ஆடி பதினெட்டு… வாழி காவேரி…
– நங்கநல்லூர் J K SIVAN
இன்று காலை வாக்கிங் போகலாம் என்று ஐந்தரை மணிக்கு கதவைத் திறந்தபோது இரவு பெய்த மழையின் ஈரம் தெருவில் இருந்தது. காற்றில் ஒரு இன்ப குளிர்ச்சி. ஒன்றிரண்டு தூற்றல் பன்னீர் தெளித்தது. மகிழ்ச்சி தேகத்தோடு சேர்த்து மனத்தையும் குளிர்வித்தது.
ஆஷாட மாசம் எனப்படும் ஆடி தெய்வீக மாசம். லௌகீகம் ரொம்ப கலக்காதது. கடை வியாபாரிகள் மட்டும் கவனத்தை ஈர்க்க ”ஆடி விசேஷ தள்ளுபடி” கொடுப்பதாக தங்கள் பக்கம் இழுப்பார்கள்.
இந்த ஆடியில் மிகச் சிறப்பு வாய்ந்த ஒரு நாள் , எல்லோருக்கும் மகிழ்ச்சி தரும் நாள் ஆடிப்பெருக்கு எனும் 18ம் பெருக்கு. அது இன்று. பொன்னியின் செல்வனில் முதல் அத்யாயத்தில் வல்லவரையன் வந்தியத்தேவன் குதிரை மேல் வீராணம் ஏரிக்கரையில் சென்று கொண்டிருக்கும் போது சோழநாட்டு மக்கள் ஏரிக்கரையில் ஆடிப்பெருக்கு கொண்டாடுவதை ரசித்துக்கொண்டே சென்றது ஞாபகம் வருகிறது.
இந்த ஒரு பண்டிகைதான் நக்ஷத்ரம் திதி எல்லாம் பார்க்காமல் வெறும் தமிழ் தேதியை மட்டும் நினைவு வைத்துக்கொண்டு கொண்டாடுவது. பஞ்சாங்கம் இதற்கு தேவையில்லை. எல்லா வீடுகளிலும் பலவித சித்ரான்னம், வாசலில் வண்ண கோலங்கள் காணப்படும் நாள்.
தண்ணீர் பங்கீட்டில் நமக்கும் கர்நாடகவாவுக்கும் ஒரு தகராறு இருந்து கொண்டே தான் இருக்கும். நல்லவேளை வருணபகவான் கருணையால் உபரி மழை பெயது, மேற்கு தொடர்ச்சி மலையில் காவிரியில் நீர் கரை புரண்டு யார் திறந்து விடுவதற்கும் காத்திராமல் தானே நமக்கு வந்தடைந்துள்ளது.
ஆங்கில மாதம் ஜூன்-ஜூலை முதல் தென்னகத்தின் மேற்கே மலைகளில் தென்மேற்கு பருவக் காற்றால் உந்தப்பட்டு பொழியும் மழைநீர் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி பெருகி ஆறுகளாக ஓடும். இருக்கும் அத்தனை ஆற்றிலும் நீரின் வரத்து அதிகமாகும். பதினெட்டு தேதிகளில் அணைக்கட்டு நிரம்பி காவிரிக்கு நீர் திறந்து விடுவார்கள். தஞ்சை ஜில்லா டெல்டா பிரதேசங்களில் கொண்டாட்டம்.
அந்த ஏரி கடல் போல் விரிந்து பரந்து காணப்படுவது. தமிழகத்துக்கு முக்கியமாக சென்னை மாநகரத்துக்கு இப்போது நீர் தரும் வள்ளல்.
ஆடிப்பெருக்கின் போது சோழ நாட்டு நதிகளில் எல்லாம் தண்ணீர் வெள்ளமாக நிரம்பி, கொள்ளிடம் வழியாக வீராணம் ஏரிக்குள் நீர் குபுகுபு என்று புகும். அழகே தனி. விவசாயிகளுக்கு குதூகலம், ஆடிப்பட்டம் தேடி விதைப்பவர்கள் அல்லவா? ஆறுமாதத்தில் தைமாதத்தில் அறுவடை, பொங்கல் விழா நடக்கும்.
ஆடிப்பெருக்கு அன்று கிராமத்தில் குழந்தைகள் தந்த நிறத் தென்னங்குருத்துகளால் சப்பரங்கள் கட்டி இழுத்துக் கொண்டு விளையாடுவதை மக்கள் கும்பலாக ரசிப்பார்கள். பெண்களும் குழந்தைகளும் சில வயோதிகர்களும் கூடப் புதிய ஆடைகள் அணிந்து விதவிதமான அலங் எல்லோரும் புத்தாடை அணிந்து மகிழ்வார்கள்.
தாழம்பூ, செவந்திப்பூ, மல்லிகை, முல்லை, இருவாட்சி, செண்பகம் முதலிய மலர்கள் கொத்துக் கொத்தாய் அவர்கள் சிரங்களை அலங்கரிக்கும். வட்டமாக முட்டு முட்டாக குடும்பத்தினர், நண்பர்களோடு, கரையோரங்களில் பாக்கு மட்டைகளில், வாழை இலைகளில், வித வித சித்திரான்னம் உண்பார்கள். காவேரியில் வெள்ளம் பெருக்கெடுத்தால் சோழ நாட்டு வயல்கள் செழிக்கும், தமிழக மக்கள் வயிறு நிரம்பும். நடந்தாய் நீ, இப்போது ஓடம்மா, வாழி காவேரி என்று பாட தோன்றும்.
ஆடிப்பெருக்கு தான் ஆரம்பம். இனிமே மழை கொட்டோ கொட்டோ என்று கொட்டி தீர்க்கபோகிறது என்று எல்லோரும் மகிழும் நாள் ஆடி பதினெட்டு.
தட்சணாயன புண்ணிய காலத்தின் தொடக்க மாதமான ஆடி மாதத்தில் பூமா தேவி அம்மனாக அவதரித்ததாக புராண நூல்கள் கூறுகின்றன. இதனால் இம்மாதம் ‘அம்மன் மாதமாக’ போற்றப்படுகிறது.
பெண்கள் தாலி மாற்றி புதுத்தாலி கயிறு அணிவது வழக்கம். திருமணம் ஆகாத பெண்கள் திருமணம் ஆக வேண்டும் என்று அம்மனை வேண்டி மஞ்சள் கயிற்றை கழுத்தில் கட்டிக் கொள்வார்கள்.
ஆடி மாதம் விவசாயிகளுக்கு உகந்தமாதம். ஆடி பதினெட்டாம் தேதி விவசாயிகள் தங்கள் பணிகளை தொடங்குவர். ஆடிப்பட்டம் தேடி விதை என்ற பழமொழியும் இதனால் தான் உருவானது.
காவிரியில் புதுவெள்ளம் கரை புரண்டோடும். காவிரியை பெண்ணாகவும், சமுத்திர ராஜனை ஆணாகவும் கருதி, காவிரி பெண் தனது கணவரான சமுத்திரராஜனை அடைவதை காவிரி டெல்டா மக்கள் ஆடிப்பெருக்கு விழாவாக கொண்டாடி வருகிறார்கள். அப்போது காவிரிக்கு மங்கல பொருட்களான மஞ்சள், பனை, ஓலையால் செய்யப்பட்ட காதோலை, கருகு மணி மாலை, வளையல், அரிசி, பழங்கள் ஆகியவற்றை வழங்கி பூஜை செய்வர்.
ஆடிப்பெருக்கன்று ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து உற்சவர் நம்பெருமாள் புறப்பட்டு அம்மா மண்டபம் படித்துறைக்கு எழுந்தருள்வார். அங்கு சுவாமிக்கு திருமஞ்சனம் நடக்கும். மாலை வரை பெருமாள் அங்கு வீற்றிருப்பார். பெருமாளின் சீதனமாக தாலிப்பொட்டு, பட்டு மற்றும் மங்கலப்பொருட்கள் ஆற்றில் விடப்படும். விவசாயிகள் விவசாயம் செழிக்க வேண்டி காவிரிக்கு மலர் தூவி வணங்குவார்கள்.
காவிரி தேவி என அழைக்கப்படும் லோபா முத்திரை அகஸ்தியரின் மனைவி ஆவார். 18 தத்துவங்களை கடந்து யோகினியாக திகழும் நாள் இந்த ஆடிப்பெருக்காகும்.
அனைவரும் குடும்பத்தோடு காவிரி அம்மனுக்கு சித்ரான்னம் படைத்து காதோலை கருகுமணியை ஆற்றில் விட்டு ஜீவநாடியாக விளங்கும் காவிரி புது நீரை வரவேற்கும் விழாவாக ஆடிப்பெருக்கு கொண்டாடப் படுகிறது.
வடக்கே எப்படி கங்கை முக்கியமோ அந்த அளவு தென்னிந்தியாவில் காவேரி நமக்கு ஜீவாதாரமான நதி. தஞ்சை ஜில்லா டெல்டா தான் நமது நெற்களஞ்சியம். காவிரியின் பங்கு நமக்கு பசி தீர்ப்பதில் மிகப் பெரியது. வெகு ஆவலாக விவசாயிகள் பயிர்த் தொழிலாளர்கள்,
ஆடிப்பெருக்கினைப் பதினெட்டாம் பெருக்கு என்றும், ஆடிப்பதினெட்டு என்றும், கொங்கு தமிழ் பேச்சு வழக்கில் ஆடி நோம்பி என்றும் அழைக்கப்படுகிறது.
உழவர்கள் இந்நாளில் நம்பிக்கையுடன் பட்டம் பார்த்து விதை விதைப்பர். இப்பொழுது நெல், கரும்பு முதலியவற்றை விதைத்தால் தான் அவர்கள் தை மாதத்தில் அறுவடை செய்ய முடியும். அதற்கு வற்றா நதிகளை தங்கள் தெய்வமாக போற்றி மகிழ்ந்து, பூசைகள் செய்து பின் உழவு வேலையை தொடங்குவார்கள்.
இன்று சோழநாட்டு மக்கள் ஆற்றங்கரைகளில் கூடி ஆற்றுப் பெருக்கைக் கண்டு களிப்பர். கோயில்களில் சென்று வழிப்படவும் செய்வர். அன்றைய நாள் பெண்கள் ஆற்றில் குளித்து ஆற்றங்கரையில் ஒவ்வொருவரும் பூஜை செய்ய ஒரு இடத்தைப் பிடித்துக் கொள்கின்றனர். அந்த இடத்தை சுத்தம் செய்து, பசு சாணத்தால் மெழுகி அதன் மேல் வாழை இலையை விரித்து அகல்விளக்கு ஏற்றி வைக்கின்றனர்.
வழிபாட்டில் வெற்றிலை, பாக்கு, பழம் படைத்து, பத்தி, கற்பூரம் காட்டி, தடங்கல் இல்லாத விளைச்சலுக்கு நீருக்கு நன்றி செலுத்தி வாழை மட்டையில் விளக்குகள் ஏற்றி, அதை ஆற்றில் விடுவார்கள்.அது மட்டும் அல்லாமல் தங்கள் வீட்டில் பல விதமான கலப்பு சாதங்கள் (தேங்காய் சாதம், சர்க்கரைப் பொங்கல், எலுமிச்சம் பழம் சாதம், தக்காளி சாதம், தயிர் சாதம்) செய்து அதை ஏதாவது ஆற்றங்கறையில் வைத்து குடும்பத்துடனும், நண்பர்களுடனும் சேர்ந்து குதூகலமாக உணவை சாப்பிடுவார்கள்.
சென்னைப்பட்டணத்தில் குழாயில் குளித்துவிட்டு நாமும் கொண்டாடுகிறோம்.நாமக்கல் மற்றும் சேலம் மாவட்டத்தில் ஆடிப்பெருக்கு நாளில் கொல்லிமலை சென்று அங்குள்ள ஆகாயகங்கை நீர்வீழ்ச்சியில் நீராடி அரப்பளிசுவரரை தொழுவது வழக்கம்.
பழங்காலம் போல் தற்போது எல்லா ஆறுகளிலும் பெருக்கெடுத்து ஓடுவது இல்லை என்றாலும், இந்நாளில் காவிரி போன்ற சில ஆறுகளில் மட்டுமாவது அணைகளைத் திறந்து விட்டு நீர் பெருக்கெடுத்து ஓடச் செய்கின்றனர்.