கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன்
ஆசிரியர் கலைமகள்
ஆடிபெருக்கு என்பது ஆடி மாதத்தில் வரும் 18 ஆம் நாள் ஆகும். ஆதாவது,ஆடி 18 ஆம் நாளை ஆடிப்பெருக்கு என்று கூறுகிறோம். ஆடிப்பெருக்கு தமிழக நதிகள் பெருக்கெடுத்து ஓடுவதைக் குறிக்கும் பண்டிகை ஆகும்.
பெருக்கு என்றால் பெருக்குதல் என்று பொருள் கொள்ள வேண்டும். ஆடிப்பெருக்கினைப் பதினெட்டாம் பெருக்கு என்றும், ஆடிப்பதினெட்டு என்றும் கொங்கு நாட்டுக்காரர்கள் ஆடி நோம்பி என்றும் கூறுவார்கள்.
ஆடிப் பட்டம் தேடி விதை – விளை நிலங்களில் முதல் மழையை கொண்டு வரும் மாதம் ஆடி. கோடை வெப்பம் தணிந்து பருவமழை ஆரம்பிக்கும் காலம் ஆடி மாதம் என்பதால் முன்னோர்கள் ஆடிப்பட்டம் தேடி விதை என்றனர்.
விவசாயத்திற்கு ஆதாரமாக விளங்கும் ஆறு, ஏறி, குளம் போன்ற நீர்நிலைகளைப் போற்றும் விதமாக நன்றி தெரிவிக்கும் விதமாக கொண்டாடப்படும் விழா தான் ஆடிப்பெருக்கு..
சரபோஜி மன்னர்கள் ( மராட்டியர்கள்) தஞ்சை பூமியை ஆட்சி செய்த காலத்தில், ஷாஜி ராஜா எனும் மன்னர், ஆடிப்பெருக்கு வைபவத்தை ‘காவிரி கல்யாணம்’ என்று கொண்டாடி மகிழ்ந்தார் என்றும் அதையொட்டி மக்களும் அதை அப்படியே பின்பற்றி கொண்டாடி மகிழ்ந்தார்கள் என்றும் கல்வெட்டு ஆய்வாளர்கள் விவரிக்கின்றனர்.
சிலப்பதிகாரத்திலும் ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்பட்டதாக செய்திகள் உள்ளன.திருச்சி ஸ்ரீரங்கத்தில் புகழ்பெற்ற அம்மா மண்டபம் படித்துறையில் காவிரிக்கு சீர்கொடுக்கும் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெறுகிறது!
ஆடிப்பெருக்கு நாளன்று ஸ்ரீரங்கம் கோயிலில் இருந்து உற்சவர் நம்பெருமாள் புறப்பாடாகி, அம்மா மண்டபம் படித்துறையில் எழுந்தருள்வார். அங்கு சுவாமிக்கு திருமஞ்சனம் நடக்கும்,மாலை வரை பெருமாள் அங்கு வீற்றிருப்பார். பெருமாளின் சீதனமாக தாலிப்பொட்டு, பட்டு மற்றும் மங்களப் பொருட்கள் ஆற்றில் விடப்படும். காவேரியை மகளாகப் பாவித்து இந்நிகழ்வு நடத்தப்படுகிறது.
தருமபுரி, சேலம், கரூர், திருச்சி, தஞ்சாவூர் திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் காவிரி ஆற்றங்கரையில் புதுமண தம்பதிகள், பொதுமக்கள் காவிரி ஆற்றில் நீராடியும், புதுமண தம்பதிகள் புத்தாடை உடுத்தி புதிய மஞ்சள் கயிறு அணிவது வழக்கம். இதற்காக ஏராளமான புதுமண தம்பதிகள் தங்களது குடும்பத்தினருடன் கற்பூரம் ஏற்றி வழிபாடு செய்வது வழக்கம். இதனால் குடும்பம் மற்றும் விவசாயம், தொழில் செழிக்கும் என்பது ஐதீகம்.
தமிழ் வருடத்தை இரண்டு அயனங்களாகப் பிரித்து உள்ளார்கள். ஒன்று தட்சணாயணம், மற்றொன்று உத்தராயணம். தை மாத தொடக்கம் உத்திராயணப் புண்ணிய காலம். ஆடி மாதம் தொடக்கம் தட்சணாயப் புண்ணிய காலம். ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒரு நாள். தட்சணாயன காலம் என்பது தேவர்களின் மாலைப்பொழுதாகும். எனவே தான் மாலை நேரத்தில் வீட்டில் சித்ரா அன்னங்களைத் தயார் செய்து கொண்டு நதிக்கரைக்கு போய் குழந்தை குட்டிகளுடன் உண்டு மகிழ்கிறோம்.
ஆடல் பாடல் நிகழ்ச்சியும் சில இடங்களில் உண்டு! கடனா நதி தாமிரபரணி நதி வைகை ஆறு காவிரி ஆறு போன்ற நதிகளில் ஆடிப்பெருக்கு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.