருடங்கள் இங்கேயே கழிந்தன. இந்த நாட்களில் மௌன விரதம், அனுஷ்டானம், நிஷ்டை முதலியவற்றுக்கு அண்ணா குட் பை சொல்லி விட்டார்.

  இந்தக் காலகட்டத்தில் முழு நேரமாக அண்ணாவுடன் யாராவது இருக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. எனவே, நானும் நண்பர் இளங்கோவனும் அவருடன் மாறி மாறித் தங்க ஆரம்பித்தோம். நீண்ட காலம் இதுபோல அண்ணாவுடன் இருக்க வேண்டி வந்தது. அவரது சிறுசிறு தேவைகளையும் கவனித்துக் கொள்ள வேண்டி வந்தது.

  இது சாரதா பப்ளிகேஷன்ஸ் வியாபாரத்தை மிகவும் பாதித்தது. வியாபாரத்தில் அனைத்துப் பிரச்சினைகளும் பூதாகாரமாக வெடித்தது இந்தக் காலகட்டத்தில் தான்.

  இந்த நாட்களில் எங்கள் இருவரின் உடல்நிலையும் பாதிப்படைந்தது. குடும்பங்களிலும் சில சமயம் இறுக்கமான சூழல் உருவானது.


  எங்கள் இருவரில் யாராவது ஒருவர் இரவில் அண்ணாவுக்கு அருகே படுத்துறங்குவோம். அண்ணா கட்டிலில் படுத்திருப்பார். நாங்கள் தரையில் பாய் விரித்துப் படுத்திருப்போம். அண்ணா இரவில் குறைந்தது மூன்று தடவை பாத்ரூம் போவார். பாத்ரூம் அழைத்துப் போவது, திரும்பிய பின்னர் கை கால்களைத் துடைப்பது, வெந்நீர் தருவது என்று ஒவ்வொரு முறையும் சுமார் ஐந்து நிமிடமாவது தூக்கம் போய்விடும்.

  இளங்கோவனுக்குக் கண் விழிப்பதில் பிரச்சினை இல்லை. சத்தம் கேட்டால் உடனேயே முழிப்பு வந்து விடும். இருந்தாலும், அவருக்குமே இந்த ராத்தங்கல் ஒரு வினோதமான அனுபவம். இளங்கோவனின் கால் அண்ணாவின் கட்டில் மீது லேசாகப் பட்டாலும் போதும், உடனேயே தூங்கிக் கொண்டிருக்கும் (?) அண்ணா, ‘‘கட்டில் ஆடறது’’ என்று சொல்வாராம். அதைவிடப் பெரிய ஜோக், அண்ணா எழுந்திருந்து படுக்கையில் உட்கார்ந்ததுமே இளங்கோவனுக்கு முழிப்பு வந்து விடும். ஏதோ ஓரிரு தடவை மட்டுமல்ல, ஒவ்வொரு தடவையும் அப்படியே.

  எனக்கும் அதே அனுபவம் உண்டு. தூக்க விஷயத்தில் நான் இளங்கோவனுக்கு நேர்மாறானவன். நான் கும்பகர்ணன் வகையறா. என்னை எழுப்புவதற்கு அண்ணா சிரமப்பட வேண்டாம் என்பதற்காக, நான் அவருடன் படுக்கும் நாட்களில், அவர் படுக்கையில் ஒரு சிறிய பிரம்பை வைத்திருப்பேன்.

  அந்தப் பிரம்புக்கு நான் வைத்திருந்த செல்லப் பெயர் waking stick என்பது. ஸ்வாமியின் ஈடிணையற்ற பக்தர்களில் ஒருவர் கஸ்தூரி. வயதான காலத்தில் அவர் நடப்பதற்கு மிகவும் சிரமப்பட்டார். ஒவ்வொரு தடவையும் அன்பர்கள் யாராவது அவரைக் கைத்தாங்கலாக தரிசனத்துக்கு அழைத்துச் செல்வார்கள். அதுபோல உதவி செய்ய வரும் அன்பர்களை அவர் Come, my walking stick என்று கேலியாகக் கூப்பிடுவாராம். அதே பாணியில் இந்தக் குச்சிக்கு நான் வைத்த பெயர் waking stick.

  ஆனால், அண்ணா அதைப் பயன்படுத்த வேண்டி வந்ததே இல்லை. அவர் எழுந்திருக்கும் போதே எனக்கும் முழிப்பு வந்து விடும். இது எனக்கு நம்ப முடியாத அதிசயமாக இருந்தது. Waking stick-க்கு வேலையே இல்லை என்ற வருத்தம் வந்ததால், ஒரே ஒரு நாள் மட்டும் தூக்கத்தில் இருந்து எழுந்திருக்காத மாதிரி படுக்கையிலேயே இருந்தேன். அண்ணா waking stick-ஐ எடுத்து என்னை லேசாகத் தட்டினார். சந்தோஷமாக எழுந்திருந்தேன்.


  இளங்கோவன் தற்போது சன்னியாசம் வாங்கி ஞான சிவானந்தர் ஆகி விட்டார். நான் இந்தத் தொடர் எழுத ஆரம்பித்ததும் என்னைத் தொடர்பு கொண்டு பழைய அனுபவங்களை மகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்தார்.


  அண்ணாவுடன் நான் நிறைய நேரம் செலவிட முடிந்தது சந்தோஷம் தான் என்றாலும், சில நேரம் அண்ணாவின் பிடுங்கல் தாங்க முடியவில்லை. திடீரென ஒருநாள், நான் நமஸ்காரம் பண்ணும் போது, ‘‘உனக்குப் பூணூல் போட்டு எத்தனை வருஷம் ஆயாச்சு? நீ ஸந்தியா வந்தனமே பண்றதில்லை. உனக்கு அபிவாதயே கூட சொல்லத் தெரியல. இனிமே என்னை நமஸ்காரம் பண்ணும் போது அபிவாதயே சொல்லு. தினசரி மூணு வேளையும் ஸந்தியா வந்தனம் பண்ணு’’ என்றார்.

  ‘‘அண்ணா, நான் பிராமணன் இல்லை. ரொம்ப வருஷம் முன்னால ஆர்எஸ்ஸ்ல சேர்ந்து ஹிந்துவா கன்வெர்ட் ஆயிட்டேன். என்னை ரீகன்வெர்ட் பண்ண ட்ரை பண்றீங்களா?’’ என்று சொல்லிச் சமாளித்தேன்.

  anna alias ra ganapathy14 - 2

  அத்துடன் விட்டு விடுவார் என் நினைத்தேன். நாளாக ஆக அவரது தொல்லை தாங்க முடியவில்லை.

  ‘‘நீங்க சொல்லிக் கொடுத்தா அபிவாதயே கத்துக்கறேன், ஸந்தியா வந்தனமும் கத்துக்கறேன்’’ என்று தீர்மானமாகச் சொல்லி விட்டேன்.

  அண்ணாவும் ஒத்துக் கொண்டார். எனது கோத்திரத்துக்கு உரிய பிரவரத்தைப் புத்தகம் மூலம் படித்துத் தெரிந்து கொண்டு அபிவாதயே சொல்லிக் கொடுத்தார்.

  அந்த அனுபவமே அவருக்குப் போதுமானதாக இருந்தது. ஸந்தியா வந்தனம் பற்றி அதன் பிறகு பேச்செடுப்பதே இல்லை.

  யார் கிட்ட?


  அண்ணாவுக்கு முழு நேரமாக நாங்கள் இருவரும் பணிவிடை புரிந்த காலத்தில், எங்கள் பிரச்சினைகளின் பாரம் தாங்க முடியாமல் சிறிது சிறிதாக உடைந்து போய்க் கொண்டிருந்தோம் என்பது யதார்த்த நிலை.

  அண்ணாவுடன் இருந்த காலத்தில் நிறைய நாட்கள் நான் சுய பிரக்ஞையே இல்லாதவனாக இயந்திரம் போல இருந்திருக்கிறேன். அதுமட்டுமல்ல, அந்த நாட்களில் என்னைச் சுற்றி ஏதோ இருள் சூழ்ந்திருந்தது போலவே உணர்ந்தேன். அந்தக் காலத்தில் எனக்கு ஏற்பட்ட பொருளாதாரச் சிக்கல், மிதமிஞ்சிய மன அழுத்தம் ஆகியவற்றின் காரணமாக விரைவிலேயே எனது செவித்திறன் கடுமையாகப் பாதிப்படைந்தது.

  anna alias ra ganapathy3 - 3

  அந்த வீட்டு டைல்ஸ் எங்களுக்கு ஒத்துக் கொள்ளவில்லை. வீட்டுக்குள் காலில் செருப்பு அணியும் விருப்பம் இல்லை.

  மேலும், அண்ணாவுக்குக் கால் பிடித்து விடுவதை நாங்கள் மிகுந்த பக்தியுடன் செய்தோம் என்றாலும், அது எங்களுக்கு மிகப் பெரிய வேலைப் பளுவாக இருந்தது. அதனால் ஏற்பட்ட உடல் வலி தாங்க முடியவில்லை.

  இருந்தாலும், ஏதோ எங்களால் முடிந்த அளவு அவருக்குப் பணிவிடை செய்ய முயற்சித்தோம்.


  ஒரு நாள் காலை அண்ணாவின் படுக்கையைக் கையால் தூசி தட்டினேன். அதைத்தொடர்ந்து, அண்ணா என்னிடம், ‘‘இளங்கோவன் படுக்கையை வெளியே எடுத்துண்டு போய் நன்னா உதறுவார். நீயானா வெறுமனே கையால தூசி தட்றே. அவர் எல்லா வேலையும் பார்த்துப் பார்த்து சிரத்தையோட பண்றார். நீயானா ஏதோ கடமைக்குப் பண்றா மாதிரி பண்றே. ஏன் இப்படி இருக்கே?’’ என்றார்.

  எனக்கு நிஜமாகவே ஆத்திரம் பொத்துக் கொண்டு வந்தது.

  ‘‘அண்ணா, நான் என்ன பண்றேனோ, அது தான் உங்களுக்கு விதிக்கப்பட்டது. புரிஞ்சுதா?’’ என்றேன்.

  அண்ணா என்னையே புன்சிரிப்புடன் பார்த்தார். ‘‘நீ சொல்றதும் சரியாத் தான் இருக்கு’’ என்றார்.


  பிற்காலத்தில் ஸ்வாமி ஓங்காராநந்தர் ஒரு ஜோக் சொன்னார். ‘‘ஸ்வாமீ, நீங்க எனக்கு குருவா அமைஞ்சது என்னோட ப்ராப்தம்’’னு சிஷ்யன் சொன்னானாம். ‘‘நீ சிஷ்யனா அமைஞ்சது என்னோட ப்ராரப்தம்’’ என்று குரு நினைத்தாராம்.

  ஜோக் கேட்டதும் எனக்கு இந்தச் சம்பவம் தான் நினைவு வந்தது.

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,140FansLike
  366FollowersFollow
  38FollowersFollow
  74FollowersFollow
  1,565FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-