
சாந்தி சாந்தி சாந்தி:
தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்
சில காலமாக நம் தேசத்திலும், உலகத்திலும் நேர்ந்து வரும் விபத்துகள் அச்சத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்துகின்றன. அகமதாபாத்தில் லண்டன் செல்லும் ஏர் இந்தியா விமானம் திடீரென்று விபத்துக்குள்ளாகி நூற்றுக் கணக்கானவர்கள் ஒரு கணத்தில் எரிந்து சாம்பலான செய்தி இடி போல விழுந்து இதயத்தைத் துயரத்திற்குள்ளாக்கியது. அவர்கள் அனைவருக்கும் நற்கதி கிடைக்க வேண்டும் என்று பரமேஸ்வரனைப் பிரார்த்தனை செய்வோம்.
அது விபத்து அல்ல என்றும் நம் தேசத்தை கலவரத்திற்கு உள்ளாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பகை நாடுகளும், அவர்களுக்கு உதவும் நம் நாட்டு தேச துரோகிகளும் செய்த சதியின் ஒரு பகுதி என்றும் அறிஞர்கள் தெளிவாக்கி வருகிறார்கள். இதற்குச் சிறுது காலம் முன்பு பஹல்காம் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு நம் தேசம் திருப்பியடித்த ‘சிந்தூர பதில்’ உலகையே வியப்பில் ஆழ்த்தியது. பாரததேசம் விரைவாக முன்னேற்றப் பாதையில் பயணித்து, முன்னேறிய நாடுகளின் சார்போ, தேவையோ இல்லாமல் தன்னாட்சி அதிகாரத்தோடு உயர்ந்த நிலையைப் பெறும் என்பது உறுதியாகி உள்ளது. இதனைச் சகிக்க இயலாமல், ஒவ்வொரு நிலையிலும் தென்படும் வளர்ச்சியைப் பொறுத்துக் கொள்ள முடியாமல், நிகழும் புதுப் புது தாக்குதல்களைப் பார்க்கிறோம்.
மறுபுறம், சில தேசங்களின் இடையே கடுமையான முறையில் போர் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் சில ஜோதிட வல்லுனர்களும் இறையியலாளர்களும் தேசத்திலும் உலகத்திலும் இதுபோல் இன்னும் பல விபத்துகள் நடக்கலாம் என்றும் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் சமூக வலைத்தளங்கள் மூலம் வலியுறுத்துகிறார்கள். மக்களிடம் பரபரப்பை தூண்டும் செய்திகளைப் பரப்பி பார்வையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் முயற்சிகள் நடக்கின்றன.
இவ்வாறு எதிர்காலத்தைக் கணித்துக் கூறுபவர்களில் உண்மையான, நிர்மலமான உள்ளம் கொண்ட சில அறிஞர்களும் மகாத்மாக்களும் இருகிறார்கள் என்பதில் ஐயமில்லை. அவர்கள் எச்சரிக்கை அளிக்கையில், ‘கவனமாக இருக்க வேண்டும் என்றும், தர்மத்தைக் கடைப்பிடித்து உலக நலனுக்காக தெய்வ பிரார்த்தனையில் ஈடுபடுமாறும்’ சிறந்த செய்தியை அளிக்கிறார்கள்.
அனைத்தையும் கவனித்த பின், இந்தச் சூழ்நிலையில் நம்முடைய கடமை என்ன என்று சிந்தித்துப் பார்க்கும் போது, நம் சாஸ்திரங்கள் இப்படிப்பட்ட விபரீதங்களுக்குப் பரிகாரமாக நாம் செய்ய வேண்டிய உபாயங்களைக் குறிப்பிட்டுள்ளதை அறிய முடிகிறது.
தேவி மகாத்மியத்தில் (சண்டி/சப்தசதி) இத்தகு சூழலுக்கான சுலோகங்கள் உள்ளன.
“தேவி, பிரபன்னார்த்தி ஹரே, ப்ரஸீத |
ப்ரஸீத விஸ்வேஸ்வரி பாஹி விஸ்வம் ||
சர்வ பாதா ப்ரஸமனம் த்ரைலோக்யஸ்யாகிலேஸ்வரி |
ஏமவேவ த்வயா கார்யமஸ்மத்வைரி விநாஸனம்||
இப்படிப்பட்ட அற்புதமான கருத்துகள், மகிமை பொருந்திய நூல்களில் உள்ளன. மூவுலகங்களிலும் இப்படிப்பட்ட பேரிடர்களோ, பேரழிவுகளோ நடவாமல் காக்கும்படியும், நெருப்பு, காற்று, நீர் இவற்றால் விபத்துகள் ஏற்படாமல் பாதுக்காக்கும்படியும் உலக நலனை விரும்பி, லோக க்ஷேமத்தை நிலைகுலையச் செய்யும் அசுரர்கள் அழிக்கப்பட வேண்டும் என்றும் ரிஷி, முனிவர்களும், தேவதைகளும் பராசக்தியை பிரார்த்தனை செய்யும் சுலோகங்கள் இவற்றில் உள்ளன. இந்த நூலை முழுவதுமாகவோ அல்லது சப்தஸ்லோகி போன்ற முக்கியமான சுலோகங்களையோ நித்தியம் பாராயணம் செய்ய வேண்டும். ஸ்ரீ துர்காதேவியின் நாமங்களை நிரந்தரம் படிக்க வேண்டும். தேச நலனை விரும்பிச் செய்ய முடிந்தவர்கள் சாஸ்த்ர விதிப்படி தேவி ஹோமங்களை நடத்த வேண்டும்.
விஷ்ணு சஹஸ்ரநாம ஸ்தோத்திரம், புருஷ சூக்தம், ஸ்ரீ சூக்தம் ஆகியவற்றின் பாராயணம், மகாசுதர்சன ஹோமங்கள் போன்றவை நடைபெற வேண்டும். அத்தனை பெரிய விதிகளைச் செய்ய இயலாதவர்கள் இறை நாமங்களை நிரந்தரம் நினைக்க வேண்டும். ஸ்ரீ ராம நாமம், ஒரு மகா ரக்ஷா கவசமாக வேலை செய்யும். முடிந்தவரை ஒவ்வொருவரும் இந்த ‘லிகித’ ஜபத்தைத் தொடர்ச்சியாக எழுதி வர வேண்டும்.
ருத்ராபிஷேகம், ருத்ர ஹோமங்கள் சாஸ்திர சம்பிரதாய முறையில் நடக்க வேண்டும். அதேபோல், சிவ நாமங்களை ஜபம் செய்து, பக்தியோடு இயற்கையின் நலனுக்கும் தேசத்தின் சௌபாக்கியத்திற்கும் பிரார்த்தனை செய்ய வேண்டும்.
ஒவ்வொரு ஆலயத்திலும் தேச நலனுக்காகவும், சகல மானுட ரட்சணைக்காகவும் பிரத்தியேக பூஜைகள் நடத்த வேண்டும்.
‘தெய்வ பலம்’ இல்லாவிட்டால் எதையும் சாதிக்க முடியாது. சமுதாய பாவங்களின் பலனாக நெருக்கடிகளும், ஆபத்துக்களும் தலைவிரித்து ஆடுகின்றன. ஆஸ்திகர்கள் அனைவரும் தரம்த்தைக் கடைப்படித்து, தூய்மையாக இருந்து, பரமாத்மாவை பிரார்த்தனை செய்தால் இவற்றின் கடுமையைக் குறைப்பது சாத்தியமாகும்.
எது எப்படியானாலும், இறுதி வெற்றி பாரத தேசத்துடையதே. நம் தேசம் மிக உயாரந்த நிலையில் ‘விஸ்வகுரு’ என்ற ஸ்தானத்தை திடமாக அடையும் என்பதில் சந்தேகம் இல்லை. அதற்குள் நிலமை மோசமாகாமல் நாமனைவரும் நம் பங்குப் பொறுப்பை நிறைவேற்ற வேண்டும்.
(தலையங்கம், ருஷிபீடம் மாத இதழ், ஜூலை, 2025)





