விருதுகள் படும் பாடு – பாரத ரத்னா
திராவிடநாடு வேண்டும், இந்தியாவின் வரைபடத்திலிருந்து தமிழ்நாட்டை துண்டாக்குவோம், வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது என்றெல்லாம் தேசபக்த(?) கோஷங்களை முன்னிறுத்தி ஒரு தலைமுறையையே சீள் பிடிக்கவைத்த ஒருவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படவேண்டும் என கூக்குரல்கள்.
நாட்டின் மிக உயரிய விருது – கௌரவமான விருது…முதலில் மூதறிஞர் ராஜாஜிக்கு, தொடர்ந்து சாஸ்திரி, காமராஜ், வாஜ்பாய் என பல சிறந்த தலைவர்களுக்கு வழங்கப்பட்டது.
1988ல் எம்ஜிஆருக்கு வழங்கப்பட்ட உடன் சர்ச்சைகள் எழுந்தன. ஒரு நடிகர் – -மாநில முதல்வர், அவர் மீதும் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் (கருணாநிதி, ஜெயலலிதா அளவுக்கு இல்லை என்றாலும்) இருந்தன. அன்றைய அரசியலுக்கு, எம்ஜியார் மற்றும் அதிமுக வோட்டு காங்கிரசிக்கும், ராஜிவிற்கும் வேண்டியிருந்தது. கொடுத்தார்கள். இதையே, இந்த மோசமான முன் உதாரணத்தை வைத்து மீண்டும் தகுதி இல்லாதவர்க்கு கொடுக்க கூடாது.
ராஜிவ் காந்தியின் துயரமான மறைவால் அவருக்கு கொடுக்கப்பட்டது. இலங்கை தமிழர் பிரச்சினைக்கு அவர் நல்ல .பங்கு அளித்தார். என்பதை காரணமாக கூறலாம். ஆனால் பாருங்கள்! அந்த வருடம் தான் ஒப்பற்ற தலைவர்களான படேல் அவர்களுக்கும், தேசாய் அவர்களுக்கும், அந்த விருது வழங்கப்பட்டது.
எல்லா விருது வழங்கல்களிலும் அரசியல் உண்டு. ஹிந்தி நடிகர்கள் ராஜ்கபூர், சசிகபுர், இன்னும் பலர்,தெலுங்கு நடிகர் நாகேஸ்வர ராவ், கன்னட நடிகர் ராஜ்குமார், இவர்களுக்கு பிறகுதான் உலகபெரு செவாலியே விருது வாங்கிய சிவாஜி கணேசனுக்கு தாதா சாஹேப் விருது வழங்கப்பட்டது. அவர் உழைத்து பணமும் கொடுத்து வளர்த்த திமுக, காங்கிரஸ் இரண்டு கட்சி தலைவர்களும் இந்த தமிழனுக்கு, தகுதியுள்ள தமிழனுக்கு, எந்த ஒரு கௌரவத்திற்கும் குரல் எழுப்பவில்லை. (ஆனால் 1971ல் இந்திராவுடன் தனக்கிருந்த செல்வாக்கை வைத்து, அன்றைய முதல்வர் கருணாநிதி , அன்று திமுகவில் இருந்த எம்ஜியாருக்கு சிறந்த நடிகர் பட்டம், அதுவும் ஒரு சாதாரணப்படத்தில நடித்ததற்கு (?) சிபாரிசு செய்து வழங்கப்பட்டது. அவமானம். அசிங்கம் தமிழனுக்கு!!
அரசியல் வேறு – விருதுக்கான தகுதி வேறு என்பதை நிச்சயம் மத்திய அரசு புரிந்துகொண்டு தவறான, தகுதியற்ற அரசியல்வாதிகளுக்கு வழங்ககூடாது
கலைமாமணி போல், கட்சி, காசு என்று பார்த்து கொடுக்கும் கேவல நிலை பாரத ரத்னாவிற்கு வரவேண்டாம். இனி நல்ல தலைவர்களை காண்பது கடினம் என்றால் சில வருடங்களுக்கு இந்த விருதை நிறுத்தி வைத்து விடலாம்! மத்திய அரசு மீது இன்னும் நம்பிக்கை இருக்கிறது. செய்வார்களா !!
– முனைவர் தென்காசி கணேசன்




