கவிமாமணி இளையவன் அவர்களால் தொடங்கப்பட்ட இலக்கியச் சாரல் அமைப்பு சென்னையில் பல அருமையான நிகழ்ச்சிகளை 25 ஆண்டுகளாக நடத்தி வருகின்றது. மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக பல பள்ளிகளிலும் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படுகிறது.
இலக்கியச் சாரலின் வெள்ளி விழா ஆண்டு நிறைவு விழாவானது சமீபத்தில் மயிலை ஸ்ரீ கற்பகவல்லி வித்யாலயா பள்ளி, மயிலாப்பூரில், நடந்தது. மூன்று தலைமுறையினர் பங்குக்கொண்ட முத்தாய்ப்பான விழாவாக இந்நிகழ்ச்சி அமைந்திருந்தது.
மாணவி சசி த்ருஷிக்கா பாடிய ‘திருப்புகழ்’ இறை வணக்கத்துடன் நிகழ்ச்சி துவங்கியது. கா. குமரேசன், தலைவர் (பொறுப்பு), இலக்கியச் சாரல், வரவேற்புரை நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்து, சிறார்கள் பங்கெடுத்த நிகழ்ச்சி அனைவரையும் கவர்ந்தது. ஆ. ப்ரீனு ஒன்றிலிருந்து பத்து வரை எண்ணிக்கையை வைத்து மழலைப் பாடல் ஒன்றை பாடினார்.
தா.பிராம்பிகா குடும்ப உறவுகளின் முக்கியவத்தை உணர்த்தும் ஒரு பாடலை பாடினார். ரா. அதிதி கவிமாமணி இளையவன் எழுதிய இராமாயணத்தை அழகாக பாடினார். ரா. அத்வைத் பாரதியாரின் யாதுமாகி நின்றாய்
மற்றும் கஜனனா எனத் தொடங்கும் பாடலையும் பாடினார்.
நிகழ்ச்சியில் அடுத்ததாக கவிமாமணி இளையவன் அவர்களை பாராட்டும் விதமாக ஒரு கவியரங்கமும் நடைபெற்றது. சொல்லருவி நாவரசர் ஆர். சீனிவாசன், தலைவர், நிறை இலக்கிய வட்டம், ஹைதரபாத், தலமையில் நடந்த கவியரங்கத்தில் ஜெயந்தி தளபதி, ஜெயஸ்ரீ சாரி, சுப. சந்திரசேகரன், ஜானகி குமரேசன் மற்றும் சீதாலெட்சுமி ஆகியோர் தங்கள் கவிதைகளை வாசித்தனர்.
சிறப்பு விருந்தினர்களாக கலைமாமணி டி.கே.எஸ். கலைவாணன், கவிச்சுடர் கார்முகிலோன், கே.டி.ஹேமா, முன்னாள் தமிழ் துறை பேராசிரியர், டி.எஸ்,என் கல்லூரி,
நல்லப்பெருமாள், மூத்த உறுப்பினர், இலக்கியச் சாரல், சிறப்பித்தார்கள். கவிமாமணி இளையவன் அவர்களின் உயர்ந்த பண்புகளையும், இலக்கிய வட்டத்தில் அவர் ஆற்றிய பணிகளையும், அனைவரின் திறமைகளை ஊக்கப்படுத்தும் அவரின் நற்குணத்தையும் அனைவரும் புகழ்ந்து பாராட்டினர்.
சிறப்பு விருந்தினர்கள் கலைமாமணி டி. கே. எஸ். கலைவாணன் மற்றும் முனைவர் கவிச்சுடர் கார்மு கிலோன் அவர்களுக்கும் சால்வை அணிவித்து நினைவு பரிசும் வழங்கப்பட்டது.
விஜயலெட்சுமி நாராயணன், நாகராஜன், முன்னாள் இலக்கியச் சாரல், சுவாமிநாதன், தா. சத்திய பிரியா, கு. பரமேஸ்வரி, விநாயகம் மற்றும் உறுப்பினர்கள் பலர் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டனர்.
புகழ் பெற்ற இந்த மயிலை ஸ்ரீ கற்பக வித்யாலயா பள்ளியில் மறைந்த துக்ளக் ஆசிரியர் சோ. ராமசாமி, முன்னாள் தமிழக முதல்வர் எம். ஜி. ஆர் அவர்களின் சகோதரருடைய பிள்ளைகள், சமூக சேவகி சரோஜினி வரதப்பன் போன்ற பிரபலங்கள் இந்த பள்ளியில் படித்ததை இலக்கியச் சாரல் ஆசிரியர் ரெ. முரளி அவர்கள் தனது நன்றி உரையில் குறிப்பிட்டது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.