சபரிமலை… பின்னணியில்பாஜக போராட்டம் என்றால் என்றோ தோல்வி அடைந்திருக்கும்!

Published:

b893c0a8 7dea 43c4 b6fc d39e65207b75 - 2026

போராட்டங்கள் பெரும்பாலும் வெற்றி பெறுவதில்லை! அதற்கு பல காரணங்களை நாம் சொல்லலாம். ஆனால், குறிப்பாக, போராட்டத்தில் ஈடுபடுபவர்களின் அர்ப்பணிப்பு உணர்வுதான் அந்த போராட்டங்களை வெற்றியை நோக்கி செலுத்தும் உந்து சக்தியாக அமைகிறது! உணர்ச்சி வேகத்தில் நடக்கும் வன்முறை, வெறிச் செயல்கள் போராட்டத்தை மழுங்கடிப்பதோடு, எதிர்காலத்தில் போராட முன்வரும் எவருக்கும் அச்ச உணர்வை நிச்சயம் தோற்றுவிக்கும்!

கேரளத்தில், சபரிமலை விவகாரம் குறித்தான போராட்டங்களை இந்த கண்ணோட்டத்தில்தான் நான் காண்கிறேன்! அரசு, பத்திரிகை, தொலைக்காட்சி, நீதிமன்றம், சட்டம் என்று பலவும் போராட்டக்காரர்களுக்கு எதிராக அணிவகுத்து நிற்கும்போது, போராட்டக்காரர்களின் வலிமைமிக்க ஆயுதமாக திகழ்கிறது அவர்களிடம் காணப்படும் ஒற்றுமையும், அர்ப்பணிப்பும் தான்! இது சம்பந்தமாக இரண்டு உதாரணங்களை நாம் காணலாம்.

உண்டியலில், பக்தர்கள் யாரும் காசு போட வேண்டாம் என்று போராட்டக்காரர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க, சென்றாண்டை விட உண்டியல் வருமானம் பல மடங்கு சரிந்தது! இதாவது, பக்தர்கள், ஐயப்பன் மீது கொண்டிருக்கும் ஆர்வத்தின் காரணமாக விளைந்தது என்று ஒதுக்கிவிடலாம்! ஆனால், கூட்ட காலங்களில், சபரிமலை பகுதியில் கடைகள் வைப்பதற்கான டெண்டர் விடப்பட்டபோது, எந்த வியாபாரியும், குறைந்த பட்ச ஏலத்தொகையைத் தாண்டி ஒரு ரூபாய்கூட அதிகம் குறிப்பிடவில்லை! அரசுக்கு இதனால், பலகோடி ரூபாய் நஷ்டம் ஏற்படும்! மறு டெண்டர் விட முடியுமா என்று யோசிக்கிறது அரசு! போட்டி போட்டு காசு சேர்க்கும் வியாபாரிகளிடம் இந்த ஒற்றுமை எப்படி வந்தது என்பது ஆச்சரியமாக உள்ளது!!

ALSO READ:  கரப்பான்பூச்சியும் கல்வி அமைச்சரும்!

அடுத்து, திருப்தி தேசாயை, சபரிமலை வரை அழைத்து செல்ல எந்த டாக்ஸிக்காரரும் முன்வரவில்லை! அரசு, கால் டாக்ஸிக்கு முயன்றது. அவர்களும் மறுத்துவிட்டனர்! (அரசு கேட்டுக் கொண்டும், மறுத்தால், அதன் விளைவுகள் எப்படி இருக்கும் என்பது தெரிந்தே, டாக்ஸிக்காரர்கள் முடியாது என்று கூறியிருக்கிறார்கள்! இது அசாத்தியமானது!) கடைசியில், திருப்தி தேசாய், அதிருப்தி தேசாயாக திரும்பிச் சென்றார்!!

பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்., இந்து அமைப்புகள் போராட்டக்காரர்களின் பின்னால் இருக்கிறார்கள் என்று கூறி, அரசும் அதன் ஆதரவாளர்களும் போராட்டத்தை எளிதில் உதாசீனப்படுத்திவிட முடியும் என்று எண்ணுகிறார்கள்! மேற்படி அமைப்புகள்தான் போராட்டத்தை நடத்தும் காரணியாக இருக்கின்றன என்றால், ரெஹானா ஃபாத்திமா வந்த அன்றே, போராட்டங்கள் தோல்வியை சந்தித்திருக்கும்! ஆனால், பக்தர்கள், வியாபாரிகள், டாக்ஸிக்காரர்கள் என்று பல்வேறு தரப்பினரும் தாமாக முன்வந்து கட்டுக்கோப்புடன், போராட்டங்களுக்கு ஆதரவாக நிற்கின்றனர் என்பதை கண்டும், பா.ஜ.க. உள்ளிட்ட பிற அமைப்புகள் மீது பழியைப் போட்டு, தப்பிக்க நினைப்பது, வயிற்றில் வளரும் கட்டியை, பிள்ளை உண்டாகி இருப்பதாக நினைப்பது போன்ற அறியாமையேயாகும்!

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : மேகாலயா

இந்துக்கள் விழித்துக் கொண்டிருக்கிறார்கள்! இனி, உறக்கத்தைக் கலைக்க வேண்டியது, அரசுதான்!!

Related articles

Recent articles

spot_img