-ஜெயஸ்ரீ எம். சாரி, ஆதம்பாக்கம்
சிறு வயதில் நிறைய புத்தகங்களை என் பெற்றோர் எனக்கும், என் சகோதரர்களுக்கும் அறிமுகப்படுத்தியதாலும், அந்த நாட்களில் மின்னணு கெஜட்டுகள் இல்லாததாலும் இன்றும் வாசிப்பு என்ற பழக்கமே எங்களிடம் வழக்கமாய் உள்ளது.
என்திருமணத்திற்கு பிறகு மஹாராஷ்டிராவிற்கு சென்றதும் கொஞ்சம் எழுதத் தொடங்கினேன். பின்னர் ‘தி ஹித்வாத்’ என்னும் ஆங்கில நாளிதழில் ஆசிரியருக்கு கடிதம் எழுதத் தொடங்கினேன். முதல் கடிதம் வந்து எட்டு மாதங்களில் ‘தி ஹித்வாதின்’ வர்தா அலுவலகத்தில் மொழிபெயர்ப்பாளராய் சேர்ந்தேன். மராட்டி மற்றும் ஹிந்தி மொழிகளில் இருந்து வரும் செய்திகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க வேண்டுமாய் இருந்தது.
முதல் நாள் அனுப்பிய ரிப்போர்ட்டுகள் மறுநாள் பிரசுரிக்கப்பட்டதால் திருப்தி கிடைத்தது. எனக்கு மிகவும் சீனியரான எங்கள் பகுதியிலிருந்து செல்லும் செய்திகளை கவனித்து பிரசுரிக்கும் ஒரு மேடம் ,” மொழிபெயர்ப்பு என்பது ஒரு கலை. நமக்கு தெரிந்த வார்த்தைகளோடு விளையாட வேண்டும், ஆனால், அந்த வார்த்தைகளின் பொருளை மாற்றி விடக்கூடாது.
அந்தந்த மொழியின் தனித்துவம், செய்தி நடக்கும் இடத்தின் தனித்துவம், செய்தியில் சொல்லப்படுகின்ற நபரைப் பற்றிய குறிப்பு முதலியவை மொழிப்பெயர்ப்பாளர் அறிந்து வைத்துக் கொள்ள வேண்டும், ” என்றார். அவரது வார்த்தைகளில் இருந்த உண்மையானது என்னுடைய தினசரி அலுவலக வேலையில் புரிந்தது.
பின்னர் வர்தா நகரத்தின் ரிப்போர்ட்டராக நியமிக்கப்பட்டேன். அப்போது, தகவல் தெரிவிப்பவர் கூறும் கருத்துகளானது ( மராட்டியிலோ, ஹிந்தியிலோ) இருக்கும். அதனை எனக்குப் புரியும் விதத்தில் தமிழிலோ, ஆங்கிலத்திலோ குறிப்பெடுத்துக் கொள்ளும் போது, சுவாரஸ்யமாகவே இருந்தது. நம் தமிழ்நாட்டின் பத்ம பூஷன் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் அவர்களின் பத்திரிகையாளர் சந்திப்பை நான் உள்ளூர் பத்திரிகையாளர்களுக்கு மொழிபெயர்த்து சொன்னதும் நல்ல அனுபவமாய் இருந்தது.
தன் பெயரில் செய்திகள் வர வேண்டும் என்பதே ஒவ்வொரு ரிப்போர்ட்டரின் லட்சியமாய் இருக்கும். இரண்டு வருடங்களுக்கு பிறகு ஆச்சர்ய வினோபா பாவே அவர்கள் மராட்டிய மொழியில் எழுதிய ‘கீதாயி’க்காக உருவாக்கப்பட்ட வர்தாவின் ‘கீதாயி மந்திர்’ பற்றிய ரிப்போர்ட் என் பெயரில் வெளிவந்தது.
என் கணவருக்கு அவருடைய சிறிய வயதில் ஆச்சார்ய வினோபா பாவே (மராட்டியில்-பேரு=தமிழில் கொய்யாப் பழம்) கொடுத்தாராம். அதனால், அன்று என் கணவர், ” ஆச்சார்யாஜி, எனக்கு பேரு கொடுத்தார், உனக்கு பேர் கொடுத்தார்,” என்றார். பின்னர், பல ரிப்போர்ட்டுகள் என் பெயரில் வெளிவந்தன.
வர்தா மாவட்டத்தில் உள்ள எட்டு தாலுக்காவில் இருந்த 50-க்கும் மேற்பட்ட நிருபர்களின் ரிப்போர்ட்டுகளை மொழிபெயர்க்கும், எடிட் செய்யும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.
குடும்பத்தினரின் ஓத்துழைப்பு, நிருபர்களின் உதவி, அலுவலகத்தில் உள்ளவர்களின் வழிகாட்டல், வாசகர்கள் கொடுத்த ஆதரவு போன்ற விஷயங்களே எனக்கு உறுதுணையானது.
இதற்கிடையில் 2016, 2017, 2018 ஆகிய வருடங்களில் மூன்று சங்கங்கள் ‘பத்திரிக்கையாளராக’ என்னை கௌரவித்தன.
முன்னாள் ராஷ்டிரபதி பிரணப் முகர்ஜி, முன்னாள் மஹாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபடன்வீஸ், மத்திய அமைச்சர் நிதின் காட்கரி அவர்களின் ஒரு நிகழ்ச்சி வர்தாவில் நடந்த போது செய்தி சேகரிக்க நான் சென்றது, ஒரு மகிழ்ச்சியான தருணம்.
வர்தா மாவட்டத்தில் மக்கள் செய்தி தொடர்பாளராய் இருந்த அதிகாரி என்னுடைய ரிப்போர்ட்டுகளை மாநில அளவிலான பரிசுக்காக 2017-ஆம் வருடம் அனுப்பினார். ஆனால், பரிசுக் கிடைக்கவில்லை.
பின்னர், நாக்பூரில் தலைமை அலுவலகத்தில் சப்-எடிட்டராய் சேர்ந்தேன். ஏழு மாவட்ட செய்திகளை ( மராட்டி – ஹிந்தி) மொழிபெயர்த்தும், ஆங்கிலத்தில் வரும் செய்திகளை எடிட் செய்தும், பேஜ் செட்டப் (Page Setup) செய்தும், அருமையாய் என் வேலையை ரசித்தேன்.
என் டெஸ்கில் இருந்தவர்களும் மிகவும் உதவி செய்தனர். நாக்பூர் முனிசிபல் கார்ப்பரேஷனால் பராமரிக்கப்படும் நாக்பூரில் உள்ள லதா மங்கேஷ்கர் கார்டனின் அவல நிலையை படம் பிடித்தும், அதனைப் பற்றிய ஒரு ரிப்போர்ட்டு எழுதினேன். அந்த ரிப்போர்ட்டானது மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தல் நடந்த அன்று வெளியானது ஒரு மறக்க முடியாத அனுபவம்.
மொழிபெயர்க்கப்பட்ட ஒரு தகவலை வைத்தே அந்த மொழிபெயர்ப்பாளரின் திறமையை அறிந்து விடலாம், என்பார் என் சக பத்திரிகையாளர் ஒருவர்.
இப்பொழுதெல்லாம் கூகுள் மொழிபெயர்ப்பு இருப்பதால் மொழிபெயர்ப்பு என்பது சுலபமாகி விட்டதே அன்றி மொழிபெயர்ப்பானது ‘மொழிப் பெயர்ப்பாகி’ விட்டது என்பதே கசப்பான உண்மை. நபர்களின் அடைமொழியைக் கூட மொழிபெயர்ப்பு செய்து விடுகிறது, கூகுள். இசைத் தென்றல் என்பதற்கு ‘ம்யூசிக் ப்ரீஸ்’ என்றும் என்னுடைய கடைசிப் பெயரான ‘சாரி’ யை ஹிந்தியில் ‘சாடி’ என்றும் மொழிபெயர்ப்பு செய்கிறது. இப்படி பல உதாரணங்கள்.
மொழிபெயர்ப்பாளரின் மொழி வளம், எழுத்தாற்றல் போன்ற பல விஷயங்களும் மொழிபெயர்ப்புக்கு இன்றியமையாதது என்பதே நிதர்சனமான உண்மை.