தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புப் போராட்டம் கலவரமாக மாறியது. இதில் 12க்கும் மேற்பட்டவர்கள் பலியான நிலையில் வாட்ஸ் அப்,பேஸ் புக் மூலம் வதந்திகள் செய்திகள் பரவுவதைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதிலும் போராட்டங்கள் பரவி வருகின்றன.
இதனைத் தடுக்கும் பொருட்டு முதல் கட்டமாக மாநில அரசு மத்திய அரசின் உதவியுடன் தகவல்கள் பரவுவதற்கு முதல் காரணமாக இருக்கும் இணைய வசதியை நெல்லை மாவட்டம், தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டங்களில் முடக்க முடிவு செய்து கடந்த 23ஆம் தேதி மாலை முதல் கட்டமாக பி.எஸ்.என்.எல்.தரைவழி இணைய தளத்தினை முடக்கம் செய்தது.
அதன் பின் ஏர்டெல், ஜியோ உள்ளிட்ட அனைத்து இணைய இணைப்புகளும் முடங்கின. இதனால் இந்த மாவட்டங்களில் 10ஆம் வகுப்பு தேர்வு எழுதி அதனை வேலைவாய்ப்பு அலுவலக இணையதளத்தில் பதிவு செய்ய முடியாமலும், பனிரெண்டாம் வகுப்பு முடித்து கல்லூரியில் விண்ணப்பிக்க இருக்கும் மாணவர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் அனைத்து அரசு அலுவலகத்தில் விண்ணப்பம் அனுப்பவும் இணையம் முக்கிய மாக இருக்கும் நிலையில் இப்படி துண்டிப்பு செய்தது அனைத்து மக்களும் பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளனர்.




