
- OPERATION SINDOORக்குப் பிறகு இப்போது நம் அரசு செய்லபடுத்த வேண்டியது – OPERATION INDOOR
உள்நாட்டு துரோகிகளை களையெடுக்க வேண்டியதை அரசு அமைப்புகள் கவனித்துக் கொள்ளட்டும்!
வெளிவிவகாரத் துறை / வணிகத் துறை இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது –
- வருங்காலங்களில், துருக்கி, அஜர்பைஜான் போன்ற நாடுகளுக்கான இந்தியர்களின் சுற்றுலாவை பாரதம் நிறுத்த வேண்டும்.
- சீனாவின் பொருள்கள் இந்தியாவில் குவிவதை முற்றிலும் நிறுத்த வேண்டும்.
அமேசான், பிளிப்கார்ட் போன்றவை வெளிநாட்டு நிறுவனங்களாயிற்றே என்று, மீஷோ (Mera shopping என்பதன் சுருக்கமாம்) போன்ற உள்நாட்டு ஆப்களில் பொருள்கள் வாங்கத் தொடங்கினேன். அதிலும் மிகவும் தேடி, சைனா பொருள் இல்லையா, எந்த தயாரிப்பு நிறுவனம் அல்லது மார்கெடிங் செய்கிறான் என்றெல்லாம் பார்த்து, விலை சற்று முன்னேபின்னே இருந்தாலும் ஆர்டர் போடுவேன்.
ஆனால் வீட்டுக்கு வரும் பொருள்களைப் பார்த்தால்…தெரிந்து கொண்டது – எல்லாம் சீனா பொருள்கள் தான். சாதாரண பிளாஸ்டிக் பொருள்கள் தான் இந்தியாவில் தயாராகி வருகிறது..
முக்கியமாகப் பார்த்தால், எல்லாமே ஒரே மாதிரியான தயாரிப்பு பொருள்கள் தான்! ஒட்டுமொத்தமாக ரொம்ப ரொம்ப மலிவு விலையில் கண்டெய்னர் கண்டெய்னர்களாக இறக்குமதி செய்து, அதை இந்தியாவில் உள்ள பல்வேறு மார்கெடிங் நிறுவனங்கள் அவர்களின் பெயரை அச்சிட்டு, அல்லது பெயரில்லாமல் தங்கள் நிறுவனத்தின் இன்வாய்ஸில் – ஓரளவு மார்ஜின் வைத்து விற்கிறார்கள்… என்பது புரிந்தது. இதை எப்படி நிறுத்துவது என்பதை அரசு யோசிக்கட்டும்!
ஆத்ம நிர்பார் பாரத் என்பது ஒரு திட்டமாக இருந்தாலும் திடமாக இதனை விரிவு படுத்த வேண்டும். இங்கே சிறு குறுந்தொழில் ஊக்குவிப்புக்கு நிறைய நிதி ஒதுக்குகிறார்கள். MSMEல் இருந்து எனக்கும் நிறைய மெயில்கள் வருகின்றன. கடன் ஊக்குவிப்பு, தொழில்கள் விரிவாக்கம் என… ஆனால் இதனை எத்தனை பேர் சரியாகப் பயன்படுத்துகிறார்கள் என்பதில் சந்தேகம் இருக்கிறது.
சாதாரண செல்போன் உதிரி பாகங்கள், ப்ளூடூத் ஸ்பீக்கர், ப்ளூடூத் வகையறாக்கள், எலக்ட்ரானிக்ஸ் பொருள்கள், ஹேன்ட்ஸ்ஃப்ரீ, மைக்ரோபோன், வீட்டு உபயோக பொருள்கள், பசை, ஒட்டும் டேப், சிலிகா அடிப்படை பொருள்கள் என எக்கச்சக்கம்… சொல்லிக் கொண்டே போகலாம். இவற்றுக்கான தேவைகள் இந்திய சந்தையில் அதிகம். நாம் உற்பத்திக்கு இலக்கை நிர்ணயித்து, குறைந்த பணியாளர்களுடன், மலிவு விலையில், இதே போன்ற ஆப்கள் மூலம் அதை மார்கெடிங் – விற்பனை செய்யலாம். நியாயமான லாபமும் பெறலாம் என்ற சிந்தனை நம் இளைய தலைமுறையிடம் வளரட்டும்! ஒரு பொருள் சந்தைக்கு வரும்போதே அதை எப்படி நாமும் மலிவாகத் தயாரித்து போட்டியாளர் ஆக வேண்டும் என்பதை துடிப்புடன் யோசிப்போமே!
அதற்கு சாதாரண தொழில்நுட்பம் சார்ந்த தரவுகளை ஐஐடி போன்றவை அரசுத் துறைகளுடன் இணைந்து அளித்து, பயிற்சியும் முயற்சியும் மேற்கொள்ளட்டும்!
அதாவது – தொழில்நுட்பம், முதலீடு, சந்தை வாய்ப்பு இவற்றை ஏற்படுத்திக் கொடுத்து, உற்பத்தியாளரை உருவாக்கும் பணியில் அரசுத் துறைகள் இன்னும் கூடுதல் முனைப்புடன் செயல்பட்டு, தற்சார்பை உருவாக்க வேண்டும் என்பது நம் குறிக்கோள்!
நாமே உற்பத்தி! நாமே சந்தை! மீண்டும் ஒரு சுதேசியச் சிந்தனையை பள்ளிப் பிள்ளைகளில் இருந்து உரமிட்டு வளர்ப்போமே!





