
இந்தத் தொடரைப் படித்து வரும் ஒரு நண்பர் என்னிடம் கேட்டார் ‘’ காந்தியை கோட்ஸே கொன்றதை நீங்கள் நியாயப்படுத்துகிறீர்களா?
கொலை செய்வது குற்றம் என்று சட்டம் சொல்லும் போது அதை நியாயப்படுத்துவது எனும் பேச்சே எழவில்லை. கொலைக்கான தண்டனையையும் சம்பந்தப் பட்டவர் களுக்கு நீதிமன்றம் வழங்கி விட்டது.
ஆனால், கோட்ஸேயும் காந்தி கொலையில் சம்பந்தப்பட்டுள்ள ஏனையோரும் ஏன் இந்தக் கொலையைச் செய்தார்கள். அவர்கள் எழுப்பியுள்ள கேள்விகளுக்கு நிச்சயம் பதில் தேவை.
இந்த தேசம் காந்தியின் தனிப்பட்ட சொத்தல்ல… அவர் இஷ்டத்திற்கு நடந்துக் கொள்வதற்கு!
இந்த தேசத்திற்கு, இந்த நாட்டுடைய பண்பாட்டிற்கு ஊறு விளைவிக்கும் விதமாகவே காந்தியின் செயல்பாடுகள் இருந்தன என்பதுதான் உண்மை.. அவர் ஒரு போலி அகிம்ஸாவாதி!
இது குறித்த அவருடைய செயல்பாடுகள் அனைத்தும் முன்னுக்கு பின் முரணானவை!
1927ல் வீர சாவர்க்கர் எழுதி வெளியான ‘ THE GANDHIAN CONFUSION ‘ எனு புத்தகம் காந்தியின் இரு வேறு முகங்களை தோலுரித்துக் காட்டுகிறது.
‘சொறி நாய்களை கொல்வதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் காந்திஜி என்று அவரைக் கேட்டப் போது, ‘பெரிய அளவிலான வன்முறையை தவிர்க்க சிறிய அளவிலான வன்முறை ஏற்புடையதே’ என்றார்.
காந்தியின் இந்த கருத்திற்கு ஜைன சமூகத்தினர் கண்டனம் தெரிவித்தனர். அதே சமயம், ஆங்கிலேயர்களுக்கு எதிராக சத்தியாகிரகம் என்று வந்த போது சொறி நாய்களை கொல்வதற்குக் கூட ஆயுதம் ஏந்தக் கூடாது என்றார்.
சத்யாகிரகி இறக்க நேரிட்டாலும் பரவாயில்லை, அகிம்ஸையை கைவிடக் கூடாது என்றார். ஆனால் இதே நபர்தான் ஆங்கிலேயப் படைகளில் இந்தியர்கள் பெருமளவில் சேர்ந்து ஜெர்மனிக்கு எதிராகப் போரிட வேண்டும் என்றார்.
ஜெர்மனியர்களை கொல்வது மட்டும் இம்சையில்லையா ?
எளிய வார்த்தைகளில் கூற வேண்டுமென்றால், ஆங்கிலேயர்களுக்கு எதிராக ஆயுதங்கள் ஏந்திப் போரிடுவது என்றால் அது வன்முறை; அதுவே ஆங்கிலேயர்களுக்கு ஆதரவாக ஜெர்மனியர்களைக் கொன்று குவித்தால் அது வன்முறையல்ல!
எவ்வளவு கொள்கை முரண்பாடு..!?
முஸ்லீம்களை பொறுத்த வரைக் கூட காந்தி குழப்பவாதியாகவே திகழ்ந்தார்.
முஸ்லீம்களை தாய் மதத்திற்கு திரும்பக் கொண்டு வந்து கொண்டிருந்த ஆரிய சமானத்தின் சுவாமி ச்ரத்தானந்தாவை ரஷித் என்ற முஸ்லீம் வெறியன் கொன்று விட்டான்.
ரஷீத் தன் சகோதரனைப் போன்றவன்; சில தீய சக்திகளின் வழி காட்டுதலால் இப்படி நடந்து கொண்டு விட்டான்; அவனை குற்றவாளியாகக் கருதக் கூடாது என்று வாதாடினார்.
ஆனால் இதே காந்தி எர்னஸ்ட் டே எனும் ஆங்கிலேய அதிகாரியை கோபிநாத் ஸஹா கொன்ற போது விண்ணுக்கும் மண்ணுக்குமாய் துள்ளிக் குதித்தார். ஸஹாவை ஆதரித்த தேச பந்து சித்தரஞ்சன் தாஸூக்கு கண்டனங்களை தெரிவித்தார்.
காந்தியின் போலித்தனத்தைக் கண்டு ஒரு பக்கம் கோபப்படுவதா சிரிப்பதா என்றே தெரியவில்லை.
டாக்டர் பாபாசாஹேப் அம்பேத்கர் மற்றும் வீர சாவர்க்கர் பல புத்தகங்களை எழுதியுள்ளனர். அவர்களுடைய எழுத்துக்களிலே நேர்மை பளிச்சிடுகிறது.
இந்த நாட்டின் பல்வேறு பிரச்சனைகளைத் துல்லியமாக ஆராய்ந்து எழுதியுள்ளனர். தீர்வுகளையும் கூறியுள்ளனர். தேசத்தை நேசிக்கும் அனைவரும் அந்த புத்தகங்களை படிக்க வேண்டும்.
( தொடரும் )
– கட்டுரை: யா.சு.கண்ணன்




