— நீதிபதி ஜி. ஆர். சுவாமிநாதன்
புகழ்பெற்ற பல தலைமை நீதிபதிகளை கொண்ட நம் இந்திய நீதித்துறையில் நீதிபதிகள் சிலர் மட்டுமே தத்தம் சுயசரிதையை எழுதி இருக்கிறார்கள்.
அவர்களுள் நீதியரசர் திரு. M .C . சாக்ளா (CHAGLA), சுதந்திரமெய்திய பின் பம்பாய் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டவர். “Roses in டிசம்பர்” என்ற பெயரில் தனது சுயசரிதத்தை எழுதியவர்.
அவரது பதவிக் காலத்தில் முதல்வராய் இருந்தவர் திரு. மொராஜி தேசாய் அவர்கள். தலைமை நீதிபதி என்பவர் தனித்து இயங்குவது என்பது கடினம். நிர்வாக ரீதியிலான பலதரப்பட்ட விஷயங்களுக்கு தீர்வு காணவேண்டும். வரவு – செலவு அனுமதி, முன் மொழியப்பட்ட நியமனங்கள், அங்கீகாரங்கள் என்பனவற்றில் அவர் தனித்து செயல்படுவதென்பது கடினம்.
எனவே நிர்வாக ரீதியிலான விஷயங்களுக்கு தாமதமின்றி தீர்வு காண, கடிதங்கள் பரிமாற்றம், கோப்புகளில் குறிப்பு அனுப்புவது என்பவற்றை விடுத்து நீதித்துறையும், அரசாங்கமும் நேரிடையாக அமர்ந்து ஆலோசனை செய்தால் உடனுக்குடன் தீர்வை எட்ட முடியும் என்று ஒன்றுசேர கருதியதால் நீதிபதி திரு.சகலா வும் முதல்வர் திரு. மொராஜியும் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமைகளிலும் சந்தித்துக் கொண்டனர்.
ஞாயிறு தோறும் மதிய உணவிற்கு முதல்வர் தலைமை நீதிபதி இல்லம் செல்வார். உணவிற்குப் பின் நீதித்துறையும், அரசும் சேர்ந்து தீர்வு காணப்பட வேண்டிய விஷயங்கள் கொண்ட கோப்புக்களுடன் அமர்வார்கள். இந்த அமர்வில் பலதரப்பட்ட விஷயங்களுக்கு அரை மணி நேரத்திற்குள் தீர்வு எட்டியாகிவிடும் என்பதை நீதிபதி பதிவிட்டிருக்கிறார்.
இந்த சந்திப்பானது சாக்ளா குடும்பத்தாரை ஞாயிறு தோறும் சைவர்களாக ஆக்கியது. அசைவம் என்பது தனக்கு உணர்ச்சிபூர்வமான விஷயம் அல்ல என்றும், தனக்காக அவர்கள் உணவுப் பழக்கவழக்கங்களை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டிய நிர்பந்தம் இல்லை என்பதையும் முதல்வர் அழுத்தமாகச் சொன்ன போதிலும், ஒரு எளிமையான , சுவையான உணவை உட்கொண்ட பின் திரு. மொராஜி அவர்களை சமாளிப்பதும், கையாளுவதும் சுலபமாக இருந்ததால், சைவம் சமைப்பதில் தனக்கொரு சுயநலம் இருந்ததாகக் குறிப்பிடுகிறார் நீதிபதி.
முதல்வருக்கும் நீதிபதிக்கும் பங்காட்டத்தில் (கார்ட்ஸ்) நாட்டம் இருந்தது. ஒரு முறை சீட்டாடும் விருப்பத்தை மொராஜி சொல்ல நீதிபதியோ மறுத்துவிட்டார்.
காரணம் : பணையம் வைத்து ஆடும் பழக்கத்தில் தனக்கு உடன்பாடில்லை என முதல்வர் சொல்ல, பணையம் வைக்காமல் ஆடுவதில் தனக்கு உடன்பாடில்லை என்றார் நீதிபதி!