
‘சேதமில்லாத ஹிந்துஸ்தானம் அதை தெய்வமென்று கும்பிடடி பாப்பா ‘ என்று,’ ‘ அகண்ட பரிபூரண ஹிந்துஸ்தானத்தை ‘ தெய்வமென்று கும்பிடும்படியாக குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கிறான் மகாகவி பாரதி.
ஆனால், காந்தி, நேரு உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களோ தெய்வ நிந்தனையில் ஈடுபட்டனர். அந்த தெய்வத் திரு உருவைச் சிதைத்தனர்.
ஆம்,பாரத அன்னையின் இரு கரங்கள் வெட்டப்பட்டு பாகிஸ்தான் உருவானது. இது உண்மையான தேசப்பக்தர்களுக்கு தாங்கொணா வேதனையை அளித்தது.
என்ன செய்வது, ஏது செய்வது என்று ஒரு தவிப்பு ,கோபம்… ஆங்கிலேயர்கள் மோசடி செய்து விட்டார்கள்,காங்கிரஸ் தேசத்திற்கு துரோகம் இழைத்து விட்டது. பாரதத்திற்கு சுதந்திரம் என்பது ஒரு கேலிக்கூத்து, கேவலப்படுத்துதல் ஆகி விட்டது…
ஆகஸ்ட் 15 ,சுதந்திர தினம்..பாரத அன்னையை வேதனைப்படுத்திய தினமாக அல்லவா மாறி விட்டது…!
வாரக்கணக்கில்,மாதக்கணக்கில் கோட்ஸே, ஆப்தே மற்றும் அவர்களின் நண்பர்கள் சிலரும் உட்கார்ந்து யோசித்தார்கள், மண்டையை போட்டு குடைந்து கொண்டார்கள்.
ஏதாவது செய்ய வேண்டும்…பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தும் விதமாகச் செய்ய வேண்டும்….நாடே குலுங்கும் அளவிற்கு செய்ய வேண்டும்…
அவர்களுக்கு பல யோசனைகள் தோன்றின.. தேசப் பிரிவினையின் விளைவாக பாகிஸ்தானுக்கு அதன் பங்காகக் கிடைத்த துப்பாக்கிகள், வெடி மருந்துகள் ஆகியவற்றை ஏற்றிச் சென்ற ரெயிலை வெடி வைத்து தகர்க்கலாமா..
அல்லது ஜின்னா மற்றும் அவரது அமைச்சரவை சகாக்களை ஒட்டு மொத்தமாகக் கொன்று குவித்து விடலாமா… அல்லது பாலங்களை தகர்க்கலாமா…?!
அல்லது அதுவரை பாரதத்தோடு இணையாது போக்குக் காட்டிக் கொண்டிருந்த ஹைதராபாத் சமஸ்தானத்தின் மீது திடீர் தாக்குதல் நடத்தி அந்தப் பகுதியைக் கைப்பற்றலாமா..? இப்படியாக பல யோசனைகள் அவர்களுக்கு வந்து போனது.
இந்த காரியங்களையெல்லாம் செய்து முடிப்பதற்காக மிகுந்த பொருட்செலவில், ஆபத்துக்களை பொருட்படுத்தாமல், வெடிகுண்டுகள், துப்பாக்கி முதலிய ஆயுதங்களை சேகரிக்கத் தொடங்கினர்.
ஆனால்….ஆனால்…. இப்போது அவர்களின் இலக்கு.. திடீரென மின்னல் போல் தோன்றியது…
‘இந்த தேசத்தின் பிதா என்றழைக்கப்பட்டவரின் வாழ்க்கையை முடிவிற்குக் கொண்டு வருவது என் கடமை என்று எனக்குத் தோன்றியது’ என்று வழக்கின் போது கோட்ஸே பெருமிதத்துடன் வாக்குமூலம் அளித்தார்.
இந்த அவரின் கடமையை நிறைவேற்றியதன் மூலம், நாட்டின் சரித்திரத்தில் மறக்க முடியாத விதத்தில் அவர் இடம் பெற்று விட்டார் என்பதும் உண்மை!
( தொடரும் )
எழுத்து: யா.சு.கண்ணன்



