
சம்ஸ்க்ருத நியாயமும் விளக்கமும் – 51
தெலுங்கில் – பி.எஸ். சர்மா
தமிழில் – ராஜி ரகுநாதன்
அந்த கோலாங்கூல நியாய:
அந்த: = பார்வையற்றவன், கோலாங்கூலம் = காளையின் வால்.
துஷ்டர்களின் அறிவுரையைக் கேட்டு நடந்தால் துன்பத்தில் சிக்க வேண்டி வரும் என்ற நீதியைப் போதிக்கும் நியாயம் இது.
ஒரு வழிப்போக்கன் காதில் கடுக்கன், கழுத்தில் சங்கிலி, கையில் கங்கணம், விரல்களுக்கு மோதிரம் எல்லாம் அணிந்துத் தன் உறவினரின் கிராமத்திற்குச் சென்று கொண்டிருந்தான். நடுவழியில் ஒரு காட்டைத் தாண்ட வேண்டி வந்தபோது வழி தவறியதை உணர்ந்து அழத் தொடங்கினான்.
தீயவன் ஒருவன் அவனுடைய அழுகையைக் கேட்டு அங்கு வந்தான். வழிப்போக்கனின் உடலில் இருந்த பொன் நகைகளின் மேல் அவன் பார்வை சென்றது. “ஐயோ ஏன் அழுகிறாய்? என்னோடு வா. உன்னுடைய உறவினரின் வீட்டுக்கு வழி காட்டுகிறேன்” என்று கூறி அவனை நம்பச் செய்தான். சரி என்று கூறிய வழிப்போக்கன் களைப்போடு சற்றுநேரம் கண்ணயர்ந்தான். தீயவன் அவனுடைய கண்களில் விஷ இலைகளின் சாரைப் பிழிந்து அவனைக் குருடனாக்கி நகைகளைத் திருடிச் சென்றான்.
அப்பாவியான அந்த வழிப்போக்கனின் கையில் ஒரு காளை மாட்டின் வாலைக் கொடுத்து, “இதைப் பிடித்துக் கொண்டு மாடு எங்கு போகுமோ நீயும் அதே வழியில் போ. அது உன்னை உறவினரின் வீட்டுக்கு இட்டுச் செல்லும்” என்றான். வழிப்போக்கன் அவனுடைய சொற்களை நம்பி வாலைப் பிடித்துக் கொண்டு மாடு போகும் வழியில் சென்றான்.
காளை அவனை முட்களிலும் புதர்களிலும் இழுத்துச் சென்றது. அந்தக் குருடன் வாலை விடாமல் பிடித்துக் கொண்டு சுற்றிக் கொண்டிருந்தானே தவிர சேர வேண்டிய வீட்டைச் சென்றடையவில்லை. இவ்விதம் தீயவர்களின் அறிவுரையை நம்பினால் ஆபத்து நேரும் என்று கூறும் சந்தர்ப்பங்களில் இந்த நியாயத்தை எடுத்துக் காட்டுவார்கள்.
“நாய் வாலைப் பிடித்துக் கொண்டு கோதாவரியைத் தாண்டுவது போல” என்று சுமார் இதே பொருளைத் தரக் கூடிய பழமொழி ஒன்று தெலுங்கு மொழியில் உண்டு. “அல்ப சகவாசம் பிராண சங்கடம்” என்று கூறுவது போல. அற்பமான சாதனங்கள் நம்மை இலக்கில் சேர்க்காது. அற்பர்களாலும் தீயவர்களாலும் காரிய சாதனை நிகழாது. அதோடுகூட, நம்பிக்கை ஊட்டி அடைக்கலம் அளிக்கும் மனிதனிடம் கள்ளம், கபடம், மோசம், தீய நோக்கம் போன்ற குணங்கள் இருந்தால் அதோகதிதான்.
ஆசை காட்டி மோசம் செய்யும் இத்தகைய ஏமாற்றுப் பேர்வழிகளுக்குப் பிறரை நம்ப வைக்கும் திறமை பிறவியிலேயே இருக்கும். அவர்களை நம்பி ஏமாந்தவர்களின் கதைகள் பலப்பல. இன்றைக்குச் செய்தித் தாள்களிலும் ஊடகங்களிலும் நம்பிக் கெட்டவர்களின் சம்பவங்களே மிகுந்துள்ளன. பேராசையால் பெட்டிங் ஆப்களில் பணத்தைப் போட்டு ஏமாந்து, தற்கொலை செய்து கொண்டவர்களும், மோசக்காரர்களின் வலையில் சிக்கி கடனில் மூழ்கி அழிந்தவர்களும், வீட்டு மனை வாங்கும் ஆசையால் பணம் கொடுத்து ஏமாந்தவர்களும் சினிமாவில் வாய்ப்புக்காக வாழ்க்கையை இழந்தவர்களும் கணக்கற்று உள்ளனர்.
இந்த நியாயம் அப்படிப்பட்டவர்களின் கையில் சிக்காமல் கவனமாக இருக்கச் சொல்கிறது. ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரைச் சரணடைந்து உலக மக்களைக் கரை சேர்ப்பவராகவும் நாட்டுக்கும் சனாதன தர்மத்திற்கும் மேலும் புகழை ஈட்டித் தருபவராகவும் விளங்குகிறார் சுவாமி விவேகானந்தர். உயர்ந்த குருமார்களை அடைக்கலம் புகுந்தவர் உயர்வைச் சாதித்தனர். அதற்கு மாறாகத் தீயவர்களை நம்பியவர் ஏமாந்தனர்.
அரசியலில், சுயநலமின்றி தேசபக்தியோடு வாழ்ந்து, வாழ்க்கையை தேசத்திற்கே அர்ப்பணித்த சிறந்த மனிதர்களும் அமைப்புகளும் இந்தியாவில் பல தோன்றின. மறுபுறம் சுயநலத்தோடும் அதிகார தாகத்தோடும் பதவி மோகத்தோடும் தேசத்திற்கு ஊறு விளைவிக்கும் மனிதர்களும் அமைப்புகளும் இல்லாமல் இல்லை. மத வெறியும் பயங்கர வாதமும் தேசத்திற்குக் கேடு விளைவிக்கும் என்று அறிந்தும் அவற்றில் இணைந்து செயல்படும் மனிதர்களும் அமைப்புகளும் உள்ளன.
தவறான சிந்தனையோடும் சாதிக்கச் சாத்தியமில்லாத இலக்குகளோடும் நல்லனவற்றைத் தடுத்தும் தீயனவற்றை இறுகப் பிடித்தும் தேசத்திற்கும் தனி மனிதனுக்கும் கேடு விளைக்கும் வர்க்கங்கள் உள்ளன. அவர்களுடைய கோட்பாடுகளை மெச்சி, அவர்களை நம்பி ஏமாந்தவர்களும் இல்லாமல் இல்லை. மனிதர்களை நம்பி ஏமாந்தது போலவே சில பெரிய தேசங்களை நம்பிச் சிறிய தேசங்கள் ஆபத்தில் சிக்கிய கதைகளையும் கேட்டு வருகிறோம்.
‘அந்த கோலாங்கூல’ நியாயம், “தீயவர்களின் அறிவுரையைக் கேட்காதே. கெட்டவர்களிடம் சென்று உதவி கோராதே” என்று உரக்கச் சொல்கிறது.





