காந்தி கொலையும் பின்னணியும் – பகுதி 32…
‘ FREE INDIA SOCIETY ‘ ன் உள்வட்ட உறுப்பினர்கள் ‘ வெடிகுண்டுகள் தயாரிப்பதென முடிவுச் செய்து, அதற்கான தொழிற்நுட்பத்தைப் பெறுவதற்காக நிதி திரட்டினர்.
மூன்று நம்பகமான நபர்கள் தெரிவுச் செய்யப்பட்டு, பிரான்ஸ் நாட்டுத் தலைநகரமான பாரீஸுக்கு அனுப்பப்பட்டனர்.
அங்கு தங்கியிருக்கக் கூடிய ரஷ்ய புரட்சியாளர் யாரையாவது கண்டு பிடித்து, அவரிடமிருந்து வெடிகுண்டு தயாரிப்பதற்கான தொழில் நுட்பத்தை பெற வேண்டும் என்பது பயணத்தின் நோக்கம்.
அங்கு முதலில் ஒரு போலி பேராசிரியரால் ஏமாற்றப்பட்டனர்.
ஆயினும் மனம் தளர்ந்து விடவில்லை.
ரஷ்யாவிலிருந்து நாடு கடத்தப்பட்டு பாரீஸிலிருந்த ஒரு புரட்சியாளரின் தொடர்பு கிடைத்தது.
அவர், வெடிகுண்டுகள் தயாரிப்பதற்கான முறைகள், அவற்றை புரட்சிக்கர வேலைகளுக்கு பயன் படுத்தும் விதம் ஆகியவற்றை சொல்லிக் கொடுத்தார்.
ஆதாரபூர்வமான கையேடு ஒன்றையும் கொடுத்தார்.
அதில் பல்வேறு விதமான வெடிகுண்டுகள் , அவற்றை தயாரிக்கும் முறை, பயன்கள் என அனைத்து விவரங்களும் படங்களுடன் விளக்கப்பட்டிருந்தன.
இதற்காக அந்த ரஷ்ய புரட்சியாளர் ஒரு பைசா கூட வாங்கிக் கொள்ளவில்லை.
ஆனால்….
இந்த கையேடானது சாவர்க்கரால் தயாரிக்கப்பட்டு, லண்டனில் அச்சிடப்பட்டது என, அன்றைய இந்திய நாட்டிலிருந்த ஆங்கிலேய அரசின் காவல் துறை குற்றஞ் சாட்டியது.
விரைவில் பாரத நாடெங்கும் பல்வேறு பகுதிகளுக்கு அந்த கையேட்டின் நகல்கள் விநியோகமானது.
காவல்துறை தேடுதல் வேட்டையின் போது,
கல்கத்தா, அலகாபாத், லாகூர், நாஸிக் மற்றும் பூனா உள்ளிட்ட இடங்களிலிருந்து கையேட்டின் நகல்கள் பறிமுதல் ஆயின.
ஒரு நகல், சாவர்க்கரின் மூத்தச் சகோதரர் பாபுராவ் அவர்களின் வீட்டிலிருந்து கிடைத்தது.
இதனால், ‘ மேன்மைப் பொருந்திய பேரரசிற்கும், பேரரசருக்கும் எதிராக போர் தொடுக்க சாவர்க்கர் தயாராகி வருவதாக ஆங்கிலேய அரசு வழக்குப் பதிவு செய்தது.
பாபுராவ் கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, அந்தமானுக்கு நாடு கடத்தப்பட்டார்.
அங்கு சொல்லொணா சித்திரவதைகளுக்கு ஆளானார்.
பாபுராவ் என அறியப்பட்ட கணேஷ் தாமோதர சாவர்க்கர் அபிநவ் பாரத சொஸைட்டி எனும் அமைப்பை தொடங்கி ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போராடியவர்.
அவரைப் பற்றிக் கூறுவதற்கு ஏராளமான விஷயங்கள் இருந்தாலும், அவை கிளைக் கதைகள் ஆகி விடும் என்பதால் இந்த தொடரில் கூற இயலவில்லை.
பாபுராவ் சாவர்க்கர் போன்று பாரத நாட்டின் சுதந்திரத்திற்காகப் பாடுபட்டவர்கள், ஆனால் அதிகம் அறியப்படாது இருப்பவர்கள் (UNSUNG HEROES OF FREEDOM FIGHT ) ஏராளம்..
அவர்களின் நினைவுகள் போற்றுதற்குரியன..
பயிரிடும் போதே தெரிகிறதா என்ன, எந்த அரிசி அட்சதை அரிசி ஆகும், எந்த அரிசி வாக்கரிசி ஆகுமென்று…
அது அரிசியின் குற்றமல்ல…
விதியின் விளையாட்டின் காரணமாக காந்தி, நேரு போன்ற சிலர் முன்னிலை பெற்று விடுகின்றனர்…
கட்டடங்களின் மேற்பரப்பு போல் பூச்சு வேலையும் வண்ணமும் கிடைக்கப் பெறுகின்றனர்…
தேசத்திற்காக, துயரங்கள் பல தாங்கியவர்கள், தம் இன்னுயிர் நீத்தவர்கள் எண்ணற்றோர் உள்ளனர்…
அவர்கள் தான் கட்டிடத்தின் அஸ்திவாரம் போன்றவர்கள்….. என்பதை நியாய உணர்வுக் கொண்டோர் மறந்து விடக் கூடாது…
( தொடரும் )
எழுத்து: யா.சு.கண்ணன்




