spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகக் கட்டுரைகள்திருப்புகழ் கதைகள்: கவந்தம் ஆடிய கதை!

திருப்புகழ் கதைகள்: கவந்தம் ஆடிய கதை!

- Advertisement -
thiruppugazh stories
thiruppugazh stories

திருப்புகழ்க் கதைகள் 107
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –


தெருப்புறத்து – திருச்செந்தூர்
கவந்தம் ஆடியது – பகுதி 2

போர்க்களத்திற்கு வந்த அந்தச் சேனையில், எத்தனை மேகங்கள் இருந்தனவோ அத்தனை யானைகள் இருந்ததாம், எத்தனை யானைகள் இருந்ததோ அவற்றிற்கு ஈடாக தேர்கள் இருந்தனவாம், உலகில் உள்ள நெல்மணிகளின் எண்ணிக்கைக்கு ஈடாக குதிரைகள் இருந்தனவாம்.

இப்படிப் பெருங்கூட்டமாக வந்த இந்தச் சேனையைக் கண்டு வானரங்கள் போர்க்களத்தை விட்டு சிட்டாகப் பறந்து விட்டன. இராம, இலட்சுமணர்களுடன் அனுமன், சுக்ரீவன், அங்கதன் ஆகியோர் மட்டும் உடனிருந்தனர். அரக்கர் சேனையைக் கண்டு அஞ்சவேண்டாம் என்று கூறி அவர்களை அழைத்துவர இராமன் அங்கதனை அனுப்பினான்.

ஒரு வழியாக அங்கதன் அவர்களை அழைத்துவந்ததும் அவர்களைக் காக்க லட்சுமணனையும் அவனுக்குத் துணையாக அனுமனையும் அனுப்பிவிட்டு, தான் மட்டும் போர்க்களத்திற்குச் சென்று மூலபல சேனையை எதிர்த்து நின்றான். துணை ஏதும் வேண்டாத தோள் வலியன் அல்லவா அவன்.

இராமனின் வில் எழுப்பிய ஒலியைக் கண்டு அச்சமுற்ற அரக்கர்கள், அவன் தனியே வந்து நின்ற கோலத்தைக் கண்டு ஆச்சரியப்பட்டனர்.

புரங்கள் எய்த புங்கவற்கும் உண்டு தேர்; பொருந்தினார்,
பரந்த தேவர்; மாயன் நம்மை வேர் அறுத்த பண்டைநாள்,
விரைந்து புள்ளின்மீது விண்ணுளோர்களொடு மேவினான்;
கரந்திலன், தனித்து ஒருத்தன் நேரும், வந்து, காலினான்

அதாவது முப்புரங்களை எரித்த சிவனுக்கு தேர் இருந்தது, தேவர்களுக்கும் அவர்களுக்குரிய வாகனங்கள் இருந்தன, விஷ்ணுவுக்கு கருடன் வாகனமாக இருந்தான். ஆனால் இவன் மட்டும் தனியே வந்து எதிர்க்கிறானே என்று வியந்தனராம் அவர்கள்.

srirama
srirama

“பன்றிகள்தான் கூட்டமாக வரும் சிங்கம் எப்பொதும் தனியாகத்தான் வரும்’ என்றெல்லாம் வசனம் பேசாமல் தன்னைச் சூழ்ந்த அரக்கர் படைமீது இராமன் தனது பாணங்களைத் தொடுத்தான்.

ஆளி மேலும், ஆளின் மேலும், ஆனை மேலும்,ஆடல் மா
மீளி மேலும், வீரர் மேலும், வீரர் தேரின் மேலும், வெவ்
வாளி மேலும், வில்லின் மேலும், மண்ணின்மேல் வளர்ந்த மாத்
தூளி மேலும் ஏற ஏற, வீரன் வாளி தூவினான்.

அரக்கர் கூட்டத்தில் புகுந்து அங்குமிங்கும் திரிந்து அதிவேகமாக தமது பாணங்களை இராமன் விட்டதால் அரக்கர் படை பெருமளவில் அழிந்தது. இருந்தாலும் பல்லாயிரம் கோடி வீரர்களைக் கொண்ட சேனை அணி அணியாக வந்து ராமனை எதிர்த்தது.

அரக்கர் சேனை அயராமல் வந்து வந்து தாக்கினாலும், இராமன் தொடர்ந்து கணைகளைத் தொடுத்துக்கொண்டே இருந்தான். பல்வேறு இடங்களில் தோன்றி தனது அம்புகளினால் அரக்கர்களைக் கொன்று குவித்தான். ஒருவனாக இருந்த இராமன் இப்படிப் பார்க்கும் இடமெல்லாம் தோன்றுவதைக் கண்டு குழப்பமடைந்த அரக்கர்களும் தங்களையே ஒருவருக்கொருவர் வெட்டிக்கொன்று அழிந்தனர். இப்படியாக மூலபல சேனை முற்றிலுமாக அழிந்தது.

ஆனை ஆயிரம், தேர் பதினாயிரம், அடல் பரி ஒரு கோடி,
சேனை காவலர் ஆயிரம் பேர்படின், கவந்தம் ஒன்று எழுந்து ஆடும்;
கானம் ஆயிரம் கவந்தம் நின்று ஆடிடின், கவின்மணி கணில் என்னும்;
ஏனை அம்மணி ஏழரை நாழிகை ஆடியது இனிது அன்றே

(யுத்த காண்டம், பாடல் எண் 9513)

அதாவது ஆயிரம் யானைகளும் பதினாயிரம் தேர்களும், கொலை வல்லனவாகிய ஒரு கோடி குதிரைகளும் ஆயிரம் சேனைத் தலைவர்களும் இறந்து விழுந்தால், கவந்தம் ஒன்று எழுந்து ஆடும். கவந்தம் என்றால் சுடுகாட்டில் ஆடும் பேய். ஆனால் சுடலையிலே ஆயிரம் கவந்தங்கள் ஆடினால் இராமன் வில்லில் கட்டிய அழகிய மணி ஒரு தடவை கணின் என ஒலிக்கும். போர் நடந்த அந்த நாளில் அந்த இராமனுடைய வில்லில் கட்டப்பட்டிருந்த வில் மணி ஏழரை நாழிகை நேரம் ஆடியது. ஆடியபோதெல்லாம் மணி ஒலித்தது. இதன்படி கணக்குப்பார்த்தால் ஏறத்தாழ ஒரு இலட்சம் கோடி பேர் ஒருநாள் போரில் இறந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe