
— அகிலேஷ் மிஸ்ரா —
தமிழில் : திருநின்றவூர் ரவிக்குமார்
நூற்றாண்டு காணும் சிந்தனை
ஆர் எஸ் எஸ் ஸின் நூற்றாண்டு என்பது ஒரு அமைப்பினுடைய நூற்றாண்டு அல்ல. பல்வேறு கஷ்டங்கள் இடையே தன்னை தக்க வைத்துக் கொண்டும், வளர்ந்தும் வரும் ஒரு பண்பாட்டு சிந்தனையின் நூற்றாண்டு . ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக வெளிநாட்டவர் படையெடுப்பு, பிளவு பட்ட சமுதாயம், அந்நிய ஆட்சியின் சுரண்டல் என்று பாதிக்கப்பட்ட ஹிந்து சமுதாயம் பெரிய , நீண்ட காலம் தொடரக்கூடிய இயக்கத்தை கட்டமைக்க முடியாமல் இருந்தது. கோயில்கள் தகர்க்கப்பட்டன. அரச பரம்பரைகள் எழுந்தன, விழுந்தன. சீர்திருத்த இயக்கங்கள் ஒளிர்ந்தன, மங்கின. இவ்வாறு இருக்கையில், ஆர்எஸ்எஸ் தோன்றி, தன்னை நூறு ஆண்டு காலம் தக்க வைத்துக் கொண்டுள்ளது. இதன் நீண்ட ஆயுளுக்கு என்ன காரணம் என்ற கேள்வி நம் சிந்தனையை தூண்டுவதாக உள்ளது.
ஆரம்பமே அசத்தல்
ஆர் எஸ் எஸ் தோன்றிய விதமே ஓரளவுக்கு விடையை சொல்வதாக இருக்கிறது. இந்திய விடுதலை போராட்டம் நடந்து கொண்டிருந்த வேளையில், 1925 இல் ஆர் எஸ் எஸ் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் அதன் ஸ்தாபகருடன் அது பிணைக்கப் படவில்லை. அதனை ஆரம்பித்த கேசவ பலிராம் ஹெட்கேவார் ஜி சிறந்த ஆளுமை. அவர் திட்டமிட்டு ரீதியில் தனது தனி ஆளுமையின் அதிகார பீடமாக அந்த அமைப்பு மாறிவிடாமல் பார்த்துக் கொண்டார்.
இதற்கு மாறாக, சுதந்திர போராட்ட காலத்தில் உருவான பல சமூக அமைப்புகளும் அதற்கு முந்திய காலத்தில் தோன்றிய அமைப்புகளும் அவற்றை ஆரம்பித்தவர்களின் ஆளுமையினால் , அவர்கள் பின் இருந்த ஒளி வட்டத்தின் வீச்சினால் ஒளிர்ந்ததை பார்க்கிறோம். அந்த தலைவர்களின் வாழ்நாளில் அவை செழித்தன. அவர்களுக்கு பிறகு அவை உதிர்ந்து விட்டன.
அதற்கு மாறாக ஆர் எஸ் எஸ் கூட்டு உறுதியில் வலிமை பெற்றது. தனிமனித ஆளுமையை மையமாக கொண்டிடாமல் இருந்ததே கடந்த ஒரு நூற்றாண்டு காலமாக அதன் வளர்ச்சிக்கு காரணம்.
லட்சியமே வடிவெடுத்தது
அதற்கு இணையான இன்னொரு முக்கிய காரணம் சங்கம் தன் லட்சியத்தில் உறுதியாக இருந்ததாகும். அந்த இயக்கத்தின் மீது தடைகள் விதிக்கப்பட்டன. அடுத்தடுத்து வந்த அரசுகளும் அறிவு ஜீவிகளும் அதை கொடிய பூதமாக சித்தரித்தன. ஆனாலும், பாரத தேசம் சனாதன தர்மத்தில் வேரூன்றிய பண்பாட்டு அடையாளம். பாரதத்தின் ஒற்றுமையானது அந்த பண்பாட்டு தேசியத்தினால் நீரூற்றி வளர்க்கப்பட்டது என்ற அடிப்படை நம்பிக்கையை ஆர் எஸ் எஸ் என்றும் கைவிட்டதில்லை.
கால மாறுதலுக்கு ஏற்ப அது தன்னை தகவமைத்து கொண்டது. புதிய தொழில்நுட்பத்தை ஏற்றுக் கொண்டுள்ளது. புதிய சமூக பிரிவினரிடையே தன்னை விரிவாக்கிக் கொண்டுள்ளது. தன்னுடன் இணைக்கப்பட்டுள்ள அமைப்புகளுக்கு உத்வேகம் அளித்து வந்துள்ளது. ஆனால், மற்ற அமைப்புகள் பிறரது மதிப்பை பெறுவதற்காக தங்கள் கொள்கைகளை சமரசம் செய்து கொண்டதை போல ஆர்எஸ்எஸ் தற்காலிக கைத் தட்டல்களுக்காக தனது சாரமான கருத்தியலை அடகு வைத்ததில்லை.
அண்மையில் விஞ்ஞான பவனில் சர்சங்கசாலக் மோகன் பகவத், ‘அடிப்படைகளை இழந்து பெறப்படும் ஏற்பு என்பது ஏற்பல்ல . இறப்பு ‘ , என்று கூறியுள்ளார் . அடிப்படை நம்பிக்கைகளைக் கைவிட மறுப்பதால் தான் ஆர்எஸ்எஸ் ஸை விமர்சிப்பவர்களாலும் அது மதிக்கப்படுகிறது.
தலைமுறைகளாக சேவை
மற்ற அமைப்புகளிலிருந்து ஆர் எஸ் எஸ் வேறுபடுவதற்கு காரணம் அதன் மற்றொரு பரிமாணமான சுயநலமற்ற சேவை . இது ஆறு தலைமுறைகளாக தொடர்ந்து அதன் தொண்டர்களால் பின்பற்றப்பட்டு வருகிறது. பணம், பதவி, அங்கீகாரம் எதையும் தேடாமல் பல தலைமுறைகளாக குடும்பம் குடும்பமாக சேவை செய்வதை உலகில் வேறு எங்கேயாவது பார்த்ததுண்டா?
லட்சக்கணக்கான ஸ்வயம்சேவகர்கள் ஷாகாவில் தினசரி காலை நேரத்தை செலவிடுகின்றனர். வார இறுதியில் சேவை காரியங்களில் ஈடுபடுகின்றனர். தங்கள் இளமையை பிரச்சாரக்காக (முழு நேர ஊழியர்) இருக்கின்றனர் . இதெல்லாம் எந்த விதமான எதிர்பார்ப்பும் இல்லாமல், பல நேரங்களில் தங்கள் சொந்த செலவில் செய்கின்றனர் . இந்த அடையாளம் விரும்பாத தன்மை தான் சங்கத்தின் மிகப்பெரிய பலம். விளம்பரம் தேடாத , வெளியில் தெரியாத இந்த மனிதநேயத்தில் தான் அதன் மகத்தான சாதனைகள் அடங்கியுள்ளன.
சங்கத்தின் சிறப்பு
சங்கத்தின் தனித் தன்மை, நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்துவதை சார்ந்து அல்ல. நிறுவனங்களை ஏற்படுத்துவதில் அதன் தனிச்சிறப்பு உள்ளது. அது கல்வித் துறையில் செயல்படுகிறது. பழங்குடியினர் நல திட்டங்களை செயல் படுத்துகிறது. இயற்கை பேரிடரின் போது நிவாரண முகாம்களை நடத்துகிறது. பெண்களின் உயர்வுக்காக பணிபுரிகிறது. சமூக தீமைகளை எதிர்த்து போராட்டங்களை கொஞ்சம் கொஞ்சமாக வலுப்படுத்தி வருகிறது. அதன் விளைவுகள் தினசரி தலைப்பு செய்திகளில் தெரிவதில்லை. தசாப்தங்களுக்கு பிறகு வெளிப்படுகிறது.
பாரதிய மஸ்தூர் சங்கம், வனவாசி கல்யாண் ஆசிரமம், வித்யா பாரதி, சேவா பாரதி போன்ற மிகப்பெரிய அமைப்புகள் பல லட்சம் பேருக்கு எந்த விதமான தம்பட்டமும் இல்லாமல் சேவை செய்து வருகின்றன. சங்கம் அமைதியாக பணி புரிகிறது. அமைதி என்றால் ஏதோ பேருக்கு இருப்பதாக அர்த்தமல்ல. ஆழமாக ஊன்றிருப்பதன் அடையாளம்.
சங்கத்தின் கண்ணோட்டம்
சங்கத்தின் ஆயுளுக்கு மற்றொரு காரணம் ஹிந்துயிசம் பற்றி அது தொடர்ந்து முன் வைக்கும் அதன் கண்ணோட்டம். ஹிந்துயிசம் அல்லது ஹிந்து ராஷ்டிரம் பற்றி ஆர் எஸ் எஸ் பேசும்போது அது அதன் தனிப்பட்ட பார்வையாக இல்லாமல் பண்பாட்டு ஒற்றுமையை தழுவியதாக இருக்கிறது. ஹிந்து என்பது ஒரு குறிப்பிட்ட பிரிவை சுட்டுவது அல்ல மாறாக பண்பாட்டு அடையாளம். பாரதத்தை தாய் நாடாகவும் மற்றும் அதன் கலாச்சார கூறுகளை ஏற்றுக் கொள்கின்ற எல்லா சமூகத்தையும் அரவணைப்பதாகும்.
சங்கத்தின் அணுகுமுறை எப்போதும் இணைப்பதாகவே உள்ளது. அதனால் தான் விமர்சிக்கப்பட்டாலும் அது தொடர்ந்து வளர்ந்து கொண்டே வருகிறது. ஜாதி, மொழி, மாநிலம் கடந்து சாதாரண மக்களை இணைத்து வலு பெற்று வருகிறது.
இறுதியாக, ஆர்எஸ்எஸ் விதிவிலக்காக இருப்பதற்கு உண்மையான காரணம் அதன் அடித்தளமாக உள்ள ஞானம். அது எப்போதும் இறக்குமதி செய்யப்பட்ட அல்லது கடன் வாங்கிய தொண்டர்களை சார்ந்து இருந்ததில்லை. மாறாக, தனது ஸ்வயம்சேவகர்களை மற்ற அமைப்புகள் கேட்டால் அனுப்பி வைக்கிறது. அங்கிருந்து ஊழியர்களைப் பெறுவதில்லை. ஆர்எஸ்எஸ் ஸின் வலிமை அதன் உள்ளிருந்தே எழுகிறது.
உள்ளார்ந்த வலிமை
விரல் விட்டு எண்ண கூடியவர்கள் இருந்தபோதிலும் சரி இப்போது லட்சக்கணக்கானவர்கள் திரண்டுள்ள போதும் சரி எப்போதும் அது தன் உள்ளார்ந்த வலிமையை நம்பி வளர்ந்துள்ளது. எந்த சமுதாயமும் – இது நமக்கான நேரம். எல்லா கஷ்டங்களையும் எதிர்கொள்ளுவோம். நாம் தொடர்ந்து உறுதியாக நின்றால் நினைத்ததை சாதிப்போம். வரலாற்றின் போக்கை மாற்றுவோம். நம்முடைய பலத்தில் நம்பிக்கை கொள்வோம் என்று முனைந்தால் – அது எழுச்சி பெறுவது திண்ணம்.
ஆர் எஸ் எஸ் நூற்றாண்டு தபால் தலையை வெளியீட்டு நிகழ்ச்சியில் வாழ்நாள் ஸ்வயம்சேவகராக இருக்கும் பிரதமர் நரேந்திர மோடி சங்கத்தின் சாரத்தை தனது உரையில் கச்சிதமாக படம் பிடித்து காட்டினார். ‘ஆர் எஸ் எஸ் இவ்வளவு காலம் நீடித்திருப்பதற்கு காரணம் அது சாதாரண இந்தியனின் அசாதாரண பண்பை வெளிக்கொண்டு வந்ததேயாகும்’, என்று அவர் சொன்னார்.
சங்கம் தனது இரண்டாவது நூற்றாண்டில் அடி எடுத்து வைக்கிறது. அதன் முன்புள்ள சவால் , அடித்தள சிந்தனைகளை விட்டு விடக்கூடாது. அதே வேளையில் அதில் இறுகி, உறைந்து போய் விடவும் கூடாது. சங்கம் நூறு ஆண்டு காலம் நிற்பதற்கு காரணம் எளிய ஆனால் உயர்வான விஷயத்தை அது புரிந்து வைத்துள்ளதேயாகும் . தனி நபர்கள் அல்ல அமைப்பு , அதிகாரம் அல்ல சேவை, பேரரசுகள் அல்ல பண்பாடே எப்போதும் நீடித்து நிற்கும். இதுவே நூற்றாண்டை கடந்து நடை போடும் ஆர்எஸ்எஸ் இந்தியாவுக்கு சொல்லும் பாடம்.
நன்றி : இந்தியன் எக்ஸ்பிரஸ்
கட்டுரையாளர் புளூகிராப் டிஜிட்டலின் தலைமை அதிகாரி
முன்னாள் MyGov வின் இயக்குநர்





