spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeகட்டுரைகள்'முடியாததை முடித்து வைத்தார் மோடி': கு.அண்ணாமலை!

‘முடியாததை முடித்து வைத்தார் மோடி’: கு.அண்ணாமலை!

- Advertisement -

பக்தி காசி, முக்தி காசி
புனித கங்கைப் பிரவாகம், காசி விசுவநாதர் ஆலயம் விரிவாக்கம்… முடியாததை முடித்து வைத்தார் மோடி’

பண்புக்குரிய தாய்த் தமிழ்நாட்டின் பந்தங்களே…

அன்புக்குரிய தாமரைக் குடும்பத்தின் சொந்தங்களே…..

அனைவருக்கும் வணக்கம்.

இந்திய நாட்டின் மகத்துவம் மிக்க புண்ணிய நகரங்களில் ஒன்று காசி. காசி என்பது வெறும் பெயர்ச்சொல் அல்ல. அது இறைத்தன்மையின் உயிர்ச்சொல். இங்கு பாயும் கங்கை நதியானது மனிதர்களின் பாவங்களைப் போக்கி அவர்களின் ஆன்மாவைப் புனிதப்படுத்துகிறது. சுமார் 23,000 கோயில்களைத் தன்னகத்தே கொண்டிருக்கும் புண்ணிய பூமி காசி. புனிதம் நிறைந்த காசியில்தான் சைவம், வைணவம், பௌத்தம், இசுலாம் போன்ற பல சமயங்களின் சங்கமங்கள் நிகழ்ந்துள்ளன. பல மதங்களின் வழிபாட்டுத் தலங்களும், மடங்களும், அமைந்துள்ளன.

இந்துக்களாகப் பிறந்த அனைவரும், வாழ்வில் ஒரு முறையேனும் காசி விஸ்வநாதரை சந்தித்தால்தான் வீடுபேறு கிடைக்கும் என்ற நீண்டகால நம்பிக்கையால் காசிக்கு வருகை புரிபவர்கள், அதிலும் வயது முதிர்ந்தவர்கள் ஏராளம்.

அன்னை உமாதேவியின் சக்தி பீடங்களில் காசியும் ஒன்று. இங்கே எழுந்தருளியுள்ள சிவபெருமான் மகிழ்ச்சிப் பெருக்குடன் அருள்புரிவதால், ‘ஆனந்த பவனம்’ என்றும் காசி அழைக்கப்படுகிறது. காசி விசுவநாதரின் பாத கமலத்தில் வந்து தாலாட்டும் கங்கை நதி நீரில் திருமுழுக்குப் போடுவதால், சிவலோகப் பதவி சித்தமாகும் என்று வேத தர்மங்கள் கூறுகின்றன. ஆகவே முக்தி தரும் காசிக்கு பக்தி மிகுதியால் பலர் பயணப்படுகிறார்கள்.

தமிழகத்தில் அமைந்துள்ள பெரும்பாலான சிவாலயத் திருவாதீனங்களின் மடங்களும் காசியிலே அமைந்துள்ளன. திருக் கைலாயப்பரம்பரை காசிவாசி என்று போற்றப்படும், குமரகுருபரர் சுவாமிகள் தோற்றுவித்த திருப்பனந்தாள் மடம் பாரம்பர்யம் மிக்கது.

நாட்டில் அமைந்துள்ள சிவத்திருத்தலங்களில் மிக முக்கியமானதாகக் கருதப்படும் காசி விஸ்வநாதரை அவ்வளவு எளிதில் கண்டறிய முடியாது. இரு சக்கர வாகனம் கூட செல்ல முடியாத அளவிற்கு, அணுக முடியாமல் ஆக்கிரமிப்புக்களால் குறுகிப் போன சாலைகள். இதனால் பக்தர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகினர்.

இதையடுத்து, கங்கை நதிக்கரையிலிருந்து காசி விஸ்வநாதர் கோயிலுக்கு நேரடியாகச் செல்லும்வகையில் கடந்த 2019, மார்ச் 8ம் தேதி ரூ.339 கோடியில் காசி விஸ்வநாதர் வளாகத் திட்டத்துக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டிய பணிகள் நிறைவடைந்து, பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் இன்று ஸ்ரீ காசி விஸ்வநாத் தாம் திறந்து வைத்தார். வாரணாசி நகரம் முழுவதுமே உற்சாகத்தாலும், மகிழ்ச்சியாலும் நிரம்பியுள்ளது.

காசி விஸ்வநாதர் கோவிலையும் புனித கங்கை நதியையும் எளிதாகச் சென்றடையும் வகையில் பாரதப் பிரதமரின் ஆலோசனைப்படி அமைக்கப்பட்டுள்ள வழித்தடம் திறக்கப்பட்டது.

இதற்கு முன்னர் இருந்த காசி விஸ்வநாதர் கோவில் வளாகத்திள் அளவு 3000 சதுர அடிக்கும் குறைவாக இருந்தது. தற்போது பிரம்மாண்டமாகப் புனரமைக்கப்பட்டுள்ள ஸ்ரீ காசி விஸ்வநாத் தாம் என்னும் கோவில் பரப்பளவு 5 லட்சம் சதுர அடி ஆகும். காசி விஸ்வநாதர் கோவிலைப் புனரமைக்க எந்தவிதமான சட்டச் சிக்கலும் இல்லாமல் 300 சிறுகடைகள் கையகப்படுத்தப்பட்டன. 1,400 கடைக்காரர்களிடம் சுமுகமாகப் பேசி, இழப்பீடுகளை வழங்கி இடங்களைக் கைப்பற்றி திருக்கோவில் வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டப் பணிகளின் போது 40 புராதன திருக்கோவில்கள் கண்டுபிடித்துப் புனரமைக்கப்பட்டன.

ஏறத்தாழ 5 லட்சம் சதுர அடி பரப்பளவில் காசி விஸ்வநாதர் கோவில் வளாகம் ரூ. 339 கோடி செலவில் மீண்டும் புனரமைக்கப்பட்டுள்ளது. காசி விசுவநாதரைத் தரிசிக்க வரும் பக்தர்களுக்காக இருபத்தி மூன்று புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. இந்தத் திட்டத்தில் யாத்ரி சுவிதா கேந்திரா, சுற்றுலா வசதி மையம், வேத கேந்திரா, முமுக்சு பவன், போக்ஸாலா, அருங்காட்சியகம், புகைப்பட அருங்காட்சியகம், உணவுவிடுதி, உள்ளிட்ட பல்வேறு கட்டிடங்கள் அடங்கும்.

உ.பி. முதல்வர் உட்பட அசாம், அருணாச்சலப்பிரதேசம், கோவா, குஜராத், ஹரியானா, இமாச்சலப்பிரதேசம், கர்நாடகா, மத்தியப்பிரதேசம், மணிப்பூர், திரிபுரா, உத்தராகாண்ட் பீஹார், நாகாலாந்து துணை முதல்வர்களும் பங்கேற்பதற்காக வந்துள்ளனர். ஆகையால் பலத்த பாதுகாப்புடன் வாரணாசி நகரம் முழுவதுமே விழாக்கோலம் பூண்டிருந்தது..

இந் நிகழ்ச்சியில் பேசிய பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் வாரணாசி வெறும் புனிதத்தலம் மட்டுமல்ல, நம் பாரதப் பண்பாட்டின் அடையாளம். அதை அழித்தொழிக்க காலம் காலமாக பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதை எல்லாம் வென்று கடந்து வந்திருக்கிறது, நம் வாரணாசி. எத்தனை அடக்கு முறை ஆட்சிகள், எத்தனை மாமன்னர்கள், எத்தனை சுல்தான்கள்… ஆக்கிரமிப்பாளர்கள் இந்த நகரத்தைத் தாக்கினர், அழிக்க முயன்றனர். ஔரங்கசீப்பின் அட்டூழியங்களுக்கு, அவரது பயங்கரத்திற்குச் சாட்சியாக வரலாறு இருக்கிறது. அவர் இந்திய நாகரீகத்தைக் கொடிய வாளால் மாற்ற முயன்றார். கலாச்சாரத்தை வெறித்தனத்தால் நசுக்க முயன்றார்.

ஆனால் இந்திய தேசத்தின் மண், உலகின் மற்ற பகுதிகளிலிருந்து மாறுபட்டது. இங்கே ஒரு (முகலாயப் பேரரசர்) ஔரங்கசீப் வந்தால், ஒரு (மராட்டிய வீரர்) சிவாஜியும் எழுகிறார். ஒரு சலார் மசூத் முன்னோக்கிச் சென்றால், ராஜா சுஹல்தேவ் போன்ற வீரர்கள் நமது ஒற்றுமையின் சக்தியை அவருக்கு உணர்த்துகிறார்கள்,” என்று மோடி கூறினார்.

“தற்போது புனரமைக்கப்பட்டுள்ள காசி விஸ்வநாத் தாமின் புதிய கோவில் வளாகம் ஒரு பிரம்மாண்டமான கட்டிடம் மட்டுமல்ல, இந்தியாவின் “சனாதன கலாச்சாரம்”, நமது ஆன்மீக அடையாளம், நம் ஆன்ம சக்தி, இந்தியாவின் பழமை மற்றும் பாரம்பரியத்தின் சின்னம்.

நம் நாட்டின் தேசியகவி பாரதி அவர்கள், “காசி, நகர்ப் புலவர் பேசும் உரைதான், காஞ்சியில் கேட்பதற்கோர் கருவி செய்வோம்’’ என்று பாடியிருக்கிறார் என்று நம் பாரதியை நினைவு கூர்ந்து பேசிய பிரதமர். காசி என்பது ஒரு இடம் மட்டுமல்ல சிவ பெருமானின் உடல் என்று அவரே கூறியிருக்கிறார். இங்கிருக்கும் ஒவ்வொரு கல்லும், சிவாம்சம் பொருந்திய சங்கர வடிவம்.

ஆனால் இந்த மண்ணில் இருந்து சொல்கிறேன் மக்கள் வேறு மகேசன் வேறு அல்ல. ஒவ்வொரு இந்தியனின் இதயத்திலும் நான் இறைவனைக் காண்கிறேன். கோவிலுக்கு வந்தால் ஏதாவது வேண்டுகோளை இறைவனிடத்தில் வைப்பது நம் பாரம்பர்ய வழக்கம்.
அது போல என் கண்களுக்கு இறைவடிவமாகத் திகழும் என் இந்திய நாட்டு மக்களிடம் நான் மூன்று வேண்டு கோள்களை இந்த புனிதத் தினத்தில் வைக்கிறேன்.

  1. சுத்தம் / சுகாதாரம் பேணுங்கள்
  2. ஆராய்ச்சிகள்/ கண்டுபிடிப்பு களைத் தொடருங்கள்.
  3. ஆத்மநிர்பர். பாரத்-சுய சார்பில் உள்ளூர் வணிகத்தை உறுதி செய்யுங்கள்.

சுத்தம் சுகாதரமில்லாத நாடு வளர்ச்சியடையமுடியாது. நம் நாட்டைத் தூய்மையானதாக அமையுங்கள்.

அராய்ச்சிகள், கண்டுபிடிப்புகள் நாட்டின் முன்னேற்றத்தையே மாற்றி அமைக்கும் வல்லமை கொண்டவை. யூனிகார்ன் என்னும் ஸ்டார்ட்அப் திட்டத்தில் கடந்த ஒன்றரை வருடத்தில் நாம் பெரும் வளர்ச்சிகளைப் பெற்றுள்ளோம். இது இன்னம் அதிகம் தொடர வேண்டும். புதிய கண்டுபிடிப்புகள் பெருக வேண்டும்.

சுயசார்பு தன்னிறைவுத் திட்டத்தில் அந்தந்தப் பகுதிகளில் உள்ள உள்ளூர் வணிகத்திற்கு முன்னுரிமை கொடுங்கள். உங்கள் உள்ளூர் வியாபாரம் பெருக ஆதரவு கொடுங்கள்.

இந்த மூன்று வேண்டுகோளையும் ஜனங்களே ஜனார்த்தனன், மக்களே மகேசன் என்று எண்ணி உங்கள் முன் வேண்டுகோளாக வைக்கிறேன் நிறைவேற்றித் தாருங்கள்”. என்று பாரதப் பிரதமர் பேசினார்.

முடியாதது என்று உலகம் நினைத்ததை முடித்துக் காட்டியிருக்கிறார் நம் பிரதமர். நடக்காதது என்று நாட்டில் பலர் சொல்லியதை நடத்திக் காட்டியிருக்கிறர் நம் பிரதமர். எடுத்த காரியத்தை, எதிர்ப்புகள் இன்றி, எளிமையாக, முடித்துக் காட்டியிருக்கிறார்.

செம்மையான காசியை, மெய்மையான காசியை உணர்ச்சிப் பெருக்குடன் உருவாக்கியிருக்கிறார்.

மகத்தான மனிதரை, மக்கள் போற்றும் புனிதரை, நாளெல்லாம், பொழுதெல்லாம் நாட்டைப் பற்றி, மக்களைப் பற்றி மட்டும் சிந்திக்கும் மகத்தான மனிதரை நாம் நம் பிரதமராகப் பெற்றது நம் பெரும்பேறு அதிர்ஷ்டம் என்றுதான் சொல்ல நினைக்கிறேன்.

நன்றி வணக்கம்

அன்புச் சகோதரன்

உங்க ‘‘அண்ணா’’

தமிழக பாஜக தலைவர் கு.அண்ணாமலை ஒரே நாடு மின்னிதழில் எழுதியதில் இருந்து…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe