27-03-2023 3:41 AM
More
  Homeகட்டுரைகள்இந்தியாவின் இரும்பு மனிதர்... சர்தார் வல்லபபாய் படேல்... வாழ்க்கையுடன் ஒரு பயணம்!

  To Read in other Indian Languages…

  இந்தியாவின் இரும்பு மனிதர்… சர்தார் வல்லபபாய் படேல்… வாழ்க்கையுடன் ஒரு பயணம்!

  patelstatue2 - Dhinasari Tamil

  இந்தியாவின் இரும்பு மனிதர் – அப்டின்னு போற்றப்பட்டவர் யார் தெரியுமா?

  என்ன..? இரும்பு மனிதரா?

  ஆமாம்.. அவ்வளவு உறுதியா முடிவுகள் எடுத்து, வலுவான தலைவராக திகழ்ந்த அவரை நாம் இரும்பு மனிதர் அப்படின்னே வரலாற்றில் பதிவு செய்திருக்கிறோம். சரி.. அவரைப் பத்தி சொல்றேன்.. அவர்தான் சர்தார் வல்லப பாய் படேல். அவரை நவீன இந்தியாவின் ‘பிஸ்மார்க்’ அப்படின்னும் சொல்வாங்க…

  ஓ.. இப்ப நினைவுக்கு வந்திடுச்சி. இந்திய விடுதலைப் போராட்டத்துல காந்தியடிகளுக்கு துணையாக இருந்த சர்தார் வல்லப பாய் படேலைத்தானே சொல்றீங்க… அவரை சர்தார்ன்னு சொன்னாத்தான் சட்டுனு நினைவுக்கு வருது. அவரைப் பத்தி நான் நிறையவே படிச்சிருக்கேன். அஞ்சா நெஞ்சர்… செயலாற்றும் திறன் மிக்கவர்… நினைத்ததை நினைத்தபடி செய்து முடிக்கும் ஆற்றல் மிக்கவர்… அப்டின்னெல்லாம் படிச்சிருக்கேன்.

  ஆமாம். ஆனா அவருக்கு ஏன் இந்த ‘சர்தார்’ அப்டிங்கற பெயர் வந்துச்சு தெரியுமா? அதையும் சொல்றேன் கேளுங்க. வல்லப பாய் படேல் இதே அக்டோபர் மாதம் 31ஆம் நாள் பிறந்தார். அது 1875 ஆம் வருடம். குஜராத்ல இருக்கற கரம்சாத் கிராமத்துல பிறந்தார். அவரோட தந்தை ஜாவர் பாய் படேல் ஒரு விவசாயி. அதனால தன்னோட அப்பாவுக்கு உதவியா… அந்த சின்ன வயசிலயே விவசாய வேலைகள்ல ஈடுபட்டாராம். அப்போ அவருக்கு வயது நான்குதானாம்.

  வயல் வேலைன்னா… எருமை மாடுகளைக் குளிப்பாட்டுறது, வயல்ல உழவு வேலை செய்யறதுன்னு நிறைய இருக்குமே. வயல்ல இறங்கினா, குளிர், மழை, காலை சுடும் கோடை வெய்யில்னு எல்லாத்தையும் சகிச்சிக்கணுமே… இதை எல்லாம் எப்படி அந்த பிஞ்சு வயசுல வல்லப பாய் தாங்கிக்கிட்டாரு..?

  ஆமா.. அப்படி சின்ன வயசில எல்லாத்தையும் தாங்கிக்கிட்டதாலதான்… பெரியவரானதும் அது அவரை உறுதி மிக்க இரும்பு மனிதரா மாத்திச்சுன்னு சொல்லலாம். வல்லப பாய்க்கு சோமா பாய், நார் பாய், வித்தல் பாய், காஷி பாய் அப்டின்னு நான்கு சகோதரர்கள் இருந்தாங்களாம். வீட்டின் கடைக்குட்டியான தங்கை தாஹிபா பேர்ல வல்லப பாய்க்கு ரொம்பவே அன்பு இருந்துதாம். உறுதியா இருந்தாலும், அன்பும் அரவணைப்பும் பணிவும் இருந்ததாலதான் அவரை எல்லோரும் விரும்பினாங்க. வயல் வேலை அப்ப, அங்கே வேலை செய்கிற கூலி விவசாயிகள் கிட்டே பாசத்தோடயும் நட்போடயும் இருப்பாராம் சிறுவரான வல்லப பாய். அதனால அந்த சிறுவனைக் கூட அவங்கள்லாம், தலைவாங்கிற பொருள் வர்ற ’சர்தார்’ அப்டின்னு கூப்பிட்டாங்களாம்…

  ஆமா நானும் கூட படிச்சிருக்கேன். ஒருநாள் வயல் வேல முடிஞ்சு வீட்டுக்கு ஓடி வந்த வல்லப பாய், அம்மாகிட்டே “அம்மா அம்மா… கூலி விவசாயிகள்ல பல பேர் சாப்பிடுறதே இல்லையாம்மா” என்று வேதனையோடு சொன்னாராம். அதற்கு அவர் அம்மா, ”ஆமா வல்லப பாய்! நம் நாட்டுல எத்தனையோ ஏழைகள் ஒரு வேளைகூட சாப்பிட முடியாம பட்டினி கிடக்கிறாங்க…” என்று சொன்னாராம். அதுலேர்ந்து, அந்த சிரமத்தை தானும் உணர்ந்து அறியனும்னு மாசம் இரண்டு நாட்கள், தண்ணீர்கூட குடிக்காமல் பட்டினி கிடப்பதை ஒரு வழக்கமா ஆக்கிக்கிட்டாராம்… நாளாக நாளாக… நல்ல விஷயங்கள்ல பிடிவாதமும் அச்சமற்ற தன்மையும் அவருக்கு இப்படி வளர்ந்ததாம்…

  வல்லப பாய் இருந்த ஊருக்கு பக்கத்துல ‘நாடியாட்’ அப்படின்னு ஒரு நகரம் இருந்தது. பள்ளிக்கூடம் போய் படிக்கணும்னா அங்கதான் போகணும். வல்லப பாயும் அங்கதான் பள்ளிக்கூடத்துக்கு போனாராம். அந்த ஆங்கில உயர்நிலைப் பள்ளில படிச்சதால, அவருக்கு பிற்காலத்தில் வழக்கறிஞர் தொழில் பேர்ல ஆர்வம் வந்தது. அந்த குறிக்கோளோட, வழக்கறிஞர் தொழிலுக்கு முயன்று படிச்சி, தேர்ச்சி பெற்றாராம். வல்லப பாய் படேலோட மூத்த சகோதரர் வித்தல் பாய் படேலும் ஒரு சிறந்த வழக்கறிஞராகவே திகழ்ந்தாராம். அவரும் இந்திய விடுதலைப் போராட்டத்துல ஈடுபட்டு, வல்லப பாய்க்கு ஒரு முன்னுதாரணமா விளங்கினாராம்.

  1901 ஆவது வருடத்துல கோத்ரா அப்டிங்கற ஊர்லதான் படேல் வழக்கறிஞரா தன்னுடைய தொழிலை தொடங்கியிருக்காரு. ஆனா, அதே வருடத்துல “பாரிஸ்டர்” பட்டம் பெறணும்னு இங்கிலாந்துக்குப் போனார் படேல். பிறகு 1913-ல நாட்டுக்கு திரும்பினார். குஜராத்தின் முக்கிய நகரான அகமதாபாத்துலதான் அவர் வழக்கறிஞர் தொழில் தொடங்கி மிகக் குறுகிய காலத்திலேயே சிறந்த வழக்கறிஞர்னு புகழ் பெற்றாராம்.

  படேல் தன்னுடைய துவக்க காலத்துல அப்படில்லாம் போராட்டத்துல இறங்கல. ஆனா காந்திஜி ஒரு குறிக்கோளுடன் விடுதலைப் போராட்டங்கள்ல தீவிரமா ஈடுபட்ட போது, அவருக்கு உறுதுணையா நின்று இவரும் போராட்டத்துல இறங்கினார். 1917ஆம் வருடம் பீகார்ல உள்ள சம்பரான் மாவட்டத்துல அவுரித் தோட்டத் தொழிலாளர்களுக்காக போராட்டத்துல இணைஞ்சாராம்… அதுக்குப் பின் 1918 ல… அகமதாபாத்ல நடந்த தொழிலாளர் வேலைநிறுத்த போராட்டத்துல மகாத்மா காந்தி விரும்பியதன் பேர்ல தொழிலாளர்களுக்கு தலைமை ஏற்றார். 1923ல நாகபுரில நடந்த கொடிப் போராட்டத்துல ஈடுபட்டார். 1928ல பர்தோலி அப்டிங்க இடத்துல நடந்த நிலவரி உயர்வுக்கு எதிரான போராட்டத்துல களம் இறங்கி, அந்த அறப்போராட்டத்தை வெற்றி பெறச் செய்தாராம். அதைப் பார்த்த மகாத்மா காந்தி… அவரைப் பாராட்டி, அவருக்கு ‘சர்தார்’ அப்டிங்கற பட்டத்தையே வழங்கி.. எல்லோரும் அப்படியே அவரைக் கூப்பிடச் செய்தாராம்…

  ஆமாம். சின்ன வயசில் விவசாயிகள் அவரை சர்தார்னு சொன்னாங்க… அப்புறமா காந்திஜி சொல்லி மற்ற எல்லோருமே சர்தார்னு கூப்பிட ஆரமிச்சிட்டாங்க.. நல்லா இருக்கு இந்த தகவல். சரி… படேல் ஏதாவது போராட்டத்துல ஈடுபட்டு சிறைக்கு போயிருக்காரா?

  ஆமாம். 1930ல சட்ட மறுப்பு இயக்கம் நடந்தது. அதுல காந்திஜியுடன் சேர்ந்து போராட்டம் நடத்தி முதன் முறையா கைது செய்யப்பட்டாராம். அதற்குப் பிறகு 1931-ஆம் ஆண்டுல இந்திய தேசிய காங்கிரஸ் தலைவரா பொறுப்பேற்று மூன்று ஆண்டுகள் இயக்கத்தை வழிநடத்தினார் படேல். பின்னரும் கூட 1940-ஆம் ஆண்டுல நடந்த தனிநபர் சட்டமறுப்பு இயக்கத்துல ஈடுபட்டு, கைதாகி சிறைவாசம் அனுபவித்துள்ளார். ஆனா, உடல் நலக் குறைபாடு காரணமாக அடுத்த ஆண்டே விடுதலை செய்யப்பட்டாராம்…

  ****
  முதல் உலகப் போர் முடிஞ்சதும் இஸ்லாமிய உலகின் தலைவர் அப்டின்னு துருக்கி அதிபர் காலிஃப்பை தலைவராக ஏற்க ஆங்கில அரசு மறுத்தது. எனவே, அவரது தலைமையைப் பாதுகாக்கும் வகையில் உலகில் உள்ள முஸ்லிம்கள் அனைவரும் தீவிர இயக்கம் ஒன்றை நடத்தினார்கள். அந்த இயக்கம் இந்தியாவில் ‘கிலாபத்’ இயக்கம் என்று அழைக்கப் பட்டது. வல்லப பாய் படேல் இந்து முஸ்லிம் ஒற்றுமையைப் பெரிதும் விரும்பினார் என்பதால், அவரும் காந்தியடிகளுடன் இணைந்து கிலாபத் ஆதரவு இயக்கத்தில் ஈடுபட்டாராம்.

  அடுத்து வல்லப பாய் படேல் மீண்டும் சிறை செல்லக் காரணமாக அமைந்தது வெள்ளையனே வெளியேறு இயக்கம்தான். பம்பாயில் 1942 – ஆகஸ்ட் 8- ஆம் தேதி காங்கிரஸ் கட்சி மாநாடு நடந்தது. அப்போது “வெள்ளையனே வெளியேறு” இயக்கத்தை நடத்துவது என்று தீர்மானம் நிறைவேறியது. அப்போது காந்தியடிகளும் மற்ற தலைவர்களும் கைதாகினர். ஆகஸ்டு 9 ஆம் நாள் படேலும் கைதானார். அன்று முதல் 1945 ஜூன் மாதம் வரை அகமது நகர் கோட்டைச் சிறையில் இருந்தார் படேல்.

  சரிதான்.. ஆனா படேல் எப்போ உள்துறை அமைச்சராக இருந்தார்..?

  அது இடைக்கால அமைச்சரவை பொறுப்பேற்ற போது… அதாவது 1946 ஆம் ஆண்டுல, ஜவாஹர்லால் நேருவின் இடைக்கால அமைச்சரவையில் படேல் இடம்பெற்றார். அப்போதுதான் அவர் உள்துறை அமைச்சராகப் பொறுப்பேற்று திறம்பட செயலாற்றினார். அவர் அப்போது பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அந்த நெருக்கடிகளை தம் இரும்புக் கரம் கொண்டு அடக்கினார் படேல். அந்த அளவுக்குத் தெளிவும் துணிவும் மிக்கவராக இருந்தார்.

  ஆமாம்.. 1946–47 ஆம் ஆண்டுகள்ல ஆங்கிலேயர்களுக்கும், இந்தியத் தலைவர்களுக்கும் இடையில் நாட்டின் விடுதலை, சுயராஜ்யம் தொடர்பாக நடைபெற்ற பேச்சு வார்த்தைகள்ல படேலும் பங்கேற்றார் அப்டின்னு தெரியும். சரி… படேலை இரும்பு மனிதர்னு சொல்றோமில்லையா..? அதற்கான சூழ்நிலை எப்போ வந்தது. எப்படி வந்தது?

  நம்ம நாடு 1947ல விடுதலை பெற்றது. அப்போ வல்லப பாய் படேல்தான் இந்தியாவின் துணைப் பிரதமர் ஆனார். ஆனா… ஏற்கெனவே உள்துறை பொறுப்பை கவனிச்சதால், மீண்டும் அவருக்கு ‘உள்துறை’ப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. அப்போதுதான் அவருடைய முழு திறனும் வெளிப்பட்டது. நாடு விடுதலை பெற்றபிறகு, ஆங்கில அதிகாரிகள்ல பெரும்பாலானவங்களும் வெளியேறியபோது, படேல் அந்தப் பதவிகள்ல தகுதியான இந்தியர்களை நியமிச்சார். நிர்வாகத்தைச் செம்மைப் படுத்தினார்னு சொல்லலாம்…

  ஆனா.. படேல்னு சொன்னா உடனே நாம சொல்றது அவர், சுதேச சமஸ்தானங்களை ஒன்றிணைச்சார் அப்படிங்கிறதுதான். இந்திய ஒருமைப்பாட்டை முன்னிறுத்தி, சுதேச மன்னர்களிடமிருந்து அந்த அந்தப் பகுதிகளை எல்லாம் இந்தியாவுடன் இணைக்கும் பணியை மிகச் சரியா நிறைவேற்றினார் என்பார்களே…

  ஆமாம். இந்தியா சுதந்திரம் பெற்ற போது, ஆங்கிலேயர்கள் இந்தியாவுக்கு பிரச்னைகள் ஏதும் இல்லாம சுதந்திரத்தை கொடுத்துட்டுப் போகல… பாகிஸ்தான்னு ஒரு தலைவலியை அளித்த மாதிரி… இந்தியாவுக்குள்ள துண்டு துண்டா அங்கேயும் இங்கேயுமா கிடந்த சுதேச சமஸ்தானங்கள் அப்டிங்கற தலைவலியையும் சேர்த்தே கொடுத்துட்டுதான் வெளியேறினாங்க.. அப்படி, இந்தியாவுக்கு மிகப் பெரிய தலைவலியைக் கொடுத்த சமஸ்தானங்கள் ஜுனாகத், ஹைதராபாத், காஷ்மீர் இந்த மூணும்தான்.

  அப்படின்னா, இந்த மூணு சமஸ்தாங்கள் மீதும் இந்தியா சார்பில போர் தொடுக்கப்பட்டதா? சண்டை போட்டுதான் இந்தப் பகுதிகளை எல்லாம் இந்தியாவோட சேர்த்தாங்களா?

  ஆமாம்… ஹைதராபாத் நிஜாம் அரசைப் பொறுத்தவரை, ராணுவ நடவடிக்கைக்குப் பின்னரே, அதை இந்தியாவுடன் இணைத்தார். அதே மாதிரி ஜுனாகத் அரசு தொடர்பாவும் அவர் நடவடிக்கை எடுக்க நேர்ந்தது. இப்படி இந்திய ஒருமைப்பாட்டைக் காப்பதுல அவர் மேற்கொண்ட செயல் திட்டங்கள் எல்லாமே இன்றளவும் நாம போற்றி கொண்டாடத் தக்கவைதான்…

  ஆமாம்.. புதிய இந்தியாவை உருவாக்குறதுல சிறந்த சிற்பியாக விளங்கினார் படேல் அப்டினு தெரியும். அப்படி என்னல்லாம் செய்தார் படேல். இன்னும் ஹைதராபாத் நிஜாம் மீது எடுத்த நடவடிக்கை பத்தில்லாம் சொல்லுங்க…

  patel statue - Dhinasari Tamil

  ஹைதராபாத் சமஸ்தானம்தான் அப்போ பெரிய பிரச்னையா இருந்துது… அதை இந்தியாவுக்குள் கொண்டு வர படேல் ரொம்பவே தீவிரம் காட்டினார். அதுக்குக் காரணம் இருந்தது… என்னன்னா அங்க இருந்த மக்கள்ல 85 சதவீதம் பேருக்கு மேல ஹிந்துக்கள்தான். ஆனா அதை ஆட்சி செய்து வந்தவர் மீர் உஸ்மான் அலி கான் என்ற நிஜாம். அப்போது அவர்தான் உலகின் பெரிய பணக்காரர்னு சொல்லலாம்… அவருக்கு 86 மனைவிகளும் 100 குழந்தைகளும் இருந்ததாங்களாம். எல்லோருமே அந்த அரண்மனையிலதான் இருந்தாங்களாம்… ஆனா மக்கள் எல்லாம் விவசாயிகள், தொழிலாளர்கள்…

  ஆமா.. கேள்விப் பட்டிருக்கிறேன். அவர் முழுக்க முழுக்க பெண்களாலேயே உருவாக்கப்பட்ட ‘பாண்டு ‘ வாத்தியக் குழு வெச்சிருந்தாரு. அரண்மனை பணிகளை கவனிக்க 15 ஆயிரம் ஊழியர்கள் இருந்தாங்களாம். 3000 அராபிய மெய்க்காப்பாளர்கள் அவருக்கு இருந்தாங்கன்னெல்லாம் சொல்வாங்க .

  ஆனா இவ்ளோ இருந்தாலும் தன்னோட குடிமக்களின் அமைதியான வாழ்வை அவர் உறுதி செய்யல. அங்க பிரதம அமைச்சரா இருந்தவர் மீர் லாய்க் அலி… வெறும் 22 ஆயிரம் பேர் இருந்த படை தான் ஹைதராபாத் நிஜாமின் அதிகாரபூர்வ ராணுவமா இருந்தது. ஆனா அது ராணுவம் இல்லை. கூலிப்படைன்னு சொல்லலாம். காட்டுமிராண்டித் தனத்தோட உச்சக்கட்டமா செயல்பட்ட அந்தப் படைக்கு ‘ரஜாக்கர்’ அப்டின்னு பேரு வெச்சிருந்தாங்க… இதை தலைமை ஏற்று நடத்தியவர் காஸிம் ரஜ்வி அப்டிங்கறவரு…

  ரஜாக்கர்கள்னு நான் படிச்சிருக்கேன். அவங்க ரொம்ப கொடூரமானவங்களா இருந்தாங்கன்னும் சொல்வாங்க. இந்தியாவின் மற்ற பகுதிகள்ல சுதந்திரப் போராட்டம் தீவிரமா இருந்தப்போ.. ஹைதராபாத் மட்டும் அமைதியா எதிலும் கலந்துக்காம இருந்ததாம். ஏன்னா… ஹைதராபாத் பிரிட்டிஷ் அரசோட நேரடி கட்டுப்பாட்டுல வராம, அவங்க ஆட்சியின் தலைமையை நிஜாம் ஏத்துக்கிட்டு செயல்பட்டாராம். அதனால நிஜாம் விரும்பியபடி ஆட்சி செய்ய பிரிட்டிஷ் அரசு அவரை அனுமதிச்சிருந்ததாம்..

  ஆமா… அங்க மக்கள் பேருல நிஜாமுக்கு அக்கறை இருக்கல… பசி, பட்டினி, கல்வியறிவின்மை, நோய், வேலையில்லா திண்டாட்டம்னு எல்லா கஷ்டங்களையும் மக்கள் சந்திச்சாங்க. விவசாயக் கூலிகள்தான் பெரும்பாலும் இருந்தாங்க. அப்போதான் ஹைதரபாத்துக்குள்ளயும் சில போராட்டங்கள் நடந்துச்சு… அங்க இருக்கற ஏழைகளை நிலப் பிரபுக்கள் கிட்டேருந்து விடுவிக்க கம்யூனிஸ்ட் கட்சி போராடிச்சு. ஹைதராபாத் சமஸ்தானம் இந்தியாவுடன் இணைக்கப் படணும்னு காங்கிரஸ் கட்சி போராடுச்சி. விசால ஆந்திரா அமைக்கப்படணும்னு ஆந்திர மகா சபை தீவிரமா போராடிச்சு. இவங்களை எல்லாம் ஒடுக்கணும்னு ஆரம்பிக்கப்பட்ட குண்டர் படைதான் இந்த ரஜாக்கர்கள் படை.

  சரிதான்… ஆனா நம் நாடு சுதந்திரம் அடைந்தபோது, பிரிட்டிஷார் நிறைய சிக்கல்களை ஏற்படுத்திட்டுதான் போனாங்க அப்டின்னும், அதுல ஹைதராபாத்தை சேர்க்கத்தான் படேல் தீவிர நடவடிக்கை எடுத்தார்னும் சொல்றாங்களே… அப்படி என்ன நடவடிக்கை எடுத்தார்?

  ஆமா… நாடு சுதந்திரம் அடைஞ்சப்போ… இந்தியா-பாகிஸ்தான்னு இரு நாடுகளா பிரிவினை ஏற்பட்டது. பிறகு இங்கே சுதேச மன்னர்களால் ஆளப்பட்ட 500க்கும் மேலான சிறிதும் பெரிதுமான சமஸ்தானங்கள் வேறு இருந்திருக்கு. அந்த சமஸ்தானங்களுக்கு ஒரு முடிவை அறிவிச்சது பிரிட்டிஷ் அரசு. அதாவது, அவங்க எதிர்காலத்தை தீர்மானிக்க, இந்தியாவுடன் இணைவதா அல்லது பாகிஸ்தானுடன் சேர்வதா அல்லது தனி நாடுங்கிற அந்தஸ்தோட தொடரலாமா என்பதை தாங்களே தீர்மானிச்சிக்கலாம்னு சொல்லிச்சு பிரிட்டிஷ் அரசு.

  அடேங்கப்பா… இந்தியாவின் அவ்ளோ பெரிய நிலப்பரப்புக்கு இடையில இப்படி குட்டி குட்டியா 500 நாடுகள் இருந்தா என்ன ஆயிருக்கும் நிலைமை? யோசிச்சிப் பாக்கவே முடியல..! நிச்சயமா… சர்தார் படேல்ங்கிற இரும்பு மனிதர் மட்டும் இல்லைன்னா என்ன ஆயிருக்கும்..?

  ஆமா, அப்போ சர்தார் படேல்தான் விரைவா ஒரு முடிவை எடுத்தாரு. அவர் எடுத்த ராஜ தந்திர நடவடிக்கைல, ஹைதராபாத், ஜூனாகட், ஜம்மு காஷ்மீர் மாதிரியான சமஸ்தானங்களைத் தவிர மற்ற எல்லா சமஸ்தானங்களும் இந்திய நாட்டோட தங்களை இணைச்சுக்கிட்டாங்க. உடனடியா இணைஞ்சாங்க. ஆனா… ஹைதராபாத் முரண்டு பிடிச்சது. அதில் இருந்த மக்கள்லாம் ஹைதராபாத் இந்தியாவுடன் இணையணும்னு போராடினாங்க. ஆனா, மத அடிப்படையில் பிரிஞ்ச பாகிஸ்தானோட ஆதரவுடன் ஹைதராபாத், இந்தியாவுடனும் இணையாது, பாகிஸ்தானுடனும் சேராதுன்னு சொல்லி, தொடர்ந்து பிரிட்டிஷ் அரசமைப்பின் துணையோட, காமன்வெல்த் உறுப்பினரா, தனி நாடாகவே தொடரும்னு அறிவிச்சார் நிஜாம்.

  ஓ.. அப்பதான் ஹைதராபாத்ல பிரச்னை வந்து அந்த ரஜாக்கர் படை அட்டூழியம் செய்ததா… அப்போ இந்திய அரசு என்னதான் செய்தது? படை எடுத்து சண்டைக்கு போனாங்களா?

  முதல்ல பேசினாங்க. அந்தப் பேச்சுவார்த்தைக்கு நிஜாம் உடன்படல. இந்த நிலையில இந்தியாவுடன் இணையணும்னு சொன்ன கட்சிகள், மக்கள், குறிப்பா அங்க இருந்த ஹிந்து மதத்தை சேர்ந்த மக்கள் மேல வன்முறையை ஏவிவிட்டார் நிஜாம். அந்த ரஜாக்கர் படை எல்லா அட்டூழியமும் செய்துச்சாம். இந்தியாவுல இருந்து ராணுவம் வந்தா… எல்லா ஹிந்துக்களையும் கொன்றுவிடுவோம்னு ரஜாக்கர்கள் மிரட்டினாங்களாம். அப்போதான் படேல் அங்கிருந்த மக்களைக் காக்கணும்னு முடிவு செய்து, ஹைதராபாத் மேல ராணுவ நடவடிக்கை எடுத்தார். நாலா பக்கமும் ஹைதராபாத் இந்திய ராணுவத்தால சுற்றி வளைக்கப்பட்டது.

  அதுக்குப் பேரு கூட ”ஆபரேஷன் போலோ ” அப்டின்னு வெச்சாங்கதானே… ” ஹதராபாத் போலீஸ் ஆக்ஷன் ” அப்டிங்கற பேருல இந்திய அரசு மேற்கொண்ட ராணுவ நடவடிக்கை 1948, செப்டம்பர் 13ஆம் தேதி நடந்தது.. அப்டிதானே..

  ஆமாம். கிழக்கே விஜயவாடா, மேற்கே சோலாபூர் இரண்டு இடத்திலேர்ந்தும் படைகள் உள்ளே நுழைந்து, ராணுவ நடவடிக்கை எடுக்க… அது ஐந்தே நாட்கள்ல முடிவுக்கு வந்துது. அப்போ இந்திய ராணுவத்தில் 32 ஜவான்கள் வீரமரணம் அடைஞ்சாங்க. 97 பேர் காயமடைஞ்சாங்க. நிஜாமின் தரப்பில் 490 வீரர்களும் 1373 ரஜாக்கர்களும் கொல்லப்பட்டாங்க. நிறையப் பேர கைது பண்ணாங்க. செப்டம்பர் 17ம் தேதி ஹைதராபாத் நிஜாம் தனக்கு தோல்வி உறுதின்னு தெரிஞ்சு சரணடைந்தார்.

  அப்போ இந்திய அரசு, நிஜாம் உடனடியா ஹைதராபாத் வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு தான் சரணடைந்த செய்தியை தெரிவிக்கணும்னு யோசனை சொன்னதாம். நிஜாம் தன்னோட வாழ்க்கைல முதல் தடவையா, வானொலி நிலையத்தின் படிக்கட்டுக்கள்ல கடந்து உள்ளே போய்… மக்களிடம் வானொலி மூலமா சொன்னாராம். ஹைதராபாத் சமஸ்தான மக்கள் மகிழ்ச்சி ஆரவாரத்தோட இந்திய ராணுவத்தை வரவேற்றாங்களாம். இப்படி இந்தியா சுதந்திரம் அடைஞ்சு 13 மாசங்களுக்குப் பிறகுதான் ஹைதராபாத் சமஸ்தான மக்களுக்கு சுதந்திரம் கிடைச்சுது. அதுக்கு காரணமா இருந்தவர் சர்தார் வல்லப பாய் படேல்தான்.

  கிட்டத்தட்ட ஜூனாகத் சமஸ்தான நிலையும் அப்படித்தான். அங்க 80 சதவிகிதம் ஹிந்துக்கள். ஆட்சியாளர் இஸ்லாமியர். இந்திய அரசு அவருக்கும் இணைப்பு ஒப்பந்த ஆவணத்தை அனுப்பிச்சாம். ஆனா, அந்த நவாபும் மக்களின் கருத்துக்கு மாறாக ஆகஸ்ட் 15 அன்று பாகிஸ்தானுடன் இணையும்னு அறிவிச்சார். இந்த முடிவு இந்தியாவுக்கு பெரும் அதிர்ச்சியா இருந்துது. பூகோள ரீதியா பாத்தா இந்தியாவுக்கு உள்ள இருந்தது ஜூனாகத். மக்களோ இந்தியாவோட இணையனும்னு விரும்பினாங்க. படேல் உடனே ராணுவத்தை ஜுனாகத்துக்கு அனுப்பினார். பிறகு அங்கே மக்கள் இணைய விரும்புவது இந்தியாவுடனா? பாகிஸ்தானுடனா? அப்படின்னு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. மக்கள் இந்தியாவுடன் சேரவே ஆதரவு தெரிவிச்சாங்க. இதன் பிறகுதான் ஜூனாகத் இந்தியாவோட இணைக்கப்பட்டது.

  இப்படி 565 சமஸ்தானங்கள பேச்சுவார்த்தை மூலமும், ராணுவ நடவடிக்கை மூலமும் ஒருங்கிணைச்சி இப்ப உள்ள ஒருங்கிணைந்த இந்திய நாடா உருவாக்கிக் கொடுத்தவர் உறுதி மிக்க சர்தார் வல்லப பாய் படேல். காஷ்மீர், ஹைதராபாத், மைசூர், திருவாங்கூர், பிகானிர், பாட்டியாலா, குவாலியர், பரோடா, ஜுனாகத், ஜோத்பூர், ஜெய்சால்மர் நம்ம தமிழகத்துல இருந்த புதுக்கோட்டை சமஸ்தானம் முதற்கொண்டு இந்தியாவோட இணையக் காரணமா இருந்தார்.

  patelstatue - Dhinasari Tamilவிளையும் பயிர் முளையிலே தெரியும்னு சொல்வாங்க இல்ல… வல்லப பாய்க்கு இந்த அளவுக்கு மனவுறுதி ஏற்பட அவரது இளமைக் கால சம்பவத்தை இப்பவும் சுவாரஸ்யமா சொல்வாங்க. வல்லப பாய்க்கு வலது கன்னத்துல மூக்கு பக்கத்துல ஒரு மரு வந்துச்சாம். அந்தக் காலத்துல முடி திருத்தம் செய்யறவங்க கிட்ட போயி, அதை கத்தியால அறுத்துப்பாங்களாம். அப்படித்தான் ஏழு வயசு பையனா இருந்த வல்லப பாயையும் அந்த முடி திருத்தம் செய்யிறவர்கிட்டே கூட்டிட்டுப் போனாங்களாம். சின்னப் பையன் முகத்தைப் பார்த்து அதை கத்தியால அறுக்க அவரு ரொம்ப தயங்கினாராம். ஆனா.. வல்லப பாய் அவர்கிட்டேருந்து கத்திய வாங்கி… கண்ணாடியை பார்த்துக்கிட்டே தானே அறுவை சிகிச்சை செய்துக்கிட்டாராம். அதைப் பார்த்து எல்லாரும் ரொம்பவே ஆச்சரியப் பட்டுப் போனாங்களாம்…

  அதே மாதிரி… பள்ளில படிக்கும் போது, நண்பனுக்கு பிளேக் நோய் தாக்கிச்சாம். அப்பவும், ‘அது தமக்கும் பரவிடுமோ’ன்னு பயந்து எல்லாரும் ஒதுங்கினப்போ கூட, கொஞ்சமும் பயப்படாம தன்னோட நண்பனுக்கு கைகொடுத்து உதவினானாம். நோய் குணமாகிற வரை கூடவே இருந்து கவனிச்சுக்கிட்டானாம். இந்த சேவை மனப்பான்மைதான் வளர்ந்து பெரியவரானதும் நாட்டு மக்களுக்கே சேவை செய்யக்கூடிய மன உருதியை தந்துச்சுன்னு சொல்வாங்க…

  இவ்வளவு உறுதியா செயல்பட்டு நாட்டை ஒருங்கிணைந்த இந்திய நாடா நமக்கு கொடுத்த சர்தார் வல்லப பாய் படேல், தன்னோட 75 ஆவது வயதுல 1950 டிசம்பர் 15ம் தேதி உயிர் நீத்தார். நாடு சுதந்திரம் அடைந்து 3 வருடங்களுக்குள் இவ்வளவு சாதனைகள செய்து, நமக்கெல்லாம் வழிகாட்டியா இருந்தவர்தான் சர்தார் வல்லப பாய் படேல்.

  ஆமாம்… இந்திய விடுதலை வரலாற்றில், தனி இடம் பிடித்தவர். இப்போதும் நாம காந்தி, நேரு, படேல் அப்டின்னு வரிசையா வெச்சி வரலாற்றில் படிக்கிறோம். மதிப்பு, தகுதி, புகழ், பெருமைன்னு எல்லாம் பெற்ற படேலுக்கு நம்ம இந்திய அரசு 1991ல பாரத ரத்னா விருது வழங்கி கௌரவப் படுத்திச்சி. இந்த இரும்பு மனிதருக்காக மிகப் பெரும் சிலையை குஜராத்ல அமைக்க அரசு ஏற்பாடு செய்திட்டிருக்கு. நாம இப்போ நல்லவிதமா வாழறோம்னா படேல் போன்ற தியாக உள்ளங்கள் செய்த சாதனைகள்தான் காரணம். அவரை என்றென்றும் நாம நினைவுல வைக்கணும்.

  கட்டுரை | எழுத்து: – © செங்கோட்டை ஸ்ரீராம்

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  19 − nine =

  This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

  Most Popular

  மக்கள் பேசிக்கிறாங்க

  ஆன்மிகம்..!

  Follow Dhinasari on Social Media

  19,035FansLike
  388FollowersFollow
  83FollowersFollow
  74FollowersFollow
  4,634FollowersFollow
  17,300SubscribersSubscribe

  சமையல் புதிது..!

  COMPLAINT BOX | புகார் பெட்டி :

  Cinema / Entertainment

  நடிகர் அஜித்குமாரின் தந்தை பி.சுப்ரமணியம் மறைவு..

  நடிகர் அஜித்குமாரின் தந்தை பி.சுப்ரமணியம் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். நடிகர் அஜித்குமாரின்...

  லால் சலாம் பட சூட்டிங் பிரச்சனை..

  திருவண்ணாமலையில் நேற்று படமாக்கப்பட்ட லால் சலாம் பட சூட்டிங் பிரச்சனை எதிரொலி ஐஸ்வர்யா ரஜினிகாந்தின்...

  கண்ணை நம்பாதே-படம் எப்படி?..

  அவரவர் குற்றத்திற்கு தண்டனை உண்டு என்கிற கருவை அடிப்படையாக் கொண்டு உருவான படம் கண்ணை நம்பாதே. தான்...

  7 ஆஸ்கர் விருதை வென்ற Everything Everywhere All At Once..

  7 ஆஸ்கர் விருதை வென்ற Everything Everywhere All At Once திரைப்படம் .சிறந்த...

  Latest News : Read Now...