December 5, 2025, 3:46 PM
27.9 C
Chennai

கால் நூற்றாண்டில் தமிழகத்தில் நிகழ்ந்த கலவரங்களும்… விளைவுகளும்!

IMG 20180522 WA0059 - 2025IMG 20180522 WA0059 - 2025

 

தமிழகத்தில் கலவரங்கள் காரணமாக பஞ்சமில்லாமல் துப்பாக்கி சூடுகளும் உயிர் பலிகளும் தொடரத்தான் செய்கின்றன. ஜாதி மத மோதல்களுக்கு மட்டுமே உருவான கலவரங்கள் இப்போது மக்களின் வாழ்வாதாரத்திற்க்காக மாறிவருகிறது.  இதோ நம்ம அமைதி பூங்காவில் அரங்கேறிய கலவரங்களும் துப்பாக்கி சூடுகளும். பற்றி அறிந்து கொள்வோமே.

1991 அக். 25ல் சென்னை கால்நடை அறிவியல் கல்லுாரி முனைவர் பட்ட ஆய்வு மாணவர் சுரேஷ் என்பவரை பேருந்து நடத்துனர் தரக்குறைவாக பேசியதுடன் அவர் மீது தாக்குதல் நடத்தி உள்ளார். இது மாணவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. 12க்கும் மேற்பட்ட இடங்களில் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். மாநிலம் முழுவதும் மாணவர்கள் போராட்டத்தில் குதிக்க பெரும் கலவரம் வெடித்தது. போலீசார் தடியடியில் 40 மாணவர்கள் காயமடைந்தனர். சிலருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது. கண்ணீர் புகை குண்டு வீச்சு நடத்தி கலவரம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இது தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி கிருஷ்ணசாமி தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடந்தது.

கடந்த 1992 ஜூன் 20ல் தர்மபுரி மாவட்டம் வாச்சாத்தி கிராமத்தில் சந்தன கடத்தல் வீரப்பன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட 55 வன பாதுகாவலர்கள் 108 போலீசார் மற்றும் ஆறு வருவாய் துறை அதிகாரிகள் அந்த கிராமத்தில் உள்ள தலித்துகளின் வீடுகளை சூறையாடினர். 18 பெண்கள் கற்பழிக்கப்பட்டனர். கோடிக்கணக்கான பொருட்களை நாசப்படுத்தினர். 100 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ. விசாரணை நடத்தியது. தனி நீதிமன்றம் 269 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கியது. அப்போது இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட 54 பேர் இறந்துபோயிருந்தனர்.

கடந்த 1992 நவ. 8ல் வந்தவாசியில் கோவிலில் வழிபாடு நடத்துவது தொடர்பாக தலித்துகளுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு சமூகத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு பெரும் கலவரம் மூண்டது. தலித்துகள் 73 பேர் படுகாயமடைந்தனர். 29 பேருக்கு தலையில் அரிவாள் வெட்டு விழுந்தது. இரண்டு போலீஸ்காரர்களும் தாக்கப்பட்டனர். 144 தடை உத்தரவு போடப்பட்டு கலவரம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

விருதுநகர் மாவட்டம் கோவில்பட்டியில் விவசாய சங்கத்தினர் நடத்திய ஊர்வலத்தில் பெரும் கலவரம் வெடித்தது. போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதில் எத்திராஜ் மற்றும் இருதய ஜோசப் ஆகியோர் இறந்தனர். போலீஸ்காரர் ராமலிங்கம் என்பவரும் படுகாயமடைந்தார். சங்கத்தினர் மீது தவறு இருப்பதாக அறிக்கை தாக்கல் செய்தது. எத்திராஜ் குடும்பத்திற்கு 1 லட்சம் ரூபாய் நிவாரணமும் வழங்கப்பட்டது.

1993 ஏப். 29ல் செங்கல்பட்டு எம். ஜி. ஆர். மாவட்டம் மாமண்டூரில் போலீசார் மீது மர்ம கும்பல் துப்பாக்கிச் சூடு நடத்தியது. அதில் மோகன் என்ற போலீஸ்காரர் பலியானார். விசாரணையில் யாழ்ப்பாணம் வல்வெட்டி துறையைச் சேர்ந்த மூன்று பேர் தஞ்சாவூர் மாவட்டம் புளிக்காடு என்ற இடத்தில் ஆயுதங்களுடன் சிக்கினர்.
சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்த அவர்களை செங்கல்பட்டு நீதிமன்றத்துக்கு போலீசார் வேனில் அழைத்து சென்ற போது மாமண்டூரில் ஓட்டலில் சாப்பிட அழைத்து சென்றனர். அப்போது அங்கு வந்த மர்ம கும்பல் இரவு 7:40 மணிக்கு துப்பாக்கிச் சூடு நடத்தியது. இச்சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக பத்மநாபன் ஆணையம் விசாரணை நடத்தியது.

கடந்த 1993 ஆக. 8ல் சென்னை சிந்தாரிப்பேட்டையில் இருந்த ஆர். எஸ். எஸ். அலுவலகத்தில் முஸ்லிம் பயங்கரவாதிகள் குண்டுவெடிப்பு நிகழ்த்தினர். இதில் 11 பேர் இறந்தனர். ஏழு பேர் படுகாயமடைந்தனர். இதனால் மாநிலம் முழுவதும் மதக் கலவரம் ஏற்படும் சூழல் உருவானது.

கடந்த 1994ல் சந்தன கடத்தல்காரன் வீரப்பன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட சிறப்பு அதிரடிப் படையினர் இருளர் இனத்தைச் சேர்ந்த பெண்ணை கற்பழித்ததாக கலவரம் வெடித்தது.

இதனால் மாநிலம் முழுவதும் பதற்றம் நீடித்தது. போலீசார் சில இடங்களில் தடியடி நடத்தினர்.

கடந்த 1994 அக். 10ல் காஞ்சிபுரம் மாவட்டத் தில் தலித் சமூகத்தினர் பஞ்சமி நில மீட்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதில் தலித் சமூகத்தைச் சேர்ந்த தாமஸ் ஏழுமலை ஆகியோர் இறந்தனர்.

கடந்த 1994 நவ. 18ல் ராமேஸ்வரம் காவல் நிலையத்தில் ராக்கம்மாள் முருகலட்சுமி ஆகியோரை போலீஸ்காரர்கள் நாகசுந்தரம் ஆறுமுகம் குமரப்பா ஆகியோர் கற்பழித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த தகவல் காட்டுத் தீ போல் மாநிலம் முழுவதும் பரவ போராட்டங்கள் வெடித்தன. சில இடங்களில் கலவரம் வெடித்தது.

கடந்த 1994ல் சென்னையைச் சேர்ந்த முரளி என்ற வழக்கறிஞரை தேவேந்திரன் என்ற போலீஸ்காரர் தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது வழக்கறிஞர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி கலவரம் வெடித்தது. போலீசார் தடியடி கண்ணீர் புகை குண்டு வீச்சு நடத்தி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

கடந்த 1995 ஆக. 31ல் திருநெல்வேலி விருதுநகர் மாவட்டங்களில் தலித் தேவர் சமூகத்தினருக்கு இடையே மூன்று மாத காலம் தொடர்ந்து கலவரம் நடந்தது. யார் மீது எப்போது ஈட்டி வந்து பாயும் என்ற நிலை. ஒருவரையொருவர் வெட்டி சாய்த்தனர். 75க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். பேருந்துகள் தீ வைத்து கொளுத்தப்பட்டன.

குடிசைகள் எரிக்கப்பட்டன. 20 கிராமங்களில் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாத நிலை. போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் இரண்டு தலித்துகள் கொல்லப்பட்டனர். சிறு பாலங்கள் உடைக்கப்பட்டு மின் கம்பங்கள் வெட்டி சாய்க்கப்பட்டன. பெட்ரோல் குண்டு வீச்சு நடந்தது. 500க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். கொடியங்குளம் கிராமத்திற்குள் புகுந்த போலீசார் கோர தாண்டவம் ஆடினர். இதில் கிராமமே சூறையாடப்பட்டது.

கடந்த 1997 ஜன. 7ல் கயத்தாறு பஞ்சாயத்து அலுவலகத்தில் ஒட்டப்பிடாரம் எம். எல். ஏ. வாக இருந்த புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி பொதுமக்களிடம் மனுக்கள் வாங்க இருப்பதாக அறிவித்து இருந்தார். அன்றைய தினம் பஞ்சாயத்து ஊழியர்கள் அனைவரும் விடுப்பில் சென்று விட்டனர். இதையடுத்து துாத்துக்குடி கலெக்டர் அலுவலகம் முன் மறியல் போராட்டத்தில் இறங்கிய அவர் கைது செய்யப்பட்டார்.

இதனால் அந்த பகுதியில் கலவரம் வெடித்தது. கடையநல்லூரில் பஸ்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். போலீஸ் எஸ். ஐ. நளினி என்பவர் பாலியல் சித்ரவதை செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது.

கடந்த 1997 ஏப். 16ல் சிவகாசி உள்ளிட்ட பகுதிகளில் வீரன் சுந்தரலிங்கம் போக்குவரத்து கழகம் செயல்பட துவங்கியது. இதற்கு தேவர் சமூகத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சிவகாசி – ஈஞ்சர் சந்திப்பு அருகே தேவர் சமூகத்தினர் கூடி போராட்டம் நடத்தினர்.

இதனால் அந்த பகுதியில் கலவரம் வெடித்தது. அம்பேத்கர் சிலை சேதப்படுத்தப்பட்டது. பெரும் கலவரம் வெடித்ததால் போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். மின் கம்பங்கள் சாய்க்கப்பட்டு அந்த பகுதியே இருளில் மூழ்கி கிடந்தது. ஓய்வு பெற்ற நீதிபதி தன்ராஜ் ஆணையம் விசாரணை நடத்தியது. இந்த கலவரத்தின் விளைவாக போக்குவரத்து கழகங்களுக்கு இருந்த தலைவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டன.

1997 மே 5ல் தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் தடையை மீறி சென்ற புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி கைது செய்யப்பட்டார். அதை கண்டித்து நெல்லை மாவட்டம் துறையூரில் பிலிப்ஸ் தங்கையா மாசிலாமணி ஆகியோர் கண்டன போராட்டம் நடத்தினர். இதில் கலவரம் வெடித்தது. போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். கலவரத்தில் பிலிப்ஸ் கொல்லப்பட்டார். இதனால் பெட்ரோல் குண்டு வீச்சு பஸ் எரிப்பு பலருக்கு அரிவாள் வெட்டு விழுந்து கலவரமாக மாறியது.

1997 நவ. 29ம் தேதி கோவையில் போக்குவரத்து போலீஸ்காரர் செல்வராஜ் வெட்டி கொல்லப்பட்டார். இதற்கு அல்-உம்மா அமைப்பினர் தான் காரணம் என குற்றம் சாட்டப்பட்டது. இதன் தொடர்ச்சியாக அடுத்த இரண்டு மாதங்களில் நடந்த கலவரத்தில் 17 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்.

இதற்கு பழிவாங்கும் வகையில் 1998 பிப். 14ல் கோவையில் தொடர் குண்டுவெடிப்புகள் நிகழ்த்தப்பட்டன. 19 இடங்களில் நடந்த குண்டுவெடிப்புகளில் 50க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் கலவரமாக மாறி நாட்டையே உலுக்கியது.

1998 அக். 30ல் பசும்பொன் தேவர் குருபூஜைக்கு காரில் சென்று திரும்பிய அய்யண்ணன் அம்பலம் உள்ளிட்ட இரண்டு பேர் சாலை விபத்தில் பலியாகினர். ‘இது விபத்து அல்ல; மண் லாரியை ஏற்றி அவர்கள் கொல்லப்பட்டனர். சதி இருக்கிறது’ என தேவர் சமூகத்தினர் குற்றம் சாட்டினர். இதனால் கலவரம் வெடித்தது.
போலீசார் கலவரத்தை கட்டுப்படுத்த பெரும்பாடு பட்டனர்.

கடந்த 1998ல் கன்னியாகுமரி மாவட்டம் கல்லாம் பொத்தை என்ற கிராமத்தில் முஸ்லிம்கள் மற்றும் மீனவர்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. ஒருவரையொருவர் வெட்டி சாய்த்துக் கொண்டனர். இதையடுத்து அங்கு ஒரு குண்டுவெடிப்பு நிகழ இரு சமூகத்தினரும் பெரும் கலவரத்தில் ஈடுபட்டனர். 13 வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. பலர் கைது செய்யப்பட்டனர்.

கடந்த 1999 ஜூலையில் மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் தினக்கூலி 150 ரூபாயாக உயர்த்தி தர வேண்டும் என போராடினர். பெண்கள் உட்பட 198 பேர் கைது செய்யப்பட்டனர். இதை கண்டித்து ஜூலை 23ல் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தலைமையில் நெல்லையில் பேரணி நடந்தது. இதில் கலவரம் வெடித்தது. போலீசார் தடியடி துப்பாக்கிச் சூடு நடத்தினர். உயிர் பயத்தில் ஓட்டம் பிடித்த 17 பேர் தாமிரபரணி ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர்.

கொடைக்கானல் பிளசன்ட் ஸ்டே ஓட்டல் ஊழல் வழக்கில் அ. தி. மு. க. பொதுச் செயலர் ஜெயலலிதாவுக்கு தனி நீதிமன்றம் 2000ம் ஆண்டு பிப். 2ம் தேதி இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதை கண்டித்து தமிழகம் முழுவதும் அ. தி. மு. க. வினர் போராட்டங்களில் இறங்கியதால் கலவரம் உருவாக்கியது. இதில் தர்மபுரி மாவட்டம் இலக்கியம்பட்டியில் கோவை வேளாண் கல்லுாரி மாணவியர் சுற்றுலா வந்த பஸ்சை அ. தி. மு. க. வினர் தீ வைத்து எரித்தனர். இதில் ஹேமலதா கோகிலவாணி காயத்ரி ஆகிய மூன்று மாணவியர் கொல்லப்பட்டனர்.

கடந்த 2001 ஆக. 12ல் சென்னையில் கருணாநிதி கைதை கண்டித்து தி. மு. க. வினர் பேரணி நடத்தினர். இந்த பேரணி மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் டி. ஜி. பி. அலுவலகத்தை கடந்தபோது பெரும் கலவரம் வெடித்தது. போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். கண்ணீர் புகை குண்டு வீச்சு நடத்தப்பட்டது. அதில் நான்கு பேர் இறந்தனர்; பத்திரிகையாளர் பலரும் தாக்கப்பட்டனர்.

2002 ஆக. 29ல் சென்னை மாநகராட்சி கூட்டத்தில் பெரும் கலவரம் வெடித்து. கவுன்சிலர்கள் ஒருவரை மற்றவர் தாக்கி கொண்டனர். மேயர் பதவியில் இருந்த ஸ்டாலினை நீக்கிவிட்டு துணை மேயராக கராத்தே தியாகராஜனை நியமனம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த கலவரம் நடந்தது. இதனால் மாநிலம் முழுவதும் பதற்றமான சூழ்நிலை நிலவியது.

2002 செப். 9ல் மதுரை மேலுாரில் கல்லுாரிகளை பல்கலைக் கழகங்களுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் பெரியளவில் போராட்டம் நடத்தினர். கலவரமும் வெடித்தது. போலீசார் கடுமையாக தடியடி நடத்தினர். 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.

கடந்த 2007 மே 9ல் தினகரன் நாளிதழ் கருத்துக் கணிப்பு வெளியிட்டது. இதனால் ஆத்திரமடைந்த தி. மு. க. வினர் மதுரையில் கலவரத்தில் ஈடுப்பட்டனர். தினகரன் நாளிதழ் அலுவலகத்தை தீ வைத்து கொளுத்தினர். இதில் தினகரன் ஊழியர்கள் மூன்று பேர் பலியாகினர்.

2007 ஆக. 14ல் தென்காசியில் இந்து முன்னணி மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினருக்கு இடையே பெரும் கலவரம்வெடித்தது. இதில் ஆறு பேர் இறந்தனர். அதில் மூன்று பேர் சகோதரர்கள். ஐந்து பேர் படுகாயமடைந்தனர். இதன் காரணமாக தென்காசியில் கலவரம் உருவாக்கி போலீசார் தடியடி நடத்தினர்.

கடந்த 2009 பிப். 19ல் சுப்பிரமணியன் சாமி மீது உயர் நீதிமன்ற வளாகத்தில் முட்டை வீசப்பட்டது தொடர்பாக சில வக்கீல்களை கைது செய்ய போலீசார் சென்றனர். இதற்கு வக்கீல்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே போலீசாருக்கும் அவர்களுக்கும் இடையே பயங்கர கலவரம் ஏற்பட்டது. இதில் உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள போலீஸ் நிலையம் தீ வைத்து எரிக்கப்பட்டது. போலீஸ் தடியடியில் வக்கீல்கள் நீதிபதிகள் காயமடைந்தனர்.

2011 நவ. 11ல் தலித் சமூகத்தைச் சேர்ந்த பழனிக்குமார் என்ற சிறுவன் கொல்லப்பட்டான். அப்போது தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தை சேர்ந்த ஜான் பாண்டியன் பரமக்குடியில் உள்ள இமானுவேல் சேகரனின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த சென்றபோது சிறுவனின் வீட்டிற்கு ஆறுதல் கூற சென்றார். அவரை போலீசார் தடுத்தனர். இதனால் போலீஸ் மீது கடும் தாக்குதல் நடத்தப்பட்டது. போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஏழு பேர் பலியாகினர். இதையடுத்து நடந்த கலவரம் பெரும் முயற்சிக்குப் பின் அடக்கப்பட்டது.

தர்மபுரி மாவட்டம் நாயக்கன்கொட்டாய் கிராமத்தை சேர்ந்த தலித் இளைஞர் இளவசரனும் வன்னியர் சமூகத்தை சேர்ந்த திவ்யாவும் காதலித்தனர். வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடி 2012 அக்டோபர் 10ம் தேதி திருப்பதியில் காதல் திருமணம் செய்து கொண்டது.

இதற்கு திவ்யா தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அப்பகுதியில் நவம்பர் 7ம் தேதி கலவரம் வெடித்தது. இதில் தலித்களின் குடிசைகள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. 297 வீடுகள் சேதப்படுத்தப்பட்டன. பேருந்து எரிப்பு போன்ற சம்பவங்கள் அரங்கேறின.

தொடர் சம்பவங்களால் இளவரசனை விட்டு திவ்யா பிரிந்து செல்ல இளவரன் 2013 ஜூலை 4ம் தேதி ரயில் தண்டவாளத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். தமிழகத்தையே உலுக்கியது இந்த சம்பவம்.

2012ல் நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் அணு உலை அமைக்கக் கூடாது என பெரும் போராட்டம் நடந்தது. கடலோர பகுதி மீனவர்களை ஒன்று திரட்டி உதயகுமார் என்பவர் போராட்டம் நடத்தினார். இதனால் அந்த பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது. போலீசார் தடியடி நடத்தி கண்ணீர் புகை குண்டு வீச்சு நடத்தி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

கடந்த 2013 அக். 11ல் நெல்லை மாவட்ட கிராமத்தில் தலித் இனத்தவர்களை முஸ்லிம்களாக மத மாற்றம் செய்யும் முயற்சி நடந்தது. இதனால் கலவரம் வெடித்தது. ஐந்து பேர் பலியாகினர். 21 பேர் படுகாயமடைந்தனர்.

கடந்த 2015 ஜூலையில் வேலுார் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பள்ளிகொண்டா கிராமத்தைச் சேர்ந்த பழனி என்பவரின் மனைவி பவித்ராவை ஆம்பூரை சேர்ந்த முஸ்லிம் இளைஞர் அழைத்து சென்று விட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக விசாரணைக்கு அழைத்து சென்ற இளைஞரை போலீசார் அடித்து கொன்று விட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து ஆம்பூரில் பெரும் கலவரம் வெடித்தது. போலீஸ் மீது கல்வீச்சு பேருந்து எரிப்பு போன்ற சம்பவங்கள் அரங்கேறின. பொதுமக்கள் போலீசார் மீது கடும் தாக்குதல் நடத்தினர். பெண் போலீசார் பலர் பாலியல் தொந்தரவுகளுக்கு ஆளாக்கப்பட்டனர். வழக்கமான ஆணையம் இத்யாதிகள் இந்த சம்பவத்தைத் தொடர்ந்து நடக்கவில்லை. ஆனால் 144 தடை சட்டம் பல மாதங்களுக்கு ஆம்பூரில் பிறப்பிக்கப்பட்டது.

இப்படி தொடர் கலவரங்கள் மக்களின் மாண்புகளை சிதைக்கும் வண்ணம் நடந்தாலும் அதற்க்கு சாயங்கள் பூசப்பாட்டான. ஆனால் இன்று முத்துநகரில் நடந்த கலவரத்திற்கு சாயங்களை பூச சிலர் தயாராகி புறப்பட்டு இருப்பார்கள். இங்கு தலைவர்களுக்கு இடமில்லை தனிமனிதனை காப்பாற்ற முயலும் சராசரி மனிதன் இருந்தாலே மகிழ்ச்சியாக இருந்திருக்கும் உயிர்களை இழந்தவர்கள் தலைவர்கள் அல்ல அன்றாடம் தன்னை நம்பி வாழும் குடும்பத்தினரின் ஒருவேளை உணவுக்கு உழைக்கும் வர்க்கமே. உயிர்பலிகளுக்கு ஒரு உத்திரவில் இலட்சங்களை வாங்கிடலாம். உயிரை. . ? வேதனையான நிகழ்வுகள் தான் தமிழகத்தில் காலங்காலமாக அரங்கேறி வருகிறது.

மக்களும் மனிதர்கள்தான் காக்கியுடை அணிந்தவர்களும் மனிதர்கள்தான் இரு முனைகளுக்கும் கூர்மைகள் உண்டு. மாறி. மாறி நடந்த மோதலில் அதிகாரிகளின் உத்திரவு காரணமாக ஆயுதம் வென்றது. அநியாயமாக மக்கள் கொல்லப்பட்டனர்.

காவலர்களும் மக்களும் காயம்பட்டு ஏராளமான இழப்புக்களை சந்தித்து உள்ளனர். வேதனைகளை சுமந்த வாழ்க்கையை நிம்மதியாக வாழ மக்களை அனுமதிக்க வேண்டியதுதான் உண்மையான ஜனநாயகம்.

தகவல்கள்: இணைய பதிவுகள்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories