மாமனிதர் இராஜாஜி
– முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன் –
வேதாரண்யம் உப்பு சத்தியாக்கிரகம்
இராஜாஜி தனது 28ஆவது வயதில், காங்கிரசில் இணைந்தார். 1906ஆம் ஆண்டு கல்கத்தா காங்கிரஸ் கூட்டத்தில் கலந்துகொண்டார். 1911ஆம் ஆண்டு சேலம் முனிசிபாலிட்டியில் உறுப்பினரானார். 1917 முதல் 1919 வரை சேலம் முனிசிபாலிட்டியின் தலைவராக இருந்தார். 1921ஆம் ஆண்டு இவர் காங்கிரஸ் செயற்குழு உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். சில காலம் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்தார். 1919இல் கொண்டுவரப்பட்ட இந்திய அரசுச் சட்டத்தின்படி தேர்தல்களில் பங்கேற்று அரசு அமைப்பதை எதிர்த்தார். 1924-25இல் இவர் வைக்கம் போராட்டத்தில் கலந்துகொண்டார். 1930இல் காந்தியடிகள் உப்பு சத்தியாக்கிரகத்தை தொடங்கியபோது இராஜாஜி அந்த சத்தியாக்கிரகத்தை நடத்த வேதாரண்யம் நோக்கி நடைப் பயணம் மேற்கொண்டார்.
ஆங்கிலேயர்களின் உப்பு வரிச் சட்டத்தை எதிர்த்து காந்தியடிகள் தண்டி யாத்திரையைத் தொடங்கினார். அதே சமயம் அந்தச் சட்டத்தை எதிர்த்து இராஜாஜி திருச்சியிலிருந்து 1930, ஏப்ரல் 13ஆம் நாள் தொடங்கினார். இராஜாஜியுடன் பயணித்த போராட்டக்குழுவினர் திருக்காட்டுப்பள்ளி, திருவையாறு, தஞ்சாவூர், அய்யம்பேட்டை, கும்பகோணம், ஆலங்குடி, மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, தகட்டூர் வழியாக பாத யாத்திரை மேற்கொண்டு வேதாரண்யம் வந்தடைந்தனர். அங்கேயுள்ள அகஸ்தியம்பள்ளி உப்பளத்தில், உப்பு அள்ளியபோது இராஜாஜி கைது செய்யப்பட்டார்.
பல்வேறு மாநிலங்களில் உப்பு சத்தியாகிரகம் நடைபெற்றது. கடற்கரையில்லாத பல மாநிலங்களில் சட்ட மறுப்பு இயக்கம் நடந்தது. ஆனால் காந்தியடிகளின் தண்டி யாத்திரை மட்டுமே நம்முடைய வரலாற்றுப்புத்தகங்களில் இடம் பெறுகிறது. புகழ் பெற்ற காந்தி ஆங்கிலத் திரைப்படத்தில்கூட இராஜாஜியின் வேதரண்யம் யாத்திரை இடம்பெறவில்லை. அத்திரைப்படத்தில் இராஜாஜி பற்றிய செய்திகளே இல்லை.
அரசாங்கத்தில் இராஜாஜியின் பங்கு
1937ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் காங்கிரஸ் பங்கேற்றது. இராஜாஜி பல்கலைக்கழகத் தொகுதியில் வென்று தமிழக முதல்வரானார். 1939ஆம் ஆண்டு தாழ்த்தப்பட்ட மக்கள் திருக்கோயில்களுக்குச் செல்லலாம் என அரசாணை பிறப்பித்தார். மதுவிலக்கை அமல்படுத்தி தமிழகத்தில் குடியை நிறுத்தினார்.
அந்த சமயத்தில் காந்தியடிகள் நயி தாலிம் என்ற அடிப்படை கல்விக் கொள்கையைக் கொண்டுவந்தார். இராஜாஜி அதனை தமிழ்நாட்டில் அமல் படுத்த முனைந்தார். ஆனால் இராஜ்ஜியின் எதிர்ப்பாளர்கள் இதனை “குலக்கல்வி முறை” எனப் பெயரிட்டு இதனை எதிர்த்தனர். இதேபோல இராஜாஜி அவர்கள் அரசுப்பள்ளிகளில் இந்தி மொழியை ஒரு கட்டாயப் பாடமாகக் கொண்டுவந்தார். அதனை எதிர்த்தும் எதிர்க் கட்சிகள் போராடின. இதற்கிடையில் இரண்டாம் உலகப் போரில் இந்தியாவை ஈடுபடுத்தியதற்காக இராஜாஜி தலைமையிலான அமைச்சரைவை ராஜினாமா செய்தது.
1940க்குப் பிறகு இராஜாஜிக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு அவர் கட்சியிலிருந்து விலகினார். 1946 முதல் 1947 வரை மத்திய அரசில், நேருவின் அமைச்சரவையில் இராஜாஜி தொழில், பொருள் வழங்கல், கல்வி மற்றும் நிதி அமைச்சராக இருந்தார். இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னர் 1947 முதல் 1948 வரை அவர் மேற்கு வங்காள ஆளுநராக இருந்தார்.
அந்த சமயத்தில் சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாக் மவுண்ட் பேட்டன் இருந்தார். அவர் அண்மையில் மறைந்த எலிசபத் மகாரானியாரின் திருமணத்திற்காக லண்டன் செல்ல வேண்டியிருந்தது. அதனால் 1947ஆம் ஆண்டு நவம்பர் 10 முதல் 24 வரை தற்காலிகமாகவும் பின்னர் ஜூன் 1948 முதல் 26 ஜனவரி 1950 வரை இராஜாஜி முழுநேர கவர்னர் ஜெனரலாகவும் இருந்தார். இவர் அரசியல் நிர்ணய சபையிலும் அங்கம் வகித்தார். 1950 முதல் 1951 இறுதி வரை மீண்டும் நேருவின் அமைச்சரவையில் அமைச்சராக இருந்தார்.
மீண்டும் தமிழக முதல்வர்
1952ஆம் ஆண்டு நடந்த தேர்தல்களில் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி அறுதிப் பெரும்பான்மை பெறவில்லை. அதனால் காங்கைரஸ் கட்சி இராஜாஜியை முதல்வராக பொறுப்பேற்று நிலைமையைச் சமாளிக்கச் சொல்லியது. அவரும் மீண்டும் முதலமைச்சரானார். அன்றைய நாளில் முதல் முதல் ஒரு கூட்டணி ஆட்சியை இராஜாஜி ஏற்படுத்தினார். 1953ஆம் ஆண்டு அவர் ஒரு புதிய கல்விக் கொள்கையை கொணர்ந்தார்.
அதன்படி பிள்ளைகள் காலை மட்டும் பள்ளிக்கு வரவேண்டும். மதியம் அவர்கள் தங்களது தகப்பனாருக்கு தொழிலில் உதவியாக இருக்கலாம் எனச் சொன்னார். இதுவும் குலக் கல்வி முறை என எதிர்க் கட்சிகளால் குறை சொல்லப்பட்டது. 13 ஏப்ரல் 1954இல் இராஜாஜி பதவி விலகினார். இதன் பின்னர் காங்கிரஸ் கட்சியோடு மீண்டும் கருத்துவேறுபாடு ஏற்பட்டு அவர் கட்சியை விட்டு விலகினார். சில காலம் அரசியலில் ஈடுபடாமல் இருந்தார். பின்னர் தனிக்கட்சி தொடங்கினார்; அது பின்னர் சுதந்திரா கட்சி எனப் பெயர் பெற்றது.
1960களில் அவர் பல விஷயங்களில் தனது கொள்கைகளை மாற்றிக்கொண்டார். 1972ஆம் ஆண்டு அவரது உடல்நிலையும் மோசமடைந்த்தது. இந்நிலையில் அவர் 25 டிசம்பர் 1972 மாலை உயிர்நீத்தார்.