spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeகட்டுரைகள்சம்ஸ்க்ருத நியாயமும் விளக்கமும் (10): ‘வ்ருத்தகுமாரி வர ந்யாய’

சம்ஸ்க்ருத நியாயமும் விளக்கமும் (10): ‘வ்ருத்தகுமாரி வர ந்யாய’

- Advertisement -
samskrita nyaya

தெலுங்கில்- பி.எஸ் சர்மா
தமிழில்- ராஜி ரகுநாதன்

‘வ்ருத்தகுமாரி வர ந்யாய:’

விருத்த குமாரி – திருமணமாகாத வயதான பெண். வர: – வரம்.

புத்திசாலித்தனம், சரியான சமயத்தில் சரியான முடிவெடுப்பது போன்ற குணங்கள் இருப்பவர் சாதிக்க இயலாதது எதுவும் இல்லை. அப்படிப்பட்ட சமர்த்தான, ஒரு ஏழை வயதான கன்னிப் பெண் தனக்கு வரம் அருள எதிரில் தோன்றிய தேவேந்திரனிடம் ஒரே ஒரு வரம் கேட்டாள். “என் பேரனுக்கு தங்கப் பத்திரத்தில் அன்னம் கலந்து கொடுத்து மகிழவேண்டும்”. அவ்வளவுதான்.

இது ஒரே ஒரு வரமா? இந்த ஒரு வரத்தில் எத்தனை சூட்சுமங்கள் உளளன பாருங்கள். அவளுக்கு முதுமை விலக வேண்டும். திருமணம் ஆகவேண்டும். குழந்தை பிறக்க வேண்டும். அவன் வளர்ந்து அவனுக்கு மகன் பிறக்க வேண்டும். அதுவரை இவள் உயிரோடிருந்து அவனுக்கு தங்கக் கிண்ணத்தில் உணவூட்ட வேண்டும். அதாவது செல்வம் பெருக வேண்டும். இதனையே ‘வ்ருத்தகுமாரி வர நியாய:’ என்பர்.

வரம் கேட்பவரின் அறிவுக் கூர்மைக்கு மிகச் சிறந்த உதாரணமாக சத்தியவான்- சாவித்திரி கதையை எடுத்துக்காட்டலாம். மகாபாரதத்தின் உபகதையான இந்த சரித்திரத்தை சற்று நினைவு கூர்வோம். தர்மவானான சத்தியவான் அரசாட்சியை இழந்தவன், அற்பாயுசு கொண்டவன் என்று தெரிந்தும் சாவித்திரி தன் முடிவை மாற்றிக் கொள்ளாமல் அவனையே திருமணம் புரிந்தாள். கணவனுக்கு மரணம் நெருங்கிவிட்டதென்று அறிந்து கொண்டாள்.

யமதர்மராஜன் வந்து சத்தியவானின் உயிரைப் பறித்துக் கொண்டு தென்திசை நோக்கி செல்கிறான். சாவித்திரி யமனை பின்தொடர்ந்தாள். யமனோடு பேச்சுக் கொடுத்தாள். தர்மத்திற்கு கட்டுப்பட்டவளான அவள் பேச்சைக் கேட்டு யமன் ஆனந்தமடைந்தான். “தாகம் எடுத்தவனுக்கு குடிதண்ணீர் போல உன் பேச்சு இதயத்திற்கு இதமாக உள்ளது” என்று பாராட்டுகிறான்.

“கணவனின் உயிரைத் தவிர எந்த வரம் வேண்டுமானாலும் கேள்” என்கிறான். அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டாள் சாவித்திரி தேவி. பார்வையற்றவரான தன் மாமனாருக்கு கண் பார்வை, அரசாட்சி, நூறு புதல்வர்கள் ஆகியவற்றை வரமாகக் கேட்டுப் பெற்றாள். ஆனாலும் விடாமல் யமனைப் பின்தொடர்ந்து கொண்டே இருந்தாள் சாவித்திரி. அவனோடு உரையாடிக் கொண்டுமிருந்தாள்.

savithri yama conversation

யமன், “உன் கணவனின் உயிரைத் தவிர இன்னொரு வரம் கேள்” என்றான். இந்த முறை தன் தந்தைக்கு நான்கு புதல்வர்கள் பிறக்கும்படி வரம் கேட்டுப் பெற்றாள். மீண்டும் வீடு திரும்பாமல் யமனைத் தொடர்ந்து சென்றாள் சாவித்திரி. பல்வேறு தர்ம விஷயங்களைப் பற்றி பேசிக்கொண்டே இருந்தாள் யமனுடன்.

தர்ம வாக்கியங்களைக் கேட்டு மகிழ்ந்த யமன், “கணவனின் உயிரைத் தவிர இன்னொரு வரம் கேள்” என்றான். அதுவே தருணம் என்று எண்ணிய சாவித்திரி, மிகவும் யோசித்து இவ்விதம் வரம் கேட்டாள், “சத்தியவானின் வாரிசுகளாக நூறு புதல்வர்கள் எனக்குப் பிறக்க வேண்டும்” என்றாள். “ததாஸ்து” என்றான் யமதர்மராஜன்.

ஆனாலும் யமனைத் தொடர்ந்து கொண்டே இருந்தாள் சாவித்திரி. தர்ம விஷயங்களைப் பற்றி சர்ச்சை செய்து கொண்டே இருந்தாள். அவளுடைய ஞானத்தைப் பாராட்டிய யமன் மற்றுமொரு வரம் கேட்கச் சொன்னான்.

ஒவ்வொரு முறையும் கூறியது போலவே, “உன் கணவனின் உயிரத் தவிர” என்று கூறவில்லை. அதற்கு சாவித்திரி, “நீர் எனக்கு நூறு புதல்வர்கள் பிறப்பார்கள் என்று வரமருளினீர் அல்லவா? என் கணவரை உயிர்பிழைக்கச் செய்து நீர் கொடுத்த வாக்கை நிலை நிறுத்திக்கொள்ள வேண்டும்” என்று பிரார்த்தனை செய்தாள்.

ஞானம், பக்தி, சிரத்தை, தர்க்கம், இவற்றால் யமதர்மனை வென்று கணவனை உயிரோடு திரும்பப் பெற்றாள் சாவித்திரி. தன் சாமர்த்தியத்தால், விடாமுயற்சியால், நேரத்துக்குத் தகுந்த சொற்களால் தன் பெரிய விருப்பத்தை நிறைவேற்றிக் கொண்டாள்.

“இது எனக்குப் போதும்” என்று கூறிய ஒரு சாமர்த்தியசாலியின் புகழ்பெற்ற கதைகூட உள்ளது. ஒரு அரசனோடு ஒரு புத்திசாலி மனிதன் சதுரங்கம் விளையாடி வென்றான். “உனக்கு என்ன வேண்டுமோ கேள்” என்றான் அரசன்.

“சதுரங்கம் முதல் கட்டத்தில் ஒரு அரிசி தானியம், அடுத்த கட்டத்தில் அதற்கு இருமடங்கு, அதன் பின் உள்ள கட்டத்தில் அதைவிட இரண்டு மடங்கு என்பதாக 64 கட்டங்களிலும் நிரப்பி அளியுங்கள் அரசே! அது போதும் எனக்கு” என்றான்.

ஏதோ இரண்டு, மூன்று மூட்டை அரிசி அதற்காக செலவாகும் என்று நினைத்தான் அந்த அப்பாவி அரசன். மந்திரி கூறியபின் தெரிந்தது… அவன் ராஜ்ஜியத்தில் விளைந்த பயிர் மொத்தத்தையும் நிரப்பினாலும் போதாது என்று.

பார்ப்பதற்கு சாதாரணமாகத் தோன்றி அசாதாரணமான் பலனை அடையும்  நியாயம் ‘விருத்தகுமாரி வர நியாயம்’.

‘அனவேமா மகாராஜா’ என்ற அரசனின் ஆஸ்தானத்தில் நடந்த ஒரு சம்பவம் இது போன்ற சாமர்த்தியத்திற்கு மற்றுமொரு உதாரணம். அந்த அரசன் கவிதைகள் மீது அதிக விருப்பம் கொண்டவன். ஒரு புலவர் அரச சபைக்கு வந்து அரசனைப் புகழ்ந்து ஒரு செய்யுள் படித்தார்.

அனவேம மஹீபால ஸ்வஸ்த்யஸ்து தவ பாஹவே
ஆஹவே ரிபு தோர்தண்ட சந்த்ரமண்டலி ராஹவே ||

பொருள்: ஓ அனவேம மகாராஜா! உன் தோள்களுக்கு மங்களம் உண்டாகட்டும். போரில் பகைவரின் தோள்கள் என்ற சந்திர மண்டலத்திற்கு நீ ராகு போன்றவன்.

இந்த செய்யுளின் எடுத்துக் காட்டிலும் ‘வே’ என்ற எழுத்து இருப்பது குறிப்பிடத்தக்கது. கவிதையை செவிமடுத்த அரசன் மகிழ்ந்து பொக்கிஷ அதிகாரியை அழைத்து ஒரு ஆயிரம் வராகன்கள் புலவருக்கு கொடுக்கச் சொல்லி உத்தரவிட்டான். அதற்கு புலவர் சிரித்து, “ஒரு வழி போக்குவரத்து செலவுக்கு கொடுக்கிறீர்கள் போலிருக்கிறது” என்றார்.

அரசன் இன்னுமொரு வராகன் கொடுக்கச் சொன்னான். அதற்கு புலவர், “ராஜா! போக வர செலவுக்கு கிடைத்துவிட்டது” என்றார். அதாவது கவிதைக்கு சன்மானம் கொடுக்கவில்லையே என்பது அவர் குரலில் தொக்கி நின்றது.

புலவரின் சாமர்த்தியத்திற்கு அரசன் மகிழ்ந்து மூன்று ஆயிரமாக சன்மானத்தை உயர்த்தினார். அதற்கு புலவர், “நல்லது அரசே! நான் நான்காயிரம் அளித்தால் நீங்கள் மூவாயிரம் அளிக்கிறீர்களே!” என்றார்.

அரசன் வியப்பிலாழ்ந்தான். புலவர் மீண்டும் அந்த சுலோகத்தைப் படித்துக் காட்டினார். இந்த முறை எடுத்துக் காட்டில் உள்ள ‘வே’ தெளிவாகப் புரியும்    விதமாக அழுத்திப் படித்தார். அரசன் மகிழ்ச்சியில் திளைத்தான். “இவருக்கு ஐந்து ஆயிரம் வராகன்கள் கொடுங்கள்” என்று உத்தரவிட்டான்.

அதற்கு புலவர், “அரசே! நாங்கள் ‘ஆறாயிரம் நியோகி’ வம்சத்தைச் சேர்ந்தவர்கள்” என்றார். (தெலுங்கர்களில் இது ஒரு அந்தணர் உட்பிரிவு).  அதனை அரசன் புரிந்து கொண்டு ஏழாயிரம் வராகன்கள் அளிக்கச் சொன்னார். “ஏழு என்ற எண் என்னைப் பொறுத்தவரை சுபமானது அல்ல மகாராஜா!” என்றார் புலவர். சிறந்த ரசிகனான அரசன் மனம் விட்டுச் சிரித்து மகிழ்ந்து பத்தாயிரம் வராகன்கள் அளித்து புலவரை அனுப்பி வைத்தான்.

இவ்விதமாக கோரிக்கை கோருவதற்கு எத்தனை சாமர்த்தியம் இருக்க வேண்டுமோ, அந்த வரத்தை அளிப்பவருக்கும் அதே அளவு மென்மையான உள்ளமும், நகைச்சுவை உணர்வும் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் ஆபத்துதான். சாத்வீகர்களான தேவதைகளும் அரசர்களும் வரம் கேட்போரின் உள்ளத்தை அறிந்ததால் கதை சுபமாக முடிந்தது.

இது போன்று ‘விருத்த பிராமண வர நியாயம்’ என்ற பெயரில் கூட ஒரு கதை உண்டு. பார்வையற்ற ஒரு ஏழை முதிய அந்தணர் தன் முன் பிரத்தியக்ஷமான கடவுள், “வரம் கேள்!” என்ற போது, இவ்வாறு கேட்டார், “என் பேரன் அரச சிம்மாசனம் ஏறி ஆள்வதை நான் பார்க்க வேண்டும்”. இது கூட விருத்த குமாரி வரம் போன்றதே.

—-0o0—-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe