spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeகட்டுரைகள்பாரதி-100: வைரல் வரிகளும் வைர வரிகளும்!

பாரதி-100: வைரல் வரிகளும் வைர வரிகளும்!

- Advertisement -
subramania bharati 100 1
subramania bharati 100 1

~ கட்டுரை: கமலா முரளி ~

எழுத்தாகட்டும், இசையாகட்டும் திறன்கலையாகட்டும்… எல்லாத் துறைகளிலும், இன்று படிப்பவர்களை விட, ரசிகர்களை விட படைப்பாளிகள் அதிகமாக உள்ளனர்.

தொழில்நுட்பச் சாதனங்களும், வலைத்தள வசதிகளும் ஒவ்வொருவரின் “படைப்பாளிக் கனவை” நனவாக்க உதவுகிறது.

மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் புனையப்பட்ட பாடல்கள் பல இணைய தளத்தில் வெளியாகி, குறுகிய காலத்தில் அதிக அளவில் காணப்பட்டு, பகிரப்பட்டு”வைரலா”கிறது.

திரைப்பாடலோ அல்லது தனிப்பாடலோ கரடு முரடான, எசகு பிசகான ”டமிள்” சொற்களுடன், நல்ல ஓசையுடன்… (”இசையுடன்” என்று கருதப் படுகிற) “வைரலாகும்” பாடல்கள், அடுத்து, இன்னொரு பாடல் பிரபலமாகத் தொடங்கியவுடன், ஓசை அடங்குவதும் இப்போது வழக்கமாகி வருகிறது.

ஆனால், காலத்தால் அழியாத, தலைமுறைகளைக் கடந்து, தொடர்ந்து அனைவரும் கொண்டாடும் வைர வரிகளும் உண்டு ! அவ்வை எழுதிய ஆத்திசூடியும், அய்யனின் திருக்குறளும், கம்பனின் கவி ரசமும், பாரதியின் பாடல்களும் என்றென்றும் “வைரலாகவே” திகழும் ”வைர” வரிகள் அல்லவா !

மனித குலத்துக்கு மாண்பினைச் சேர்க்கும், புனித மொழிகளைத் தந்தனர் நம் மூத்தோர் !

காலத்தால் அழியாத, எக்காலத்துக்கும் பொருந்தும் பொக்கிஷப் புதையல்கள், அறிவுக் களஞ்சியங்கள் அவர்தம் நூல்கள் !

பாரதியாரின் நினைவு நாள் நூற்றாண்டில் அவர் எழுதிய வைர வரிகளை நினைவு கூர்தலும் அதை அடியொற்றி நடத்தலுமே நம் கடமை ஆகும்.

இன்றைய பெருந்தொற்றுக் காலத்தில், எல்லாச் செயல்பாடுகளுமே சற்றுத் தொய்வாக இருக்கும் சூழலிலும், பாரதியின் பாடல்கள் நமக்கு உத்வேகம் தரும் என்பதில் ஐயம் உண்டோ ?

bharathi-neelakanda-brahmachari
bharathi-neelakanda-brahmachari

அவரது, புதிய ஆத்திசூடியில் சில வரிகள் :

“உடலினை உறுதி செய் !
ஔடதங் குறை !
குன்றென நிமிர்ந்து நில் !
சிதையா நெஞ்சு கொள் !
தேசத்தைக் காத்தல் செய்!
பணத்தினைப் பெருக்கு !
மீளுமாறுணர்ந்து கொள் !”

கொரோனா தொற்றுக்காலத்தில் உடலில் பலம் இழந்தோருக்கும், மனதில் உறுதி குறைந்தோருக்கும்,படிக்கும் போதே எழுச்சி கொள்ளச் செய்யும் பாரதியாரின் புதிய ஆத்திசூடி வரிகள் மட்டுமல்ல, அவரது பாடல்கள் பலவும் நமக்கு புத்துணர்வு தரக்கூடியதே !

”விடமுண்டுஞ் சாகாம லிருக்கக் கற்றால்,
வேறெதுதான் யாதாயின் எமக்கிங் கென்னே?
திடங்கொண்டு வாழ்ந்திடுவோம்,தேம்பல் வேண்டா;
தேம்புவதில் பயனில்லை,தேம்பி தேம்பி
இடருற்று மடிந்தவர்கள் கோடி கோடி
எதற்குமினி அஞ்சாதீர் புவியி லுள்ளீர்!”
என்று “தேம்பாமை” எனும் பாடலில் சொல்லுவார்.

 பாரதியாரின்  “பாப்பாப் பாட்டு” எத்துணை நூற்றாண்டுகள் கழிந்தாலும், நிலைத்து நிற்கும் இனிய வரிகளாகும்.

பள்ளிக்குப் போகமாட்டோமா என ஏங்கித் தவிக்கின்றனர் பிள்ளைகள் இன்று.

“ஓடி விளையாடு பாப்பா !” என்று பாரதியார் சொல்வது, பிள்ளைகளின் காதில் தேனாக ஒலிக்கும்.

எப்போதும் கணினி, செயலி என முடங்கிக் கிடக்கும் பிள்ளைகளுக்கும், அவர்களை காலை முதல் மாலை வரை  எவ்வாறு வழி நடத்துவது எனத் தவிக்கும் பெற்றொருக்கும்,

”துன்பம் நெருங்கிவந்த போதும் – நாம்
சோர்ந்துவிட லாகாது பாப்பா!
அன்பு மிகுந்த தெய்வ முண்டு – துன்பம்
அத்தனையும் போக்கிவிடும் பாப்பா!
சோம்பல் மிகக்கெடுதி பாப்பா! – தாய்
சொன்ன சொல்லைத் தட்டாதே பாப்பா!
தேம்பி யழுங்குழந்தை நொண்டி – நீ
திடங்கொண்டு போராடு பாப்பா! ”

என்ற வரிகள் தெளிவு தரும்.

கண்களை கணினியில் இருந்தும், செயலியில் இருந்தும் விலக்கி, இயற்கையை, நம் அருகில் இருக்கும் உயிரிகளை ரசிக்கச் சொல்லுகிறாரோ பாரதியார் இந்த வரிகளில் :

கொத்தித் திரியுமந்தக் கோழி – அதைக்
கூட்டி விளையாடு பாப்பா!

எத்தித் திருடுமந்தக் காக்காய் – அதற்கு
இரக்கப் படவேணும் பாப்பா!

பாலைப் பொழிந்து தரும், பாப்பா! – அந்தப்
பசுமிக நல்லதடி பாப்பா!

வாலைக் குழைத்துவரும் நாய்தான் – அது
மனிதர்க்குத் தோழனடி பாப்பா!

வண்டி இழுக்கும் நல்ல குதிரை, – நெல்லு
வயலில் உழுதுவரும் மாடு,

ண்டிப் பிழைக்கும் நம்மை ஆடு, – இவை
ஆதரிக்க வேணுமடி பாப்பா! “

வலைதளத்து “அனிமேஷன்” குறும்படங்களைப் பிள்ளைகளுக்குக் காட்டிக் கொண்டிராமல், அருகிலே இருக்கும் கோழி, காகம்,பசு, நாய்,குதிரை, மாடு ,ஆடு போன்ற உயிரிகளைப் பிள்ளைகளுக்குக் காட்டி, அவை பற்றிய தகவல்களையும் கதைகளையும் பிள்ளைகளுக்குச் சொல்லலாம் பெற்றோர்கள் !

”வண்ணப் பறவைகளைக் கண்டு – நீ
மனதில் மகிழ்ச்சிகொள்ளு பாப்பா!”

பாப்பா மட்டுமல்ல, அனைவருமே மகிழ்ச்சி கொள்ளும் ஒரு பொழுதுபோக்கு ,”பறவை காணுதல்” ( bird watching).

”ஓடி விளையாடு” எனப் பாப்பாவை உற்சாகப்படுத்தி, இயற்கையை ரசிக்கச் சொன்னதோடு மட்டுமல்லாமல், இந்த தேசத்தை, தாய்மண்ணை  வணங்கச் சொல்கிறார் பாரதியார்.

”சேதமில் லாதஹிந்துஸ் தானம் – இதைத்
தெய்வமென்று கும்பிடடி பாப்பா!”

சமூக நல்லிணக்க ஆளுமையையும், சமுக நீதியின் வித்தையும், இளம்மனதில் விதைக்கிறார் பாரதியார்.  “ஒரு குழைந்தையை வையாதே பாப்பா!” என ஆளுமைப் பண்பையும், ”சாதிகள் இல்லையடி பாப்பா! – குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்!” என சமூக நீதியையும் ஊட்டி விடுகிறார்.

கடந்த நூற்றாண்டுகளை விட ’பெண் விடுதலை’, பெண்களின் சுதந்திரம், பெண்கள் தனித்து இயங்குவதற்கான கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டாலும், இன்றும், சில மனித மிருகங்களின் வெறிச்செயலில் வீழ்ந்து போகும் இளம் பெண்கள் உள்ளனர். கள்ளங்கபடமறியாச் சிறுமிகளைச் சீரழிக்கும் கயவர்களும் உள்ளனர்.

சின்ன பாப்பாவிடம் அன்றே உறுதிபட தன் வைர வரிகளில் சொல்லிவிட்டார் பாரதியார்:

பாதகஞ் செய்பவரைக் கண்டால் – நாம்
பயங்கொள்ள லாகாது பாப்பா!
மோதி மிதித்துவிடு பாப்பா! – அவர்
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா!

 இப்பூவுலகில், அமைதி நிலவ வேண்டும் எனில், அன்பும் அறமும் தழைக்க வேண்டும்.சின்னஞ்சிறு வயதிலேயே பிஞ்சு உள்ளங்களிடம் அன்பு , நேயம் பற்றியும், தெய்வ சாட்சி பற்றியும் எடுத்துச் சொல்ல, பாரதியாரின் தெளிவான எளிய சொற்களை விட வேறு இனிதாதனது ஏதுமில்லை!

”உயிர்க ளிடத்தில் அன்பு வேணும் – தெய்வம்
உண்மையென்று தானறிதல் வேணும்.”

வைரம் தனது மினுமினுக்கும் ஓளிக்கு மட்டும் பெயர் பெற்றதல்ல ! உறுதிக்கும் பெயர் பெற்றது. துணிவுடன், உறுதியுடன் வாழ்வை எதிர் கொள்ள வேண்டும் என பாப்பாவுக்குச் சொல்கிறார் பாரதியார் !

”வயிர முடைய நெஞ்சு வேணும் – இது
வாழும் முறைமையடி பாப்பா!”

“வைரலாக்குவோமே நமது பாரதியின் வைர வரிகளை !

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe