பத்தனம்திட்ட: கேரளாவில் பெய்த கனமழை காரணமாக, சபரிமலை செல்லும் சாலைகள் கடுமையாக சேதமடைந்துள்ளன. நிறபுத்ரி, ஆவணிமாதப் பிறப்பு பூஜை ஆகியவற்றுக்கு பக்தர்கள் சபரிமலைக்குச் செல்ல முடியவில்லை.
இந்நிலையில் ஓணம் பூஜைகளின் போது பக்தர்களை அனுமதிக்க தேவசம் போர்டு முடிவு செய்தது. பம்பை செல்வதற்கான மாற்றுப் பாதை உள்ளிட்ட விவரங்களை, தேவசம் போர்டு வெளியிட்டது. ஆனால், கேரள உயர் நீதிமன்றம், இதற்கு அனுமதி மறுத்து விட்டது. சாலைகளை சரி செய்யும் வரை, சபரிமலையில் பக்தர்களை அனுமதிக்க வேண்டாம் என தேவசம் போர்டுக்கு உத்தரவிட்டது.
இதை அடுத்து ஓணம் பூஜைகளுக்கு பக்தர்கள் நேற்று அனுமதிக்கப்படவில்லை. மாலை 5:00 மணிக்கு மேல்சாந்தி உண்ணி கிருஷ்ணன் நம்பூதிரி நடை திறந்தார். இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. இன்று முதல் 27ஆம் தேதி வரை, ஓண பூஜைகளும் வழக்கமான பூஜைகளும் நடைபெறும். 27ஆம் தேதி இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும்.
சபரிமலையில் பூஜாரிகளும், குறைந்த அளவு ஊழியர்களும் மட்டுமே உள்ளனர். இதனால் சரண கோஷ முழக்கம் இன்றி, சபரிமலை அமைதியாக காணப்படுகிறது. அடுத்து புரட்டாசி மாத பூஜைகளுக்காக, செப்.16ஆம் தேதி கோவில் நடை திறக்கப்படும். அதற்கு முன் பம்பையில் தேவையான வசதிகள் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தேவசம் போர்டு அறிவித்துள்ளது.
வரும் 28ஆம் தேதி தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தலைமையில் அனைத்து துறை அதிகாரிகளின் கூட்டம் நடைபெறுகிறது. பம்பையை சீரமைக்க 100 கோடி ரூபாய்க்கு மேல் தேவைப்படும் என்று தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.
மண்டல மற்றும் மகரவிளக்கு சீசன் துவங்க இன்னும் 83 நாட்கள் உள்ளன. அதற்குள் தேவசம்போர்டு பெரிய சவாலை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. சாலை வசதி, தங்கும் வசதி உள்ளிட்ட அனைத்தையும் ஏற்பாடு செய்தாக வேண்டும்!





