டிசம்பர் மாதம் ஒரு நாள், கார்கரே வழக்கமாக பூனா செல்லும் போது மதன்லால் பஹ்வாவையும் உடன் அழைத்துச் சென்றார். அங்கு ஆப்தேயையும், நாதுராம் கோட்ஸேயையும் பஹ்வாவிற்கு அறிமுகம் செய்து வைத்தார்.
பஹ்வாவை சந்தித்ததில் குறிப்பாக ஆப்தேயிற்கு மகிழ்ச்சி. வெடிகுண்டுகளோடு நேரடி பரிச்சயமுடைய ஒருவர் கிடைத்து விட்டதுதான் மகிழ்ச்சிக்கு காரணம். ’ஹிந்து ராஷ்ட்ரா ‘ பத்திரிகை அலுவலகத்தில்,ஆசிரியரின் கூடாரத்தில், நால்வரும் உட்கார்ந்து ஹைதராபாத் சுங்கச்சாவடி மீது தாக்குதல் நடத்துவது பற்றி திட்டமிட்டனர்.
தாக்குதல் நடத்த, அப்போது அவர்களுக்கு தேவைப்பட்டது ஒரு பெரிய கார். கார் கிடைத்தவுடன் நாதுராம் கோட்ஸேயும் ஆப்தேயும் அஹமத்நகர் செல்ல வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.
மக்கள் ஆயுதங்கள் வைத்திருக்கக் கூடாது; கொண்டு செல்லக் கூடாது எனும் சட்டம் அஹமத்நகர் மாவட்டத்தின் பல பகுதிகளில் 1947 ஆம் வருடம் நவம்பர் மாதம் 6ந் தேதி அமலுக்கு வந்தது. இந்த சட்டம் மூலம் மதக்கலவரங்கள் நிகழ்வதை தவிர்க்க முடியுமென போலீஸ் நம்பியது.
ஆனால் யாரோ ஒரு நபர் கையெறி குண்டுகள் கையிருப்பில் வைத்திருப்பது வெளிச்சத்திற்கு வந்தது. எப்படியென்றால் 1947 ஆம் வருடம் நவம்பர் மாதம் 24ந் தேதி மற்றும் டிசம்பர் மாதம் 26ந் தேதிகளுக்கிடையில் நான்கு கையெறி குண்டுகள் பயன்படுத்தப்பட்டிருந்தன.
ஒரு குண்டு அஹமத்நகர் வசந்த் டாக்கீஸ் எனும் திரையரங்கில் அரங்கம் நிறைந்திருந்த போது வெடித்தது. இன்னொரு குண்டு மொஹரம் பண்டிகையையொட்டி முஸ்லீம்கள் ஊர்வலம் நடத்திய போது ,ஊர்வலத்தின் மீது வீசப்பட்டது.
ஆனால் அதிசயமாக இந்த குண்டுகளால் பெரிய சேதம் ஏதும் ஏற்படவில்லை,உயிர் பலியும் நிகழவில்லை. மொஹரம் ஊர்வலத்தின் மீதான வெடிக்குண்டு தாக்குதல் ஊர்வலம் ஜனநெரிசல் மிகுந்த ‘ கபட் பஜார் ‘ வழியாகச் செல்லும் போது நடைபெற்றது.
அந்த தெருவில்தான் கார்கரேயின் ‘டெக்கன் கெஸ்ட் ஹவுஸ் ‘ இருந்தது. தொடக்கத்தில் கார்கரேயுடனோ மதன்லால் பஹ்வாவுடனோ இந்த தாக்குதல்களை யாரும் தொடர்புபடுத்திப் பார்க்கவில்லை.
அகதிகளால் நடத்தப்பட்ட பல ஆர்ப்பட்டங்களில் இந்த இருவரும் பங்கெடுத்துக் கொண்ட விஷயம் போலீஸுக்கு தெரியும் என்றாலும், இவர்களை வெறும் ஆர்ப்பாட்டக்காரர்கள், கோஷமிடுபவர்கள் என்பதாக மட்டுமே எண்ணினர். வன்முறைக்காரர்களாக நினைத்துக் கூட பார்க்கவில்லை.
அத்தோடு காவல்துறை அதிகாரிகளில் பலர் ஹிந்துக்களாக இருந்தார்கள். அவர்களுக்கு அங்கிருந்த அகதிகள் மீது ஒரு பரிதாப உணர்ச்சி இருந்தது. உள்ளூர் முஸ்லீம்கள் மீது போலீஸ் அதிகாரிகளுக்கு கடும் கோபம் இருந்தது.
ஏனென்றால்,உள்ளூர் முஸ்லீம்களில் சிலர் கஸிம் ரிஸ்வியையும், ’ரஸாக்கர்களையும்’ ரகசியமாக ஆதரித்து வந்ததை அவர்கள் புலனாய்வுத்துறை தகவல்கள் மூலம் அறிந்திருந்தார்கள். அகதிகளுக்கு எரிச்சலூட்டும் நோக்கில் இந்த முஸ்லீம்கள், தங்கள் வீடுகளிலும், மசூதிகளிலும் பாகிஸ்தான் கொடியை ஏற்றியிருந்தார்கள்.
காவல் துறையிலிருந்த சில அதிகாரிகளுக்காவது, கார்கரே மீதும் மதன்லால் பஹ்வா மீதும் நல்லெண்ணம் இருந்தது. இருவரும் அகதிகளின் நலனுக்காக உழைத்து வந்ததே இந்த நல்லெண்ணத்திற்கு காரணம். கார்கரேயுடன் வெடிகுண்டுகளை தொடர்பு படுத்தும் நிகழ்வு எதிர்பாராது நடந்தது.
பூனாவில் பல மாதங்களுக்கு முன்பு நடந்த ஒரு கொலையைப் பற்றிய விசாரணையின் போது, அது தொடர்பாக கார்கரேயின் மேலாளர் S.V.கேட்கரின் வீட்டை போலீசார் சோதனையிட வேண்டிய தேவை ஏற்பட்டது. கொலையுடன் கேட்கரை தொடர்புபடுத்த எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்றாலும்,அவர் வீட்டில் ஒரு இரும்பு ட்ரங்க் பெட்டியை பார்த்தனர்.
அதை சோதனையிட திறந்த போது,அதில் ஏராளமான நாட்டு கையெறி குண்டுகள், ஒரு ரிவால்வர், DAGGERS எனப்படும் குத்து வாள்கள், வெடி மருந்துகள், ஃப்யூஸ் வயர்கள், பிஸ்டல்களுக்கும், ரைஃபல்களுக்கும் தேவைப்படும் நூற்றுக்கணக்கான தோட்டாக்கள் ஆகியவை இருந்தன.
தடவியல் நிபுணர்கள் ஆய்வில், அந்த வெடிகுண்டுகள், வசந்த் திரையரங்கிலும், மொஹரம் ஊர்வலத்தின் மீதும் வீசப்பட்டவைகளை ஒத்திருந்தது தெரிய வந்தது. தன்னுடைய முதலாளி கார்கரேதான், அந்த பெட்டியை தன் வீட்டில் கொண்டு வைத்தாக கேட்கர் போலீசாரிடம் தெரிவித்தார்.
போலீசார் இதனைக் கண்டு பிடித்தது 1948 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1ந் தேதி. இதனை தொடர்ந்து கார்கரேயின் வீட்டையும் ஹோட்டலையும் போலீசார் ‘ ரெய்ட் ‘ செய்தனர். ஆனாலும் அந்த இடங்களில், சோதனைகளில் எதுவும் கிடைக்கவில்லை.
இந்த சம்பவத்திற்குப் பிறகு கார்கரே போலீஸ் கண்காணிப்பிற்கு உள்ளானார்.
( தொடரும் )
#காந்திகொலையும்பின்னணியும்
- எழுத்து: யா.சு.கண்ணன்




