
சமஸ்கிருத நியாயமும் விளக்கமும் – 49
தெலுங்கில் – பி.எஸ். சர்மா
தமிழில் – ராஜி ரகுநாதன்
49. அக்ஷி பாத்ர நியாய: – அக்ஷி பாத்ர – கண் விழி
கடவுளின் படைப்பில் இருக்கும் பல விசித்திரங்களில் மனித உடலும் ஒன்று. நம் உடலில் இருக்கும் ஐந்து புலன்களில் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு செயல்பாடு. அவையனைத்திலும் கண்களுக்கு என்று ஒரு தனித்துவம் உண்டு.
‘சர்வேந்த்ரியாணாம் நயனம் பிரதானம்’ என்பது உலக வழக்கு. கண்கள் சூட்சுமமானவை, மென்மையானவை. கண்களுக்கு இருக்கும் தனித்துவம் குறித்து ஆன்றோர் கூறிய இந்த சுலோகம் சிந்திக்கத்தக்கது.
ஊர்ணாபக்ஷ்ம யதைவ ஹி கரதல சம்ஸ்தம் ந வித்யதே பும்பி |
அக்ஷிகதம் து ததேவ ஹி ஜனயத்வ ரதிம் ச பீடாம் ச ||
பொருள் – சிலந்திப் பூச்சி (ஊர்ணநாபி:) உற்பத்தி செய்த நூல், நம் கை போன்ற உடலுறுப்புகளின் மேல் விழுந்தால் நமக்கு தெரியக் கூட தெரியாது. அதே சிலந்திக் கூட்டின் ஒட்டடை நம் கண்ணில் விழுந்தால் அதிக வலியும், வெறுப்பும் ஏற்படுத்தும்.
உடலுறுப்புகளில் கண்களுக்கு இருக்கும் தனித்துவம் இது. மணலைக் கையில் எடுத்தாலும், தலையில் அல்லது உடலின் வேறு எந்த உறுப்பின் மேல் தூவிக் கொண்டாலும் எதுவும் செய்யாது. காது மூக்கு, நாக்கு இவற்றில் மணல் துகள் புகுந்தாலும் பெரிய கஷ்டம் ஏற்படாது. ஆனால் அதே மணல் துகள் கண்ணில் விழுந்தால் ஒரேயடியாக வலி ஏற்படும். சிறிய தூசு விழுந்தாலும் கண் சகித்துக் கொள்ளது. இதுவே ‘அக்ஷிபாத்ர’ நியாயத்தில் இருக்கும் சிறப்பு.
சிறிய மணல் துகள் கண் விழிக்கு கஷ்டம் ஏற்படுத்துவது போல, சின்னச் சின்ன விஷயகளுக்குக் கூட சிலர் வருத்தப்படுவார்கள். இதுவே இந்த நியாயம் அளிக்கும் செய்தி.
உடலுறுப்புகளில் கண்களைப் போல மென்மையாக இருப்பவர்கள், ஒரு சிறிய வார்த்தையைக் கூட சகித்துக் கொள்ள மாட்டார்கள். சிலர் எத்தனை திட்டினாலும் கண்டுகொள்ள மாட்டார்கள். அவர்களை கெட்டியான தோல் கொண்டவர்கள் என்கிறோம். இந்த இரு தரப்பினரும் நமக்கு எதிர்ப்படுவதுண்டு. விரைவாக பாதிக்கப்படும் மென்மையான மனம் கொண்டவர்கள் சூட்சுமான கண்களைப் போன்றவர்கள். நாம் அவர்களோடு மிகவும் கவனமாக நடந்து கொள்ள வேண்டும் என்று கூறுகிறது இந்த அக்ஷிபாத்ர நியாயம்.
மிக மென்மையான மனம் கொண்ட மனிதர்கள், எடுக்கும் தீவிரமான முடிவுகளோடு தொடர்புடைய இரண்டு உண்மை சம்பவங்களை இந்த நியாயத்திற்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம்.
சாப்பிட மாட்டேன் –
பல ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம் இது. ஒரு கிராமத்தில் ஒரு அக்ரஹாரம். அங்கு பிள்ளையாரை பிரதிஷ்டை செய்து நவராத்திரி உற்சவம் நடத்திவந்தது ஒரு இளைஞர் குழு. கடைசி நாள் நடக்கப் போகும் அன்னதானத்திற்கு சந்தா வசூல் செய்வதற்காக வீட்டுக்கு வீடு சென்றார்கள். ஒரு புகழ் பெற்ற புரோஹிதரின் வீட்டுக்குச் சென்றார்கள். அவருடைய இல்லாள், அன்னதானத்திற்காக ஒரு அரிசி மூட்டையை சமர்ப்பித்தாள். அவர்கள் மகிழ்ச்சியோடு கிளம்பிச் சென்றார்களோ இல்லையோ, அவளுடைய புதல்வன் வந்தான். நடந்ததை அறிந்து கோபாவேசமானான்.
அதற்கு முன்பே பணமாக சந்தா கொடுத்திருந்த அந்த புதல்வன், தாயை கோபத்தோடு நிந்தித்தான். கணவர் புரோஹித உத்தியோகத்தில் சம்பாதித்து வாங்கி வந்த அரிசியை, தெய்வ காரியத்திற்கு கொடுப்பதை ஆட்சேபித்து மகன் கூறிய சொற்கள் அந்த தாயின் மென்மையான மனத்தைக் காயப்படுத்தின. பேச்சக்கு பேச்சு வார்த்தை தடித்தது. அவ்வளவுதான். ‘இன்றிலிருந்து நான் ஒரு பருக்கை அன்னம் கூட உண்ணமாட்டேன்’ என்று கடுமையான சபதம் செய்தாள் அந்த இல்லாள். அந்த சம்பவத்திற்குப் பிறகு இருபதாண்டுகள் உயிர் வாழ்ந்தாள். இறுதிவரை அவள் தன் சபதத்தை மீறவில்லை. காய்கறி மட்டுமே உண்டு வாழ்ந்தாள்.
மற்றுமொரு சம்பவம் வெளிநாட்டில் நடந்தது. ஒரு பெரிய மனிதரின் மூன்று மகன்களும் வெளிநாட்டில் இருந்தனர். ஒரு முறை அவர் இந்தியாவிலிருந்து, தன் பிள்ளைகள் இருக்கும் தேசத்திற்குச் சென்றார். ஒரு நாள் புதல்வர்களின் இல்லத்திற்கு அருகில் இருக்கும் ஒரு பூங்காவுக்குச் சென்றார். அங்கு அவர் வயதுள்ள ஒரு மனிதரோடு நட்பு ஏற்பட்டது. அந்தப் புதிய மனிதர், தன் மகனின் வீடு அருகில்தான் இருக்கிறது என்று கூறி இவரை அழைத்துச் சென்றார். வந்த பெரிய மனிதருக்கு காபி தரும்படி மருமகளிடம் கூறினார். நம் நாட்டில் இது போன்ற சம்பவங்கள் சகஜமே.
ஆனால் அங்கு? மருமகள், “இதுபோல் முன் பின் தெரியாதவரை எல்லாம் இனி எப்போதும் வீட்டுக்கு அழைத்து வராதீர்கள்” என்று மாமனாரிடம் கூறினாள். அவருடைய மென்மையான மனம் அந்த நிகழ்ச்சியால் காயமடைந்தது. அவ்வளவுதான். அதற்குப் பிறகு அவர், உயிரோடு இருந்தவரை, வெளிநாட்டில் இருக்கும் தன் மகன் வீட்டுக்குச் செல்ல மாட்டேன் என்று எடுத்த பிரதிக்ஞையை நிறைவேற்றினார். முதிய வயதில் இந்தியாவிலேயே ஒரு முதியோர் இல்லத்தில் சேர்ந்தார். அங்கேயே இறுதி மூச்சை விட்டார் அந்த மென்மனம் கொண்டவர்.
ஒரே சொல். ஆனால் அதற்கு எதிர்விளைவு வேறு வேறாக இருக்கும். ஒரு மணல் துகள். மீதி உடல் உறுப்புகளில் பட்டால் இல்லாத வலி, கண்களில் விழுந்தால் வருகிறது இதுவே இந்த நியாயம் கூறும் நீதி. கவனமாகப் பேச வேண்டும் என்ற எச்சரிக்கையை இவ்விதம், கண்ணில் விழுந்த மணல் துகள் மூலம் விளக்குகின்றனர் பெரியோர்.
மனிதர்கள் இவ்விதம் ஏன் நடந்து கொள்கிறார்கள்? என்று கேட்டால், அதற்கு என்ன பதில் கூற முடியும்? கண்ணில் விழுந்தால் மட்டுமே ஏன் வலிக்கிறது? என்று கேட்டால் என்ன பதில் சொல்வோம்? அதே போல்தான்.
அதமா தனமிச்சந்தி
தனம் மானம் ச மத்யமா:
உத்தமா மானமிச்சந்தி
மனோஹி மஹதாம் தனம் ||
பொருள் – கடைநிலை மக்கள் செல்வத்தை விரும்புவர்கள். நடுநிலை மனிதர்கள், தனம், மானம் இரண்டையும் விரும்புவர்கள். உத்தமர்கள் மானத்தை விரும்புவர்கள். ஆனால் மஹா புருஷர்கள் தம் மானத்தையே தனமாக எண்ணுவார்கள்.
மேலே குறிப்பிட்ட இரண்டு சம்பவங்களும் மென்மையான மனத்தை வெளிப்படுத்தின. அவர்கள், கண்களைப் போலவே மென்மையானவர்கள். அவர்களிடம் நடந்து கொள்ள வேண்டிய முறை வேறாக இருக்க வேண்டும்.
எனக்கு (ஆசிரியருக்கு) ஒரு நண்பர் இருந்தார். வாடா, போடா என்று பேசிக் கொள்வோம். ஒரு முறை போனில் பேசியபோது அவருடைய பெயரோடு அவர்கள் என்று சேர்த்து அழைத்து, விளையாட்டாக, ‘சொல்லுங்கள், சார்’’ என்றேன். உடனே அந்த நண்பர் மிகவும் நொந்துபோனார். ‘நீங்கள் மாறிவிட்டீர்கள். என்னை வெளியாளாக்கி விட்டீர்கள். என்னை சார், அவர்கள் என்றீர்கள்’ என்று வருந்தினார். வேறு ஒருவர், வாடா என்று பேசினால் தவறாக எடுத்துக் கொண்டு வருந்தலாம். இதுவும் ‘அக்ஷிபாத்ர’ நியாயத்தில் உள்ள விசித்திரம். ஒவ்வொரு மனிதரும் ஒவ்வொரு விதம். ஒவ்வொரு உடலுறுப்புக்கும் ஒவ்வொரு மென்மை உணர்வு.
பல ஆண்டுகளுக்கு முன் பிரபல கார்டூனிஸ்ட் ஆர். கே. லக்ஷ்மண் மென்மை குணம் இல்லாத ஒரு மனிதர் பற்றி ஒரு கார்ட்டூன் போட்டார். ஒரு சேல்ஸ்மேன் கீழே விழுந்து கிடப்பார். அவரருகில் அவருடைய பை கிடக்கும். அவர் இவ்வாறு கூறுவார், ‘இதில் அவமானம் என்ன இருக்கிறது? என் பையை வெளியில் தூக்கி எறிந்து விட்டு என்னை வெளியில் போ என்று விரட்டி விட்டார். அவ்வளவுதான்’ என்றார்.
அவமதிப்பிற்கு அப்பாற்பட்ட மனிதர் அவர். இதற்கு மாறாக சிலர் இருப்பார்கள். ஒரு சிறிய வார்த்தை கூட அவர்களை பாதிக்கும். சமீப காலமாக ‘போன் மார்கெட்டிங்’ அதிகமாகி விட்டது. கிடைத்த நம்பருக்கெல்லாம் போன் செய்து, தங்கள் பொருட்களைப் பற்றிக் கூறுவது அவர்களுடைய தொழில் தர்மம். சிலர் தம் கோபத்தை அவர்கள் மேல் காட்டுவார்கள். அது தவறு என்று இந்த நியாயம் தெரிவிக்கிறது.
‘எல்லா புலன்களும் ஒரே மாதிரி இருக்காது. அதே போல் மனிதர்கள் எல்லோரும் ஒன்று போல் இருக்க மாட்டார்கள். அவர்களின் மனங்கள் வேறு வேறு. ஒவ்வொரு மரத்தின் காயும் ஒவ்வொரு ரகத்தில் இருக்கும். ஒரு கொடியின் மலர்களைப் போல இன்னொரு கொடியின் மலர்கள் இருக்காது. ஒரே தாய்க்குப் பிறந்த பிள்ளைகளின் புத்தி ஏன் ஒவ்வொரு விதமாக இருக்கிறது?’ என்று கேட்டார் ஒரு கவிஞர். அதை அறிந்து நடந்து கொள்ளவேண்டும் என்பது இந்த நியாயம் கூறும் செய்தி.
யாருடன் எவ்வாறு பேசுவது என்று அறிந்து நடந்து கொண்டால் தனி மனிதத் தொடர்புகள் விலகாது. ‘கண் உன்னுடையது. விரலும் உன்னுடையது என்பதால் குத்திக் கொண்டால் ரத்தம் வராதா’ என்றார் ஒரு கவிஞர். ‘அக்ஷி பாத்ர’ நியாயம் மானுட சம்பந்தங்களைக் காப்பாற்றிக் கொள்ளும் உபாயத்தைக் கூறுகிறது. People never change their jobs, they change their bosses. என்கிறது ஒரு பழமொழி.




