
ஆன்றோர்கள் தேசமடி பாப்பா
ஜெயஸ்ரீ எம். சாரி, ஆதம்பாக்கம்
‘பாருக்குள்ளே நல்ல நாடு எங்கள் பாரத நாடு,’ – என்ற முண்டாசுக் கவிஞன் பாரதியின் சொற்களிலேயே அத்துணை வலிமை உள்ளது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பரந்து விரிந்துள்ள நம் பாரத தேசமானது ‘ஆன்றோர்களின் செயற்கரிய செயல்கள்’ என்ற அற்புதமான சேவையினால் ஒரு பேரினமாக நிலைத்து நிற்கின்றது என்பதே காலம் காலமாய் நாம் காணும் பாரத தேசம்.
நம் நாட்டில் ஆன்றோர்கள் அனைத்து பகுதிகளையும், மொழிகளையும், கலாச்சாரங்களையும் மதித்து அதே சமயத்தில் சமுதாய ஏற்றத்தாழ்வுகளையும் புறக்கணித்து மனித நேயத்திற்கு முக்கியத்துவம் கொடுத்ததால், கொடுப்பதால் தான் இன்றும் உலக வரைப்படத்தில் பாரத நாடு பெருமிதம் கொண்டு உயர்ந்து நிற்கிறது. ஆன்றோர்கள் என்று குறிப்பிடும் போது ஆண்களுக்கு நிகரான பெண்களையும் கண்டறிந்த தேசமடி நம் பாரத கண்டம்.
அறிவியல் முதல் ஆன்மீகம் வரை, அரசாங்கம் முதல் ஆட்சி வரை, கல்வி முதல் கலை வரை, சரித்திரம் முதல் சமுதாய மேம்பாடு வரை என அனைத்து துறைச் சார்ந்த விஷயங்களிலும் நம் நாட்டு ஆன்றோரின் பங்களிப்பானது, உலகத்திற்கே ஒரு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
தமிழ் மன்னன் அதியமானுக்கு அறிவுறுத்திய அவ்வையார் சமுதாயத்திற்கும் அருமையான ஆத்திச்சூடியை வழங்கினார். தன்னுடைய அருமையான நகைச்சுவை உணர்வினால் தெனாலிராமனும் நாட்டை ஆண்ட கிருஷ்ணதேவராயருக்கு கூறிய அறிவுரைகள் இன்றும் ஏற்புடையதாய் உள்ளது என்பதை மறுக்கவும் இயலுமோ? முகலாய மன்னன் அக்பர்-நகைச்சுவை சக்கரவர்த்தி பீர்பால் ஜோடியின் வாழ்வியல் தத்துவங்களால் ஈர்க்கப்படாதோர் உண்டோ? சாதுர்யமான சாணக்கியனின் நியதியால் பயனடைந்த சந்திரகுப்த மௌரியாவின் வெற்றியானது இன்றும் பேசப்படுகிறது.
இதிகாச கதாபாத்திரங்களான ஸ்ரீராமரும், ஸ்ரீகிருஷ்ணரும், பீஷ்மரும், தர்மராஜா யுதிஷ்டிர-னும், அர்ஜுனனும், மார்க்கண்டேயணும், சத்தியத்தை உயிராக காத்த அரிச்சந்திரனும், தந்தைக்கே தவறைச் சுட்டிக்காட்டிய தவப்புதல்வன் பிரகலாதனும் வாழ்ந்த சொர்க்கமான தேசமடி நம் பாரத கண்டம்.
மனித குல மாணிக்கங்களான கௌதம புத்தரையும், மகாவீரரையும், குருநானக்கையும் தன் பூமியிலே அவதரிக்க வைத்த தேசமடி பாப்பா நம் பாரத கண்டம்.
ஆன்மீகத்தை கையில் எடுத்தாலும் அதன்மூலம் சமூகநீதியை பரப்பிய ஸ்ரீ ராமானுஜரை தன் மடியில் வைத்துக் கொண்டாடிய தேசமடி பாப்பா நம் பாரத கண்டம்.
வேத இலக்கியங்களை தொகுத்தளித்த வியாசரும், ரகு வம்சத்திற்கு வழிகாட்டிய வசிஷ்டரும், கட்டிடத் துறையில் பிதாமகரான விஷ்வகர்மாவும், தன் விரலை விட குருவின் கட்டளையை பெரிதாக நினைத்த ஏகலைவனும், இந்து மதச்சட்டங்களை அறிமுகப்படுத்திய மனு சக்கரவர்த்தியும், மருத்துவத்துறையில் மகானான தன்வந்திரியும் வழங்கிய கொடைகளினால் இன்றும் பார்ப்புகழ நிற்கும் தேசமடி பாப்பா நம் பாரத கண்டம்.
மகாயோகி கோரக்நாத், இலக்கணத்தை வகுத்த பாணினி, மஹாபாஷ்யத்தின் ஆசிரியர் பதஞ்சலி, இந்து மதத்தை நாடெங்கும் பரப்பிய ஸ்ரீ ஆதிசங்கரர், தத்துவ ஞானிகளான மாதவாச்சார்யா, நிம்பார்க்கர் ஆச்சாரியா, சிந்தி-இந்திய வம்சாவளியினர் போற்றும் ஜூலேலால், பக்தியை பரப்பிய சைத்தன்ய மகாபிரபு, நாயன்மார்கள், ஆழ்வார்கள், கவிச்சக்கரவர்த்தி கம்பர், கர்நாடகாவின் தத்துவ ஞானியும் சமுதாயப் புரட்சியாளராக பஸ்வேஷ்வர் ஆகியோரின் அரும் தொண்டை அருமையாய் அனுபவித்த தேசமடி பாப்பா நம் பாரத கண்டம்.
அஸ்ஸாமை சேர்ந்த வைணவ குரு சங்கர் தேவா, சகோதரர்களான சயனாச்சார்யா – மாதவாச்சார்யா, மகாராஷ்டிராவைச் சேர்ந்த சந்த் ஞானேஷ்வர், துக்காராம், சமர்த்த குரு ராம்தாஸ், புரந்தரதாசர் போன்றோரின் ஆன்மீக வழிகாட்டலால் மிளிர்ந்த தேசமடி நம் பாரத கண்டம்.
வீரத்தின் மறு பெயராம் சத்ரபதி சிவாஜி மகாராஜை அவர்தம் வீரத்தாய் ஜீஜாபாய் பெற்றெடுத்த தேசமடி பாப்பா நம் பாரத கண்டம். ஆங்கிலேயனை தன் கையில் குழந்தையுடன் குதிரையின் மேல் ஏறி போரிட்ட வீரமங்கை ஜான்சி ராணி பிறந்த தேசமடி பாப்பா நம் பாரத கண்டம். வடக்கிலிருந்து நகர்ந்தால் தெற்கிலும் அரசாட்சி செய்த ஆங்கிலேயனை தன் வீரத்தினால் கதிகலங்க வைத்த நம் தமிழ் வீரப்பெண் வேலு நாச்சியார், முகலாய மன்னர்களை மத்திய இந்தியாவில் எதிர்த்துப் போரிட்ட காந்தாரத்தின் ராணியான துர்காவதி போன்ற பலரின் பாதங்கள் பதிந்த தேசமடி நம் பாரத கண்டம்.
வேத காலத்திலேயே கல்வியின் மகத்துவத்தை அறிந்து பயின்ற கார்க்கியும், எமதர்மனுக்கே சவால் விட்ட சாவித்திரியின் தைரியமும், பொறுமையை போதிக்கும் அன்னை சீதாவின் குணமும், துயரங்களை துச்சமாக நினைத்த திரௌபதியும், நியாயத்திற்காக மதுரையை எரித்த கண்ணகியின் துணிவும், பக்தியி ன் சாரத்தை விளக்கிய பக்த மீராவும், பிறந்த தேசமடி பாப்பா நம் பாரத கண்டம்.
ஏழு வார்த்தைகளில் அதிகாரமாய் கருத்துக்களை கூறி உலகப் பொதுமுறை எனப்படும் திருக்குறளை அளித்த திருவள்ளுவரை கண்ட தேசமடி பாப்பா நம் பாரத கண்டம்.
கர்நாடகா கண்டெடுத்த அகல்யா பாய் ஹோல்கர், ஆணை போன்று உடையணிந்து ஆட்சிச் செய்த தெலுங்கானாவின் ருத்ரம்மா, கணவனின் தர்ம காரியங்களுக்கு துணைநின்ற சாரதா மாதா போன்றோரின் வாழ்வியல் நிகழ்வுகளை பொன்னெழுத்தில் பதிய வைத்துள்ள தேசமடி பாப்பா நம் பாரத கண்டம்.
உலகுக்கே பூஜ்ஜியத்தை அறிமுகப்படுத்திய ஆன்றோரை கண்ட தேசமடி பாப்பா நம் பாரத கண்டம். கணித மேதை ராமானுஜரின் தியரிகளை ஆச்சரியத்தோடு இன்றும் ஆய்வு செய்யும் ஆராய்ச்சியாளர்கள் போற்றும் தேசமடி பாப்பா நம் பாரத கண்டம்.
உலகத்திற்கே சகோதரத்துவத்தை விளக்க சிகாகோவில் “சகோதர சகோதரிகளே’ என்ற வாழ்வியல் வாக்கியத்தை முதலில் பிரகடனப்படுத்திய அற்புத மனிதரை பெற்றெடுத்த தேசமடி பாப்பா நம் பாரத கண்டம்..
விஞ்ஞானிகளுக்கு எல்லாம் முன்னோடியான சர் சி வி ராமனையும் ஜெகதீஸ் சந்திரபோஸையும் தனதாக்கிக் கொண்ட தேசமடி பாப்பா நம் பாரத கண்டம்.
பிற்படுத்தோர்களுக்காக குரல் கொடுத்த ராஞ்சியை சேர்ந்த பிர்ஸா முண்டா, புரட்சிக் கவிஞன் பாரதி, காளியின் வரம்பெற்ற காளிதாஸ், இந்தி கவிஞர் பக்த சுர்தாஸ், பக்தி பாடலினால் தெலுங்கு மொழியையும் வளர்த்த தியாகராஜ சுவாமி ஆகியோரின் சேவைகளினால் சாம்ராஜ்யமாய் விளங்கும் தேசமடி பாப்பா நம் பாரத கண்டம்.
தன் அற்புதமான ஓவியங்களால் உலகையே நம் நாட்டின் பக்கம் திருப்பிய ரவி வர்மாவும், மணிப்பூரை ஆண்ட பாக்கிய சந்திரா, பேரரசர்களான கௌண்டின்யா, ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன், அசோகச் சக்கரவர்த்தி, ஷங்க் பரம்பரையைச் சார்ந்த புஷ்யமித்ர, கலிங்கா பரம்பரையைச் சார்ந்த கரவேலா, விக்ரமாதித்யா, சமுத்திர குப்தா, ஹர்ஷவர்தன், சைலேந்திரன் போன்றோரின் வெண்குடையின் கீழ் பாதுகாப்பு அரண் என்ற அருமையை அறிந்த தேசமடி பாப்பா நம் பாரத கண்டம்.
அறுவை சிகிச்சையின் தந்தையான சுஷ்ருதா, அறிவியல் வல்லுநரான பாஸ்கராச்சாரியா, நாகார்ஜுனா, ஆரியபட்டா, மெஞ்ஞானத்தை மக்களுக்கு வலியுறுத்திய ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர், சாரதா தேவி, சுவாமி தயானந்தர், சுவாமி ராம் தீர்த, மஹரிஷி அரவிந்தர், ரமண மகரிஷி, நோபல் பரிசு பெற்ற வங்காள கவிஞர் ரபீந்திரநாத் தாகூர், சீர்திருத்தவாதிகள் ராஜாராம் மோகன்ராய், பால கங்காதர திலகர், மகாத்மா காந்தியடிகள், மதன் மோகன் மாளவியா, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், வினாயக் தாமோதர் சாவர்க்கர், டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர், மகாத்மா ஃபூலே, ஜோதிபாய் ஃபூலே ஆகியோரின் சொற்களினால் சுழலும் தேசமடி நம் பாரத கண்டம்.
பிற்காலத்திலும் பல போற்றத்தக்க ஆன்றோர்கள் தங்கள் பங்கினை நம் நாட்டிற்காக பறைசாற்றிக் கொண்டிருந்தனர், கொண்டிருக்கின்றனர்.
பக்திமார்க்கத்தில் ‘காஞ்சிப் பெரியவா’ என்றழைக்கப்படும் ஸ்ரீ சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகள், மனித நேயத்திற்கு பாலமாய் இருந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் போன்ற பல ஆன்றோர்கள் நமக்கு வழிகாட்டிய தேசமிது பாப்பா நம் பாரத கண்டம்.
மதங்களை கடந்து இசை ரசிகர்களை பெற்றிருக்கும் புகழ்பெற்ற பாடகர் டாக்டர் கே ஜே ஜேசுதாஸ், இறைவனால் திருநங்கையாக ஆசீர்வதிக்கப்பட்ட பத்மஸ்ரீ விருது பெற்ற நர்த்தகி நடராஜன் தன் ஆராய்ச்சியினால் பரதநாட்டியத்திற்கும், தமிழுக்கும் செய்யும் தொண்டு, தள்ளாத வயதிலும் ஏழை மக்களுக்காக இன்றும் போராடும் பத்மபூஷன் விருது பெற்ற கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன், அனாதை குழந்தைகளின் தாயாய் இருந்த மகாராஷ்டிராவைச் சேர்ந்த பத்மஸ்ரீ விருது பெற்ற சிந்துதாயீ சப்கால், காலில் செருப்பு கூட அணியாத, ஆயிரத்திற்கும் மேற்பட்ட வகையான மரங்களை வளர்த்த பேரிளம்பெண்ணான கர்நாடகாவைச் சேர்ந்த பத்மஸ்ரீ விருது பெற்ற துளஸி கௌடா, 66 வயதான ஆரஞ்சுப் பழ வியாபாரியின் மனதில் உதித்த கிராமப்புறத்திற்கு கல்வி என்னும் அட்சயப்பாத்திரத்திரமான சேவையை செய்து வரும் மங்களூரைச் சேர்ந்த பத்மஸ்ரீ விருது பெற்ற ஹரேகலா ஹஜபாபா போன்றோரும் நம் இன்றைய பாரதத்தின் ஆன்றோர்களே.
எவ்விதமான இடையூறுகளிலும் நம்மை இடைவிடாது நம்மை காத்துக் கொண்டிருக்கும் முப்படை வீரர்கள், காவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், கிராமங்களில் ஆரோக்கிய நாடியாய் இருக்கும் ‘ஆஷா வொர்கர்ஸ்’, மருத்துவ ஆய்வகத்தில் பணிபுரிபவர்கள், துப்புரவு தொழிலாளர்கள், முதியோர் இல்லங்களில் முதியவர்களை கவனித்துக் கொள்ளும் தோழர்கள், அனாதை இல்லங்களில் குழந்தைகளுக்கு அரணாக இருக்கும் நேசர்கள், இறைவனுக்கு நெருக்கமாக கருதப்படும் மாற்றுத் திறனாளிகளை கையாளும் சிறப்பு பெற்றோர்கள், பணியாளர்கள் என இவர்களும் தங்கள் அயராத சேவைகளினால் ஆன்றோர்களாய் திகழ்வதாலேயே நம் பாரத அன்னையானவள் இன்றும் மகிழ்ச்சியுடன் புன்னகைத்துக் கொண்டிருக்கும் தேசமடி பாப்பா நம் பாரத கண்டம்.
‘ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்’ – என்பது போல அனைத்து துறைகளிலும் இக்கட்டுரையில் குறிப்பிட்டவர்களின் வரலாறே அந்தந்த துறைகளில் சேவை செய்யும் அனைவருக்கும் ஒரு சான்றாகும்.
‘பாரத நாடு பழம்பெரும் நாடு!! நீரதன் புதல்வர்! இந்நினைவகற்றாதீர்!!’ என்ற பாரதியின் வைர வரிகளை மனதில் ஏற்று நம் ஆன்றோர்களின் தேசமாம் பாரதத்தின் பெருமைகளை மெருகேற்ற வேண்டிய தலையாய கடமையை நாம் உணர வேண்டிய தருணமடி பாப்பா!
இளைஞர்கள் என்னும் அற்புதமான பொக்கிஷத்தை தனதாக்கி கொண்டுள்ள நம் பாரத அன்னை, தான் கண்ட ஆன்றோர்களின் அரிய சேவைகளை தக்க சமயத்தில் இளைய பாரதத்திற்குள் புகுத்தி தன்னுடைய வீர நடையினால் உலகை ஆள்வாள் என்பதில் சிறிதும் ஐயமில்லை, ஏனென்றால் நம் தேசம் ஆன்றோர்கள் தேசமடி பாப்பா!!



