spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeகட்டுரைகள்ஐ.நா. சபை தினம்... ஏன் தெரியுமா?!

ஐ.நா. சபை தினம்… ஏன் தெரியுமா?!

- Advertisement -
united nations day
united nations day

– கட்டுரை: கமலா முரளி

சர்வ தேச தினங்கள் பலவற்றைப் பற்றிக் கேள்விப்படுகிறோம். ஐக்கிய நாடுகள் சபை, ஒரு குறிப்பிட்ட தினத்தை சிறப்பு தினமாக அனுசரிக்கும்படி உறுப்பு நாடுகளைக் கேட்டுக் கொண்டுள்ளது எனப் படிக்கிறோம்.

ஐ.நா சபை தினம் பற்றித் தெரியுமா ?

அக்டோபர் 24 ஆம் நாள் ஐ.நா சபை தினம் ஆகும். 1945 ஆம் ஆண்டு இதே நாளில் தான், ஐக்கிய நாடுகள் சபை அதிகாரபூர்வமாக உருவாக்கப்பட்டது. அதனை நினைவு கூரும் வகையில், ஒவ்வொரு ஆண்டும், அக்டோபர் 24 ஆம் நாள், ஐ.நா. தினம் அனுசரிக்கப்படுகிறது.ஐக்கிய நாடுகள் சபையின் நோக்கம் மற்றும் சாதனைகளை எடுத்துச் சொல்லும் தினமாக இந்த தினம் அமைகிறது.

ஐ.நா சபை முறையாக உருவாகுவதற்கு முன்னரும் சில பன்னாட்டு குழுக்கள் செயல்பட்டன.முதல் உலகப் போர் சமயத்தில் காயமுற்ற வீரர்களுக்கு உதவ இக்குழுக்கள் உதவின.

முதலாம் உலகப்போர் முடிவுறும் காலகட்டங்களில், நாடுகளுக்கிடையேயான பிரச்சனைகளைக் கலந்தாலோசித்துத் தீர்த்துக் கொள்ள ஒரு பன்னாட்டு அமைப்பு தேவையென்பதை பல நாடுகளும் உணர்ந்தன. 1918 ஆம் ஆண்டு, அன்றைய அமெரிக்க ஜனாதிபதி உட்ரோ வில்சன்,பன்னாட்டு அமைப்புக்கான பதினான்கு அம்ச வரைவினை வெளியிட்டார். 1920 ஆம் ஆண்டில், உலக நாடுகளின் சங்கம் ( League of Nations ) உருவானது. ப்ரிட்டன், ஃப்ரான்ஸ், இத்தாலி மற்றும் ஜப்பான் முக்கிய உறுப்பினர்களாக இருந்தன.42 உறுப்பு நாடுகளைக் கொண்ட அச்சங்கம், உலக சமாதானத்தைப் பேணுவதை நோக்கமாகக் கொண்டு,சிலகாலம் சிறப்பாகச் செயல்பட்டாலும், மெல்ல மெல்லத் திறன் இழந்தது. இரண்டாம் உலகப்போரின் போது, இந்தச் சங்கம் முழுமையாகவே தன் திறனை இழந்து, செயலற்று இருந்தது.

இரண்டாம் உலகப்போர் ஒரு மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய,மனிதகுலம் தன்னைத்தானே அழித்துக் கொண்ட, கொடுரமான நிகழ்வு என்பதை யாரும் மறுக்க முடியாது, மறக்க முடியாது. இரண்டாம் உலகப் போரால் ஏற்பட்ட அழிவுகள், நிவாரணங்கள் மற்றும் புனரமைப்பு போன்றவற்றைக் கலந்தாலோசித்து, உலக அளவில் செயல்படுத்த ஒரு வீரியமிக்க பன்னாட்டு அமைப்பு தேவை என்பதை உணர்ந்த பல நாடுகளின் தலைவர்கள் வலியுறுத்தத் தொடங்கினர்.

நேச நாடுகள் ஒருங்கிணையத் துவங்கின.அமெரிக்க அதிபர்,ரூஸ்வெல்ட், “ஐக்கிய நாடுகளின் கழகம்” என்ற பெயரை முதன்முதலில் உபயோகித்தார்.1941 டிசம்பரில், “Declaration of United Nations” ஐக்கிய நாடுகள் கழக அறிவிப்பு வெளியாகி, 1942 ஆண்டு, அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. முக்கிய நாடுகள் பட்டியலில் ஃப்ரான்ஸ் இணைக்கப்படவில்லை. அச்சு நாடுகள் கைப்பற்றிய இடங்களை மீட்டல்,சமாதானத்தை நிலை நிறுத்துதல் போன்றவை முன்னிறுத்தப்பட்டன.

இரண்டாம் உலகப் போர் காலத்தில், பல ஒப்பந்தங்கள், தீர்மானங்கள், நாடுகளுக்கிடையேனான ஒத்துழைப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப் பட்டன.ஆனாலும், மனித குல அழிவில் தான் உலகப் போர் முடிந்தது.அச்சு நாடுகளின் வலு குறைந்து, நேச நாடுகள் தங்கள் பலத்தை நிலை நிறுத்தின.

உலக நாடுகளின் கூட்டமைப்புக்கான முன்னெடுப்புகள் தொடர்ந்த வண்ணம் இருந்தன. 1944 ஆம் ஆண்டு, டம்பர்டன் ஓக்ஸ் மாநாட்டில், உலக நாடுகளின் கூட்டமைப்புக்கான அம்சங்கள் இறுதி செய்யப்பட்டன. 1945 ஆம் ஆண்டு,ஏப்ரல் மாதம் , சான்பிரான்ஸ்கோ நகரில் நடைபெற்ற மாநாட்டில், ஐம்பது நாடுகள் கலந்து கொண்டன. ஐக்கிய நாடுகள் சபை குறித்த திட்டமிடல் அங்கிகரிக்கப்பட்டது. இரு மாதங்களுக்குப் பின், ஐக்கிய நாடுகள் ஆவணம் ( Charter of UN ) ஐம்பது நாடுகளால் கையொப்பமிடப்பட்டது.

unitednations
unitednations

நிரந்தர உறுப்பினர்களான அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா,பிரான்ஸ் மற்றும் சீனாவின் ஒப்புதலுடன், 1945 ஆம் ஆண்டு, அக்டோபர் 24ம் நாள், ஐ.நா சபை அதிகாரபூர்வமாக நிறுவப்பட்டது.தற்போது, 193 உறுப்பு நாடுகளைக் கொண்டுள்ளது ஐ.நா சபை.

1948 ஆம் ஆண்டு முதல் ஐ.நா தினம் அனுசரிக்கப்படுகிறது.

1971 ஆம் ஆண்டு, ஐ.நா பொது சபை, அக்டோபர் 24ம் நாளை உலக ஐ.நா தினமாக என அறிவித்து, பொது விடுமுறை மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்ய உறுப்பு நாடுகளைக் கேட்டுக் கொண்டது.ஐ.நா சபையின் நோக்கம் மற்றும் செயல்பாடுகள் குறித்த கருத்துரங்குகள் உலகெங்கும் நடத்தப்படுகின்றன.

ஐ.நா சபையின் ஐந்து முக்கிய அங்கங்கள் :

ஐ.நா பொது சபை
ஐ.நா பாதுகாப்பு மன்றம்
ஐ.நா பொருளாதார மற்றும் சமூக சபை
ஐ.நா செயலகம்
சர்வதேச நீதிமன்றம்

சர்வ தேச நீதிமன்றம் மட்டும் ‘ஹேக்’ நகரில் இருந்து செயல் படுகிறது. மற்ற நான்கும் நியூயார்க் நகரில் இருந்து செயல்படுகிறது.

சர்வதேச சுகாதார நிறுவனம், சர்வதேச கல்வி, சமூக, பண்பாட்டு அமைப்பு,சர்வதேச குழந்தைகள் நல அமைப்பு போன்ற பல அமைப்புகள் ஐ.நா சபையின் கீழ் இயக்குகின்றன.

உலகநாடுகளுக்கிடையில் நல்லுறவை ஏற்படுத்துதல்,பொருளாதார சமூக பண்பாடு மற்றும் மனிதாபிமான பிரச்சனைகளை தீர்த்து வைப்பதில் ஒத்துழைத்தல் மேலும்,சுதந்திரம் மற்றும் உரிமைகளை மதித்து அவைகளுக்கு ஆதரவு தருதல் ஆகியவை ஐ.நா சபையின் நோக்கங்களாகும்.

ஒவ்வொரு வருடமும், ஐ.நா தலைமையகத்தில் பிரம்மாண்டமான விழா நடத்தப்படும்., கொரொனா காலத்தைக் கருத்தில் கொண்டு, இவ்வருடம் மெய்நிகர் நிகழ்வுகளை நடத்த உள்ளது.

இந்தியாவும் ஐ.நாவும்

ஐ.நா வின் தொடக்ககாலம் முதலே, இந்தியா அதில் உறுப்பினராக இருந்து வருகிறது. ஐ.நா அமைதிப்படையில் இந்திய வீரர்கள் பங்கு பெற்று பல நாடுகளில் பணிகளை மேற்கொண்டனர். ஐ.நா பாதுகாப்பு மன்றத்தில் நிரந்தர உறுப்பினராக முயற்சி எடுத்து வருகிறது இந்தியா.

நம் நாட்டின் விஜயல‌ஷ்மி பண்டிட், (1953) ஐ.நா பொது சபையின் முதல் பெண் தலைவர் ஆவார்.

இந்தியாவில், குறிப்பாகத் தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்திய ஒரு நிகழ்வு எம்.எஸ் சுப்புலட்சுமி அவர்களின் “ஐ.நா சபை இசைக் கச்சேரி”. ஐ.நா பொதுச்சபை அரங்கத்தில் ஒரு இசை நிகழ்ச்சி நடத்திட எம்.எஸ்.சுப்புலஷ்மி அம்மாவுக்கு முன்பே அழைப்பு விடுத்திருந்தாலும், அவர் நிகழ்ச்சி நடைபெற்றது, 1966 ம் ஆண்டு அக்டோபர் 24 ம் நாள், ஐ.நா தின சிறப்பு நிகழ்ச்சியாகத்தான் !

பரமாச்சார்யாள் ஜகத்குரு சந்த்ரசேகரேந்த்ர சரஸ்வதி ஸ்வாமிகள், உலக நட்புணர்வை மையமாக வைத்து எழுதிய சம்ஸ்கிருதப் பாடலான மைத்ரீம் பஜத என்ற பாடலை, எம்.எஸ் அவர்கள், ”ஐ.நா சபை கச்சேரியில்’ தான் முதன்முதல் பாடினார்.

2016 ஆம் ஆண்டு, ஐ.நா சபை , எம்.எஸ்.சுப்புலஷ்மி அம்மாவைச் சிறப்பிக்கும் வகையில் சிறப்பு தபால்தலை வெளியிட்டது. 2016 ஆம் ஆண்டு, எம்.எஸ் அவர்களின் நூற்றாண்டு, அவரது ஐ.நா. சபைக் கச்சேரியின் பொன்விழா ஆண்டு மற்றும் இந்தியாவின் எழுபதாவது சுதந்திர தின ஆண்டுமாகும்.

மறைந்த முன்னாள் பாரதப்பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களது ஐ.நா. சபை உரையும் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. ஆங்கிலத்தில் நல்ல புலமை பெற்றவராயினும்,இந்தியில் உரையாற்றி, சரித்திரம் படைத்தார் வாஜ்பாய்.

தற்போதும், நமது பிரதமர் நரேந்திர மோடியின் எழுச்சி மிகு, உலக உன்னதத்துக்கான உட்பொருளுடன் கூடிய உரைகளை உலகத் தலைவர்கள் பாராட்டி, ஏற்கின்றனர்.

ஐ.நா சபையின் அமைப்புகளான சர்வதேச குழந்தைகள் நல அமைப்பு, சர்வதேச கல்வி மற்று கலாச்சார அமைப்பு போன்றவற்றில் இந்தியாவின் பிரபலங்கள் பலர் நல்லெண்ணத் தூதர்களாக தொண்டு செய்கின்றனர்.

ஐ.நா சபை தினத்தில் உலக ஒற்றுமை ஓங்க வேண்டுமென உறுதி எடுத்து, அதைச் செயல்படுத்துவதே உறுப்பு நாடுகளின் கடமை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe